79: மாயச்சிறகுகள்

79: மாயச்சிறகுகள்

நீலழகன் பொற்தேரில் குருளையெனப் பாய்ந்து ஏறுவதை நோக்கிய தமிழ்ச்செல்வன் புன்னகை மீண்டான். ஒவ்வொரு முறை நீலன் உடலும் உளமும் சோர்ந்து நோயுறும் போதும் ஓரிழை புன்னகை தமிழ்ச்செல்வனிடமிருந்து உதிருவதை எவரும் அறியார். இரவின் மாயப்போர்வை பட்டினத்தை மூடுவதை தலையுயர்த்தி நோக்கியவன் தீப்பந்தங்களும் வெளிச்சத் தட்டுகளும் இரவின் வண்ணக் கலவைகளை பேரழகில் சுடர்ப்பதை நோக்கியிருந்தான். தன் தேரில் வீரர்கள் உதவியுடன் பிடிகோலை மேலே கொடுத்தவன் காயத்தொட்டிலைத் தூக்குவதைப் போல முன்னின்றும் பின்னின்றும் வீரர்கள் தன்னைத் தூக்கிய போது குழந்தையென்று தன்னை பாவித்துக் கொண்டு பகடியொன்றைச் சொன்னான். வீரர்கள் குலுங்கிச் சிரித்தபடி அவனைத் தூக்க “தொட்டிலை ஆட்டாதீர்களடா” எனச் சொல்ல அவர்கள் மேலும் மேலும் சிரித்தார்கள். இருளில் எது எவ்வளவு புலனாக வேண்டுமோ அவ்வளவு புலனாகிறது என எண்ணிக் கொண்டு பிடிகோலை ஊன்றி நின்றான்.

பட்டினத்தில் இருட்டின் களிப்புகை நுழைந்ததும் அனைத்தும் வேறொன்றின் பிம்பங்கள் என அசையத் தொடங்கின. நெடுமரங்கள் இருட் கரங்கள் விரித்தாடும் அரக்கர்களெனத் தோன்றின. காற்றில் ஒலித்தெழுந்த மானுடக் களிக்குரல்களும் இன்னிசை நாதங்களும் பித்துற்றவரின் சிரசுள் ஒலிப்பவையெனக் குலைந்து மிதந்து குலைந்து கூவின. மானுட முகங்களில் அதுவரையிருந்த மேன்மைகள் ஒழியத் தொடங்கின. அரசனும் அறமும் தெய்வீகமும் அகன்றன. களியின் அரசனும் அரசியும் அவர்களது கலவிப் படைகளும் காம ஊற்றுகளும் மண்ணிலும் விண்ணிலும் மானுடர் தசைகளிலும் ஆடத் தொடங்கின. மலர்கள் மானுட வியர்வையில் மீண்டும் அவிழ்ந்தவை போல் நறுவாசனை கூடியது. தீயிலைக் காடுகள் பற்றியெரிவது போல் மயக்கு புகைகள் காணும் எத்திக்கிலும் எழுந்தன. புகை படிந்து பரவிய மானுடர் நறுமண மேனிகள் உரச காமமும் களியும் புரள கரங்களும் விரல்களும் ஆட உள்ளில் வியப்பது ஒவ்வொன்றாய் பாவமென எழ குடிப்பெருக்கு களிக்கூத்தென மலர்ந்து கொண்டிருந்தது.

பொற்தேர் ஆலய முகப்பிற்கு வந்த போது மங்கல வாத்தியங்கள் உயிர்பெற்றெழுந்தன. ஆயிரத்துப் பறையாளர்கள் கரங்களும் இருபெருங்கரத்தான் இசைக்கும் ஒருபெரும் பறையெனத் தோன்றியது. பட்டினம் எனும் மாபறையை லட்சக்கணக்கான குடிகள் அடித்து மண்தோல் கிழிவது போல் கூடியொலித்தன. கொம்புகளும் முழவுகளும் முழங்கின. குங்கிலியப் புகை எழுந்து பரவியது. தங்கிட தத்தர் கலையாடுபவர் போல் நாகதேவியின் முன் மேனி விதிர்விதிர்க்க தூதமிழ்ப் பெயர்கள் சொல்லி அன்னையை அழைத்துக் கொண்டிருந்தார். நுங்குகளும் கள் கலயங்களும் தீராது வார்க்கப்பட்ட நாகதேவி கரைந்து விடுபவள் போல மயக்குற்று நின்றாள். மண்ணெங்கிலும் எழுந்த நாகங்களிலும் ஒவ்வொரு துளி பட வாலில் நின்றபடி அன்னையைத் தொழுதன. நீலழகன் நாகதேவியின் முன் கரங்கள் கோர்த்து நின்றான். நிலவையும் சேடிகளும் இளவரசர்களும் அமைச்சர்களும் தளபதிகளும் நிறைந்து நின்ற ஆலயத்தைச் சுற்றிலும் குடித்திரள் உருக்கொண்டு ஆடியது. தங்கிட தத்தரில் அதிர்வென எழுந்த ஒன்று ஒவ்வொருவரிலும் ஓரணுக்கூடி ஆடலென்றாகியது. அறுபத்து நான்கு பரத்தையர்களும் அவர்கள் நடுவே பூவின் கண்ணெனவும் நின்றிருந்த சிற்பன் ஆடலரசன் போல் மேனி தருக்கி நின்றான். குழல் சடை பின்னி இடையில் புலித்தோல் அணிந்து கழுத்தில் மெய்நாகமென மினுங்கும் பாவை நாகம் பூண்டு சிரசில் பிறைப் பாவை வைத்து சாம்பலின் மேனியனாய் காலில் கழல் மின்ன ஆடலின் அணுக்கள் ஒவ்வொன்றும் அவனுள் உச்சாடமென ஒலிக்க மெல்லதிர்வுடன் நின்றிருந்தான்.

விருபாசிகை அவனை நோக்க நோக்க அவளது முலை விழிகள் முற்றி அவிழ்வதைக் கண்டு விசை கொண்டாள். அல்குல் அவிழ்ந்து சுனையின் ஒருதுளி கசிந்தது. பதும்மை நீலழகனை நோக்கினாள். அவனது நோக்கில் இருந்த ஒன்றாமை அவளை உறுத்தும் முள்ளென முதுகில் கரத்தால் தொடமுடியாத இடத்தில் சிக்கிக் கொண்டதைப் போல மேனி நசிந்தாள். அங்கினி நிலவையை நோக்கி இப்பேரழகியுடனா நேற்றுக் காமம் கொண்டோம் என எண்ணி அங்கம் அதிர்ந்தெழ நின்றாள். செழியையும் முத்தினியும் இளவரசர்களின் பேதை முகங்களை ஒருவர் விழியால் இன்னொருவர் காட்டி மெல்ல நகை உதடுகளில் பரவ சிரித்துக் கொண்டனர். சத்தகன் ஒருமுறை திரும்பிச் சிற்பனை நோக்குவதைப் போல் பாவனை காட்டியபடி அத்தனை பரத்தையரையும் மொய்த்துப் பார்த்து மெல்ல நகைத்தான். அவன் தங்களை தான் நோக்குகிறான் என ஒவ்வொரு பரத்தையும் மெய்க்கணத்தில் அறிந்து அவர்களில் அழகெனத் ததும்பும் ஒன்றை அவனுக்குக் காட்டினர். விழிகளும் உதடுகளும் அவனை நோக்கிப் புன்னகைத்தன. மாமந்தியென அறியப்படுபவன். போர்க்களத்தில் களியாட்டக்காரன். அறியாமை கொண்டவன். விளையாட்டென அனைத்தும் புரிபவன். மஞ்சத்தில் அவன் எப்படி என்பது மட்டுமே மந்தணம். இன்று அதை அறிய எவருக்காவது நல்லூழ் உண்டா என நாணியும் சிரித்தும் அசையாது நின்றனர்.

இளவரசர்கள் இருவரும் பரத்தையரை ரகசியமாக நோக்குவதைக் கண்ட நிலவை மெல்லத் திரும்பி தானகியை நோக்கினாள். தானகி பரத்தையருக்கும் இளவரசர்களுக்கும் இடையே கோட்டைச் சுவரெனச் சென்று அமைந்தாள். அன்னை நோக்கிவிட்டாள் என்பதை அறிந்த இருவரும் நாக்கை வாய்க்குள் கடித்துக் கொண்டு எளிய பிள்ளைகள் போல் அங்கிடு தத்தரை நோக்கினார்கள். அவரின் அருகே நின்ற சுழல் விழியைக் கண்டதும் இங்கும் ஒரு மலர்ச்சோலையா என மெல்ல வாய்திறந்து நோக்கினார்கள். தானகி தனக்குள் சிரித்துக் கொண்டாள். எங்கு திரும்பினும் அழகின்றி எதுவுமில்லையென்ற இந் நாளில் நிலவை எளிய அன்னையாகி இவர்களை எதனிடமிருந்து காக்கப் போகிறாள் என எண்ணினாள். எத்தனை பேரரசியும் மதியாளினி ஆகியும் அவள் அன்னையென்னும் போது நாகம் என எண்ணி அவளின் நிழலை நோக்கினாள். ஒளியலைகளில் நிழல் நெளிந்து கொண்டிருந்தது.

சூர்ப்பனகர் மூச்சு வாங்க மெல்ல இருமிக் கொண்டிருந்ததைக் கண்ட தமிழ்ச்செல்வன் செங்கரனைத் தொட்டு நோக்கச் சொன்னான். செங்கரன் சூர்ப்பனகரைத் தொட்டு இனிச் செல்லலாம் எனச் சொன்னான். நீலன் சூர்ப்பனகரின் அருகு வந்து “சென்று ஓய்வெடுங்கள் அண்ணா. இவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள்” என்றான். சூர்ப்பனகர் சிவந்த விழிகளால் அவனை நோக்கிய பின் செல்லலாம் என்பது போல் செங்கரனுக்குத் தலையாட்டினார். இருவரும் மெல்ல அங்கிருந்து அகன்றனர்.

ஆலயத்துக்குள் பூரணை நிலவின் வெள்மஞ்சள் ஒளி தீப்பந்த வெளிச்சங்களுக்கிடையில் துலக்கமாகத் தெரிந்தது. வெளியில் நின்றிருந்த மங்கலச் செல்வர் நிலவின் பூரணத்தில் பொற்தேர் ஒளிர்வதைக் கண்டு கண்ணீர் மல்க நெஞ்சில் கரங்கோர்த்து நின்றிருந்தார். பொன்னனும் மாதுளனும் கனியிழையனும் மூன்று சிறு தெய்வங்கள் போல் அவரைச் சூழ நின்றனர். ஒரு பொற்கணத்தில் தேர் எழுந்து பறந்துவிடுவதைப் போல் எண்ணமெழுந்த மங்கலச் செல்வர் மூவருக்குமென மந்தணக் குரலில் சொல்லெடுத்த போது மூடும் இதழ்களென அவரை நோக்கிக் குவிந்தனர்.

“அறிக இளையோரே. நம் முதுதாதை இராவணனின் பறக்கும் தேர் இதுவென்றறிக. குபேரன் இத்தேரை ஆக்கிய போது இதற்குச் சிறகுகள் பூட்டும் கற்பனையைக் கொண்டிருக்கவில்லை. அவன் தெய்வம். ஆகவே அவனுக்குப் பறப்பதற்கு வாகனம் தேவையில்லை. இராவணன் மானுடன். மானுடரின் கற்பனையில் பறப்பது செல்வத்திலும் அரிய செல்வம். வானில் எழுந்து பறந்து புடவியை நோக்குபவரே அனைத்தையும் அறிகிறார். நாம் காலத்தின் மேலும் பறக்க வேண்டியவர்கள். வரலாற்றின் மேல். கற்பனைகளின் மேல். உணர்ச்சிகளின் மேல். அனைத்துக்கும் மேலே நின்று நோக்குபவரே மெய்ப்பொருள் அறிகிறார். இராவணன் மெய்ப்பொருள் நாடியவன். அப்பன் ஈசனே மெய்ப்பொருள் என்றறிந்தவன். தன் இசை ஞானத்தால் அவன் அகம் கரைத்தவன். மண்ணுலவும் மாபொற்தேரின் சிறகென்பதே ஞானமென்றறிக. காலம் மூன்றும் கடந்து நின்று நோக்குபவரே இறையென்றறிக. முக்காலனின் முக்கண்ணும் அதன் பொருட்டே என்பதை உணர்க. மூன்று என்பது மானுடரில் ஞானத்தின் எண். அதனாலேயே நம் முன்னோர்கள் களியை மூநாளாக்கினர். மூன்று நீற்றுக் கோடு நெற்றியிலும் மேனியிலும் பூசிக் கொள்வதும். ஈசனின் ஆயுதம் திரிசூலமென நின்றிருப்பதும். மூன்று தெய்வங்கள் நம்மைப் படைப்பதும் காப்பதும் அழிப்பதும் என வகுக்கப்படுவதும் அதனாலேயே. வானம் மண் பாதாளம் என மூன்று ஆதர உலகுகள் ஆவதும் அதனாலேயே. இன்று மூன்றும் ஒற்றை வெளியென ஆகும் நாள்.

இப்போதும் என்னைச் சுற்றி நின்றிருப்பவர்கள் மூவரே. உங்களை என்னுடன் விலங்கிட்டு வைக்க நான் விரும்பவில்லை. இனி மூநாளும் நீங்கள் என்னில் விழிபடக் கூடாது. வாழ்வில் இத்தகைய பெருங்களிகள் அரிதானவை மைந்தரே. சென்று களியறிந்து மீள்க” என்றார். அவரது குரலில் இருந்த தண்மை அவர் சொல்பவை உறுதியானவை எனத் தோற்றியது மூவருக்கும். மூவரும் மூவர் முகங்களையும் நோக்கிய பின் பொற்தேரை நோக்கினர். மூவரின் கற்பனையிலும் பல்லாயிரம் வண்ணங் கொண்ட சிறகுகளுடன் எழுந்தது பொற்தேர். மங்கலச் செல்வர் மெல்ல உதடு அசைத்து “கண்டீர்களா. இவள் மாயையின் மேனியை. கலையென மண்ணில் நிகழ்ந்தவளே அவள். அவளை வென்று அவள் உச்சியில் உங்கள் பாதங்களை ஊன்றி ஒரு கணம் கலைக்கும் அப்பால் தொட்டு உயருங்கள். அதற்கு வாழ்க்கையின் அனுபவங்கள் அடிப்படையானவை. இலது உளதாகாது. உளது இலதாகாது என்பது நம் மூத்தோர் சொல். இன்மையிலிருந்து எதுவும் தோன்றுவதில்லை இளையோரே. உங்கள் இருப்பை நீட்டிக் கொள்ளுங்கள். வாழ்வை அருந்துங்கள். தீரா விடாய் கொள்க” என ஆசீர்வதிப்பவர் போல் கரங்களைத் தூக்கி பொற்தேரை வாழ்த்துபவர் போல நின்றார். அவர் அங்கனமே உறைந்து நிற்க அவர் பாதம் தொட்டு வணங்கி எழுந்த மூவரும் அம்பலம் நோக்கி நடக்கத் தொடங்கினர். கைவிடப்பட்ட மாபெரும் கனவெனப் பொற்தேர் அவர்கள் பின் பூரணைக் குடையின் கீழ் பொலிந்து கொண்டிருந்தது. மங்கலச் செல்வர் மகத்தானதே மாயையே மாகளியே என உதடுகளில் சொல்லாட நின்று கொண்டிருந்தார். உவகை ஒரு பூரணை. ஒன்றுமிலாது நிற்பதுவும் பூரணை என்றது நிலவு. ஓம் ஓம் ஓம் என்றன முக்காலமும்.

TAGS
Share This