80: விழவின் தெய்வம்
“எண்ணுவதே இறையென்றாகுவது. இறையின்றி இருத்தலும் எண்ணமே” என்றார் வேறுகாடார். இளம் பாணன் நாகதேவி ஆலயத்தின் மாபெரும் சிற்பங்களையும் நாகமென்ற ஒற்றை உயிரியின் எண்ணற்ற மடிப்புகளையும் புடைப்புகளையும் உக்கிரங்களையும் சாந்தங்களையும் வேட்கைகளையும் நெளிதல்களையும் அமைதல்களையும் அங்கற்று இருப்பதென்ற மயக்குகளையும் நோக்கிக் கொண்டிருந்தான். “இளம் பாணனே. இங்கிருப்பவை பல்லாயிரமாண்டுகளாக மானுடர் கண்ட நாகங்களின் விழிமணிகள் என்றறிக. ஒவ்வொரு முறை ஒருநாகம் கல்லாலயத்தில் அமைக்கப்படும் தோறும் எங்கோ எவரோ கண்களால் கண்டுற்ற அதன் வெளிச்சம் இருளென இங்கு ஆக்கப்படுகிறது. நெளிகையில் அச்சமெனவும் வாலுருண்டு பீடமமைத்து விரிமுகம் காட்டி அருள்நிலையில் காத்தலென்றும் வால்நுனியெழுந்து ஒற்றைக் கூம்பெனவும் கலையும் கணத்தில் மாமலர்களின் விரிவெனவும் தோன்றுகையில் களியெனவும் பிணைந்து நீருடல் வளைவுகள் இணை கொள்கையில் காமமென்றும் ஒன்றை இன்னொன்று நோக்காத திசைகளில் விழியமைத்து நிற்கையில் தெய்வமென்றும் ஆகுபவை. மூவுலகும் ஆளும் பெருவிழைவுகளே நாகமென்று மண்ணில் வருவது” என்றார் வேறுகாடார். இளம் பாணன் மணிகள் கொட்டி பறைகள் பறைய கொம்புகள் கூவியார்க்க நின்ற குடிகளிடை அசையாது அசைவன போல் தோற்றமயக்குறும் ஆலயத்தை நோக்கி நின்றான். மாலைகளும் மஞ்சளும் செஞ்சாந்தும் பூசப்பட்ட கல்வளைவுகளில் அவை உள்ளெழுந்து விரிந்து வெளியேறுவன போல் தோன்றின. கருமைக்கு அச்சமென நிறம் சேர்ந்தமை நாகங்களினால் என எண்ணிக் கொண்டான்.
“இன்று நாம் உட்புகலாகாதா கிழவரே” என்றான் இளம் பாணன். அதிலிருந்த சந்தேகத்தின் தொனியைக் கேட்டவர் இல்லை என்பதாகத் தலையசைத்தார். அவனது செவிக்கருகில் குனிந்து “இன்று அரச நாள். நாளையே குடிநாள். இன்று இன்னும் நாநாழிகையில் ஆலயத்தின் காப்பு வட்டத்திற்குள்ளிருந்து மானுடர் வெளியேறி விடவேண்டும். இன்றிரவு கரடிகளின் காவல் ஆலயத்தினைச் சூழ்ந்திருக்கும். மாபெரும் தேன்வதையைக் காவலிடுபவையென அவை காப்பு வட்டத்தைக் காவலிடும். நாம் அம்பலம் சென்று ஆடலை நோக்கிய பின் களியோய்வு கொள்ள வேறொரு இடம் செல்ல வேண்டும். அங்கு உனக்கு மெய்க்களி சித்திக்கும்” எனச் சொல்லில் குறும்பு கொண்ட கரடியெனக் கைகளை ஆட்டிச் சிரித்தார். இருவரும் நகரும் மேனிகளில் தீவெளிச்சங்கள் ஆடுவதையும் நிழல் நடனங்கள் பொலிவதையும் நோக்கிக் கொண்டு சென்றனர்.
அம்பலத்தைச் சுற்றிலும் பல்லாயிரம் விழிகள் அந்த ஒற்றைக் கூம்புச்சியை நோக்கியிருந்தன. குவிவாடிகளில் பெருகிய வெளிச்சம் மானுடர் மேல் ஒளிப்பந்துகளென உருண்டு கொண்டிருந்தன. நீரின் கன்னமாய் நிலம் ததும்பியது. ஈரத்தில் கால் அளைவது மானுடரில் இளமையை மீட்டுக் கொடுக்கும் இனிய சடங்கு என எண்ணினான் இளம் பாணன். பெண்களின் முகங்களில் ஓயாத ஒளி எங்கிருந்து குவிந்தெரிகிறது என நோக்கிக் கொண்டே தீக்கயிற்றுச் சுழல்கள் அம்பலத்தைச் சுற்றி நின்ற தீவித்தைக்காரர்களால் ஆற்றப்படுவதைக் கண்டான். அருகிருந்த சிற்றாலயங்களின் உச்சி வளைவுகளும் பெருமரங்களும் உயர்மேடுகளும் வரை மானுடர் கொத்துக் கொத்தாய் அமர்ந்திருப்பதை நோக்கிச் சிரித்தான். “மானுடர் ஒன்றை என நோக்கும் பொழுது புடவி அடைபடுகிறது. ஆகவே தான் அவர்களுக்குப் பல்லாயிரம் விழைவுகளும் களிகளும் அளிக்கப்படுகின்றன. இன்று பட்டினத்தை நிறைத்துள்ளதில் பத்தில் ஒரு பங்கினரே ஆடலை நோக்கியிருக்க முடியும். மதியம் முதலே இங்கு குடிகள் கூடியிருப்பர். இப்போது இப்பெருக்கிடை மூச்சிடை வெளி மட்டுமே நமக்குக் கிடைக்கும். நாம் நின்றிருக்கும் இவ்விடம் ஒரு ரகசிய உயரம். எளியகுடிகள் இதை அறியார். இம்மேட்டைக் கீரிமேடு என அழைப்பார்கள். நாகத்தினை நேர் நின்று வெல்லும் உயிரிகளில் கீரியே எளியது. ஆனால் நாகத்தை வெல்லும் நுட்பம் அதன் அணுவிடை ஞானத்தில் கரந்திருப்பது. நாகத்தினை நேர்நோக்கும் உயரத்தில் அமைந்திருப்பதாலேயே இது கீரிமேடு” என்றார் வேறுகாடார். அருகிருந்த சிறு கல்லாலயத்தில் இருளுக்குள் இருளென உறைந்திருப்பது கீரியென எண்ணமெழுந்த போது குனிந்திறங்கி அவ் ஆலயத்தின் உள்மடிப்பை நோக்கினான் இளம் பாணன். அகலோ தீப்பந்தமோ அக்கருவறையில் எரியவில்லை. இளம் பாணன் சிற்றாலயத்தை நோக்குவதைக் கண்ட வேறுகாடார் “இது நாகங்களின் விழவு இளம் பாணனே. இன்று கீரிக்கு ஒளியில்லா இருட்டே அளிக்கப்படும். கொல்ரூபத்தில் வாயில் குருதி சொட்டும் கீரியின் சிலையொன்று அதிலுண்டு” என்றார்.
கீரிமேட்டிலிருந்து நோக்குகையில் தீக்கயிறுகள் சுழல்வது தீப்பொறிகளினால் காற்று நிறைந்து வழிவது போல் தோற்றியது. காற்றைக் காற்று உரசுகையில் பற்றும் தீ. மேனியும் மேனியும் முயங்குகையில் நரம்புகளிலாடும் தீ. காதலும் காதலும் நோக்கிக் கொள்ளும் பொழுது விழிகளுக்கிடையில் பெருகும் வெளியின் தீ. காமத்தில் முனகல்கள் பற்றிக் கடிபடும் பொழுதினில் ஒலிகளின் தீ. போரில் ஆயுதங்கள் ஒன்றையொன்று முத்தமிடுகையில் தோன்றும் தீ. இதுவே என எண்ணிக் கொண்டான். அவனது சொற்கள் மேலும் மேலும் நுண்மையும் அளவற்றும் பெருகுவதை தீக்கயிற்றில் சுழலும் தீப்பொறித் துமிகளென நோக்கினான்.
வியப்பைப் பகிராமல் வியப்புப் பெருகுவதில்லை என்பதைப் போல வேறுகாடாரை நோக்கிய இளம் பாணன் “கிழவரே. எதனால் எனது அகத்தில் சொற்கள் இத்தனை கூர்மையுடன் முன்னில்லா ஒருங்குடன் இணைகின்றன என அறியாது வியக்கிறேன். எனது அகத்திலிருக்கும் தீவித்தைக்காரர்கள் முடிவின்றிச் சுழற்றும் தீக்கயிற்றால் சொற்கள் பொறித்தெழுகின்றன” என்றான்.
“இளம் பாணனே. எனக்குக் காவியர்களைப் போல் சொல்வராது. ஆனாலும் காவியர்களுடனும் பழகிய வகையில் நான் கண்ட காவியர்கள் எவரதும் இயல்பை விட உன்னில் ஒன்று கூடியிருக்கிறது. அதுவே உன்னை ஓயாது அலைக்கழிக்கவும் தீராது வெல்லும் விசையையும் அளிக்கிறது.
அந்த அம்பலத்தின் உச்சியில் இப்பொழுது ஆடல் நிகழவிருக்கிறது. பலநூறு கரங்கள் அல் பகலாய்ப் பணியாற்றி பல்லாயிரம் நாவுகளால் ஓயாது உரைக்கப்பட்டு இருளும் கனவும் அளிக்கப்பட்டு மாபெருங் களியின் தோரண வாயிலென உயர்ந்திருக்கிறது. ஆனால் ஒரு மானுடன் அங்கு நடனமாடவிருக்கிறான் என்பதே எளிய உண்மை. அம்பலமின்றிக் களியின்றி இம்மானுடரின்றி இம்மானுடரின் துயர்களும் களிவெறியுமின்றி அங்கொரு மானுடன் வெற்றம்பலம் ஆடிநின்றால் ஏது நிகழும். அவ் ஆடலின் பொருளென்ன.
அறிக. மானுடக் கலைகள் அனைத்தும் மானுடரின் ஆணவத்தின் கூம்புச்சியிலேயே நிகழ முடியும். அக்கலையை ஆற்றுபவர் எளிய குடிகளிலிருந்து மேம்பட்ட உயரத்திலேயே அதை நிகழ்த்த இயலும். மானுடர் கலைக்கு முன் பணிவதென்பது மாபெரும் அகங்காரத்தின் முன் தலை தாழ்த்துவது. அங்கு நின்றெரிபவர் அத்தனை குடிகளின் செருக்கின் விளை கனி. குடிகள் அதனாலேயே கலை வாய்க்கப் பெற்றவரை வணங்குமிடத்தில் வைக்கிறார்கள். கோனும் ஒரு படி கீழே நிற்பதுவும் அதனாலேயே. அவரது அகங்காரமும் சேர்த்தே கலை ஒரு மொழியில் திகழ்கிறது.
எளிய தத்துவங்கள் அகங்காரத்தை அழிக்கச் சொல்வது. சிவநெறியும் ஆணவத்தை மலமென்றே கொள்கிறது. ஆணவம் அழிய வேண்டுமெனில் அது முற்றெழுந்து ஆக வேண்டும். அழியும் எதுவும் முழுமையில் அழிகையிலேயே அழிக்கப்படுகிறது. எஞ்சுவது நின்று தழைத்து மேலும் பெருகுவது. கலையென்பது முற்றெழுந்த ஆணவத்தின் பஞ்சுக் கூம்பின் முனையில் ஒரு தீப்பொறி விழுந்து மாபெருஞ் சோதியாய் எரிந்தணைவது. உன்னில் நான் காண்பவை நீ விலக்கும் அத்தனை ஆணவமும் உன்னைத் தாயெனக் கண்டுகொண்டு தாவி உன்னிடமே திரும்பி வருவதை. உன்னால் அதை விலக்க ஒண்ணாது. விலகுந் தோறும் மேலும் ஆயிரங் குட்டிகளால் அன்னையென்றாகும் சாபங் கொண்டவரே காவியர் என எண்ணுகிறேன்” எனச் சொன்னார் வேறுகாடார்.
இளம் பாணனின் முகம் மெல்ல வாடியமைந்தது. ஆணவம் என்ற அகமந்தணம் கிழவரின் வாயில் சொற்களானமை அவனைக் கிளறியது. அதுவும் ஆணவத்தின் நகக் கத்தியே எனக் கண்ட போது சிறுநகை பூண்டான். “என்னைக் கத்தியால் கீறுவதைப் போல எண்ணிக் கொண்டாயா இளம் பாணனே. காவியர்களுக்கு அவ்வெண்ணம் வருவது இயற்கை தான். ஆனால் நான் எதனாலும் கொல்லப்பட முடியாத சாபங் கொண்டவன். என்னை ஒரு வெள்ளை நாகம் காக்கிறது என்பது குடி ரகசியம்” எனச் சொல்லிச் சிரித்தார். இளம் பாணன் கிழவரின் முகத்தில் எப்போதும் பூப்போலப் பொழியும் உவகையைக் கண்டு தானும் சிரித்துக் கொண்டான். அவனுக்குப் பின்னால் இருகரங்கள் வந்து இடைபற்றுவதைக் கண்டவன் திகைத்து அவை பெண்விரல்களென அதிர்ந்தான். இத்தனை திறந்த வகையிலா இங்கு களித்தேர்வு நிகழுமென எண்ணிக் கொண்டான். வேறுகாடார் பின்னால் திரும்பி நோக்கிய பின் அவரருகில் இருதியாள் வந்து நின்று சொல்லாடிக் கொண்டு நடக்க தன் பின்னால் இருப்பவர் எவரென்று உய்த்தான். அவளது விரல்களை விடுவித்து விட்டு அவளை முன்னால் இழுத்தான். சிரித்துக் கொண்டே முன் வந்த யாதினி “பெருங் கவியே. முன்னருக்கு இப்போது கொஞ்சம் துணிவு கூடியிருக்கிறீர்கள்” எனச் சொல்லி வெண்மல்லிகைப் பற்கள் விரியச் சிரித்தாள். “அறிய அறிய அச்சம் விலகுவது இயற்கை” என்று சொல்லித் தானும் கலந்து சிரித்தான். சிதி ஒரு உந்தல் பாய்ந்து இளம் பாணனின் தோளில் அறைந்து பின்னொழிந்து கொண்டாள். இப்போது யார் களியாடுவது என இருளில் துழாவியவன் திரும்பி யாதினியை நோக்க யாதினியின் தோளில் முளைத்த எழில்முகமென சிதி சிரித்துக் கொண்டிருந்தாள். “யாரைத் தேடுகிறீர் கவியே. யாரேனும் யட்சி உங்களைத் தொட்டாளா” என நகைத்தாள்.
தன் தண்டுக் கரத்தை இளம் பாணனின் தோள் மேல் போட்ட கர்ணிகை “இவருக்கு யட்சிகள் அல்ல காவல் சிதி. வாக்கின் தேவிகளால் காக்கப்படுபவர்” எனச் சொல்லி கழுத்தை இறுக்கி இளம் பாணனின் குழலில் முத்தமிட்டாள் கர்ணிகை. மூவரின் உடலிலும் தீயிலை நெளிவுகள் அலையடிப்பதைக் கண்டவன் “வாக்கின் தேவிகளே. மயக்கின்றி உங்களிடம் சொல்லாட என்னால் இயலாது. எனக்கும் உங்கள் போதையின் மலர்களைக் கொடுங்கள்” என வலக்கரத்தை நீட்டினான் இளம் பாணன். “இதோ பறித்துக் கொள்ளுங்கள்” என நீண்ட அவன் கையைத் தன் வலமுலையில் பிடித்து அழுத்தினாள் யாதினி. மின் பட்டவன் போல் கையெடுத்துப் பின் எண்ணியெண்ணி நகைத்துக் கொண்டான் இளம் பாணன். “சிரிக்கும் பொழுது அழகராய் தோன்றுகிறீர் கவியே. சிரிக்காத போது தேவாங்கு போல இருக்கிறது உமது முகம்” என்றாள் சிதி சிணுங்கலில். யாதினியை நோக்கி “இன்னும் மலர் விழைவு இருக்கிறது” எனச் சொல்லி இருகரங்களையும் அவளை நோக்கிக் கொண்டு செல்ல கர்ணிகை அவனை இழுத்து “நான் தருகிறேன் கவியே. எதற்கு அங்கு செல்கிறீர்” எனப் பிடித்தாள். யாதினி பொய்யாகச் சினந்து கொண்டு “அவர் என்னிடம் தானே கேட்டார் கர்ணிகை. எனது மலர்களைத் தான் அவர் விழைகிறார்” எனச் சொல்லி இளம் பாணனை நோக்கிக் கண் சிமிட்டினாள். இருளின் மந்தமான பொன்னுருகும் வெளிச்சத்தில் மூவரும் பொலிந்திளகும் சிலைகளென ஆடினர். அங்கிருந்த போதைகளின் மயக்கு வாசனையுடன் இளம் பாணனை அலைத்துத் தங்களுக்கிடையில் பரிமாறிக் கொண்டும் அவன் மார்பில் அறைந்தும் மூவரும் விளையாடியனர். இருதியாள் அவர்களை நோக்கி “அவரை அறைந்தே கொன்று விடாதீர்கள். அவருக்குக் களியைக் காட்டும் பணி இனி உங்களதே” என்றார். வேறுகாடார் நகைத்துக் கொண்டு “பெண்களால் வழிகாட்டப்படும் களியில் துறவியைப் போல இருக்க வேண்டும் பெருங்கவியே” என்றார். மூவரும் சினங் கொண்டவர்கள் போல வேறுகாடரை நோக்கிய பின் அதிலிருந்த நுண் மெய் அறிந்து பின் வாங்கினர். அவரது சொல்லின் அர்த்தம் பிடிபடாமல் விழித்த இளம் பாணனை நோக்கிய யாதினி புன்னகைத்து “பெருங்கவியே. பெண் தனதவன் என ஒருவனைக் கொண்டு விட்டால் ஆயிரங் களிநெறி மீறும் வெளியிலும் அவன் அவர்களைக் கடக்க இயலாது. களியின் மீறல்களை ஆணை விடப் பெண்ணே அறிவாள். பெண்ணின் இருளை அறியாத பெண்ணில்லை. அதைத் தான் காடார் சொல்கிறார். அவரைப் போல ஒரு சில ஆடவரே பெண்ணிருளை மெய்யறிந்தவர். அதற்கு நீங்கள் பல ஆழிகளைப் பல பருவங்கள் தீராது கடந்திருக்க வேண்டும். உமது இளமைக்கு அந்த நுண் சொல் பொருள்படாதே போகும்” எனச் சொன்னாள்.
அவனை அழைத்துக் கொண்டு கீரிமேட்டில் நெடுத்துச் சடைத்துத் தண்டுகள் விடைத்து நிற்கும் நாவல் மரமொன்றின் கிளைகளினருகே சென்றார்கள். “மேலிருந்து நோக்கினால் அம்பலத்தின் நிகர் உயரம் நின்றிருக்கலாம்” என்றாள் கர்ணிகை. கிளைகளில் ஏற்கெனவே அமர்ந்திருந்த சிறுவர்களை அச்சுறுத்தி இறக்கினார்கள் சிதியும் கர்ணிகையும். மந்திகளெனப் பாய்ந்து தாவி ஏறிக்கொண்டு இளம் பாணனையும் மேலேற்றினார்கள். கிளைகளில் நிலவின் ஒளித்தாள்கள் விரிந்து படிந்திருந்தன. யாதினி மெல்ல மேலேறுகையில் அவளின் இடையும் முலைகளும் ஒளிபட்டு வெள்ளி மலரின் மென்பரப்பெனத் தோன்றின. கர்ணிகையின் பிருஷ்டங்கள் குலுங்க அவன் கனிக்கட்டிகளென எண்ணினான். சிதியின் உடல் கிளையில் அமர்ந்த போது தொங்கும் தேவி என எண்ணிக் கொண்டான். மூவரும் கிளைகளில் பொலிந்திருந்த இலைகளைப் பறித்தும் சிறுகிளைகளை ஒடித்தும் வீசினார்கள். அம்பலம் அங்கிருந்து நோக்குகையில் தங்கமலரெனத் தோன்றியது. பல்லாயிரம் ஆடவரும் பெண்டிரும் மயக்கில் ஆடிக் கொண்டும் வெடித்துச் சிரித்துக் கொண்டும் மேனிகள் மேனிகளை அணைத்துக் கொண்டும் ஆடின. புலரியிலிருந்தே எப்பொழுதும் முடிவுறாமல் பட்டினத்தை இசையொலிகள் நிறைத்திருந்தன என எண்ணமெழுந்த போது இளம் பாணன் சிரித்துக் கொண்டான். யாதினிக்கு அருகில் இளம் பாணனும் அவனருகில் சிதியும் காற்கிளையில் கர்ணிகையும் அமர்ந்திருந்தனர்.
மரத்தினடியில் நின்ற சிப்பி அவர்களை நோக்கிக் கூவினாள். “சிதி எனக்கும் அங்கே இடமுண்டா” எனக் கத்தினாள். கூகையின் ஒலிகேட்டவள் போலச் சினந்து கொண்ட சிதி “தீயிலைத் துதியை மூட்டி வந்ததால் ஓரிடமுண்டு” என்றாள். இடையிலிருந்த சிறுதுணிப் பையினைக் குவித்துப் பிடித்துக் குலுக்கிக் காட்டினாள் சிப்பி. ஆண்குலையினைப் போல் புடைத்து நின்ற துணிப்பையைப் பார்த்த கர்ணிகையும் சிதியும் உதடுகள் விரிய ஒருவரை ஒருவர் அறைந்து கொண்டு “நீயும் அப்படித் தான் எண்ணினாய் அல்லவா” எனச் சொல்லி நகைத்தனர். சிப்பி சிறுவான் குரங்கென சடசடவென நாவல் மரத்தில் ஏறினாள். கர்ணிகையின் அருகமர்ந்து தீயுருட்டும் கற்களை உரசிப் பஞ்சுத் துண்டொன்றைப் பற்ற வைத்தாள். கர்ணிகை துதியை நீட்டிப் பற்றிக் கொண்டாள். இன்புகை கிளைகளில் பரவியது. இளம் பாணனின் அடிப்பாதங்களும் விரல்களும் கூசின. இருவரும் புகைத்த பின் இளம் பாணனை நோக்கித் துதியைக் கொடுத்தாள் சிப்பி. சிதி அவர்களை நோக்கிய பின் “அடிப் பாவிகளே. இன்று வந்த இவர் உங்களுக்கு முக்கியமாய் போய்விட்டாரா” எனச் சொல்லிச் சினந்து சிரித்தாள். இளம் பாணன் வாங்கிய துதியைக் கையில் வைத்துக் கொண்டு யாதினிக்கா சிதிக்கா கொடுப்பது எனத் தயங்கினான். யாதினி அவனைத் தோளணைத்து “புகைத்துக் கொள்ளுங்கள் பெருங்கவியே” எனச் சொல்லி அவன் மூக்கைப் பிடித்து ஆட்டினாள். இளம் பாணன் துதியை இழுத்துப் பற்றிக் கொண்டு புகையை ஊதினான். விழிகள் சொருகி மறைவன போல முகம் மலர்ந்தான். சிதி அவனது தோளில் சாய்தாள். அவர்களிருந்த பெருங்கிளை மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. யாதினி அவனது இடக்கரத்தை எடுத்துத் தன் தொடையில் வைத்துக் கொண்டு விரல்களைப் பற்றியிருந்தாள். நான்கு திசைகளினாலும் காவலிடப்பட்டவன் போல் என எண்ணியவன் பிறகு நான்கு தேவியரால் என எண்ணிக் கொண்டு புகையை இழுத்துக் கொண்டிருந்தான்.
ஆயிரம் பறைகளும் முழங்கி ஆர்க்க நூற்றியெட்டுக் கொம்புகள் ஓங்கிப் பிளிற நூற்றியெட்டுப் பெருமுரசுகள் ஒருதாளத்தில் ஒலிக்க ஆயிரத்தெட்டுச் சிறுமுரசுகள் எறும்புக்கால்களெனத் தொடர ஆலயத் திசையிலிருந்து அம்பலம் நோக்கி ஆடலரும் பரத்தையரும் சுற்றிலும் தீயால் ஒளியிடப்பட்டு தீநதி நகர்வதைப் போல் தோன்ற அம்பலத்தருகை நெருங்கினார்கள். முட்டி மோதும் மேனிகளும் விழிகளும் எத்திசை எத்திசையென விம்மின. இளம் பாணனும் நான்கு தேவியரும் மெய்கள் மறந்து புகைப்பெருஞ் சீறலுக்கிடையில் பொன்னும் அருமணிகளும் மினுங்கும் பரத்தையர்களிடை உறை நோக்குடன் அம்பலத்தை நோக்கி வரும் சிற்பனை நோக்கினர். பொன்னொளிர் மலர்க்காட்டில் வேங்கை நடப்பதைப் போல் தோன்றியது. ஒவ்வொரு மேனியும் கோபுரத்தின் உச்சியில் நின்றிருக்கும் சின்னஞ் சிறிய தெய்வங்களைப் போல் தோன்றின.
நூற்றியெட்டு வீணைகள் அவர்களின் பின்னே வந்தன. அம்பலத்தின் படிகளில் சிற்பன் ஏறுந் தோறும் குலவைகள் கூடியொலித்தன. பறைகள் ஆர்த்து மிரண்டன. பரத்தையர் அரை நிலவு வடிவில் அம்பலத்தைச் சுற்றி நிற்கச் சிற்பன் ஏறிக்கொண்டிருந்தான். கிளையிலிருந்து நோக்குகையில் பெருமலையில் ஏறும் புலிக்குட்டியெனத் தோன்றினான் சிற்பன். அம்பலத்தில் ஏறி நின்று விண்மீன்கள் எரிந்து கொட்டிய வானை நோக்கித் தலை உயர்த்திச் சிலகணங்கள் நின்றான். கூட்டத்தின் ஓசைகள் சிலகணங்கள் மறைந்தன. பறைகள் வாய் ஓய்ந்தன. வீணைகள் அம்பலத்தை முழுவட்டம் சுற்றி அமர்ந்தன. வீணைக் கலைஞர்களின் விரல்கள் முதல் தந்தியின் மேல் மிதக்கும் சிறு மேகமென ஆடாது நின்றன. ஓங்கி முழங்கிய வானிடி ஒலியென ருத்ரம் ஒலித்து வெடித்து எழுந்த போது அனைத்தும் அதனதன் மெளனத்திற்குத் திரும்பின. அம்பலத்தில் நிற்பவனை இளம் பாணன் உறுத்து நோக்கினான். ஒற்றைச் சிற்றுடல் லட்சம் விழிகள் முன் ஆடாது அசையாது ஒரு கருஞ் சிலையென உறைவில் நின்றது.
சங்கு மும்முறை முழங்கி ஓய்ந்த பின்னும் காற்றில் அதிரொலிகள் மின்னலுக்கென காத்திருந்தன. அங்கினி முதற் குலவையிட அறுபத்து மூன்று இணைப் பரத்தையரும் மேனியெழாது குரலொன்றாகி வாய் திறந்து சீறல் குலவையிட்டனர். அக்கணம் அச்சமென ஒரு காற்று அனைவரிலும் மோதிப் படர்ந்து அகல்வதை நோக்கினான் இளம் பாணன். அவனுள்ளும் அச்சம் எழுவதைக் கண்டவன் பல்லாயிரம் பேரின் முன்னே பரத்தையர் நாவெழும் சீறல் குலவையில் ஆதியிருளின் நாகங்கள் தலைவிரித்தெழுந்து பரவுவதைக் குடிகளைப் போலவே அவனகமும் ஒருகணம் கண்டு அஞ்சியது. விழைவெனும் தொல்பிலவின் நாகங்களே அவர்களின் நாவுகள். தொல்பிலவில் எதிரொலிப்பது காமத்தின் முதற் பாடல். அஞ்சித் தொடங்கிய மானுட வாழ்வில் காமம் அளித்த பெருவிடுதலையின் ஒலி. அச்சத்தால் நெறியிடப்பட்ட குடிநெறியென்றான பிடிகாப்புகளை உடைக்கும் விழவின் முதல் நாதம். அச்சமென்று அங்கு எழுவது குடி நெறி விலகப்போவதால் அல்ல. விலகும் நெறிகள் ஆக்கப் போகும் மானுட விலங்குகளின் குகை விட்டெழும் வருகையின் அறைகூவலில் அழியப் போகும் மெய்யென்றானவற்றின் சிதைத்தீ வேகுமொலியைக் கேட்பதால் செவிகொள்ளும் ஆதியச்சம். மெய்யே மூநாள் எங்களைத் தொடாதிரு. இருளே இக்காலம் எங்களை அவிழ்த்து முன்வை. உன் பலிமேடையில் எங்கள் சிரசுகளை வைக்கிறோம். கொன்று குருதியுண்டு அத்தனை விழைவுகளையும் அவியாக்கு. தொல்மாயையே இக்குரல் கேட்டு எங்களில் எழுக. தொல்விழைவுகளே நாவொலி கேட்டு எங்களில் திகழ்க. தொல்விலங்குகளே எங்களில் உங்களைக் கண்டு கொள்க.
விருபாசிகையின் மேனியில் தொல்காம தெய்வம் சூர்ப்பனகை தன் நாவால் ஒருமுறை உதட்டை நக்கினாள். புழுதிச்சுவையை இனிப்பெனக் கொண்டாள். இறுதி குலவையும் எழுந்து முடிந்த பின் வீணையின் தந்திகளில் மேகங்கள் பொழிவின் முதல் துமியைத் தொட்டு மீண்டும் மேகங்கெளெனத் தொங்கின. தலையை நேராக்கி ஆலயத்தை நோக்கி நின்ற சிற்பன் விழிகளைத் திறந்து முகப்பைப் பார்த்தான். எவரையும் நோக்காத அம்பலத்தின் உச்சி மேடையில் காற்று அவனைத் தொட்டுச் சுழன்று அகன்றது. பாதத்தின் அடியில் குளிரால் ஒரு தீ வருடியது. கருந்தேகத்தில் சூர்ப்பனகையின் தொல் மூச்சு அவிழ்ந்து அடிப்பாதத்திலிருந்து கேசத்தின் நுனிவரை ஓங்கி எரியத் தொடங்கியது. விழவின் தெய்வமென்றானவள் ஒவ்வொரு மேனியிலும் மூச்சென உயிர்த்தாள்.