84: பெருவூஞ்சல்
மடாலயத்தின் பொன்வேய் கூரையின் மேல் புறாக்கள் சூரியச் சிறகுகள் பூண்டவை போல் ஒளியில் மினுங்கிக் காற்றில் எத்திக் குறுகுறுத்துக் கொண்டிருந்தன. புலரியின் பனிக்காற்று அல்லிக் குளத்தின் மேல் கவிந்து குளிரிலைகளை அலைத்தது. மாகதா ஊழ்க நிலையில் அல்லிக் குளத்தின் கரை மேட்டில் பனியில் பனியெனக் கரைந்திருந்தார். அல்லிக் குளத்தின் காற்றலைகளிடை கரைச் சேற்றிற்குத் தலையையும் குளத்திற்கு வாலையும் நீட்டியிருந்த இரு பெருமர வேர்ப்புடைப்புகள் போன்ற முதலைகள் வாயை இழுத்துப் போர்த்துக் கொண்டு விழிகளை அரை திறந்து மாகதாவை நோக்கிக் கொண்டிருந்தன. பெருந் தவளைகள் ஒலியெழுப்பிக் கொண்டிருப்பதைப் போல் இடைவிடாத குறட்டையொலிகளால் கார்காலம் திரண்டு வருவதைப் போல் மடலாயம் மயக்கெழுந்து சூழ்ந்திருந்தது.
சிறிய மூன்று கற்பாறைகளின் மேல் மண் கலயத்தில் பசும் பால் கொதித்துக் கொண்டிருந்தது. தீக்கரங்கள் கலயத்தைச் சுற்றி அள்ளிப் பருகுபவை போல எரிந்து கொண்டிருந்தன. பாலிலிருந்து வெண்புகையென ஆவியெழுந்து இனிய நறுமணம் காற்றை விசிறிக்கொண்டிருந்தது. பனங்கட்டிகளைக் கரை நிலையில் பாகென ஊற்றியிருந்தார் மகாசோதி. தலைக்கு மேல் பல்லாயிரம் இலைகள் கொண்ட பேரரச மரம் மெளனத்தில் பனிபோர்த்து இடைக்கிடை நலுங்கி மெளனத்தை எக்கிப் பிரட்டியது.
முதல் நாளிரவு அவரது வாழ்வை என்றென்றைக்குமாக மாற்றப் போவது என்பதை அசலவை மடாலயத்தின் புத்த சிலையின் பின்னிருளில் ஒற்றை அகல் வெளிச்சத்தில் கண்ட போதே அகம் ததும்பியதன் மூலம் உணர்ந்தார் மகாசோதி. அச்சந்திப்பு அதன் நிகழ் முறையாலும் அகம் நீண்டு கொண்டிருந்த ஏதோவொரு விழைவுக்கான வேட்கையின் திரி ஈரமடையாது உலர்ந்திருந்ததாலும் எதன் ஊழாலோ வகுக்கப்பட்டிருக்கிறது என்றது உளம். இருளில் கருந்தழலெனத் தகிக்கும் அசலவின் முகம் அவரது உறக்கத்தை உலைத்துப் போட்டது. எண்ணங்களைக் கொதிக்க விட்டு அமர்ந்திருந்தார் மகாசோதி.
எரிவிறகுகள் குவிக்கப்பட்டு சுற்றிலும் வேடிக்கைக் கதைகள் சொல்லி நகைத்துக் கொண்டிருந்த வண்டிலோட்டிகளின் குழுவிலிருந்து நிழலொன்று பிரிந்து வெளியேறுவது போல் அசல மடாலயத்தின் உள்ளறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மகாசோதியின் மாணவன் கிரியவெல்ல அசலவை இடைமறித்து உசாவினான். அவர்களது உசாவலில் ஒருவரை இன்னொருவர் அறிந்ததன் பாவம் புலனாகிய போது மகாசோதி புன்னகை ஒரு வெளிச்சமென அவரைக் காக்க எழுந்து சென்றார். அவர் நெருங்கி வருவதைக் கண்ட கிரியவெல்ல அசலவின் தோளில் தொட்டு உள்ளே எனத் தள்ளினான். இருவரும் முன்னே விரைந்து நடக்கத் தொடங்க எதுவோ பிசகுகிறது என உணர்ந்த மகாசோதி பின் தொடர்ந்தார். வேட்டைக்காரரைத் தொடரும் இரையென அவரது ஊழ் அவர் முன்னே நடந்து சென்றது. புத்தரின் கற்சிற்பத்தின் முன் ஒற்றை அகல் புத்தரின் அகம் போல் தண்ணொளி கொண்டு எதற்கும் வளையாது ஒளிர்ந்து கொண்டிருந்தது. புத்தரின் பின்னே தலைமை அறையின் இடைநாழியில் அசல உறைந்து கொண்டான். கிரியவெல்ல மகாசோதியின் முன்னே வந்து கன்று புல் மேயச் சரிப்பது போல் தலையை நீட்டி மந்தணக் குரலில் “ஆசிரியரே. உங்களைச் சந்திக்க நமது சிங்கைபுரியின் பெருந்தளபதி அசல வந்திருக்கிறார். ரகசியமான சந்திப்பு” எனச் சொல்லி அவரது நிழலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அசலவைப் பேச்சுவார்த்தை மன்றுகளில் மகாசோதி சந்தித்து உரையாடியிருக்கிறார். வழியும் சொல்லாற்றில் அசையாத பாறை மெளனம் கொண்டு அமர்ந்திருப்பவன் அசல. எண்ணிச் சொல்லெடுத்து அகலாது அணுகாது எதிலும் கலந்து கொள்ளாதவன் போலும் அரசாணையின் வாட் பிடி போலவும் தோன்றுவான். அரசு சூழ்தல்களில் அபாயமானவர்கள் மெளனிகளும் இருட் பிலவுகளெனத் தம்மை வெளிப்படுத்தாதவர்களும் என்பதைக் கற்றவர் மகாசோதி என்பதாலேயே அவர் இத்தீவுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அவரது குடும்பம் அரசில் அங்கமென வாழ்ந்தது. புத்தரின் நெறிகள் முதலில் வீதிக்கு இழுத்தது செல்வந்த புத்திரர்களையே. மிகைச் செல்வம் ஓர் மாயையெனக் கண்ட மகாசோதி புத்தரின் சொற்களால் உலகை வேறொன்றனக் கண்டு கனியும் நெடும்பயணத்தில் இறங்கியவர். அவரது ஆசிரியரால் இத்தீவில் உள்ள மடாலயங்களை விரிவுபடுத்தவும் புத்தரின் சொற்களை நிலைக்கச் செய்யவும் அனுப்பப்பட்டவர்.
புத்தரின் முன்னிருந்து விழுந்த அகற் சுடரின் ஒளியில் மகாசோதியின் நிழல் விழுந்திருந்தது. தலை மெல்ல அசைவது போல் தோன்ற கிரியவெல்ல இருளுக்குள் மறைந்தான். இடைநாழியைக் கடக்கும் பொழுது அசல பற்றிய குடிக்கதைகள் அவரது சித்தத்தில் எழுந்தன. எளிய குடியில் பிறந்து சிங்கை புரியின் மாபெருந்தளபதிகளில் ஒருவரென ஆகிக் குடிகளுக்குப் போர் நாயகனென ஆகுவது எளிதல்ல. அதற்கு உள்ளுறையும் மாவிழைவு துணை நிற்க வேண்டும். காலத்தைத் திருப்பும் வல்லமைகள் அவனை உடன் நடத்திவரல் வேண்டும். அறிய முடியாதவனும் அறிந்தே ஆகவேண்டியவனும் எனச் சிங்கை புரியின் அரசில் ஓர் மந்தணச் சிம்மமென அவன் வளர்ந்திருந்தான். மகாசோதியுடன் உரையாடும் பொழுது தமிழ்க்குடிகளுடன் எங்கனம் சமாதானம் கொள்வது. நாட்டில் அமைதியை உண்டாக்கச் செல்லக் கூடிய எல்லைகள். பாரதத்தின் படைத்தாக்குதல்களைக் கையாள்வதும் பேச்சுக்களை விரிப்பதும் என பலவற்றை அவன் ஆழம் சென்று தொட்டுச் சொல்பவன். அவனது இயல்பில் சிலகணம் மீறியெழும் கூர்மையும் உக்கிரமும் நீலழகனிலும் எழுவதைக் கண்டிருக்கிறார் மகாசோதி. விழிகளற்ற இரண்டு படைக்கலங்கள் என எண்ணியிருக்கிறார். இன்று அதிலொருவர் இருளில் களியில் மந்தணமாகச் சந்திக்க அழைப்பது நோய் வந்து தேகத்தைக் கவ்வுவதைப் போல் அவரை உலைக்கத் தொடங்கியது. இதயம் படபடக்குமொலி இடைநாழிச் சுவர்களில் பட்டொலிக்கிறது என மயக்குக் கொண்டார். தனது மாணவர்களுடன் அவனது தொடர்பை எண்ணி இத்தனை காலம் அகத்தில் உரையாடியவை அவனிடம் சென்று சேர்ந்திருந்தால் அவன் அவரைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருப்பான் என அஞ்சினார். இத்தீவின் அரசியலை இரண்டு மூர்க்கங்கள் மோதிக் கொள்ளும் களமென எண்ணுபவர் மகாசோதி. அம்மூர்க்கத்தின் முன் புதிதாகப் பிறந்த பசுக்கன்று போல் புத்தம் நின்று கொண்டிருக்கிறது. அதனை இருவரும் வளர்க்கவும் சிலநேரம் இருவரும் கழுத்தறுத்துக் கொல்லவும் கூடும் என மாணவர்களிடம் பேசுவார்.
கிரியவெல்ல அவரின் அணுக்கர்களில் ஒருவன். தலைமை அறையில் அரசு சூழ்தல்கள் தொடர்பில் தமிழ்க்குடித் தலைமைகளுடன் அவர் விவாதிக்கும் பொழுதிலெல்லாம் அவன் உடனிருந்திருக்கிறான். நீரள்ளி வைப்பவனாகவும் ஓலைச் சுவடிகளில் குறிப்புகளைக் குற்றுபவனாகவும் அவர்களுடன் ஓலைத் தொடர்புகளைப் பேணும் முறையும் அறிந்தவன். அவன் ஒற்றன் என்பதை மகாசோதி நம்ப மறுப்பவர் போலத் தலையை ஆட்டிக் கொண்டு நகர்ந்த போது கற்சுவரென நின்ற அசலவில் மோதினார். இடைநாழியால் அவ்வொலி அரண்டு ஓடுவது மகாசோதிக்குக் கேட்டது.
அசல அவரை நோக்கித் தலையைக் குனிந்து “வணக்கம் துறவியே” என்றான். அவனது குரலில் நீடித்த மந்தண ஓசை அவரை மேலும் அச்சக் கிணற்றின் விளிம்பில் காற்கூசலென நிறுத்தியது. குரலை நலுக்கிக் கொண்டு “வணக்கம் பெருந்தளபதி. களிக்கு நீங்களும் வந்திருப்பதை அறியேன்” என்றார். அவரது விழிகளை உற்று நின்றவனின் இருள் தேகம் எருதொன்று எழுந்து நிற்பதைப் போல் தோற்றியது. “உள்ளே சென்று உரையாடலாமா” என்றான் அசல. இங்கே என்பது போல் கையைத் தலைமை அறை நோக்கிக் காட்டிக் கொண்டு முன்சென்றார் மகாசோதி. அறையில் மூன்று அகல்கள் முன்னரே ஏற்றப்பட்டிருந்தன. கிரியவெல்ல நான்காவது அகலை ஏற்றிக் கொண்டிருந்தான். துறவிகள் அமரும் கற்பாறை ஆசனத்தில் மகாசோதி அமர்ந்து கொண்டார். எதிரே கற்தரையில் அமரச் சென்றவனை மேலே என அவர் மர இருக்கையைக் கைகாட்டவும் அவன் மறுத்து விட்டுக் கீழே அமர்ந்து கொண்டான். அறையின் நான்கு சுடர்களும் இருளை விரட்ட எரிந்து கொண்டிருந்தன. கிரியவெல்ல அங்கிருப்பவனே அல்ல என்பது போல் அமர்ந்திருந்தான். அசல மூன்று நெடுமூச்சுகளை ஆழ இழுத்துவிட்ட பின்னர் “துறவியே. நான் ஒரு அரச பணியாக இங்கு வந்துள்ளேன். உங்களிடம் இதைக் குறித்துச் சொல்ல வேண்டுமென்பது எனது விருப்பம். நான் புத்த தர்மத்தை ஏற்றுக் கொண்டவன் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். சிங்கைக் குடிகள் வாழ்வின் அடிப்படையெனக் கொள்ளத் தக்க தத்துவார்த்தமான ஆன்மாவைக் கொண்டவர்கள் அல்ல. ஆற்றின் கரையில் சிதறுண்ட கூழாங்கற்கள் போன்றவர்கள். புத்த தர்மத்தின் வருகையில் நான் கண்டது குடிகளின் ஆன்மாவெனவும் அவர்களின் ஆதாரமெனவும் நிற்கபோகும் தத்துவத்தின் வருகையையே.
ஆதாரமான நெறியற்ற குடிகள் எத்தனை பரந்திருந்தாலும் ஆயிரக்கணக்கில் பெருகியிருந்தாலும் அவர்கள் குலைந்தழியும் பாதையால் சென்று கொண்டிருப்பவர்களே. நூற்றுக்கணக்கான போர்களால் இந்தத் தீவு கனல் கொண்டிருக்கிறது. அக்கனல் என்றோ ஓர் நாள் முழுத்தீவையும் முன்னைக் காலத்தில் குரங்கொன்றின் வாலில் பற்றிய தீ எரித்ததைப் போல அழித்து விடும். இம்முறை தீ பற்றியிருப்பது ஆயிரக்கணக்கான குரங்குகளின் வால்களில். போர் கொடியது. போரில் அனைத்தும் அறங்களென முன்வைக்கப்பட்டு நம்பவைக்கப்பட்டு நியாயமாக்கப்படுகிறது. எத்தனை பெருமை சேர்ப்பினும் வல்லமை அளிப்பினும் போரால் நெடுங்காலத்தில் விழைவது நிலையின்மை எனும் பெருவூஞ்சலாட்டமே.
இத்தீவில் நிகழும் போரை நான் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தத் தீவு எதனாலும் பிளவுபட சிங்கைக் குடிகள் விரும்ப மாட்டார்கள். அது அவர்களின் ஆன்மாவைப் பங்கிட்டு அளிப்பது போன்றது. தமிழ்க்குடித் தலைமைகளுடன் பலபருவங்களாக நீங்களும் பேச்சுவார்த்தை மன்றுகளிலும் மந்தண அவைகளிலும் பங்கெடுத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லுங்கள் தமிழ்க்குடி என்றேனும் முற்றரசு எனும் நிலையிலிருந்து ஒரு அடி கீழிறங்கிச் சிங்கை புரியின் அரசை ஏற்றுக் கொண்டு இணைந்து வாழ உடன்படுமா” என்றான்.
அவனது சொற்களின் நிரை கொல்வேல் பெருக்கென எதை நோக்கி களமொருக்குகிறது என்பதை மகாசோதி கண்டார். அவனது தருக்கங்கள் சிங்கை புரியின் மதியாளர்களை விட மூப்பும் கூர்மையும் திரண்டு விட்டதை நோக்கிச் செல்லெடுக்காது அமைதியில் சிலகணங்களை உறைய விட்டார். அறையின் நான்கு சுடர்களும் அமைதியிலென இருளை எரித்துக் கொண்டிருந்தன. மகாசோதி மெல்லத் தன்னை ஒருக்கிக் கொண்டு “பெருந்தளபதி. சிங்கைக் குடிகளின் அச்சத்தை நானும் அறிவேன். அதேவேளை புத்தம் அவர்களிலேயே வேர்கொண்டு தழைவிடும் நிலையில் இளமண்ணின் களியென உள்ளவர்கள். அவர்களது அகத்தில் புத்தம் வளர அனைத்துச் சாத்தியங்களும் உள்ளன.
தமிழ்க்குடிகளின் வரலாறும் குடி நம்பிக்கைகளும் நீண்டவையும் பெரியவையும். அவர்களின் கனவுகளை அவை ஒவ்வொரு நூலிழையிலும் தொடர்கின்றன. புத்தம் அவர்களுக்கு ஒரு நெறி என மட்டுமே தெரிய முடியும். மலையுச்சிக்குச் செல்லும் பலவழிகளில் ஒன்றென. கடலில் சேரும் நதிகளில் ஒன்றென. வணங்கும் தெய்வங்களில் ஒன்றென. ஆனால் இங்கு நாம் நெறி பற்றிப் பேசவில்லை என நினைக்கிறேன். நெறி ஒரு பின் திரையென என்னை இழுக்கும் தூண்டிலென வீசப்பட்டிருப்பதை உணர்கிறேன். இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பது அரசு சூழ்தலின் மையச் சிக்கல் ஒன்றைப் பற்றி.
என் அறிவிற்கு உட்பட்டு தமிழ்க்குடிகள் முற்றரசைக் கைவிட எந்த நியாயங்களும் இல்லை. அவர்கள் இந்த நிலத்தின் ஆணையைப் பெற்றவர்கள். நெடுங்காலம் வாழ்ந்தும் உழுதும் கடலோடியும் ஆலயங்கள் கொண்டும் தம் நெடுவேரை ஊன்றியிருப்பவர்கள். அவர்களது தொல்கதைகளின் படி இத்தீவை முழுதாண்ட இராவணனின் வழித்தோன்றல்கள். சூர்பனகையின் மகவுகள். இன்னும் ஆழத்தில் பாதாளங்களில் வாழும் நாகங்களின் குட்டிகள். அவர்கள் எண்ணிக்கையில் சிறுத்திருந்தாலும் அவர்களின் ஆன்மா இத்தீவிலேயே நிலை கொண்டிருக்கிறது. மண் அவர்களின் உடமையென்ற எண்ணம் ஆழப்பதிந்திருக்கிறது. அதை வென்றெடுக்கவெனப் பல்லாயிரம் உயிர்களைப் போர்க்களங்களில் பலியிட்டிருக்கிறார்கள். சிங்கை புரியின் அரசர்களது கொடுங்கோன்மை அவர்களது சிற்றரசுகளைச் சிதறடித்திருக்கிறது. பெண்களைச் சிறுமிகளை முதிய பெண்டிரைக் கூடக் கொடுகலவி புரிந்து அழித்திருக்கிறது. சிறைச்சாலைகளில் ஆயிரக்கணக்கான தமிழ்க்குடி இளைஞர்கள் கொடுஞ் சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார்கள். சித்தம் பேதலித்த பெண்கள் முழுநிலா நாட்களிலும் கருநிலவும் தினங்களிலும் இரவுகளை ஓலமிட்டு எரிப்பதை நானும் கேட்டிருக்கிறேன். அந்த ஓலம் சிங்கை அரசுகளின் கொடுங்கோலை எரித்தேயாகும். அறமென்பது இழைக்கப்பட்டவற்றிற்கும் சேர்த்தே அளிக்கப்படுவது. மறந்து புதியன கோருவது இழப்பை அறியாதவர்களுக்கு ஒண்ணும். இழந்தவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அவர்கள் வென்று நிலைகொண்டு தருக்கிக் கொள்வதே நீதி. அறத்தால் வரும் நீதியே தமிழ்க்குடிகளின் பலமென உயர்ந்து நிற்பது. அவர்கள் ஒரு படி இறங்கி சிங்கை புரியின் அரசவையில் நீலழகன் அமைச்சராக அமைவதை எவர் கனவிலும் எப்பொழுதாவது காண இயலுமா. நீங்களாவது கனவிற் தானும் அதைக் கண்டிருக்கிறீர்களா. அல்லது கண்டவர் எவரையாவது கண்டிருக்கிறீர்களா” என்றார் மகாசோதி. அவரது குரலில் மெல்லிய தீவிரம் அவரறியாது தகித்துக் கொண்டிருந்தது. அசல இருளில் புன்னகைத்துக் கொண்டு தோள்களை விரித்து அமர்ந்தான்.
“அதைக் கனவிலும் கூட எவராலும் காண ஒண்ணாது என்பதை அனைவரையும் போல நானும் அறிவேன் துறவியே. அது தான் இங்குள்ள மையச் சிக்கல். அதையே நானும் பேச வந்திருக்கிறேன். பருத்தும் இடையறாத போர்களால் வறுமையுற்றும் இளையவர்களைப் பலியிட்டும் சிங்கை புரியின் மீது விழுந்த அழி சாபமென நின்றிருக்கும் அரசர் நீலழகனைக் குடிகள் ஒப்பப் போவதில்லை. அதை விட மேலாக அப்படியொரு வாய்ப்பு நிகழ்ந்தாலும் நீலழகர் அதை ஏற்கப் போவதில்லை. அவரது கனவு தமிழ்க்குடியின் ஒற்றைப் பேரரசே. அவரால் அனைத்தையும் பெருங் கொற்றக் குடையின் கீழ் ஆளும் கனவை ஆக்க இயலவில்லை. அவரது காலமும் அவர் காலத்தின் கொடுமைகளும் அவரை அங்கு நிறுத்தியிருக்கிறது. அவர் தமிழ்க்குடியின் கனவு தெய்வம். கதைகளிலும் கூத்துகளிலும் எழும் அறப்பேரரசர்களும் மாவீரர்களும் இணைந்த பெருந்தமிழ்க் கனவென்றானவர். அவரால் அந்த எல்லையைக் கடக்க இயலாது. ஆகவே இந்தப் போர் கடைசித் தமிழ் மகவு இருக்கும் வரை தொடரப் போகிறது இல்லையா” எனச் சொன்னவன் குரலை உறுதியிலும் உறுதியாக நிலைத்துக் கொண்டு மகாசோதியின் கலங்கிய முகத்தை நோக்கி மாறாத ஒன்றைச் சொல்பவன் போல உற்று நின்றான். அவரது அகத்தில் அடுத்த கணம் எரிவிண்மீன் ஒன்று தொட்டு அனைத்தையும் எரிக்கப் போகிறது பொடிப்பொடியாக அனைத்தும் நொறுங்கப் போகின்றன என அலைப்பு எழுந்தது.
அசல ஒருகணம் தீமையின் சுடரில் எழும் புகையெனத் தோன்றினான். புகை கரைந்து நாசி நிறைந்து குமட்டுவது போல் மூச்சடைத்தது. கிரியவெல்ல மகாசோதியின் அருகில் நெருங்கியிருக்கிறான் எனத் தோன்றவும் திரும்பி அவனை நோக்கினார். அவன் அங்கேயே அமர்ந்து அங்கில்லாமல் இருந்தான். அவரது முகத்தில் வியர்வைத் துளிகள் துமிக்க ஆரம்பித்தன.
அசல ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் உடலென அமைந்து இருகரங்களையும் பேரரச தோரணையில் ஊன்றி அழுத்தமான மூச்சுடன் “துறவியே. நீலழகரை நான் சிங்கைபுரியின் பேரரசரை விட ஆயிரம் மடங்கு அதிகம் மதிக்கிறேன். நான் வணங்கும் முதற் தெய்வம் நீலழகரே. மாபெரும் எதிரியே வீரனின் தெய்வம். எளிய வீரனாக நின்று சொல்கிறேன். நீலழகர் விரும்பினால் அவரிடம் சிங்கை அரசை வென்று கொடுக்கத் தோள் நின்று நானும் என்னுடன் ஆறு தளபதிகளும் உடன் வருவர். நீலழகர் மலகந்தகமவைக் கொன்று சிங்கை புரியின் முடியாண்டால் அவரின் தளபதிகளில் ஒருவனாக நின்று அவரின் கீழ் பணியாற்றும் எளிய அணுக்கனாக வாழ்ந்து மடிவதில் பெருமை கொள்வேன். இதைக் குறித்து நீங்கள் அவருடன் பேச இயலுமா. நீங்கள் பேசிய பின்னர் அவர் உடன்பட்டால் நானும் அவருடன் தனித்து வந்து பேசுகிறேன்” என்றான் அசல.
மகாசோதி காலில் சர்ப்பம் பட்டவர் போல் திடுக்கிட்டார். எத்தகைய திட்டமிது. இதன் சாத்தியங்கள் முடிவேயில்லாத சுழற்பாதைகள் போன்றவை. எங்கு எவை சந்தித்துப் பிரியும் எது எங்கனம் நிறைவேற இயலும் என்பதை யாரால் கணிக்க ஒண்ணும். ஆனால் முன்னால் அமர்ந்திருப்பவன் மெய்யாகவே நுட்பன். பெருந்தளபதி. பெரும் போர்க்களங்களில் வென்று புகழொடு மீண்டவன். அவனது சொற்கள் மெய்யானால் இத்தீவின் எதிர்காலமென்பது மாபெரும் பொற்காலமென்று ஆகும். ஒருகணம் அசலவின் கனவுக்குள் சென்றார் மகாசோதி. அதன் வாயில் எளிமையானது. ஆனால் திறக்கத் திறக்க ஆயிரம் பெருவழிகள் கொண்டவை. இதுதானா அவன் வருகையின் எண்ணம். நீலழகருடன் கரங் கோர்க்கவா அசல தன்னிடம் உதவி நாடி வந்திருக்கிறான் என எண்ணிய போது அக்கணம் அவரில் ஆறுதலென ஓர் இளங் காற்று வீசியது. தாமரைகள் விரிவன போல் அவரது உதடுகள் மலர்ந்தன. முகத்தின் வியர்வையைச் செங்குருதி வண்ணத் துறவாடையால் துடைத்துக் கொண்டார்.
“பெருந்தளபதி. உங்களின் சொற்கள் பெரியவை. பெருங் கனவு கொண்டிருக்கிறீர்கள். காலம் இதை எங்கனம் நிகழ்த்துமென்பதை நான் அறியேன். எளிய கருவியென உங்களின் முன் நின்றிருக்கிறேன். தர்மம் தழைக்கவென நிகழும் போர்கள் கூடப் பேரழிவுகளையே உண்டாக்கும். மானுடரின் போர் தாகம் விந்தையானது. மேற் தோற்றத்தில் மறுப்பது போல் தோன்றினாலும் ஆழத்தில் திரளாக அவர்கள் போரையே விரும்புகிறார்கள். சிங்கைக் குடிகளோ தமிழ்க்குடிகளோ எவரானாலும் அதுவே பொதுமை.
இருதரப்பிலும் நிகழ்ந்த இழப்புகளின் அளவுகள் நிகர் வைக்க இயலாதென்றாலும் இழப்புகளின் மதிப்பையும் வலிமையையும் தீர்மானிக்கும் காரணிகள் எளிய தருக்கங்கள் அல்ல. அவை மானுட உணர்ச்சிகளினால் எரியூட்டப்படும் உலர்காடு போன்றவை. ஆகவே இருகுடிகளும் என்றும் உள்ளாழத்தில் இணைய முடியாத கூர்காயங்களை ஆக்கிக் கொண்டு விட்டார்கள். காலம் இக்காயங்களை எவ்வளவு சருகுகளைக் கொட்டி மூடினாலும் ஏதோவோர் கணப்பொறி மின்னற் துளியில் அனைத்தும் திரும்பப் பற்றிக்கொள்ளும். அரக்கு மரங்களின் காடெனப் போரின் நினைவுகள் குடிகளுள் சடைத்திருக்கின்றன. ஒரு தீத்துளிக்காகக் காத்திருக்கிறார்கள். இங்கு நிகழும் களிகூட ஓர் ஆற்றுப்படுத்தலே. குடிகளை மீள ஒருக்கி அனைத்து நம்பிக்கைகளையும் துலக்கி ஒளிவிடச் செய்யும் சடங்குகளே களியை வகுக்கும் நெறி. தீராத காயங்களுடன் மோதும் இக்குடிகளுக்கிடையில் உங்களின் கனவு ஒரு மாபெரும் வாய்ப்பு என எண்ணுகிறேன். அமைதியின் பொருட்டென நிகழும் போரில் சிங்கையின் இளம் படையும் புலிகளும் ஒன்றென நின்று மூர்க்கனென அமர்ந்திருக்கும் மலகந்தமை அழிக்கும் நாளொன்று இத்தீவில் நிகழ்ந்தால் அது பெரும் உளவிசையை இருகுடிகளுக்கும் அளிக்கும். மானுடர் ஓர் மாபெரும் அசாத்தியத்தை வணங்கக் காத்திருப்பவர்கள். அவர்களது எளிய கனவுகளுக்கு அப்பாலென தொலைவில் மின்னும் விடிவெள்ளியென ஒளிரும் விண்மீனை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள்.
நீலழகருடன் நான் உரையாடிப் பார்க்கிறேன். அவரது இயற்கையில் இது கூடுமா எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு மாபெரும் வாய்ப்பு எனும் வகையில் இவ்வாய்ப்பை ஒருக்கும் முயற்சியைச் செய்யாது விடின் நான் இதன் பழியைச் சுமக்க வேண்டியவன் ஆவேன். பல்லாயிரம் குடிகளைக் காப்பதற்கு என் துறவாடையை எரித்து அச்சாம்பலை அளிக்கவும் தயங்கேன்” எனச் சொற்கள் உறுதியுடன் ஒலித்த மகாசோதி சிலகணங்கள் மெய்வீரரென மேனி பொலிந்து மினுங்கினார். அவரில் வெல்வேன் எனும் தழலே ஒளியெனப் பெருகியது. அசல தனது கரங்களைக் கோர்த்துக் கொண்டு “அங்கனமே அனைத்தும் நல்லவையென நிகழட்டும் துறவியே. நீங்கள் இச்சூழ்கையைத் திறமையுடன் நிகழ்த்துவீர்கள் என உறுதியாக நம்புகின்றேன்” மெல்லப் புன்னகைத்தவன் “உங்களைப் பற்றிய ஒற்றுச் செய்திகளில் ஒருமுறை நான் கண்ட ஒப்புமை ஏன் அங்கனம் எழுதப்பட்டது என்பதை இப்போது காண்கிறேன்” என்றான்.
குழந்தையைப் போலச் சிரித்த மகாசோதி “என்ன அது” என்றார். கிரியவெல்ல உதட்டில் புன்னகையுடன் எழுந்து நீர்க்குடுவையை இருவருக்குமிடையில் வைத்த பின்னர் “துறவாடையில் ஒரு பேரரசன்” என்றான். “அதை நீ தான் எழுதினாயா ஒற்றனே” எனச் சொல்லிச் சிரித்தார் மகாசோதி. “மன்னித்துக் கொள்ளுங்கள் ஆசிரியரே. நான் உளவுக்கெனவே மடாலயத்தில் சேர்ந்தவன். ஆயினும் உங்களின் வழியையே தினமும் ஒழுகுகிறேன். மீளவும் களம் திரும்ப விரும்பவில்லை. பெருந்தளபதியிடமும் அதையே சொன்னேன். புத்தரின் கதைகளை நீங்கள் சொல்லக் கேட்ட பொழுதுகளில் நான் எண்ணிய ஒப்புமை அது. ஆனால் பிறிதொரு நாள் போரைப் பற்றிய விவாதம் ஒன்றில் நீங்கள் ஆற்றிய உரையில் தோன்றிய பெரும் நெறிகளும் தர்மமும் உங்களில் ஒளிர்ந்த புத்தரைக் காட்டியது. புத்தராகும் ஒவ்வொருவரும் துறவாடையில் பேரரசரே. நான் எளிய ஒற்றனாக இருக்க விழையவில்லை” என்றான் கிரியவெல்ல.
“ஓம். அது அவ்வாறே ஆகுக. உன்னைப் புத்த நெறி இழக்கலாகாது. உனது நுட்பமும் திறனும் தர்மத்தை நிலைநாட்டும் வல்லமை கொண்டவை. அது மெய்யான போருக்கே பயன்பட வேண்டும்” என்றார் மகாசோதி. அசல தோள்கள் குலுங்கச் சிரித்துக் கொண்டே “துறவிகளின் பேரரசரும் தனது படையை ஒருக்கிக் கொண்டிருப்பது நல்லது தான். சிங்கைக் குடிகள் புத்த நெறியை தமது அகமெனக் கொள்ளுவார்கள். தீரா வடுப்பட்ட குற்றங்கள் புரிந்த குடிகளுக்குப் புத்தம் ஓர் அருமருந்து. ஆற்றி அமையும் ஞானமளிப்பது. ஊழ்கம் கொள்ளவும் ஆழ்ந்து நோக்கவும் கற்பிப்பது உள்ளீடென உயர்ந்து செல்ல வகையளிப்பது. பகுத்து விவாதிக்கும் பயிற்சியை அளிப்பது. எதிர்காலத்தை உண்டாக்கிக் கொள்ள இவை அடிப்படையானவை” என்றான்.
“பெருந்தளபதி உங்கள் சொற்கள் வாள்களை விடக் கூர்மையாகி விட்டன” என்றார் மகாசோதி உதட்டில் சிறுவிரிவு கொண்ட புன்னகையுடன். “எல்லாம் புத்தரின் விவாதப் பயிற்சியாலேயே” எனச் சொல்லி இமைகளை மூடிக்கொண்டு பெருந்தோள்கள் குலுங்கச் சிரித்தான் அசல.
*
புலரியில் அனைத்தும் ஒரு கனவு போல் தோன்றிய மகாசோதி கிரியவெல்லவைத் தேடினார். அவன் மண்கலயத்தில் பாலை ஊற்றிய பின் தீயுருட்டும் கற்களை உரசி நெருப்பை மூட்டினான். அவர் பாற் கலயத்தின் முன் வந்தமர்ந்த பின்னர் வழமையான வணக்கத்துடன் எழுந்து சென்று தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தான். மாகதா ஊழ்கம் முடித்த பின்னர் மெல்லிய உறுதியான நடையுடன் கரங்களைக் குவித்து இதழ் மேல் இதழென வைத்தபடி வந்து கொண்டிருந்தார். மகாசோதியின் முகத்தில் இனிமையும் திகைப்பும் களியும் சுடர்வதை நோக்கிய மாகதா உளமறியாத நோக்கொன்றால் அவரை நோக்கித் தலையசைத்த பின்னர் மடாலயத்தின் உட்பீடத்தில் அமர்ந்திருந்த புத்தரின் முன் குவிந்திருந்த பழைய மலர்களை அள்ளிக் கூடையிலிடத் தொடங்கியதை நோக்கிக் கொண்டிருந்தார் மகாசோதி. பால் கொதித்து வெண்மையான பாலாடை திரண்டு பாலை மூடியது. இலைகள் அசையாது துயில புலரியின் அமைதியில் தனித்திருந்தது பேரரச மரம். ஒற்றைக் குயிலொன்று காற்றை உலுப்பிக் கூவத் தொடங்கியது. அதன் இசை ஓர் அழைப்பென விரிந்தது. மேகங்களில் சூரிய ஒளி செம்மையுடன் கனலத் தொடங்கியது.