85: நஞ்சு மழை
முதல் நாளிரவின் மயக்கிசையும் உடுக்கிசையும் அகத்தில் தாளமிட்டு எழுந்து கூச்சல் கொள்வது போல் தோன்ற விழித்துக் கொள்ளவென இமைகளை அசைத்த போது அவை காந்துவன போன்று விரிய மறுத்தன. சிற்பன் உதடுகளில் உலர்ந்திருக்கும் காய்ச்சலை வழித்துக் கொள்பவன் போல நக்கிக் கொண்டான். ஆழிப்புயலிடை சிறுகலத்தில் புரளும் மரப் பீப்பாய்களென உடலை உலைத்துக் கொண்டிருந்தது காய்ச்சல். நினைவுகளும் புரண்டு நுரைத்துச் சீறுவன போல் சித்தத்தைக் குலைத்து ஆடின. மேனியில் ஏறிய கொல் தெய்வமொன்று தன்னைத் தான் ஆடிமுடித்துச் சென்ற அம்பலமென உருக்குலைந்து கிடந்தான் சிற்பன். அவனது விரல்களைக் குளிர் விரல்கள் எவையோ பற்றுகின்றன என உணர்வு கொண்டான். நுதலில் தொட்டுக் காய்ச்சலை நோக்கும் புறங்கையைப் பனிக்கட்டியென உணர்ந்தான். அவனுள் தீச்சிம்புகள் உருவிக் கொட்டுவது நிற்காது தொடர்ந்தது. உறக்கத்திற்கும் ஆழ்துயிலுக்குமிடையில் விரிந்தும் சுருங்கியும் கனவுகளும் நினைவுகளும் குளத்தின் கற்படியில் ஏறியிறங்கி விளையாடும் மழலையென விரும்பிய வண்ணம் பாய்ந்து கொண்டிருந்தது.
அம்பலத்திலிருந்து குடிகளின் விழிகள் தெய்வமென அவனை நோக்கியிருந்த கணத்தை எண்ணிக் கொண்டான். அவை ஒவ்வொன்றும் வியப்பில் கூர்ந்தும் அடுத்த கணத்தில் நிகழப்போகும் அற்புதத்திற்கெனக் காத்துமிருந்தன. வீணையில் தந்திகள் சொட்டிச் சொட்டிப் பெருமழையென்றான போது புடவி தன் அலகிலா ஆடலில் சுழலத் தொடங்கியதைப் பாதங்களில் உணர்ந்து மெய்ப்புக் கொண்டான். மலர்கள் அம்பலம் நோக்கி விரிந்து வந்து தொடமுடியாமல் திரும்பவும் குடிகளிலேயே சொரிந்தன. பறையிசை முழக்கம் இடிகள் இடித்தெழுந்து தோல்களை அறைவது போல் எழுந்து ஒலியதிர்வுகள் மோதிய போது எதுவோ ஓர் அணங்கு அவனின் கழுத்தைப் பற்றி ஆலகாலத்தின் நச்சுத் துளியை நிறுத்துவது போல் தோன்றியது. உடுக்கிசை எழுந்து ஆர்த்த போது சில்லிட்ட புறந்தலையிலிருந்து நாக மேனி கொண்ட ஒருத்தி அவனை ஆடுகிறாள் என்ற மெய்ப்பு எழுந்தது. திரும்பினால் விலகும் நிழலென அவள் அவனை அணைத்தாடினாள். ஒவ்வொரு துடி உடுக்கும் அவளை ஆர்த்து எழச்செய்தது. கழுத்தில் கடித்து ஆலகாலத்தை உறிஞ்சி இழுப்பவளெனத் தோன்ற விலகு விலகு என்பதைப் போலக் கரங்களை ஆட்டியும் கால்களை உதைத்தும் அம்பலத்தில் கூத்தாடினான். குடிகளிலிருந்த பெண் விழிகள் அவனைக் கண்டு அரண்டதை நோக்கிய போது எவரோ அவன் பின்னே பேருருவில் தோன்றுகிறார்கள் எனப் பதைபதைத்தான். எவருமில்லை என அவ்விழிகளின் பெருக்கு அவன் விழிகளின் திசையிலேயே உறைந்திருப்பதைக் கண்டு உந்தி விரட்டுபவனெனப் பறந்து திசைகளை விரித்துக் கரங்களில் ஏந்தி ஈசனை இறைஞ்சி இறைஞ்சி ஆடலைத் தொடர்ந்தான். பிரண்டு புரளும் தேகங்களும் அவற்றில் முயங்கும் வேட்கையும் அவனை தெய்வம் பாவம் சூடவிடாது இழுத்து நிறுத்திக் கொண்டிருந்தன.
சூர்ப்பனகை. சூர்ப்பனகை என எழுந்த குரல்களை நீரடியிலெனக் கேட்டது அவன் அகம். எங்கே அவள் என ஒவ்வொரு திசையணுவையும் தொட்டுத் தேடினான். சிரித்தோடிக் கறுப்பில் விண்மீன்கள் ஒளிரும் காற்சிலம்பொன்றைக் கண்டான் சிற்பன். தெற்கில் எழுந்த தேவியின் பின் தேகம் கருமை திரண்டு எழில்மினுக்காடியது. சுடரும் கருமை. கருமையின் தீ. அவனது அகம் உச்சாடமென கருமையைச் சொல்லத் தொடங்கியது. அழியாக் கருமையே திருவதனம் காட்டுக. என்னில் எழுந்தவளே உன் மெய்மேனி திருப்புக. கூந்தலில் சொரியும் கருமையின் சிற்றாறுகளே உங்களை ஒருக்கி அவளின் முகச்சிலை காட்டுக. அவளது அழகு எது. அழகில் அவள் கருமை. குணத்தில் அவள் கருமை. மலரில் அவள் கருமை. இனிமையில் அவள் கருமை. தாபத்தில் அவள் கருமை. காற்சிலம்பின் கருமையில் நீந்திடும் விண்மீன்களின் ஒளி புடவிகளை அணிந்து அம்பலம் வந்த தொல்தெய்வத்தின் பிடிகாப்பெனத் தோற்றியது.
பேரிடிகளும் பெருங்குலைவும் ஒருமையும் கொண்ட நாதப் பெருக்கிடை ஒற்றை வேய்குழலின் கருங்கீதமென அவள் அவன் முன்னே குடிவெளியில் மிதந்து ஒவ்வொருவர் தோளிலும் தொட்டுப் பாய்ந்து கரங்கள் விரித்து ஆடினாள். ஆடலில் பெருங்கருமுலைகள் சுழித்து அலையக் காம்புகள் கருமணியென ஒளிர்ந்தன. கருமையின் ஆலம் பழமென விடைத்திருந்த காம்புகளை அவன் விழிகள் தொட்டுத் தொட்டுவிட நோக்கின. திசைகள் தோறும் அலைந்தவளின் கால்களும் பிருஷ்டங்களும் பெருமந்தியினுடையவையென எண்ணினான். வேழத்தின் கருமையில் தோன்றும் குறும்பில் உதைப்புக் கொண்ட அடிப்பாதங்கள் செங்குழம்பில் மலர்ந்திருந்தன. விரல்களில் மின்னிய காலாழிகள் ஒளிவிழிகளெனக் கண்டான். கழுத்தில் ஆர்த்த முத்தாரங்கள் முதுகில் கோளமாலையெனத் தூங்கியாடின. மலர்கள் அவளை ஊடுகடந்து அப்பால் விழுந்தன. அவள் தோள் தொட்டு எழுந்து பறந்த மானுடர் உச்சத்தில் முனகலெனத் தம்மை அறியாது கூவினர். நாணத் தறி அறுத்தனர். ஒருவரில் விழைவென மின்னல் தோன்றி ஒவ்வொருவரிலும் நரம்பென விரித்துச் சடைத்துப் பரவியது. வண்ணங்கள் மழையில் கரையும் ஓவியமென உருகி ஊற்றி மேனிகளில் ஒட்டிக்கொண்டன. மலர்களும் அணிகளும் மேனிகளும் விழிகளும் முலைகளும் மார்புகளும் தீயிலைப் புகையும் மதுவும் கள்ளும் விழைவும் வேட்கையும் தாபமும் நெருப்பும் தழலும் தீமணிகளும் அம்பலத்தைச் சுழித்தெழுந்த பேராழி வளைவெனத் தோற்றின.
தடித்துச் சிவந்த கொண்டைகள் அதரங்களெனத் துடிக்கும் பெருஞ்சேவல்கள் கூவ அவற்றை வானில் எறிந்தனர் கொல்வேல் குடியினர். அவர்களின் பெருங்குடியினன் போர்த்தளபதி சத்தகன் கருஞ்சேவலொன்றின் கழுத்தைப் பற்களால் கடித்துக் குருதியை அன்னத்தில் உமிழ்ந்து பெருகிய உதிரத்தை முறத்தில் குவிந்திருந்த அன்னத்தில் ஊற்றி விரல்களால் பிசைந்து திக்கெங்கும் எறிந்தான். பெண்கள் விழைந்தாடி வந்து குருதி அன்னத்தில் நனைந்தனர். சத்தகன் களிவெறி கொண்ட இளஞ் சிறுவனெனக் கால்களை உதைந்து அகூஹ்க் எனக் கூவிக் கொண்டு சேவலின் தலையை அம்பலத்தை நோக்கி எறிந்தான். அவனது குடியினரும் சேவல்களைக் கடித்துக் குருதியை மேனியில் ஊற்றிக் கொண்டே ஆடியபடி அம்பலத்தை நோக்கி எறிந்தனர். இடைவழியில் பறந்த சேவலின் தலைகளைக் குடிகள் ஒருவர் மீது ஒருவர் இடித்து விழுந்து பாய்ந்து பற்றிக் கொண்டனர். அருமணியைப் போல அதைத் துணியில் சுற்றி இடையில் சொருகிக் கொண்டனர்.
கொல்வேல் குடியின் இளம் பெண்கள் சத்தகனை அறைந்து குலவையிட்டு மலைகள் ஒன்றையொன்று அறைந்து கொள்வதைப் போல் ஆடினர். துடியிசையும் பறையும் முழவுகளும் கொம்புகளும் சிறுமுரசுகளும் தளைகெட்டு ஆர்த்தெழுந்தன. இருமுகப்பறை ஒன்றைக் கழுத்தில் துணியால் தூங்க விட்டு இளம் பன்றியொன்றைத் தூக்குபவனென பற்றி இருகரங்களாலும் தோல்கள் கிழிந்து விதிர்க்கும் வண்ணம் அடித்தாடினான் மாமந்தி. சத்தகனது கரங்களில் எழுந்த தொல்மானுட இசை சிற்பனில் வெறியார்ப்பெனக் கூடியது. படியால் இறங்கிக் கரங்களை நீட்டி கொல்வேல் குடியைத் தாவெனக் கோர இதோ இதோ எனச் சேவல்களை அள்ளி எறிந்தனர். கரும்புள்ளிகள் கொண்ட பெருஞ்சேவலொன்றைப் பற்றிய சிற்பன் அவனில் எழுந்த கொல்தெய்வம் அச்சேவலின் தலையைத் திருகுவதை எவரோ எனக் கண்டான். கூட்டத்தில் அகூஹ்க் என எழுந்த ஒற்றையொலி வறியவர்களின் கூடத்தில் விழுந்த ஒற்றை நாணயெமென ஒலித்தமைந்தது. பரத்தை வீட்டில் செல்வந்தர் சிதறி எறியும் நாணயங்களென அகூஹ்கள் எழுந்து பரவிய போது வாயில் வழியும் சுடு குருதியின் கொடுஞ்சுவையை நாவால் வழித்து உமிழ்ந்தான் சிற்பன். கொல்வேல் குடியின் இளம் பெண்ணொருத்தி தன் கருங்குழை கொங்கைகளைக் குவித்து அவனது குருதி எச்சிலை வாங்கிக் கொண்டாள். அவளைச் சுற்றி நின்ற பெண்கள் எனக்கு எனக்கு எனக் கூவியபடி அவளின் கொங்கைகளை நக்கிக் குருதி எச்சில் குடித்தார்கள். மழை கழுவிய தெய்வச் சிலை போல் அவளது முலைகள் ஈரத்தில் கருமை மினுக்கேறிக் காம்புகள் இன்னும் இன்னுமெனத் துடிக்க எழுந்து விறைத்து ஆடின.
அம்பலத்தின் மரப்படிகளில் அமர்ந்து வெறிதெய்வம் போல் வா வாவென அழைத்தான் சிற்பன். கொல்வேல் இளம் பெண்கள் மேலாடைகளை விசிறி எறிந்து மதர்த்தும் கூர்ந்ததுமான பல்வகை முலைகளை காற்றில் இருளில் களியில் திறந்து தெறிக்க விசை கொண்டு கட்டியார்த்து ஆடினர். தனது தேரில் அமர்ந்தபடி சத்தகன் கள் கலயத்தை குருதியெனக் கவிழ்த்துக் குடித்து பன்னிரண்டு என உரக்கச் சொல்லி மண்ணில் அறைந்து உடைத்துக் கொண்டிருந்தான். முதுபெண்டிர் அவனைச் சூழ நின்று காளையின் குறும்பை ஊக்கிவிடுபவர்களென மேலும் கலயங்களைக் கையில் தாலமென ஏந்தி நின்றனர். சிற்பனை நோக்கிக் கரும்புலியென எழுந்து படிகளில் நான்கு கால்களில் ஏறி நடந்து சென்ற பெண் அவனிலும் இருமடங்கு பேருருவளாய் தோன்றினாள். எருமையின் இருட்கருமையென மேனி விரிந்திருந்தாள். விழிகளில் கொல்வேன். கொன்று புணர்வேன் என வெறி சிவந்து நரம்பாடி ஓலமிட்டது. அம்பலத்தின் தெற்கு மூலையில் நின்றிருந்த ஆடலர் குழுவின் பெண்கள் அக்காட்சியை நோக்கிய பின் தலை தாழ்ந்து கொண்டார்கள். பெருஞ்சிரிப்பலைகள் எழுந்த கூட்டத்திடையில் வஞ்சமும் அவமதிப்பும் கொண்டவரின் சினமென அவர்கள் கூட்டத்திலிருந்து விலகி மனை செல்லும் வழியால் திரும்பினர். திருதிகாவின் நிழல் ஒருகணம் தயங்கியது. பின்னர் திரும்பாமல் முன்சென்று விழுவதைப் போல் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவற்றின் முன்னும் அனைத்தின் முன்னும் ஓடிக்கொண்டிருந்தாள் திருதிகா. திருதிகா கூட்டத்தின் முன் நடுக்குற்ற நிழலென ஓடுவதைத் திரும்பி நோக்கிய சிற்பன் வெறிச்சிரிப்பொன்றுடன் அமர்ந்திருந்தான். அவனில் எழுந்தது விழைவறுப்பவளின் தொல் சிரிப்பு. அதன் எல்லைகளை அறிந்தவரும் உற்றவரும் கடந்தவரும் மானுடரில் என்றும் பிறக்கவேயில்லை. நிகர் இல்லா விழைவி அவனில் எழுந்தாள்.
குருதி குளித்த முலைகள் செம்மாதுளைகள் உருண்டு பேருருக் கொண்டவை போல் தூங்கியாட அரக்கிகளில் ஒருத்தி கரும்புலியாகியதைப் போல் நடந்து வந்தவள் அவன் கால்களின் கீழிருந்த மரப்படியில் சாய்ந்து கொண்டு விண்மீன்களும் நிலவும் பரந்த மஞ்சமென்று விரிந்த ஆகாயத்தை நோக்கிப் படுத்து இருகரங்களாலும் முலைகளையும் கூந்தல் பிசிறுகளையும் இதழ்களையும் இடையையும் வயிற்றையும் தொடைகளையும் பிசைந்து உருவேறிக் கொண்டிருந்தாள். தன்னுள் தான் காமுற்று வேட்கைத் தினவெடுக்கும் பெரும் பேயொன்றின் முனகல்கள் அவள் உதட்டில் பிரிந்து ஓசைகளென வெடித்தன. அவனது கால்கள் மாலைகளை மூடிக்கட்டிய வாழை மடல்கள் போன்று பொலிந்திருந்தன. அவனது இடையாடை காற்றிலாடியது. செவியின் மணிக்குண்டலங்கள் பொன்மின்னென ஒளிர்ந்தன. குழல் ஈரமூறிச் சாய்ந்து தோள்களில் படிந்து மார்பில் இறங்கிப் பரவியிருந்தது. மூச்சை அதன் கதிக்கு ஓடவிட்டு சுற்றிலும் எழுந்த காம மயக்குகளை நோக்கினான். சத்தகன் தன் தொடையறைந்து சிரித்துக் கொண்டு விறலிகள் அவனைப் பாடும் சொற்களைக் கேட்டுக் களியாட்டில் அமைந்திருந்தான். அவனது மேனியில் சுடரும் அணிகள் அவனுள் உறையும் தொல்மந்தியை மறைத்துக் கட்டியிருந்தன என எண்ணினான் சிற்பன்.
தன்னுள் எழுந்த ஓசைப் பிரவாகம் கால்விரல்களால் வழிகிறதென எண்ணியவன் அவை குளிர்ந்து தவளையின் வாயில் அகப்பட்ட சர்ப்பமென நெளிவதை நோக்கியிருந்தான். கூசிய கால்களை நோக்கினான். இரு இளம் கரும் பெண்கள். மென்முலையாள்கள். சுடர் விழியாள்கள். கருங்கூந்தலுடையாள்கள். கருநிலவெனப் பிருஷ்டமுடையாள்கள். ஆயிரம் நாவுகள் கொண்ட வாயுடையாள்கள். அணிகளில் கருமையே அழகென்றானவள்கள் அவனின் இருகால் விரல்களையும் முத்தமிட்டு உறிந்து கொண்டிருந்தார்கள். ஆடலில் தகித்த விரல்களைப் பனிநதிகளில் ஆற்றுவது போல் அவனை ஆழ்த்திக் கொண்டிருந்தன வாய்கள். மேனியென்பது அசையா உடுக்கென உறைந்திருந்தவன் அலைகடல் அறையும் கரையில் நீரலைகளை எத்தி முன் சென்று பேராழியில் கலப்பவன் போல அவர்களை விலத்தி மரப்படிகளால் தாவிப் பாய்ந்து குடியிடை கலந்தான். அவனது மெய்க்காவலுக்கென நின்றிருந்த புலிவீரர்கள் அவனை நெருங்கி வர வளைந்து ஆடுபவன் போல் நின்று கொண்டு “செல்க. விலகிச் செல்க. இவ்வொருமுறையாவது நான் எனக்காக ஆடிக் கொள்கிறேன்” எனக் கூவினான். “ஓம். அவருக்காக. அவருக்காக” எனக் குடிப்பெண்கள் ஓசையிட்டுக் கத்தினர். புலிவீரர்களைத் தள்ளி அகற்றினர்.
பெண்புலிகள் இடை நுழைந்து அவர்களை அகற்றி சிற்பனின் அருகு சென்று “மெய்யாகவா” எனக் கேட்டாள் ஒருத்தி. “ஓம். மெய்யாகவே புலியே. நான் ஆடியவை பிறர்க்கென்று நிகழ்ந்த போது எது என்னில் இழக்கப்பட்டதோ அதை இன்று கண்டேன். எக்கணமும் விழைந்தாலும் கிடைக்காத பொற்கணமொன்று என் வாழ்வில் அவிழ்ந்துள்ளது. இதைத் தடுக்க எவரும் துணிய வேண்டாம். என்னை நான் ஆடுவதை நிறுத்தும் உரிமை எவருக்கு இங்கு இருக்கிறது” எனக் கூவினான். “ஓம். எவருக்கு இங்கு இருக்கிறது. அவர் ஆடட்டும். களி கொள்க காதலா. களியாடுக ஆடலா. களிப்பெருக்கில் நீந்துக அழகனே” எனக் குரல்கள் கூவியார்த்தன. பித்தில் நெளியும் நாகங்களிடை விழுந்த குருளைகள் போல் அரண்டு விலகினர் புலிவீரர்கள். சத்தகனின் அருகு சென்ற சிற்பன் உரத்த குரலில் ஓசைகளைக் கிழித்தபடி “மாகளத்தோனே. என்னுடன் ஆடுக. ஆடியருள்க” என வணங்குபவன் போலக் கரங் குவித்துக் கேட்டான். சத்தகன் தன் மார்பில் ஓங்கி இருகரத்தாலும் அறைந்து கூவி அகூஹ்க் அகூஹ்க் என்றான். குடித்திரள் பிலவுச் சுவரென எதிரொலித்துப் பெருக்காடியது.
பறையாளர்கள் திரண்டு வந்து அவ்வெளியை அறைந்து அதிர்த்தனர். செவிகள் தோற்பறையெனக் கிழிய தோல்கள் மதர்த்து எழ வேட்கையின் தீமலைகள் மோதிக் கொள்வதைப் போல் எருதுக் கொம்புகள் முட்டிப் போரிடுவதைப் போல் தந்தையும் தனயனும் களிகொள்வதைப் போல் காதலனும் காதலனும் இணையாடுவதைப் போல் நீரும் நீரும் சேர்ந்தணைவது போல் தீயும் தீயும் விலகிச் சேர்வதைப் போல் களியில் மது கலந்து புரள்வதைப் போல் சிம்மங்கள் இரண்டு வேட்டை புகுந்ததைப் போல் நாகங்கள் இரண்டு வஞ்சம் கொண்டதைப் போல் இருவரும் ஆடினர். அவர்களைச் சுற்றிலும் இவ் அருங் கணத்திற்கு விண்ணும் மண்ணும் வாழ்த்துவதைப் போல் மலர்கள் பொழிந்தன. கள்ளை அள்ளி வாயில் குவித்து துப்பினர் பெண்கள். தீயிலை வாசம் காற்றை அலைத்து மயக்கின் பொழுதை ஆடலாக்கியது. எவர் எவரின் கரத்தில் அணைந்தார். எவர் முலைகள் எவர் வாயில் பதிந்தன. எவர் மூச்சு எவர் கூந்தலை எரித்தது. எவர் கன்னங்கள் எவர் கன்னங்களுடன் உரசியது. எவர் உதடுகள் எவர் உதடுகளை உறிஞ்சின. எவர் கரங்கள் எவர் அல்குல்கள் அளைந்தன. எவர் கரங்கள் எவர் குறிகளைத் தொட்டன. எவர் பிருஷ்டங்கள் எவரில் மோதின. எவர் விந்தை எவர் குடித்தனர். எவர் மதனத்தை எவர் அருந்தினர். எவர் புழையில் எவர் கருக்கொண்டனர். எவர் காமத்தில் எவர் எழுந்தனர் என அறிய ஒண்ணாத மாய அம்பலமொன்று அவ்வெளியில் விரிந்தது.
சிற்பன் திசைகளெழுந்த முக்கண் முதல்வென உருவாடினான். தீநுதல் திறப்பவன் போல் திக்கெல்லாம் சுழன்றான். அவனாடிய விசைக்குள் ஈசல்களென நுழைந்தவர்கள் மோதுண்டு தெறித்தனர். சத்தகன் பெருங்கரு வேழமொன்று மதங் கொண்டு ஆர்ப்பதைப் போல் மாகரங்கள் தூக்கி ஆடினான். அவனை மோதுண்டவர்கள் பெருமலையில் பட்ட கற்களென விலகினர். இருவரிடையும் எழுந்த தெய்வங்கள் விசையுற்று மலர்ந்தனர். ஒரு மெய்க்கணத்தில் அவர்கள் ஒருவரெனத் தோன்றினர். புடவியை ஆக்கிய இருபெரும் வல்லமைகளின் இருகரங்களென்றாகினர். ஆடலில் நுண்ணுவது கலை. ஆடலில் பித்துவது இறை என்றன அவர்களின் ஆடலில் விழுந்த வியர்வையின் குழவிகள். பித்தர்களாடிடும் கூத்திற்கெனத் தங்களது முழுப்பேராற்றலையும் உருக்கிப் பறையாளர்களும் உடுக்கிசைப்பவர்களும் முரசு கொட்டுபவர்களும் இசைத்தனர். பெருங்காமத்தில் மாகாதல் பொருதுவது போல் இசை ஆடலில் கலந்தது. பிணைந்து முயங்கியது. முயங்கி முத்தங்களாகியது. முத்தங்களிலிருந்து முனகலென்னும் பேரிடியோசைக்குச் சென்றது. சிரிப்புகள் கொல்வேலின் நுனிகளெனப் பளீரென்று எரிந்தன. சூர்ப்பனகை இருவரிடை காற்றென எழுந்து காமுறுகிறாள் என்றார்கள் முதுபெண்டிர். அங்கு அங்கனம் எழுந்த காற்று ஒவ்வொருவரிலும் மூச்சென நுழைந்தது. வேழங்களும் புரவிகளும் அத்திரிகளும் காமங் கொண்டன. பாதாளத்தின் நாகங்கள் விழைவுப் புழை திறந்து மண்ணேறின.
நெளிவதில் நிலைப்பது காமம் என்றது இளநாகம் கூரிதி. நெளிவதில் கலைவது காமம் என்றது அதன் தோழி சிலுப்பிகை. நெளிவதில் நெளிவது காமம் என்றது அதன் தோழன் சூரதன். நெளிவதில் நெளியாது உறைவது காமம் என்றது அதன் தோழன் விரகன். நெளிவதில் வாலென ஆவது வேட்கை என்றது முது நாகம் பாசதன். நெளிவதில் அழலென விசைவது வேட்கை என்றது முது நாகினி பாம்பா. நெளிவதில் நிமிர்வென ஆவது வேட்கை என்றது முது நாகினி சாதுலா. நெளிவதில் நடுக்கும் நிமிர்வதில் விடைப்பும் அயர்வதில் ஓய்வும் பெயர்வதில் பிரிவும் விழைவதில் விருப்பும் திளைப்பதில் களியும் அளப்பதில் சுவையும் ஆகுவதில் மெய்மையும் ஆவதே காமம் என்றது வாசுகி. வாசுகி எழுந்து நின்று தன் ஆயிரமாயிரம் கூர்கரும் முகங்களைத் தோற்றி என் குடிகளே. என் குழவிகளே என்றான். வாசுகி தன்னைத் தான் கவ்வி விரிந்தான். நஞ்சென இருள் ஆகாயத்தில் பரவியது. பின் பெருமழை உடைப்பென விரிந்தது. சீறல்கள் மின்னற் சரிவுகளெனக் கொட்டின. நஞ்சு மழை குடிகளில் நீலமாய் பிளந்து பெய்தது. விடத்தை அருந்திய நா ஒவ்வொன்றும் நாகம் நாகமென்று அலறின. அலறித் தானே நாகமென்று கண்டு கையார்த்துக் காலெழுந்து முத்தாடி மகிழ்ந்தன.
வாசுகி வந்தான். எங்கள் குல மூதாதை எழுந்தான். மண்ணே விடங் கொள்க. மானுடரே என்னை அருந்துக. மானுடரில் விழைவென எழுபவனின் நஞ்சு குடிகளின் முகத்தினில் சிரித்தது. சிற்பனின் பாதங்களில் வெள்ளமெனப் பாய்ந்தது. சத்தகனின் மார்பில் விசையென அறைந்தது. முத்தாடும் பெண்டிரே இதோ உங்கள் நாகர்கள். இதோ உங்கள் களித் தோழர்கள். அவர்களை உங்களின் நஞ்சினில் ஆழ்த்துக. நஞ்சே கடலென்றறிக. நஞ்சே காற்றென்றறிக. நஞ்சே தீயென்றறிக. நஞ்சே வானென்றறிக. நஞ்சே புடவியின் முதற் துளியென்றறிக. நஞ்சில் கரந்த அமுதே களியென்றறிக. புடவியின் நஞ்சே கருநீல ஆழிகள் ஆர்க்கும் உலகென்றானது என்றன நாகங்கள். ஒவ்வொரு மேனியிலும் பற்றியேறின. ஒவ்வொரு உதடுகளையும் கடித்து முத்தின. ஒவ்வொருவர் தலையிலும் நீலக்கண் அருமணி சுடரத் தொடங்கியது. களியின் இரவு கருநீலமென்றாகியது. மானுடர் மானுடரை மோகித்தனர். மானுடர் மோகத்தை யோகித்தனர். மோகமே காமமே கலவியே பித்தே காதலே தாபமே விரகமே விழைவதே எங்களில் நீ அருமணியென்றாகுக. எங்களில் நீ தெய்வமென்றமைக. எங்களை நீ களித்து மீள்க. நஞ்சே உன்னை வணங்குகிறோம். நஞ்சே உன்னை முத்தமிடுகிறோம்.
*
சிற்பனின் உடலில் காய்ச்சல் வெம்மை கொண்டு கனன்ற போது எவரோ அவன் உதட்டைப் பிரிந்து நஞ்சு போல் எரிவுடன் நுழைந்த திரவத்தை வார்த்தனர். மேனியில் கசந்து உள்ளிறங்கிய திரவம் பசுங்குழைகளின் வாசத்துடன் அவன் நாசியைத் தொட்டது. மூநாழிகைகள் கழிந்த போது மேனி வெம்மையடங்கி அலையடங்கும் குளம் போல் தளர்ந்திருந்தது. துயில் மெல்லவென அவனை இழுத்துக் கொண்டு தன் மாயக் கனவுகள் உறங்கும் புடவிக்கு அவனை அழைத்துச் சென்றது. பித்தில் ஏறிய சிரசு மலர்கள் சாய்ந்து கன்னமிட்டுத் துயில்வது போல் கனவில் சாய்ந்து கொண்டது. அது திருதிகாவின் கன்னமெனத் தோன்ற சிற்பனின் மேனி மெய்ப்புக் கொண்டு கன்னமே கன்னமே என்றது. மென்மையே மென்மையே என வியந்தது. திருதிகா ஆயிரம் தலை கொண்டு எழுந்து மூக்கில் நாகமணி சுடர விரிந்தாள். சிற்பன் பெரும்புடவியில் எழுந்த தொல்நாகத்தின் முன் கறையான் என ஊர்ந்து கொண்டிருந்தான்.