88: இச்சை அகம் : 02
ககனம் கருநீலப் பொருளின்மையெனத் தோன்றியது. பொன்னன் தன் மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு “சொல்லாடுவதும் ஒருவரை முற்றறிந்த பின்னரும் கூடுவதும் எப்படி மெய்மை அறிந்ததென்று ஆகும். ஒருவர் சொற்களில் தன் மெய்மையைத் தான் வெளிப்படுத்துகிறார் என எங்கனம் உய்த்தறிய ஒண்ணும். மானுட அகம் உறவுகளை மேடையொன்றாக்கித் தீராது நடிக்கிறது. மெய்யென்று நாம் காணும் ஒவ்வொன்றிலும் அறியாத பொருள்கள் உறைகின்றன அல்லவா. அவரே அறியாத அவரது ஆழகம் உண்டல்லவா” என்றான்.
விருபாசிகை இனிய புன்னகையொன்றை பனிக்காற்றென வீசி ஆதூரமாக அவன் தோளில் கைவைத்தாள். விரல்களால் அவன் தோளில் தாளமிட்டுக் கொண்டு “இப்பொழுது உங்களது சொற்களில் கூர்மை கூடியிருக்கிறது பொன்னா. ஆயிரந் தான் இருந்தாலும் கல்லையும் பொன்னையும் உளித்துச் சிற்பமென்றாக்குபவரல்லவா. அகம் அந்தப் புறச் செயலின் வழி பயிற்றப்பட்டுக் கூர்மையடைந்திருக்கும்.
நீங்கள் உரைப்பது எண்ணுதற்குரியதே. நான் ஒரு பரத்தை” அச்சொல் எழுந்த போது அவன் தேகம் மெல்ல ஆடும் சுடரென நடுங்கி நீண்டதை விரல்களில் தாளம் விலகி ஒருங்குவதைக் கண்டு நோக்கினாள் விருபாசிகை. “நான் பரத்தையென நீங்கள் அறியாத வரை நான் சொன்ன சொற்களுக்கும் இனி உரைக்கப் போகுபவைக்கும் இடையில் எது சொற்களின் பொருளை மாற்றுகிறது. நான் உலகில் என்ன செய்து வாழ்கிறேன். எனது குடிநிலை என்ன என்பது என் சொற்களின் அர்த்தங்களை வேறொன்றாகச் சமைத்து அளிக்கின்றன அல்லவா.
அங்கனமே சொல்லென்று எழுந்தது மாயை என்றறிக. புடவியில் எதுவும் நிலைத்த அர்த்தங்களால் பொருள் கொள்ளப்படுவதில்லை. ஆகவே ஒழிந்த காலத்தை மேனியிலிருந்து நீக்கி அதை உறுபவரே விழைவை அறிகிறார். கடந்தது அற்று நிகழ்வதில் தோன்றுவதை நோக்கியறிவதே ஊழ்கம். காமமும் ஓர் பேர் ஊழ்கமே பொன்னா. அதை மெய்யறியும் வாய்ப்புக் கொண்டவர் பரத்தையரே. என் மெய்யிலும் இன்று களியின் நாவுகள் எழாததைக் கண்டு விந்தை கொண்டேன். என்னைப் போலவே இன்னொருவரைக் கண்டது மகிழ்ச்சி” என்றாள்.
“நீங்கள் பரத்தையென்பதற்காக என் தேகம் நடுக்குக் கொண்டது மெய்யே. நான் என் நினைவுகளால் சங்கிலியிடப்பட்டிருக்கிறேன். நினைவென்பது கடந்த காலமே. இன்று இக்கணம் என ஒன்றை பிறிதொன்றுமற்று நோக்குவது இயல்வதா” என்றான்.
“அதை ஏன் நிகழ்த்திப் பார்க்கக் கூடாது. நோக்குக” என்றவள் அவளின் மேலாடையைக் கழற்றி ஈச்சியின் பொன்வதனத்தின் மேல் மூடினாள். கருந்துணி மூடிய ஈச்சியின் வதனம் கரும் உலகு போல் தோன்றியது. விருபாசிகையின் முலைகள் துடித்து எழுந்த இரு பிறவிப் பெருந்தினவு கொண்ட கொழுமை என நிமிர்ந்திருந்தன. காம்புகள் இரு சொட்டுக் கரும் புடவிகள் என முழுமை கொண்டிருந்தன. கழுத்தில் இருளின் மயக்கு நரம்புகள் ஏறும் கொடிகள் ஆடிச்சிரித்தன. வதனம் எழில்கொல் பாவையென விரிந்திருந்தாள். உதடுகள் மென் தளிர்கள் ஒன்றன் மேல் ஒன்று ஒட்டி உரசுவன போல் தோன்றின. மூக்கின் வளைவு மிகைக்காத சிற்பியின் தேர் கைகளால் வனையப்பட்டது. நுதல் ஒரு பிறைக் ககனம். விழிகள் மயிற் பீலிக் கண்ணின் தொல்நீலப் பரப்பு.
நின்றவளின் பேரழகு அவனுள் எழுந்து ஆர்த்த அலைகளில் மூழ்கிச் சாவென ஆணையிட்டது. காற்றின் விரல்கள் அவன் குழலைக் கோதி மோதிக் கொள் உனக்குத் தான் என உந்தியது. வியப்பு அவன் முகத்தில் எழுந்து விருபாசிகையை நோக்கி வியந்து கொண்டிருந்தது. அவனது விரல்கள் அவனையறியாமல் எழுந்து அவன் விரல்களைத் தழுவிக் கொண்டிருந்தன. “இப்பொழுது சொல்க. உங்களில் விழைவது எது” என்றாள்.
சொல்லவிந்து நின்றவன் விடாய் மூத்தவன் போல் “மெய். நான் உங்களை விழைகிறேன். கொல்லும் பெண்ணின் அழகின் முன் ஆண் வெறும் விழைவென்றாகி நின்றிருக்கப் பணிக்கப்பட்டவன் என உணர்கிறேன். அகம் தீண்டு தீண்டு எனக் கொல்கிறது. சித்தம் இல்லை இல்லை என என்னைக் காப்பதாய் நடிக்கிறது. இரண்டு முள்ளில் அடிப்பாதம் ஊன்றி உங்களை நோக்கியிருக்கிறேன்” என்றான் பொன்னன்.
விருபாசிகை உரக்கச் சிரித்துக் கொண்டு அரச பீடத்தில் அமர்ந்து கொண்டாள். “அறிவேன். ஆணில் விழையும் அனைத்தும் அடிபணிவதற்கே பெண்மை வரங் கொண்டிருக்கிறது. வெல்வேன் எனத் தருக்கி நிற்பவர் பெண்ணின் அகம் தீண்டும் கீழ்மைகளையும் சிறுமைகளையும் எண்ணி விலக்கெனத் தன்னைத் தப்பித்துக் கொள்கிறார். சிலர் பெண்ணை வேறொரு பருவின் திருவென அறிபவர்கள். அத்தகையவர்கள் அரிதானவர்கள். அறிந்து மெய்விழைந்து முழுதறிந்து கடப்பவர்கள். மெய்யில் அங்கனம் ஒருவர் திகழ்வது மாபெரும் யோகங்களால் ஆற்றப்பட்டு அடையப்படும் அருவாழ்வு.
எஞ்சிய ஆடவர் பெண்ணை எதிர்கொள்ள அஞ்சும் எளியவர்கள். அவர்களை விழைவது என்னால் இயலக்கூடியது அல்ல. அரிதை விரும்புவதே பெண்ணென்று அறிக. எளியதை அவள் ஆழகம் வெறுத்துப் புறந்தள்ளுகிறது. அடைந்த ஆடவனை அவன் எல்லைகளுக்கு அப்பாலும் விசைத்து விரிக்கும் ஆற்றலே பெண். அவளை வணங்குபவனென அவன் ஆகுவது அதனால் தான். சொல்க. உங்களில் விழைவென எழுவதைச் சொல்லால் சொல்லி என்னை அடைக” என்றாள் விருபாசிகை.
“ஒரு சிற்பி மெய்யில் அறிய வேண்டியது கல்லில் உறையும் மெளனத்தை என்பார் என் ஆசிரியர். கல்லே முதற் பரு. மரமோ பொன்னோ வெள்ளியோ எதுவும் கல்லிற்கு நிகரில்லை. கரும் பாறையென்பது ஒரு நிகர்ப் புடவி. அதன் மெளனத்தை சிற்பம் பயில்பவர்கள் பலபருவங்கள் ஊழ்கமெனக் கொள்வதுண்டு. அப்பாறை விழிதிறந்து நான் யார் எனச் சொல்லும் என்பார்கள். காத்திருத்தலே தவம் என அமையுங் காலமது. ஒரு இளஞ் சிற்பி அப்பாறையை வெறுப்பதைப் போல் புடவியில் பிறிதெதையும் வெறுப்பதில்லை. தொல்காலம் முதல் மெளனத்தை உருவெனக் கொண்டு அமர்ந்திருக்கும் முனிவனைப் போல ஒரு பாறை புவியில் எழுகிறது. அதை ஒரு சிற்பி தன் அகக்கண்ணால் நோக்கி நின்று இறைஞ்ச வேண்டும். சொல்லின்றி நோக்கு மட்டுமே என முன்னிருக்க வேண்டும். உள்ளே எதுவோ உறைகிறது என எண்ணிக் கொண்டு வெறும்பாறையை எவராவது நோக்க ஒண்ணுமா. ஆனால் அமைந்தாக வேண்டும். அதுவே முதற் பயில்வு. அது நிகழாமல் அப்பாறையிலேயே தலை மோதி குருதி கொட்டி மடிந்தவருண்டு. அப்பாறையை உமிழ்ந்து தீச்சொல்லிட்டு அப்பால் நகர்ந்தவருண்டு. ஆயிரத்தில் ஒரு இளஞ் சிற்பியின் முன் பாறை தன்னை ஒரு மலராய்த் திறக்கிறது. தன் முதற் சிலையை அக்கல்லில் அவன் காணும் பொழுது அவன் அகம் அதுவரை அறிந்ததிலும் இனி அறியப்பட இருப்பவற்றிலும் கூடாத மேலான உச்சத்தை அறிவான். அதுவே மெய்க்கணம். ஊழ்கம் திரண்டு பாறையாகும் கணம். மெளனம் கொண்ட பாறையென்பது ஒரு பெண். அவளைத் திறப்பதற்கு அகமே விழியென்பது பயில்வின் முதலடைவு.
பின்னர் அச்சிற்பம் முழுமையடையும் நாளில் அப்பாறையில் எஞ்சும் ஒரு சிறு கருங்கல்லை அவன் தன் சிற்பக் கூடத்தில் அருமணிகளுக்கு இணையாக வைத்துக் காக்க வேண்டும். வணங்க வேண்டும். புதிய சிலைகளை ஆக்க முன்னர் அதைத் தொட்டு பூசையிட்டு வணங்க வேண்டும். முதல் முழுமையை அளிப்பது எதுவோ அது வணங்கப்பட வேண்டியது என்கிறது மரபு. அதுவே சிற்பியின் மெய்யான ஆசிரியர். ஒரு கருங்கல் கூழாங்கல் அளவுக்கே வடிவங் கொண்டது. எந்தப் புடைப்பும் வாளிப்பும் நுண்மையும் அற்றது. முதற் சிலையின் சிதறல் துளி. முதற் கனவின் நினைவுச் சுவடு.
உங்களைக் கண்ட போது உங்கள் விழிகளில் மெளனமான இரு பாறைகளைக் கண்டேன். உங்களிடம் சொல்லெடுத்த போது பாறையை ஊழ்கத்தால் மோதி சலிப்புற்றுக் கிடக்கும் இளஞ் சிற்பியென நொந்து கொண்டேன். உங்கள் சொற்கள் மெளனத்தை விட எடை கொண்டவை. அதை நுணுகுவதால் அல்ல. சிதறல் துளியொன்றாக வணங்க வேண்டுமென்பதை இப்போது உணர்கிறேன். உளி பாறையைத் தொடும் பொழுது அது அறைவதில்லை. அதுவொரு தொடுதல். ஒரு நுண்மின் தொடுகை பாறைக்கும் உளிக்குமிடையில் நிகழ்கிறது. ஒரு முத்தம் போல.
முழுச்சிலையென ஒன்றை ஆக்கி முடித்து நீராட்டிக் கூடத்தில் எவருமற்ற போது அதனுடன் தனித்திருக்கும் போது கலவிகளின் உச்ச கணங்களின் நீழல் என திகைக்க வைப்பது. அது அதற்குரிய ஆலயத்திலோ பீடத்திலோ அமரும் பொழுது வேறெவருடையதோ ஆகி நிற்பது. விழைபவளைக் காலம் வேறெங்கோ அழைத்துச் செல்ல அதை வெறுமனே நோக்கி நிற்பவனைப் போல அக்கணங்கள் மெய்யை வருத்தும். நீங்கள் உங்களைப் பரத்தையெனச் சொன்ன போது பீடத்தில் அமர்ந்த சிலையென எண்ணினேன். மெய்யில் அதுவே நீங்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தினால் அல்ல. அமரும் விழைவினால் ஒன்றைப் பீடமென்று ஆக்குபவர். உங்களை விழைய எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.
உங்கள் பெயரை முதலில் கேட்ட பொழுது அகம் சிரித்துக் கொண்டது. என் முதற் சிலை பாறைக்குள்ளிருந்து எழுந்து வந்தது உங்களின் பெயருடனேயே. நான் சூர்ப்பனகையைக் கனவு கண்டேன். அவரே என்னில் எழுந்த முதற் சிலை. நுண்ணிதின் நுண்ணடுக்குகளால் அப்பாறையை நான் தொட்டேன் திறந்தேன் கனவுகளில் அச்சிற்பத்துடன் புணர்ந்தேன் களியாடினேன் காதல் கொண்டேன் காமமுற்றேன் வேட்கையுடன் அச்சிலையை நிலத்தில் அறைந்து உடைத்தேன். என்னில் நீயேன் எழுந்தாய் விழைவறுப்பவளே எனக் கூவினேன். முப்பத்தியாறு முறை அப்பாறையில் நான் எண்ணும் வடிவத்தை வடிக்க உளியெடுத்துச் சொல்லின்றி அமைந்திருந்தேன். அவரது சிரிப்பின் ஒலியெனத் திரண்ட கரும் பாறையது. இரவுகளில் அப்பாறை என் கூடத்தில் சிரிப்பதைக் கேட்டபடியிருப்பேன். எக்காளமும் நகையும் இளிவரலும் கூடும் சிரிப்பு. சிலவேளைகளில் அதன் மெளனத்தைக் கேட்டபடியிருப்பேன். கானகத்தில் ஓடும் ஆற்றினடியில் ஒரு நண்டெனக் கிடந்து. காட்டெரியில் கருகும் பசுமிலைகளின் தளிரெனத் தவித்து. விண்மீன்கள் எழாத வானத்தின் கருமெளனத்தை நோக்கியென ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மெளனம் கொண்ட பாறையது.
சிலவேளைகளில் சொல்லெடுப்பேன். என்னை ஏன் வஞ்சிக்கிறாய் எனக் கேட்பேன். என்னை ஏன் சினந்து கொள்கிறாய். அருள மாட்டாயா. நான் எளியவன் தானே. என்னை நீ நோக்குதல் உனக்கு இழிவா. என்னை நீ ஒரு பொருட்டெனவே எண்ணவில்லையா. என் தெய்வமே. உன்னை எனக்குக் காட்டு எனக் கெஞ்சியிருக்கிறேன்.
கரும் பாறைக்குள் ஒரு தீச்சுடரென அவரை நோக்கியிருப்பேன். நாகத்தை உற்றிருக்கும் மகுடியென என்னை உணர்வேன். மெய்ப்புல்கள் எழும். தேகம் நடுக்குக் கொள்ளும். அனல் பட்ட நாவெனக் காந்துவேன். அக்கணங்களில் பாறை இளகி மென் நீர்ப்பரப்பென என்னை அணைத்துக் கொள்வதாய் எண்ணிக் கொள்வேன்.
ஒரு புலரியில் சூர்ப்பனகையை நான் முற்றிலும் வெறுத்தேன். உடலில் அவ் எண்ணம் ஒரு விடுதலையை அளித்தது. அகம் தெளிந்த புலரி வானம் போல ஒளிவீசியது. உளியை எடுத்து எனதல்ல என்பது போல வடிக்கத் தொடங்கினேன். ஐந்து பகல் ஆறு இரவுகள் என்னை மறந்திருந்தேன். வேறெவரோ என்னில் எழுந்ததை நானே அகன்று நின்று நோக்கினேன். விழைவின்றி என் கரங்கள் பாறையில் அலைந்தன. பிளந்தன. நுணுகின. வடித்தன. இறுதியில் சூர்ப்பனகையின் விழிதிறக்கும் கணத்திலும் பாறை மெளனமெனவே நின்றிருக்கிறது என எண்ணிக் கொண்டேன். எந்த நடுக்குமின்றிக் கரங்கள் மரத்து காலாதீதத்தில் எப்பொழுதும் இவ்வாறே நிகழ்கின்றது என்ற சலிப்புடன் விழிக்கீறலை வரைந்தேன். செதுக்கினேன். உளி ஒரு தாழ்க்கோலெனத் தோன்றியது. எவருடையதோ வாயிலென அதுவரை நின்றிருந்த பாறை எனக்கெனத் தன்னைத் திறந்து கொண்டது. அவ்விழிகளில் நான் கண்டது ஓயாது தொடரும் பக்தனுக்குத் தெய்வங் காட்டும் எளிய கருணையின் புன்னகையை. கனிவை. இனிமையென்றான அருளை. உங்கள் விழிகளில் தெரிபவை அம்மூன்றும் என்றான தொன்மையான வாயிலொன்றை” என்றான் பொன்னன். அவனுள் இச்சொற்கள் இருந்தனவா என எண்ணிக் கொண்டிருந்தவன் விருபாசிகையின் விழியைத் தயங்கியவன் வழியற்றுத் திருடும் செல்வமென எண்ணி நோக்கினான். அவள் விழிகளில் அம்மூன்று பாவமும் ஒன்றென நோக்குக் கொண்டிருந்தது. புன்னகை ஒரு உளித் துள்ளலென அவன் உதட்டில் எழுந்தது. விருபாசிகை அவனை நோக்கிப் புன்னகைத்தாள். உளியை ஏற்றுக் கொண்ட பாறையின் மெளனமெனச் சிரித்தாள்.
இருவரும் பொற்தேரின் பீடத்தில் அருகமர்ந்து களிவெளியின் ஓசைகளைச் செவிகளில் நிரப்பிக் கொண்டு நோக்கியிருந்தனர். விருபாசிகை அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். “பொன்னா. உனது அகம் நுண்மையான உளியென ஆனது. அதைக் கைவிட்டு விடாதே. உன் அகம் செல்லும் வழியே யோகம். உன் ஊழ்கம் உளியின் நுண்சொல்லில் அமைவது” என்றாள். நாழிகை ஒன்று பெயர்ந்ததை வானில் ஏறிய மென் மஞ்சள் நிலவை நோக்கியபடி கணித்தான் பொன்னன்.
களியொலிகளைக் கேட்டபடி மெல்ல மெல்ல ஆடும் காற்றில் அயர்ந்து உறங்கினாள் விருபாசிகை. நிலவு மஞ்சட் குமிழென ஒளிபெய்யத் தொடங்கியிருந்தது. மார்பில் ஏந்திய பாறையெனப் பொன்னன் எண்ணி உதட்டில் மட்டும் சிரித்தான். ஒலிகள் பாறையில் பட்டு அவற்றை உண்ணும் தொல்பிலவென விருபாசிகையை எண்ணியவன் தானும் கரைந்து துயிலத் தொடங்கினான். மார்பில் ஒரு மலர் அவிழ்வதை அறியாமல். தான் எப்பருவத்திலும் விழையும் மலரொன்றைச் சூடிக் கொண்ட பெண்ணென காலவெள்ளத்தில் நீந்தியபடி அவர்களைச் சூடியிருந்தது மாபெரும் பொற்தேர்.