91: குழவி நாகங்கள்

91: குழவி நாகங்கள்

உசை “நீலா நீலா” என மிழற்றிக் கீச்சிய போது தானகி விழித்துக் கொண்டாள். நிலவையின் இடையில் அணைத்துக் கிடந்த தனது கைகளை மெல்லிய நடுக்குடன் விலக்கிக் கொண்டாள். நிலவை வேலெறிய ஓடுபவள் போல துயிலமைவிலிருந்தாள். தானகியின் விழிகள் மஞ்சத்தறையைச் சுழன்று நோக்கியது. மழலைகள் விளையாடிய மனையெனக் குலைந்த மஞ்சத்தறையை உதட்டில் சிரிப்புச் சுழியெழ நோக்கியவள் லீலியாவையும் சுவடிகையையும் நோக்கி அவர்கள் எப்போது வந்தார்கள் என நினைவைப் புரட்டிச் சலித்தபடி எழுந்தாள். சுவடிகை மெல்ல விழியரக்கித் திறந்து தானகியை நோக்கிச் சிரித்தாள். அவளது மெலியுடலினை நோக்கிய போது அரண்மனைப் பாவையோ என எண்ணிக் கொண்டாள். மெல்லிய குரலில் “நீங்கள் யார்” எனக் கேட்டாள் தானகி. “எனது பெயர் சுவடிகை அரசி. மதுரை மா நகரிலிருந்து வந்திருக்கிறேன். யவன மொழிபெயர்ப்பாளினி” என்றாள். அவளின் குருவிக் கீச்சுக் குரலைக் கேட்டுச் சிரித்தபடி “நான் அரசியல்ல சுவடிகை. எனது பெயர் தானகி. நான் அரசியின் ஏவற்பெண்டு” என்றாள். “ஏவற்பெண்டுகள் அணைத்துறங்கும் அரசியை இன்று தான் காண்கிறேன்” எனச் சொல்லி நகைத்தாள் சுவடிகை. “அவரது பரிவுக்கு அளவில்லை பெண்ணே” எனச் சிரித்தாள் தானகி. இருவரது சிரிப்பொலிகளையும் கேட்ட உசை தானும் சேர்ந்து மிழற்றலில் கீச்சியது. உசையை நோக்கி விரல் காட்டிய தானகி “அவள் தான் உசை. அரசியின் தோழியும் சிலவேளைகளில் அன்னையும்” என்றாள். சுவடிகை எழுந்தமர்ந்து விழிகளைக் கசக்கி மஞ்சத்தறையை நோக்கினாள். உசை கால்களை அகல வைத்தபடி கூண்டினுள் நகர்ந்து கொண்டிருந்தாள். விடியலின் தங்கத் தந்திகள் வந்து மஞ்சத்தில் கீலம் கீலமாக விழுந்து உறைந்திருந்தன. காற்று மெல்லிய இசையில் மீட்டப்பட்டது போல வீசிக் கொண்டிருந்தது. லீலியாவின் மேனியில் நிலவையின் பட்டாடையொன்று பளிங்கைப் போர்த்திய வெண்மினுக்கெனத் தகதகத்தது. பாலைப் போர்த்திய பாலாடை என எண்ணிச் சிரித்தாள் தானகி.

புலரியின் காகங்கள் கரைந்து துயிலெழுப்பின. கொட்டிலிலிருந்து குதிரைகளின் கனைப்பொலி முதியவர்களின் கூடாரம் போல ஒலியொழுப்பிக் கொண்டிருந்தது. விரியனின் பிளிறலொலி விடியலின் காண்டாமணியென ஒலித்தோய்ந்தது. நிலவை விழிகளைத் திறந்த போது முகப்பில் வாழும் ஆயிரமாயிரம் புறாக்களின் சிறகசைப்புகள் இமைக் கதவம் திறந்தனள் என்பதைப் பாடி இசைத்தெழுந்தன. அன்றைய புலரியில் நிலவை எப்பொழுதுமுள்ள அவளின் கரும்பேரழகின் மேல் எவருமறியாது ஒரு வரம் அளிக்கப்பட்டவள் போல மாபேரழகின் செழிக்கும் இளமை கொண்டிருந்தாள். விழிப்படலங்கள் வெண்ணல்லி போல விரிந்திருக்க கருமணிகள் ஒளிர்க்கும் கருநிலவுகள் போல சுடர்கொண்டிருந்தன. வதனத்தின் பிரகாசம் தீயிலிருந்து எழும் ஒளியலைகள் போல அடித்துக் கொண்டிருந்தது. தானகி இமைக்க மறந்து நிலவையின் கருநாகத்தை நோக்கும் தவளை விழிகளென நின்றாள். “இன்று தான் கண்டவள் போல ஏன் சிலைத்து நிற்கிறாய் தானகி” குரலிலும் குழல் நாதம் ததும்பிடக் கேட்டாள் நிலவை. “உங்களின் பேரழகு இன்று புதுப்பொலிவு கூடியிருக்கிறது அரசி. சாபம் அகன்ற தெய்வமென” என்றாள் தானகி. சொல்லிய பின்னரே அச்சொற்களை எங்கிருந்து அவள் எடுத்தாள் என வியந்தாள். அவளது நாக்கைக் காலம் எடுத்து உரைத்தது அதுவென எண்ணிக் கொண்டாள்.

சுவடிகை அவர்களின் சொல்லாடலை சிறுமுயற் செவிகளால் கேட்டபடி விழியை உசையின் அகங்கார நடைக்குக் கொடுத்து நின்றாள். நிலவை எழுந்து உடலைச் சோம்பல் முறித்த பின்னர் முகத்தை ஈரத்துணியால் துடைத்து நீரள்ளி வாய் கொப்பளித்தாள். வேப்பங் குச்சியால் பற்களைச் சுத்தம் செய்த பின்னர் மீண்டும் நீரால் வாயைக் கொப்பளித்தாள். இருக்கை மஞ்சத்தில் அமர்ந்து கொண்டு தீயிலைத் துதியை நிரப்பிப் புகைக்கத் தொடங்கினாள். அவளின் இருக்கை நிலையை நோக்கிய தானகி சிம்மாசனங்களில் அமர்வதற்குப் பேரரசர்கள் பயிற்சிபெற நோக்க வேண்டியது நிலவையின் இயற்கையான உடலின் அமைவுகளை என எண்ணிக் கொண்டாள்.

சுவடிகையை அழைத்துச் சென்ற தானகி அவளுக்கு மாற்றுடைகளும் பனங்கட்டி கலந்த சுடுபாலும் கொடுத்தாள். சுவடிகை அடுமனையில் பல்லியைப் போல ஓடிக் கொண்டும் பொருட்களின் மீது தடுக்குண்டு தள்ளாடிக் கொண்டும் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிச் சிரித்த தானகி “மதுரை மா நகரே உன்னால் கலகலவெனச் சிதறிக்கொண்டிருக்கும் போல. உன்னை அவர்கள் பிரிந்து என்ன கவலை கொண்டிருக்கிறார்களோ” எனக் கேட்டாள். சுவடிகை அச் சொற்களின் நகை விளங்காது “அவர்கள் என்னைத் தேடவே மாட்டார்கள் அக்கா. குடிகளா அவர்கள். என்னை ஒரு செப்புக்கும் மதிப்பதில்லை. எனது அன்னை மட்டுமே ஒரே பிடிப்பு. எனது தந்தை என் இள வயதில் தொலைதேசம் வணிகம் சென்றவர் திரும்பவில்லை. கடலைத் திரைந்து செல்வங்கள் கொணர்பவர் எனச் சொன்ன அத்தைகளும் உறவினர்களும் எங்கள் சொத்துகளை ஆளுக்கொரு அப்பத் துண்டாய்ப் பிய்த்துச் சென்றனர்” எனச் சொல்லிக் கொண்டே கள் ஆவியெழும் அப்பத்தைச் சுடசுட வாயில் வைத்து உதட்டைக் குவித்துத் தலையிலடித்து ஊதி ஊதித் தின்றாள். “மெல்ல உண் சுவடிகை. அரண்மனையின் முழு அப்பங்களும் உனக்குத் தான். நீ உண்பதற்கும் உடலுக்கும் ஒத்திசைவே இல்லை” எனச் சொல்லிச் சிரித்தாள் தானகி. அடுமனைப் பணிப்பெண்கள் அவர்களின் சொல்லாடலைக் கேட்டு நகைத்துக் கொண்டு பரபரவெனக் கொதித்துக் கொண்டிருந்தனர். அடுமனையின் புலரியென்பது தீயில் தொடங்கி தீயணைவது வரை என்பாள் முதுமாது கண்ணிகை. இவர்களது சொல்லாடல்களைக் கேட்ட கண்ணிகை “இவள் யாரடி தானகி. சூட்டிகையாய் இருக்கிறாள். எங்கிருந்து பிடித்து வந்தாய்” எனக் கேட்டார். தானகி கண்ணிகையை நோக்கி “இவள் மதுரை மாநகரில் பெரிய சமையல் மேதையாம். விழவுக்காக அரசர் அழைத்து வந்திருக்கிறார். ஆறு ஆதார சுவைகளிலிருந்து அறுபத்து நான்கு கலைகளையும் கொண்டு அறுநூறு பண்டங்கள் ஆக்குவாளாம். அங்கு பேரரசர்களுக்கிடையில் எவருக்கு இவள் பணியாற்றுவது என்ற பூசலில் நடந்த யுத்தங்களால் சலிப்புற்று இங்கு வந்திருக்கிறாள்” என்றாள்.

தன்னை அவர்கள் பகடி செய்கிறார்கள் என்பதை ஒரு கடுகுக்கும் மதிக்காத சுவடிகை பூனையைப் போல சுடுபாலைக் குடித்தபடி மேலுதட்டில் வெள்மீசை ஒட்டியிருக்க தானும் சிரித்துக் கொண்டாள். கண்ணிகை எழுந்து வந்து “யார் இவளா சமையல் மேதை. கையிரண்டும் அகப்பை போன்றிருக்கிறது. ஒருவர் உண்பதைப் பார்த்தே நான் சொல்லிவிடுவேனடி அவர் சமையலில் இரண்டு சொற்களாவது தெரிந்தவரா என்பது. இவளைப் பார்த்தால் நீ சொன்ன அறுநூறு வகைப் பண்டங்களையும் உண்பதற்கென்றே வாய் கொண்டவள் போலிருக்கிறாள். சிறிய வாய் கொண்டவள் உள்ளே பெரிய யானம் கொண்டிருப்பாள்” என்றார். சுவடிகை கண்ணிகையை நோக்கி வெண்முத்துப் பற்கள் விரியச் சிரித்து “கிழவியே. நான் உண்டியாக்கினால் நாவில் சுவை ஏன் பிறந்தது என்பதை நீ அறிந்து கொள்வாய்” எனச் சினங் கொண்டவள் போலக் கூவி விரல்களால் வெருட்டினாள். அருகிருந்த அகப்பையை எடுத்த கண்ணிகை வாளைப் போல பிடித்துக் கொண்டு “நானும் தெரிந்து கொள்கிறேனடி வெற்றையே. உனக்கு பால் காய்ச்சுவது எப்படியென்றாவது தெரியுமா” எனப் பூசலிடத் தொடங்கினார். இருவரது மேனிகளதும் நாடகத்தை நோக்கிக் கொண்டு தானகியும் பணிப்பெண்களும் நகைத்துச் சிரித்தனர்.

தானகி போர்க்களத்திலிருந்து அவளை இழுத்துச் செல்வது போல பற்றியிழுத்துக் கொண்டு இடைநாழிகைக்கு வந்து சேர்ந்தாள். “நல்ல வேளை அக்கா. நீங்கள் என்னை இழுத்து வந்தீர்கள் இல்லையென்றால் அந்தக் கிழவியின் எஞ்சிய ஆடுபற்கள் அத்தனையும் இன்று உள்ளிக்குப் பதிலாக கலயத்தில் விழுந்திருக்கும்” எனச் சொல்லி விட்டு வெடித்துச் சிரிக்கத் தொடங்கினாள் சுவடிகை.

“பார்த்தேன் சண்டைக்காரியே. நீ எங்கள் குடிக்கு ஏற்றவள் தான். விருந்தாளி அல்ல. நீ எங்களவள் என்பதை நீ சண்டையிடும் பாவனையில் கண்டேன்” என்றாள் தானகி. அவளது குரலில் புதிய உவகையொன்று பொங்கிக் கொண்டிருந்தது.

மஞ்சத்தறைக்குத் திரும்பிச் சென்ற போது ஏவற் பெண்டுகள் கொணர்ந்த சுடுபாலைக் குடித்தபடி மரச்சாளரத்தால் பட்டினத்தை நோக்கியிருந்தாள் நிலவை. மனைகளிலிருந்து சாம்பலும் வெண்மையும் கலந்த புகைநாக்குகள் எழுந்து விரிந்து விண்ணேறிக் கொண்டிருந்தன. துயில் கலையாது புரண்டு படுக்கும் இளையவளின் அணியொலிகள் போல அங்கங்கு சிரிப்பொலிகள் மெல்லிதாக எழுந்து கொண்டிருந்தது. லீலியா கவிழ்ந்த மரக்கலன் போல துயின்று கொண்டிருந்தாள். துயிலில் இவள் கும்பகர்ணி என எண்ணிக் கொண்ட நிலவை ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு நகைத்தபடி வந்த சுவடிகையையும் தானகியையும் நோக்கிச் சிரித்துக் கொண்டு “அதற்குள் தோழிகளாகி விட்டீர்களா” எனக் கேட்டாள். தானகி மெல்லச் சிரித்துக் கொண்டு விழியால் சுவடிகையைக் காட்டி “அடுமனையைப் போர்க்களமாக்கி விட்டாள்” எனச் சொன்னாள். “அப்படியா சுவடிகை” என உதட்டில் பனிபோலப் பரவிய இளம் புன்னகையுடன் கேட்டாள் நிலவை. “அரசி அங்கே ஒரு முதுமாது இருக்கிறார். அகப்பையை வாளைப் போல பிடித்து என்னுடன் சண்டைக்கு வந்து விட்டார். நான் கொற்றவை கால்பட்ட மண்ணைச் சேர்ந்தவள் என்பதை நிரூபித்துத் திரும்பினேன்” என்றாள் சுவடிகை. சொல்லும் பொழுது போர்க்களத்தை விபரிப்பது போன்ற தீவிர பாவனையுடன் இருந்த அவளது முகம் சிரிப்பை அளிக்க கலையாத அழகுடன் சிரித்தாள் நிலவை. அவள் இப்படி களியுடன் சிரித்துக் கொண்டேயிருந்த நாட்களை தானகி கண்டுற்றதில்லை என்பதால் தானும் இணைந்து அவளைச் சிரிப்பூட்டிக் கொண்டேயிருக்க விழைந்தாள். ஒருகணம் தன்னை நிலவைக்கு அக்கையென எண்ணினாள். அந்த எண்ணம் அவளை புறாக்கள் சிறகுதைத்து எழுமொலிகள் அகத்திலெனக் கேட்கச் செய்தது.

இடைநாழிகையால் தொம் தொம்மென்ற ஒலியெழப் பெய்தினி விரைந்து வந்தாள். நோக்கவெனத் தானகி வாயிலால் வெளியேறினாள். பெய்யினி மூச்சிரைக்க ஓடி வந்து “பெருந்தளபதி சத்தகன் அரண்மனை வந்திருக்கிறார். அரசர் யவன மருந்தின் துயிலில் இருப்பதால் அக்கையைப் பார்க்க விழைவதாகச் சொன்னார்” என்றாள். தானகி வாயிலைக் கடந்து எட்டிப் பார்த்தபடி நிலவையும் சுவடிகையும் சொல்லாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அன்னையும் மகளும் என எண்ணிக் கொண்டாள். பின்னர் உள்ளே வந்தவள் “அரசி. பெருந்தளபதி சத்தகன் அரண்மனை வந்திருக்கிறார். தங்களைக் காண விழைவதாகச் சொல்லியிருக்கிறார்” என்றாள்.

நிலவை முகம் ஒளிபட்ட தாமரையென மலர “அவனை முன்முகப்பிற்கு வரச் சொல்லி அழைப்பை அனுப்பு. முன்முகப்பில் அதற்கான ஒருங்குகளை இயற்றச் சொல்” என்றாள். “அங்கனமே அரசி” எனச் சொல்லி அரசியின் நாக்கென்றாகிய தானகி ஆணைகளைப் பிறப்பித்தபடி நகர்ந்தாள்.

முன்முகப்பிற்கு வந்த சத்தகன் பொலியும் காளை போன்ற திமில் தோள்களை அகட்டி இடையில் கரம் ஊன்றியபடி பட்டினத்தை நோக்கி நின்றான். புறாக்களின் குறுகுறுப்பை இனிமையான ஒலியெனக் கேட்டிருந்தான். சாலைகளில் ஓடிக் கொண்டிருந்த புரவிகளை நோக்கியவன் குடிகளை விட அவை பெருகியிருக்கிறதென எண்ணினான். நிலவைக்கென அவன் கொணர்ந்திருந்த அணிகளின் தாலத்தை ஒருமுறை திரும்பி நோக்கிய பின் புன்னகைத்துக் கொண்டு எருதின் கொம்பு போல நீண்டு மடிந்திருந்த தன் மீசையைத் தடவிக் கொண்டான். உறக்கமற்ற நெடும்பயணத்தின் விடியலில் சோர்வுடன் அயர்ந்து தள்ளாடும் அத்திரியைப் போல அரண்மனை தோன்ற முன்னை நாள் களியின் ஆரவாரங்களுக்கும் கூச்சல்களுக்கும் அதிர்ந்த செவிகள் இன்னும் எதிரொலியென அங்கேயே ஒலித்துச் சுழல்கின்றன என எண்ணினான்.

நிலவையும் தானகியும் சுவடிகையும் முன்முகப்பை நோக்கி நடந்து வருமொலிகள் பாதச்சுவடுகளின் ஆடலொலிகள் நெருங்கி வருவதெனக் கேட்டிருந்தான். நிலவையின் அணியற்ற பேரழகு முகம் அவன் முன் தோன்றவும் இடையில் கையூன்றியபடியே “எழுக எங்கள் பேரரசி. வருக என் அக்கை” என வாழ்த்துபவன் போலக் கரங்களைத் தூக்கியபடி கூவினான். அவனது மந்திக் குறும்புகள் புகழ்பெற்றவை என்பதை அறிந்த தானகி தலையைக் கவிழ்ந்தபடி சிரித்துக் கொண்டாள். கருமேனி ஒளியில் வீசியெழ திமிர்ந்த நடையுடன் உடன் வந்து தானும் இடையில் கையூன்றி அவனை நோக்கினாள் சுவடிகை. சத்தகனின் குறும்பு விழிகளும் கள்ளமற்ற முகத்தின் மினுக்கும் நீள்தாடியும் எருக்கொம்பு மீசையும் அவளுக்கு வேடிக்கையெனத் தோன்றியது. மெய்வாழ்வில் அவள் அரசர்களையோ பெருவீரர்களையோ நெருங்கி அறிந்திலள். அதுவே அவளை அச்சமின்றி அவர்களை நோக்கி அயல்வீட்டார் போல தருக்கவும் கேலி செய்யவும் துணிவளித்தது. “அரசி. இவர் உங்கள் பட்டினத்தின் பாணரா” எனக் கேட்டாள் சுவடிகை. தூக்கிய கரங்களைக் கீழே தொய்ய விட்டுச் சினந்தவன் போல முகத்தைக் கோணினான் சத்தகன். “ஓம் சுவடி. இவர் இந்தப் பட்டினமல்ல. தீவு முழுமைக்கே பெரும் பாணர். அவர் சொல்லாத சொல்லில்லை. அவர் நாவில் கவிதேவி குடிலமைத்து எக்காலமும் போரிலிருக்கிறாள்” எனச் சொல்லிச் சிரித்தாள் நிலவை. “அக்கை. யார் இவள். என்னை அறியாத இளம் பெண்கள் எவர் இந்த மண் மீது உண்டு” எனக் கூவினான் சத்தகன். “இவள் எமது பட்டினப் பெண்ணல்ல சத்தகா. மதுரை மா நகரின் பொற்செல்வி. சுவடிகை என்பது பெயர். நாடோடியும் மொழிபெயர்ப்பாளினியும். சண்டைக்காரியும் கூட” எனச் சொன்னாள் நிலவை. இடக்கையை இடையிலூன்றிய சத்தகன் அவளை மேலும் கீழும் முழுது நோக்கி “இவள் சண்டையில் படைக்கலன்கள் அடுக்கி வைக்கும் மூங்கில் தட்டியிலிருக்கும் நீக்குக் கழி போல இருக்கிறாள்” எனச் சொல்லி அவளை இளிவரல் செய்து வென்றதாக எண்ணி உரக்கச் சிரித்தான்.

அவர்களுக்கென ஒருக்கப்பட்ட இருக்கைகளில் நீண்டதும் அகலமானதுமான பஞ்சினால் ஆன வாத்தைப் போன்ற ஆசனத்தில் அமர்ந்தாள் நிலவை. சத்தகன் அவளின் முன்னிருந்த இன்னொரு வாத்தில் அமர நிலவையின் அருகு சென்று அவளுடன் அமர்ந்தாள் சுவடிகை. அவளின் இயல்பான நெருக்கத்தைக் கண்ட சத்தகன் மெல்லக் கறுவினான். “சுவடிகை. இவன் என் இளவல் சத்தகன். புலிகள் படையின் மாபெரும் போர்த்தளபதி. களத்தில் என் தோழன். குடிகளுக்குக் காவலன். சிங்கை புரி அஞ்சும் கரும்புலி. மாகளத்தான் என இவனைப் பாடுவார்கள் பாணர்கள். பெருங் குறும்பன். களியோன் என்பன இளம் பெண்களிடையில் இவனது மந்தணப் பெயர். இளைய ஆடவர்கள் இவனை அவர்களின் போர் தெய்வம் எனக் கொள்வர். குழந்தைகளுக்கு அச்சமூட்டும் பூதம்” எனச் சொல்லிச் சிரித்தாள் நிலவை. சுவடிகை சத்தகனை நோக்கிய பின் நிலவையைத் திரும்பி நோக்கி மெளனமானாள். இருவருக்கிடையிலும் மூண்ட மெளனப் போரைக் கண்டு நகைத்த நிலவை களிகொஞ்சும் குரலில் “இளவலே. நேற்றைய களியில் உங்களின் ஆடலே பாணர்களால் பட்டினமெங்கும் பாடப்படுவதைக் கேட்டேன். சிற்பன் தங்களை ஆடலரசே என்று புகழ்மொழி பகர்ந்ததாகச் சொன்னார்கள். என்னவாயிற்று உனக்கு. போர்களின்றி நடனம் பயிலத் தொடங்கி விட்டாயா” எனச் சீண்டினாள். தனது ஆடற் கூத்து அம்பலத்தில் ஏறியதைக் கேட்டு மெல்ல நாணமுற்ற சத்தகன் குழைந்து ஒடுங்குபவன் போல தன் பெருமேனியை வளைத்துச் சிறுமழலை போல அவனைத் தோற்றியது. “இல்லை அக்கை. அவன் தான் என்னை ஆடலுக்கு அழைத்தான்” என அன்னையிடம் பொய் சொல்லும் சிறுவனென சொற்களை மடக்கி மடக்கிச் சொன்னான். சுவடிகை நகைத்துக் கொண்டு “ஓ. மந்திகள் போல ஓலமிட்டு களிவெறியில் கலயங்களை உடைத்தெறிந்த பெருமந்தன் எனப் பாணர்கள் பாடியது இவரைத் தானா” என்றாள்.

“என் இளையவனை அங்கனம் எண்ணாதே சுவடி. அவன் எதை எண்ணுகிறானோ அதுவாய் முற்றமையும் அளி கொண்டவன். வேண்டுமானால் நீ அவனுடன் ஆடி வென்று காட்டு. அதுவரை நாவெடுக்காதே. சினத்தில் உன் வாலை அறுத்து விடப் போகிறான்” என மகனுக்காகப் பரிந்து பேசும் அன்னையெனச் சொன்னாள் நிலவை. சுவடிகை வஞ்சினம் உரைப்பவள் போல முகத்தைத் தூக்கியபடி “ஒப்புக்கொள்கிறேன் அரசி. இன்றைய இரவில் பெருமந்தனின் இடுப்பை ஒடிப்பேன்” எனக் கூவினாள். “உனக்கு இடையே இல்லையே. நான் எதை ஒடிக்க” எனத் தொடைகளில் அறைந்து களிச்சிரிப்பாடினான் சத்தகன்.

“சொல்க இளையோனே. களி எங்கனம் அமைந்தது” என்றாள் நிலவை. “மகத்தான களி அக்கை. என் வாழ்நாளில் இத்தனை உவகையுடன் நான் நின்றிருந்தது செருக்களங்களில் மட்டுமே. மகிழ்ச்சியும் ஆடலும் பாடலும் இசையும் குடிகளின் ஒலிகளும் இத்தனை உவகையளிக்குமென நான் அறிந்ததே இல்லை. என்னை மாரிலிட்டுத் தாலாட்டினார்கள். பாடிப் பாடி நாணங் கொள்ளச் செய்தார்கள். நாம் வென்ற களங்கள் சொற்களில் வேறு ஏதோ காலத்தில் பெரும் அசுர வீரர்களால் வெல்லப்பட்டது என்பது போல எண்ணச் செய்தார்கள். அமுதூட்டினார்கள் அன்னையர். களியாடினார்கள் இளம் பெண்கள். தங்கள் குழந்தைகளின் கன்னத்தில் முத்தமிடச் சொன்னார்கள் இளந்தாய்கள். முதுகிழவர்களுடன் போரிட்டேன். ஆடலர்களுடன் ஆடினேன். மதுவிலும் கள்ளிலும் என்னை நீராட்டிப் தீயிலைப் புகையால் குழல் உலர்த்தினார்கள். என்னை மறந்து நான் மானுடரில் ஒற்றைத் துளியென உணரும் கணங்கள் அரிதாகவே அமைகின்றன அக்கை. நேற்று அப்படியொரு பெருநாள்” என்றான் சத்தகன். மழலையின் விளையாட்டு வெற்றிகளைக் கேட்டபடியிருந்த நிலவை அவனது வியப்புடன் எச்சில் தெறிக்கப் பேசும் முகத்தை நோக்கியிருந்தாள். சுவடிகை அவனது முகத்தில் எதுவோ ஓர் உறுத்தலை தன்னுள் என எண்ணிக் கொண்டிருந்தாள். அது உவகையான முள்ளின் வலியென எண்ணமெழ அவனிலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். நிலவை நோக்கின்றியே அவளை அறிந்து கொண்டிருந்தாள்.

“இளையவனே. இவள் இனிமையானவாள். இவளுடன் நீ நட்புடன் இருக்க வேண்டுமென விழைகிறேன்” என்றாள் நிலவை. சத்தகன் அவளை நோக்கிய போது அவள் கற்தரையை உற்றபடி மெலிசிலை போல தோன்றினாள். மெலிதலில் கொடியில் எழும் அழகு அவளில் மின்னுவதைக் கண்டவன் திரும்பி அக்கையை நோக்கிப் புன்னகைத்தான். “எவரினதும் இரக்கமான நட்பு எனக்குத் தேவையில்லை அரசி” என முணுமுணுப்பான குரலில் சொன்னாள் சுவடிகை. “அவன் பார்ப்பதற்கே மூர்க்கனெனத் தோன்றுபவன். பழகினாய் என்றால் பலாக்கனி” எனச் சொன்ன நிலவை அவளை நோக்கிச் சிரித்தாள். சுவடிகையில் எழுந்த சிற்றார்வம் குழவி நாகத்தின் தலைப்படமென மெல்ல விரிந்தது.

*

அரண்மனையின் மருத்துவக் குடிலிலில் யவன மருந்தின் மயக்கில் கனவுகளுக்குள் தத்தளிக்கும் பூச்சியெனத் தன்னை உணர்ந்தான் நீலழகன். பல்லாயிரம் முகங்கள் குழம்பிக் குழம்பிக் கலைந்தன. மின்னலின் வேரைக் கண்டவன் ஆழத்தைக் காண நோக்கிய போது விரிவுகள் அழிவதைப் போல அவன் நோக்குபவை மறைந்து கொண்டிருந்தன. மேகங்களின் குழைவுகள் வேழங்களைப் போலத் தோன்றின. மின்னலைக் கண்டு அஞ்சியோடுபவை போல மிரண்டன. இடிகளைக் கேட்டு அதிர்பவை போல ஆடின. நீலழகன் ஒரு மேகத்திலிருந்து இன்னொன்றுக்குத் தூக்கி வீசப்பட்டான். வேழங்கள் அவனைத் துதிக்கையால் ஏந்தின. கீழே நிலத்தை நோக்கியவன் எங்குமெழுந்திருப்பது முடிவிலா வரையிலா கருநீல ஆழியே எனக் கண்டு திகைத்தான். அன்னையின் கரங்களென பேரலைகள் முகிலளவு எறிந்து ஆழி அவனை அழைத்தது. நுரைவிரல்கள் அவன் கால்விரல்களில் பட்டுக் கரைந்தன.

பவனியில் அவன் கண்டுற்ற முகங்கள் ஒவ்வொன்றும் வண்ணங்கள் கரைந்து கரைந்து ஒற்றை ஆழியில் வீழும் பேரருவியெனத் தோன்றியது. வண்ணங்களாலான பேரருவி வீழ்ந்ததும் மாகரும் நீலத்துள் கரைந்து அதுவே என்றாகின. பல்லாயிரம் மீன்களும் மாபெரும் ஆமைகளும் ஆயிரமாயிரம் கடற் கன்னிகளும் அலைகளின் மேல் நடந்தன. மீன்களின் சிறகுகளில் அவன் கண்டவர்களின் வண்ணங்கள் ஒட்டியிருந்தன. அவற்றின் விழிகளில் அவர்களின் நோக்குகள் எழுந்துற்றன. பேராமைகளில் புரவிகளும் வேழங்களும் நடந்து சென்றன. அவற்றின் மினுங்கும் பாறைகள் போன்ற ஓடுகளில் அவை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. கடற் கன்னிகளின் பாடல் அவனது கனவை ஊடறுத்து மெய்யிலெனக் கேட்டது. அந்த ஓசையை உற்றுச் செவிகளைத் திறந்திருந்தான். ஒலியற்ற அந்தப் பாடல்களில் லட்சோப லட்சம் குடிகளின் நாக்குகள் புரளுமொலி கேட்டது. அவனது அகம் அவர்களின் நாவுகளில் எழும் பாடல் எதுவென அறிய உந்தி உந்தி எழுந்தது.

மருத்துவக் குடிலில் அமர்ந்திருந்த சுடர் மீனன் நீலனது தேகம் உழன்று வலிகொள்வதைப் போலாடுவதை நோக்கியிருந்தான். வில்லில் எழும் வேட்கை கொண்ட கணையென எண்ணிக் கொண்டான். மறுகணம் ஆழிச்சுழலில் எறிபடும் மரக்கலனென எண்ணினான்.

நீலழகனின் விழிமணிகள் ஓய்தலற்று அலைந்தன. கனவுகளின் பெருக்கில் அவன் ஓயாது நீச்சலடித்தான். கரைகளென்பது ஆழியிலிலிருந்து இன்னொரு ஆழிக்கு என எண்ணினான். ஆழியாலான புடவியில் அவன் மட்டுமே மானுடன். மற்றையவையெல்லாம் தோற்றங்கள். குழைவுகள். விந்தைகள்.

இரவுக் களியினை அரண்மனை முகப்பிலிருந்து நோக்கிக் கொண்டிருந்த தன்னை அவனே பின் நின்று நோக்கினான். குடிகளின் களியோசை அலையலையென எழுந்து வந்து அரண்மனைச் சுவர்களில் மோதுண்டு திரும்பியது. வேய்குழல்களும் பறைகளும் முரசுகளும் யாழ்களும் பின்னிப் பின்னி இசை கூடி பட்டினம் ஓர் இசைச்சுழலெனத் தோன்றியது. எங்கிருந்தோ நோக்கும் ஒரு பார்வையே தான் என எண்ணிக் கொண்டான் நீலன். அவ் எண்ணத்தையும் அவன் பின் நின்று நோக்குகிறான் என நோக்கினான். கனவின் இன்னொரு திசையிலிருந்து பெருமழை கொட்டுவது போல கண்ணீர் பெருகியபடி வரும் இளந்தாய்களையும் பெண்களையும் அன்னையரையும் கண்டான். அங்கிருந்து ஓடிவிட எண்ணித் திரும்பி விலகக் கால்களை எடுத்தவன் அவை அங்கேயே சிலைக்காலென ஊன்றப்பட்டதைக் கண்டு திகைத்தான். திகைத்துக் கூவியவனின் உதடுகள் கல்லுதடுகள் ஆகின. அகம் ஒலி ஒலியெனக் கூவியது. வெட்டுண்ட கரங்களில் சிரசுகளை ஏந்திக் கொண்டு இளம் புலி வீரர்களின் நிரையொன்று அவனை நோக்கி நீள்கயிறென மிதந்து வந்தது. கரங்களை விலக்கி வேண்டாம் வேண்டாம் என்பவன் போல ஆட்டினான். கற்கரங்கள் வேண்டாம் என்பது போல உறைந்து அடங்கின.

சிங்கை வீரர்களின் உடல்கள் தலைகளை மார்பிலே ஏந்தியபடி வெறிச்சிரிப்புடன் களியாடியபடி குலைந்து கூடி விரைந்து ஏகி ஆகாயத்திற்கும் பூமிக்கும் தத்திப் பாய்ந்தன. நீலனின் மார்பில் உதைக்கும் விசைகொண்ட பெருங்காலாய் மாறி உடல்களின் பெருக்கு விரைந்த போது இதயம் உள்ளிருந்து துடித்துத் துடித்து அம்மாயத்தை விலக்குவது போல அடித்துக் கொண்டது. மார்பின் காம்பிலிருந்து சுரப்பதெனக் கல்லூற்றுப் பெருகி இறுகியது. சிங்கை புரிப் பெண்களும் அன்னையரும் சிறுவர்களும் நீலனின் சிறுபாவைகளைக் கடலில் எறிந்து எச்சிலை உமிழ்ந்தனர். அவர்கள் எங்கோ தொலைகடலிலென உமிழும் பொழுது கடல் மேலும் மேலும் கொந்தளித்து எழுந்தது. முதுகில் சில்லிடும் காற்று படர்வதையே ஒற்றைத் தொடுகையென நோக்கியிருந்தவன் மறுகணம் தன்னை இழந்து கல்லென ஆகிய உடலில் விழிகளின் நோக்கு மட்டும் விண்மீனில் நடுக்கெனத் துடிப்பதை நோக்கியிருந்தான்.

கனவுகள் உருமாறி அவனைக் காலமற்ற வெளிக்குள் எறிந்தது. புரவிகள் ஆயிரமாயிரமாய் அசையாதிருந்த ஆழிக்கரையொன்றில் வேழங்களின் மத்தகங்களிலும் தந்தங்களிலும் வல்லூறுகளும் பருந்துகளும் அமர்ந்திருந்தன. அவையும் உறைந்த நிலையில் சிறகுகள் ஒடுக்கியிருந்தன. சிங்கங்களும் புலிகளும் கரடிகளும் முயல்களும் மயில்களும் கிளிகளும் புறாக்களும் செண்பகங்களும் குயில்களும் வாத்துகளும் தேள்களும் தவளைகளும் பல்லிகளும் அட்டைகளும் தேரைகளும் சிலந்திகளும் தாம்பூலப் பூச்சிகளும் கருங்குருவிகளும் கொக்குகளும் நாரைகளும் மைனாக்களும் அத்திரிகளும் குரங்குகளும் தேவாங்குகளும் மான்களும் மரைகளும் வேங்கைகளும் சிறுத்தைகளும் பன்றிகளும் பூனைகளும் நாய்களும் நரிகளும் கழுதைப் புலிகளும் எருமைகளும் பசுக்களும் காளைகளும் ஆடுகளும் சேவல்களும் கோழிகளும் நெற்குருவிகளும் எப்பழுதுமற்ற உடல் கொண்டு உயிர் மட்டும் நீங்கி பல்லாயிரமாய்ப் பெருகிக் கிடந்தன. ஒவ்வொன்றின் விழிகளிலும் நோக்கற்ற விறைப்பு காலமின்மையில் உறைந்திருந்தது. நீலனின் விழிகள் காகங்களைத் தேடிய பொழுது அவை ஆழியின் தொலைவிலிருந்து கருமை சூழ்ந்து இருள் எழுவது போல விரைந்து கொண்டிருந்தன. கோடி கோடிச் சிறகசைத்து எழும் பேரிருள் நெருங்கிக் கொண்டிருந்தது.

அஞ்சி நடுங்கியவன் அகத்தில் நாகமொன்று சுருண்டிருப்பதென எண்ணி விதிர்ப்புக் கொண்டு நாகங்களைத் தேடினான். அவன் தரையென அதுவரை எண்ணியது கோடி கோடி நாகங்களின் நெளிவுலையும் மேனிகளை எனக் கண்டான். அவை தலையைப் பாதாளத்திற்குள்ளும் வாலைக் காலமின்மைக்கும் நீட்டியபடி உடலைத் தரையென அமைத்திருந்தன. பேரன்னை நாகதேவி குழவி நாகமென காலமின்மையின் அச்சில் தொங்கிக் கொண்டிருந்தாள். அவளின் வால் ஒரு மின்முனை ஊசியில் தூங்கியது. தலை கூரூசியென நீலனின் தலைக்கு மேல் ஆடியது அன்னையின் சிற்றுடல். ஓரு கூந்தல் நெளிவெனத் தோன்றினாள்.

அவன் அவளின் விழிகளை நோக்கினான். நான் அஞ்சவில்லை அன்னையே என்னைத் தீண்டுக எனக் கூவினான். நாகதேவியின் இருபுறமிருந்து இச்சையும் அறனும் இரு குழவி நாகங்களெனத் தோன்றினார்கள். அவளின் உடல் முத்தலைகள் கொண்ட சிற்றுடலென நோக்கியவன் அவளில் எழுந்த இச்சையின் சிறுநாகம் அவன் சிரசில் அருளளிப்பது போல படம் விரித்துக் காட்டிய பின் கொத்துவதை நோக்கினான். நாகதேவியின் மயக்குக் கருமை கொண்ட மேனியிலிருந்து கழன்று விழுந்த அறனெனும் நாகம் அவன் மார்பில் ஊர்ந்து எழுந்து உடல் மடித்தமர்ந்து முன்வருவோரைக் கொத்தி என் மகவைக் காப்பேனென வஞ்சினமுரைத்து படம்விரித்தெழுந்தது.

அனைத்தும் காலமின்மையில் பொருளளிந்து அமைந்திருக்க நாகதேவி தன் கரங்களாய் எழுந்த இருநாகங்களும் அவனில் எழுந்தமைந்ததைக் கண்டு ஒருமுறை பிளவுண்ட நாநீட்டிச் சீறினாள். அனைத்தும் உயிர் கொண்டு எழுந்து உலகை நோக்கின. காகங்கள் இருளென எழுந்து வானை நிறைத்த போது நாகங்கள் தலை உயர்த்தி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தேக்கி வைத்த விடத்தில் உண்டான ஊதாநிற ஒளிர்வீசும் அருமணியைத் தலைகளில் கிரீடங்களென அணிந்து இருட்டை விரட்டின. காகங்கள் நீலனின் காலில் வந்தறைந்து மடிந்தன. ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு தீக் கரைதல் எழுந்தது. பசுக்கள் தலையுயர்த்தி மாவென்றன. சிம்மங்கள் பிடரி விசிறிக் கர்ஜனை கொண்டன. புலிகள் உறுமிச் சிலிர்த்தன. ஒவ்வொன்றும் அதனதன் சொல்லில் அத் தீச்சொல்லை மறுதலித்தன. நாகதேவி காலமின்மையின் ஊசியில் நுழைந்து மறைந்தாள்.

நீலன் குருதி சிந்தி கருஞ் சிறகுகள் கருஞ் சுவலைகளென எரியத் தன் காலடியில் கிடந்த காகங்களை நோக்கியிருந்தான். அவை ஒவ்வொன்றும் பிறிதொரு காலமின்மையின் வாயிலெனத் திறந்து உறைந்து வாவென அழைப்பது போல அவனை நோக்கற்று நோக்கியிருந்தன. சிறகுகள் காற்றிலெழுந்து மிதந்து ஆழியில் சென்று வீழ்ந்து கொண்டிருந்தன. மாகருநீல மேனியில் கருஞ் சிறகுகள் மிதந்து கொண்டிருக்க ஆழி அணிந்த புத்தாடையென அவை மினுகுக்குக் கொண்டிருந்தன. கரும் ஊதா நிறப் பேரொளி புடவியை ஒளிர்ச் செய்தது. நாகங்கள் நீலனைச் சுற்றிப் பல்லாயிரம் அடுக்குகளில் இதழ்களென அமைந்து விரிந்தன. துயிலில் மூச்சுச் சீராக வெளிவர தேகம் நடுக்குக் குறைந்த நீலன் துயில்வதை நோக்கிய சுடர் மீனன் எழுந்து உடலைச் சோம்பல் முறித்து நெட்டிகளை ஒடித்துக் கொண்டு வாயிலைக் கடந்து வெளியே சென்றான். புலரியின் பனிப்போர்வை குடிலைப் போர்த்தியிருந்தது. ஒளிமஞ்சள் வெம்மையான ஒரு முத்தமெனப் பெருகி வந்து கொண்டிருந்தது. கருங்குயிலொன்று இடைவிட்டுக் கூவிக் கொண்டிருந்தது.

TAGS
Share This