92: மணநாள்
பனிக்காற்று முன்முகப்பின் கருங்கல் வளைவுகளில் தாவியார்த்து மேவியது. அரண்மனையின் காவல் கோபுரங்களில் தீப்பந்தங்கள் நாவடக்கத் தொடங்கின. சத்தகனை நோக்கியபடியே “என்னவென்பதை அறிக இளையோனே. அவள் உன் களித்தோழியென உடனிருக்க வேண்டுமென என் அகத்தில் வண்டொன்று சுற்றிப் பறக்கிறது. உனது நெடுங்காலத் தனிமையை நான் விரும்பியிருக்கவில்லை என்பது மெய்தான். எனிலும் இவளில் உள்ள எதுவோ ஒன்று உன் அகத்தை இட்டு நிரப்புமென்ற எண்ணம் நீர்க்குடத்தில் காற்றலைக்கும் ததும்பலென நிறைவு தாளாது துள்ளுகிறது” என்றாள் நிலவை. அவளது குரலில் இழைந்த பதட்டம் அவனறியாதது. “வருந்த வேண்டாம் அக்கை. நான் சென்று அவளுடன் சொல்லாடுகிறேன். எனக்கும் தென்னகக் கதைகள் கேட்க விருப்பமுண்டு. அதை விட என் போர்வெறிக் கதைகளை அவள் விழையக் கூடும். சலிப்புற்றவர்கள் எப்பொழுதும் என் கதைகளை விழி விரித்துக் கேட்பதைப் பார்க்கிறேன்.
உளச் சள்ளை கொண்டவர்களளவுக்கு போர்க்கதைகளை விழைபவர்கள் எவருமில்லை” என்றான் சத்தகன். அவனை அறைபவள் போலக் கையுர்த்திய நிலவையின் முன் நண்டின் கொடுக்குகளெனத் தன் பெருந்தண்டுக் கைகளைத் தூக்கிய சத்தகனைக் கண்டு சிரித்தாள் நிலவை. “இளையவனே. அவளில் தோழியென்ற விழைவும் துடுக்கென்ற அணியும் அஞ்சலென்ற பாவனையும் அரிதானது. மாமத யானைபோல விரிந்திருக்கும் உன்னையும் உன் கதைகளையும் கேட்ட குடிப்பெண்கள் அஞ்சியோடி விடுவார்கள்” எனச் சொன்னாள் நிலவை. அவளது குரலில் மெல்லிய பரிவு நீரில் புகும் ஒளியென மின்னி விரிவதைக் கண்ட சத்தகன் சற்று எண்ணங்களை ஒருக்கிக் கொண்டு “அக்கை. அவளில் ஈச்சி அக்கையின் குணங்கள் மெலிந்து திரண்டிருக்கின்றன” என்றான். அவனது அறிவு அவ்வளவு தொலைவைத் தொட்டு மீண்டதைக் கண்டு இசைக் கிண்ணக் கோல் தொட்ட கிண்ண விளிம்பென அதிர்ந்த நிலவை தான் அதை எண்ணவில்லை என நோக்கினாள். பின்னர் அதுவே சுவடிகையை ஒருகணத்தில் அவளிடம் நெருக்கிப் பின்னிய கருங்கொடியென எண்ணினாள். வியக்கும் குரலுடன் “எங்கனம் அப்படி உய்த்தாய் பெருமந்தா. உனது அறிதல் பெண்களிடமோ மானுட உறவுகளிலோ நுட்பமே அற்ற குழவி விரல்களைப் போல தொட்டுத் தொட்டு அலைபவையாயிற்றே” என்றாள் நிலவை.
“இதை ஊழென்றும் வகுக்கலாம் அக்கை. நான் உங்களுக்கெனக் கொணர்ந்த அணித்தாலத்தை நோக்கினீர்களா” என்றான். இல்லையெனத் தலையசைத்த நிலவையை நோக்கிய பின் அவளின் ஒளிர்முகம் ஆச்சரியத்திற்கெனக் காத்திருக்கும் இளம் பெண்ணின் முகமெனத் தோன்றியது. விழிகள் ஓரடுக்குக் கூடிய மல்லிகைக் கொத்தென விரிந்தன. செம்பட்டில் பொன்னிழைகள் பதித்த பட்டாடையால் போர்த்தப்பட்ட அணித்தாலத்தைத் திறந்தான் சத்தகன். உள்ளே அனைத்தும் வெள்ளியும் வெண்கலமும் கற்களும் கொண்ட நுண்ணாபரணங்கள் அடுக்கப்பட்டிருந்தன. சூரியனின் நடுவே புலியொன்று வாய் திறப்பது போன்ற வெள்ளிப் பதக்கத்தை நோக்கிய போது அது ஈச்சியுடையது எனக் கண்டாள் நிலவை. காய்ந்து அணியில் இழையென ஊடும் கருங்குருதித் தீற்றலொன்று புலியின் பற்களில் ஒட்டியிருப்பதைக் கண்டாள். உவகையுடன் அதைத் தொட்டெடுத்துத் தன் பெருமலர்த் தூவி போன்ற உள்ளங் கையில் வைத்தபடி பனியில் தகித்த பகலவனின் ஒளியில் ஆட்டினாள். வெள்ளிப் புலியையும் சூரியனையும் நோக்கிய நிலவை அதை ஈச்சிக்கு அணிவித்த நாளை எண்ணிக் கொண்டாள். நினைவில் ஒரு துமிக் கண்ணீர் சூரியனை மறைத்துப் பருத்தது.
நீலனுக்கும் நிலவைக்கும் மணநாள் ஒருக்க ஆடற் சித்தர் காலக் கணியர்களை அழைத்திருந்தார். வனக் குடிலெங்கும் வேடிக்கைகளும் நகைப்பொலிகளும் மழலைகளின் கல்விச்சாலையெனக் கூவல்கள் எதிரொலிக்க அதிர்ந்து கொண்டிருந்தன. ஊனுக்கென வனம் வேட்டையாடப்பட்டது. முயல்களும் மான்களும் காட்டுக் கோழிகளும் பன்றிகளும் கொணர்ந்து அடுக்கப்பட்டன. பட்டினத்தில் செய்தியறிந்த பரதவரும் வேளாண் குடிகளும் உமணர்களும் வேடர்களும் மரமேறிகளும் ஒவ்வொரு வகைப் பண்டத்தினுடனும் வனக்குடிலுக்கு வண்டில்களை அனுப்பினர். புலிவீரர்களுக்கு நீலனின் மணநாள் பெருவிழவென ஆகியது. அல்லும் பகலும் வனக்குடிலை ஒருக்கி மாபெரும் மலர்மணப்பந்தலென ஆக்கினர்.
நிலவையைத் தூக்கிச் செல்ல மூங்கில்களாலும் வனக்கொடிகளாலும் பெருஞ்சிவிகையொன்றை ஆக்கினர். மணநாளில் அமர்ந்திருக்கவென மர ஆசனங்களை உண்டாக்கினர். இரண்டு சீறும் பெரும் புலிகள் இருகரங்களிலும் எழுந்து நிற்பது போல வடிவமைத்தனர். வாகை சூடன் மணநாளுக்கான பணிகளுக்குத் தலைமை வகித்தான். ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு படைப்பிரிவை ஒருக்கினான். பந்தலுக்கும் வரவேற்புக்கும் அணிகளுக்கும் ஆடைகளுக்கும் மலர்த்தார்களுக்கும் பவனிக்கும் உண்டாட்டுக்கும் களியாட்டுக்குமென ஒவ்வொரு பிரிவும் தங்கள் சொந்த மணநாளென மகிழ்ந்து பணியாற்றும் படி ஆணைகளை வரங்களைப் போல கேட்டுப் பெற்று சிரமேற்கொண்டனர்.
வனக்குடிலே ஒரு மலர்ச்சோலையெனக் கமழத் தொடங்கவும் வண்ணத்துப் பூச்சிகளும் சிட்டுக் குருவிகளும் தேனீக்களும் கிளிகளும் குவியத் தொடங்கின. இரவிரவாகப் புலரி வரையிலும் ஆடலும் பாடலும் கூடியிருந்தன. எரிவிறகுகளைக் குவித்து அதைச் சுற்றிலும் அமர்ந்து காதல் கதைகளைச் சொல்லினர் முது புலி வீரர்கள். நீலனதும் நிலவையினதும் காதற் கதை காவிய முகூர்த்தம் கொண்டதென்றனர் வனக்குடிலில் சிட்டுக்குருவிகளுடன் வந்து சேர்ந்த பாணர்களும் விறலியரும். ஒவ்வொரு குடியினதும் தலைவர்களும் அவர்களின் குடும்பங்களும் தங்கவென குடில்கள் அதிகரித்தன. வனக்குடிலை நோக்கிய நிலவை சதுரங்கக் களம் முழுதும் காய்களால் நிறைக்கப்பட்டது போலென எண்ணினாள். முழுவதும் நிறைக்கப்பட்ட வெளியில் போரில்லை. எக்களமும் வெல்லப்படத் திறந்திருப்பதில்லை. மகிழ்ச்சி அத்தகைய களம்.
மணநாளுக்கான நாளைக் கணியர்கள் குறித்து அறிவித்த நாளில் விரியனின் பெருந்தலை மேலேறி நின்று மணநாளை வீரர்களுக்குக் கூவி அறிவித்தாள் ஈச்சி. “எங்கள் பெருஞ்சூடி. மண் செழிக்க வந்த குலமகள். குடி தழைக்க எழுந்திட்ட குலக்கொடி. நிகரேதும் இல்லாத களக்கொற்றவை. நீலனின் காதலை வென்ற பெருங்காதலி. எங்கள் அரசி. எங்கள் தலைச்செல்வி. எங்கள் பேரரசி. எங்கள் பேரன்னை. எங்கள் பெருந்தவம். நிலவை நீலழகரை மணமுடிக்கும் நன்னாள் இதோ. வசந்தத்தின் முதற் திங்கள் புலரியில்” எனக் கூவி இருகரத்திலும் அள்ள முடியாமல் சிந்திய மலர்களை காற்றின் வெளியெங்கும் எறிந்தாள்.
நிலவை அவளது குறும்புகள் எல்லைகள் கடந்து பெருந்தொல்லை ஆகியதெனச் சொல்லாத நாளே அதன் பின்னர் இல்லை என்றாயிற்று. ஒவ்வொரு அணிகளையும் எடுத்து நிலவைக்குச் சூட்டுவாள். முழுதணியென ஒவ்வொருவரும் வியக்கையில் அனைத்தையும் களையெனச் சினந்து கூவுவாள். மானுடர் நோக்கி அழகென வியக்கும் எதுவும் மெய்யில் அழகில்லையெனச் சொல்லாடுவாள். வேறொரு அணிப்பெட்டியிலிருந்து மேலும் நகைகளை எடுத்து வந்து ஒருக்கத் தொடங்குவாள். முத்துகளையும் வைரங்களையும் அருமணிகளையும் கூழாங்கல்லென அணிக்குடிலெங்கும் விசிறி எறிவாள்.
சிந்திய நகைகளில் படரும் ஒளிவெள்ளத்தில் கருவிரல்களால் துழாவி இது ஒண்ணும் எனச் சொல்லி ஒன்றை எடுப்பாள். பின்னர் கற்பனையில் அதைச் சூட்டுபவள் போல தலையை உயர்த்தி நோக்கிய பின் சோர்வுடன் அதைத் திரும்பவும் வீசி எறிவாள். மணநாளிற்கெனத் தன்னைத் தான் புனைந்து கொள்ளும் பெண்ணின் அகமென அணிக்குடில் குலைந்த அழகில் சுடர் வீசியது.
கூந்தலில் சூடும் மலர் எதுவென அறிய முழுவனத்தையும் அவள் காலடியில் கொட்ட வேண்டியிருந்தது. புலி வீரர்கள் அவளை ரகசியக் குரலில் வசைபாடினர். மலர்களின் பருவங்கள். அவிழும் நேரம். கமழும் நாழிகைக் கணக்கு. இதழ்கள் நகம் மடிக்கவிருக்கும் பொழுது எவ்வளவு. ஆடையின் செவ்வண்ண நிறத்தினை எவ்விதம் கூந்தலணிகள் நிகர் செய்வது. கால்விரல் நுனியின் நான்காவது விரலில் அணியும் காலாழியில் சுடரும் மினுக்கை கைவிரலில் எங்கனம் இணைப்பது அங்கிருந்து மூக்கிற்கு எவ்விதம் தொடுப்பது அங்கிருந்து நெற்றி வகிட்டிற்கு எங்கனம் ஒத்திசை ஒருக்குவது என அவள் கேள்விகளைக் கேட்டபடியே இருந்தாள். வாகை சூடனை நோக்கி கதையைத் தூக்கியபடி எந்தநேரமும் அவனை விரட்டிக் கொண்டேயிருப்பாள் ஈச்சி. செல் அதைக் கொண்டு வா. கடல் கடந்து செல். இல்லையேல் உயிர் துறந்தாவது விண்ணகம் சென்று எடுத்து வா. பாதாளங்களுக்குச் செல்லும் வழிகளை அறி. நாகங்களின் நீலமணிகள் வேண்டுமென அவனை இம்சித்தாள். ஈச்சியைக் கண்டாலே முசுறுக் கூடு மேனியில் கொண்டுண்டவனைப் போல ஓடத் தொடங்கினான் வாகை சூடன். “தாத்தா. அடுத்த மணநாளுக்கும் காலம் கூடிவிட்டது” என இருவரின் களிகளையும் பார்த்த நீலன் சிரித்துக் கொண்டே ஆடற் சித்தரிடம் சொன்னார். “ஈச்சியின் திருக்கண்டம் விண்ணையும் பாதாளத்தையும் வென்று அவள் காலில் சிலம்பெனச் சூடுபவனுக்கே” எனச் சொல்லி நகைத்தார் ஆடற் சித்தர்.
மணநாளுக்கான ஒருக்குப் பணிகளுக்கிடையில் வேறுகாடாரைத் தனிமையில் சந்திக்க அழைத்த நிலவை ஈச்சிக்கென வெள்ளியணியொன்றை ஆக்கச் சொன்னாள். வேறுகாடாரின் சொந்தக் கரங்களால் அவை இழைக்கப்பட வேண்டும் எனச் சொன்னாள். வேறுகாடார் “முதல் ஆணை பேரரசி. எங்கனம் அமைய வேண்டுமெனக் கூறுங்கள்” எனப் பணிபவர் போல முகத்தை வைத்துக் கேட்டார். அவரது நாடகத்தைக் கண்ட நிலவை நீலனைப் போல நடித்து நடந்து “வெள்ளிச் சூரியனில் வெள்ளிப் புலியொன்று சீற வேண்டும். அவளின் கருந்தேகத்தில் அது ஓர் அங்கமெனத் திகழ்ந்து பொலிய வேண்டும்” என்றாள். “ஓம். அவர் ஒரு வெள்ளிச் சூரியனே. நம் வானில் உதித்தெழுந்த வெள்ளித் தாரகை” என்றார் வேறுகாடார். மூன்று இரவுகள் தனது தந்தையின் வாள் உருக்கும் உலைக்களத்தில் வெள்ளியை உருக்கி வார்த்து இழைகளைத் தன் விரல்களால் நுணுக்கிச் சேர்த்து கருங்கயிற்றில் கோர்த்தார் வேறுகாடார். வெள்ளிக் கதிர்கள் நெளிவலைகளென ஆடின. புலியின் விழிகளில் வற்றாத சினமும் கனிவும் கலந்து உறைந்திருந்தன. உருக்கும் ஊசி முனையால் நுணுக்கப்பட்டு புலியின் தோற்றம் மெய்யெனப் பாய்ந்தெழுந்தது. ஆக்கிய பின் வேறுகாடார் தன் கரத்தைத் தானே முத்தமிட்டுக் கொண்டு “நீ கலைஞனடா எனக் கூவினேன்” என நிலவையிடம் சொல்லிச் சிரித்தார்.
மணநாள் கொண்டாட்டத்தால் இருபகல்களும் இரு இரவுகளும் வனம் திகைத்தெழுந்து ஆடியது. மானுடர் மரங்களை நிறைத்துக் குழுமினார்கள். வேய்குழல்கள் இனிமை இனிமையெனக் கூவியெழுந்த புலரிகளில் பறவைகள் பாட மறந்து கேட்டிருந்தன. நிழல் விலகும் கணங் கூட விலாகமல் நிலவையுடன் உடனிருந்தாள் ஈச்சி. “மணநாளிலாவது அவளைத் தனியே விடு ஈச்சி” என மாதுமியாள் சிரித்துக் கொண்டே அவளைச் சீண்டுவாள். “போ. அக்கா. அவள் என் பேரரசி. என் பேரரசிக்கு மணநாள்” எனச் சொல்லி விழியெல்லாம் கனவு கொட்டும் ஈச்சியின் முகத்தைக் காணும் ஒவ்வொருவரும் அவளிலேயே மணநாள் ஒளிகொண்டு பிறரிலும் வீசுகிறது என்றனர்.
வாகை சூடனின் மேலே பூக்களை எறிந்து நிலவையின் பின்னால் ஒழிந்து கொள்வாள் ஈச்சி. தருவின் பின் ஒழிந்து கொண்ட வேழக் குட்டியென அவளின் அங்கங்களை நோக்கிக் கணை தொடுப்பவன் போலச் சிறு கனிகளால் அவளை அடிப்பான் வாகை சூடன். இருவரும் விளையாடும் பாவையா நானெனச் சினந்து கூவுவாள் நிலவை. “அக்கையுடன் பிறக்காத இளம் பெண்களுக்கெல்லாம் நீயே இனிப் பாவை” எனச் சொல்வாள் மாதுமியாள்.
நகையும் ஒலிகளும் சிரிப்புகளும் களிச் சொற்களும் பாடல்களும் திகைப்பும் கனிவும் இன் கூவல்களும் மணநாளை வருக வருகவென ஆர்த்தன. பொன்னளி புலர்ந்த வசந்தத்தின் முதற் திங்களில் மலர்கள் தாமே அவிழ்ந்து வனத்தை விரிக்க ஆறுகள் தாமே விரிந்து புதுப்புனல் அளிக்க பறவைகளும் இசைக்கருவிகளும் தாமே வந்து தம்மை இசைத்துக் கொள்கிறோமென எழுந்து கொள்ள மங்கல நாண் பூட்டி பொற்புலிப் பதக்கம் மின்ன நீலன் நிலவையின் திருக்கழுத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் நாள் விடிந்தது. இருவருக்கும் பொன்னொச்சி மலர்களாலான மாலைகளை அணிவித்திருந்தாள் ஈச்சி. நிலவைக்குச் செவ்வண்ணப் பட்டாடையும் நிறை பொலி அணிகளும் சூட்டியிருந்தாள். வாகை சூடன் நீலனை நிலவைக்கு நிகர் செய்யவேனென சூழுரைத்து அவன் தலை முதல் கால் வரை அணிகளால் ஒளியூட்டி சந்தனமும் கத்தூரியும் குழைத்து மேனியிலும் குழலிலும் பூசி நெற்றியில் தன் கட்டை விரலை அறுத்துக் குருதிப் பொட்டிட்டு “தானறியாத களம் செல்கிறார் எங்கள் காவலர். எல்லோருக்கும் மூத்தவர்” எனக் கூவி நீலனை அணியமைத்து அழைத்து வந்தான். “நீங்கள் இருவரும் ஆடிக்கொள்ளும் காதல் களியில் நானும் அவரும் எங்கள் மணநாளை தொலைத்து விடுவோமடி” என்றாள் நிலவை. ஈச்சி சினந்து கொண்டு “உனக்கு ஒன்றும் தெரியவில்லை அக்கா. ஆண்கள் எங்களை வெல்லும் களமென்று எண்ணிக் கொள்வது நாண் பூட்டி எங்களை உரிமை கொள்ளும் போதே. இக்களத்தையும் நீ வென்று விட்டாயானால் நாங்களனைவரும் உன் பின்னே நிரைவகுத்துக் களம் புகுந்து இக்களமும் வெல்வோம். நீலரையும் வென்று பெருமுடி சூடி நீ அரியணை அமர்ந்து புடவியை ஆள வேண்டும்” என ஆணையைப் பிறப்பிப்பவள் போல மிழற்றினாள். நிலவை அவளை அணைத்து உச்சியை முகர்ந்து “வெல்வோமடி என் செல்லப் பெண்ணே” என்றாள். மாதுமியாள் இருவரையும் நோக்கிய பின்னர் “மணநாளின் பின்னர் ஈச்சி எங்கனம் தனித்துறங்கப் போகிறாள் என்பதே எனது கவலை. இருவருக்குமிடையில் வந்து துயிலப் போகிறேன் எனப் புலம்புவாள். நீங்களிருவரும் குடில் வாயிலில் புலரி வரை அமர்ந்திருந்து சொல்லாடப் போகிறீர்கள். அதுவே என் எண்ணத்தில் தோன்றும் காட்சி” என்றாள். ஈச்சி மாதுமியாளைக் கட்டிக் கொண்டு “அப்படி மட்டும் நடந்தால் உனது வாய்க்கு மலைத்தேன் பூசி முத்தமிடுவேன் அக்கா” எனச் சொன்னாள். “இவள் செய்தாலும் செய்வாள். பாதகி” எனக் கூவியபடி அவள் கரங்களை விடுவித்து ஓடினாள் மாதுமியாள்.
முழுதணியில் மின்னிய நிலவையும் நீலனும் மணப்பந்தலில் புலியாசனத்தில் அமர்ந்தனர். ஆடற் சித்தர் மங்கல நாணை எடுத்துக் கொடுத்தார். நிலவையின் கழுத்தில் நாணை அணிவித்தான் நீலன். வாழ்த்துச் சொற்கள் திசைக்கு ஆயிரமாய்ப் பெருகி திசை விளிம்புகளில் முட்டித் திரும்பின. கனிவின் பேரலைகளென. பார்த்திருந்த விழிகள் வளர்க பொலிக என்றன. கூப்பிய கரங்கள் அருள்க ஆள்க என்றன. விம்மிய உதடுகள் ஓங்குக நிறைக என்றன. அவர்களை நோக்கியிருந்த உளங்களெல்லாம் ஒற்றைக் குரலெனன எழுந்து வாழ்க வாழ்க என்றன.
நீலனுக்கென பொன்னில் வடிக்கப்பட்ட புலிச்சின்னத் தாலியை நிலவை அவனுக்கு அணிவித்தாள். மெல்லிய நாணங் கொண்ட கருஞ்செம்மை நீலனின் கன்னத்தில் உதித்த போது வாகை சூடன் குரல் சோர முரசுச் செய்தி அறிவிப்பவன் போல பாவனை செய்தபடி “அறிக ஆடவரே. அனைவரும் இக்களத்தில் தோற்றோம். ஆடவரே கேளீர். மண் வந்த மாவீரனின் முகத்தில் தோன்றிய நாணச் செம்மையில் புடவியின் இனிய செம்மலர்களெல்லாம் தோற்று உதிர்வதை. அருமணிகள் ஒளி குன்றிச் சோர்வதை. பாடல்களெல்லாம் பொருள் கொண்டு எழுவதை. எங்கள் பேரரசி அணிவித்த பொற்தாலி கரும்பேரெழிலன். தமிழுக்கு மூத்த மகன். தமிழ்க்குடியின் பெருங்கிரீடம். இன்று தன் அருமணியைச் சூடிக் கொண்டார்” எனக் கூவினான். பகடிகளும் கேலிகளும் எழுந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு எதுவென்று அறிய முடியாத உணர்ச்சிகளால் குடிகள் கொந்தளித்தனர்.
உண்டாட்டுகளும் கள்ளாட்டுகளும் விழவில் கரை புரண்டு பெருகின. பட்டினத்தின் எல்லை மரம் வரை எதிரொலிகள் எழுந்தன. வனத்தின் அரசனும் அரசியும் இணை சேர்ந்தமை கண்டு மரங்கள் தலைசிலுப்பி மலர்களைக் கொட்டின. மந்திகள் கள் கலயங்களைக் குடித்து மயக்கில் மானுடரிடை புகுந்து பெரும்பற்கள் விரிய விரல்களால் பழிப்புக் காட்டி ஆடின. வேழங்களின் மதங் கொண்ட பிளிறலோசை முரசுகளென வெடித்தன. புரவிகள் தம் வெறிக்கனைப்பில் வெம்மை படர பிடரி சிலிர்த்து இருகால்களில் எழுந்து வணங்கின. மலர்கள் மூடிய மணப்பந்தலில் எவ்வளவு ஒழித்தாலும் புலப்படும் பெண்ணின் காதலைப் போல புன்னகை கொண்டு நிலவையும் நீலனும் அமர்ந்திருந்தனர்.
பந்தலின் முன்னே இளம் ஆடவரும் பெண்களும் வட்டச் சுவரென ஆகி விறைத்து நின்றனர். நடுவே விழிகளைத் துணிகளால் கட்டியபடி ஈச்சியும் வாகை சூடனும் ஒருவர் கழுத்தில் சூடியிருக்கும் தாமரை மாலையை இன்னொருவர் பறித்தால் வெற்றியென்னும் மலர் விளையாட்டை ஆடிக் கொண்டிருந்தனர். “தோழிகளே. இந்தக் கள்வன் என் மலர் மாலை பறிக்கிறேன் எனச் சொல்லி உங்கள் முலைகளைப் பிடிக்க வந்தான் என்றால் வாள்களை உருவி இவன் கரங்களை அறுத்தெறியுங்கள்” எனக் கூவினாள் ஈச்சி. “தோழர்களே. இந்தப் பெரும் பேய் வாளை உருவுகிறேன் என உங்களின் இடையின் கீழ் கரங் கொண்டு சென்றாள் என்றால் ஓடி ஒழிந்து கொள்ளுங்கள். மணநாள் காணும் வரை வாள்கள் தேவையென விருப்பம் இருந்தால் மட்டும்” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் வாகை சூடன். இருவரினதும் வசைப் போரை நோக்கிய ஆடவரும் பெண்களும் கரங்களைத் தட்டி நாணவொலியெழுப்பி “நாணங் கெட்டவர்கள். பித்தர்கள். களிகாரர்கள்” என இருவரையும் நோக்கிக் கூவினார்கள். தாமரைத் தண்டுகளால் அடித்து விளையாடினர்.
கால் நாழிகையின் பின்னர் சோர்வுற்ற ஈச்சி அசையாது கருந்தூண் போல நின்றாள். அருகு வந்த வாகை சூடன் நிரைப் பெண்ணென எண்ணித் திரும்ப வலையைப் பற்றி இழுப்பவளென அவன் குழலுடன் சேர்த்து மாலையைப் பிடித்து இழுத்து அறுத்து “வெற்றி வெற்றி” எனக் கூவியபடி விழித்துணியை அவிழ்த்தாள். வாகை சூடன் தன் கண்கட்டை அவிழ்த்தபடி “இவள் ஆட்டத்தின் விதிகளை மீறுகிறாள். எப்பொழுதும் இப்படித் தான்” எனச் சினந்து கத்திக் கொண்டு நீலனை நோக்கி ஓடினான். “சிறு பிள்ளை போல ஓடாதே சூடா. உன் மன்னர் எழுந்து இக்களம் வந்தாலும் விதிகள் நாங்கள் ஆக்குபவையே. அக்கையை அழை. நீலரின் மலர் மாலையும் அவிழ்வது உறுதி” எனச் சொல்லி இடையில் இடக்கையை ஊன்றி வலக்கரத்தில் தாமரை மாலையைச் சுழற்றிச் சிரித்தாள் ஈச்சி. நீலன் எழுபவன் போல பாவனை செய்த பின்னர் நிலவையை நோக்கித் திரும்பி “அரசி. நான் போருக்கு எழலாமா” எனக் கேட்க மணப் பந்தல் குலுங்கிச் சிரித்து மலர்கள் கொட்டின. நிலவை உதட்டில் நிறைப்பிறை புன்னகைத்தது.
*
பொன்னொச்சி மலர் மாலையின் பொன்மஞ்சள் ஒளியெழுந்து விழிகளை மூட இமைகளைத் தாழ்த்தி தன்னை ஒருக்கிக் கொண்டு சத்தகனை நோக்கினாள் நிலவை. தாலத்தில் வைக்கப்பட்ட வெள்ளிப் பதக்கத்தில் சீறிய புலி அவளை நோக்கிச் சிரிப்பதாக எண்ணிக் கொண்டாள். “என் வெள்ளித் தாரகை” என முணுமுணுத்தாள் நிலவை. முன்முகப்பில் நிலவையும் சத்தகனும் அமைதியில் நகரும் நத்தைகளென காலத்தின் நினைவுக் கயிற்றில் ஊர்ந்தபடியிருந்தனர். தானகி சுடுபாலும் பனங்கட்டியும் கொணர்ந்து வைத்தாள். அவளுடன் கள் அப்பங்களை கலயம் சுமந்து வரும் ஆய்ச்சியென தூக்கி வந்த சுவடிகையை நோக்கிய சத்தகன் மெல்லிய குரலில் “அதே துடுக்குத் தான் அக்கா” எனச் சொன்னான். “துடுக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் அவள் ஒருதுளி கரந்திருக்கிறாள் இளையவனே” என்றாள் நிலவை. காலம் ஒரு மூச்சில் விரைந்தழிந்து மணப்பந்தலில் முட்டி நின்றது.
வாகை சூடனுக்குப் பொன்னாலான புலிப்பதக்கமொன்றை அணிவித்தான் நீலன். அதை நோக்கி விழிநீர் சிந்திய வாகை சூடன் நீலனை அணைத்துக் கொண்டு விம்மினான். தனக்கெதுவும் அளிக்கப்படவில்லை என்பதை எண்ணி எள்முனையளவும் கவலை கொள்ளாத ஈச்சி வாகை சூடனின் பதக்கத்தைப் பிடித்துப் பார்த்து “இந்த அசிங்கமுகனுக்கு எதற்கு அண்ணா இத்தனை அழகிய அணி” என்றாள். நீலன் சிரித்த பின்னர் “அவனை விட அழகிய ஆணை உனக்கு நான் எந்த உலகில் தேடுவேன் ஈச்சி” என்றான். வாகை சூடன் செருமிக் கொண்டு “அருகிலிருக்கும் அழகை நோக்கும் விழிகள் பெண்களுக்கு இல்லை மூத்தவரே. ஆடியை நோக்கி நோக்கியே அழகென்றால் என்னவென்று மறந்து விடுகிறார்கள் பெண்கள்” என்றான். ஈச்சி அவனது விரல்களைப் பிடித்து முறிப்பவள் போல இறுக்கி “சொல். இந்தப் புடவியிலேயே எவர் அழகானவர். சொல்” எனக் கூவினாள். விரல் ஒடிவது போல வலியெழுந்தவன் கத்தும் குரலில் “பேரரசி நிலவையே பெண்களில் பேரழகி. எங்கள் அண்ணனே புடவியில் பேரழகன்” என்றான். “உன் மூட மூளையில் அது உறைத்ததே. அதுவே போதும்” எனச் சொல்லிச் சிரித்தாள் ஈச்சி. விழிகள் அவர்களை விட்டு அகல பிடித்த விரல்களை வருடுபவள் போலத் தடவினாள். மின்னால் வருடப்படும் தோகையென விரல்கள் துடிப்பதைக் கண்டு நாணினான் வாகை சூடன்.
அவனை அவள் விழிபின்னி நோக்கியிருந்த போது வெள்ளிப் புலிப் பதக்கத்தை ஈச்சியின் கழுத்தில் அணிவித்தாள் நிலவை. ஈச்சி அதிர்ந்து பின் திரும்பிய கணத்தில் ஒற்றை நீர்த்துளி விலகிப் பறந்து நிலவையின் பொற்தாலியில் நீடுவாழ்வாய் என்ற சொல்லுடன் ஆசீர்வாதமென விழுந்தது. கேவி அழுது கொட்டப்போகும் கார்மேகமெனத் திரண்டிருந்த ஈச்சியை வனத்தை அணைத்துக் கொள்ளும் புயலெனப் பாய்ந்து வீசித் தழுவினாள் நிலவை. நீலன் வாகை சூடனின் தோளில் கரத்தை அணைத்துக் கொண்டு “அணியை ஆக்கும் உலோகத்தினால் அல்ல சூடா. அணியும் மேனியின் திகைப்பினாலேயே அணிகள் மதிக்கப்படுகின்றன. இன்று இந்த வெள்ளிக்கு ஈடாக உன் சிரசையும் நீ வைத்தாக வேண்டும். பேரழகி அவள்” என்றான். வாகை சூடன் கருங்கயிற்றில் மின்னிடும் வெள்ளிச் சூரியனில் பாயும் புலியினை நோக்கிய பின் ஈச்சியை நோக்கினான் அவள் அவனது விழிகளை நோக்கியிருந்த கணத்தில் அந்தர வெளியில் எவருமறியாது ஆவிகள் பிரிந்து காற்றினைக் காற்றென அணைத்துத் தழுவி உவகையில் வீசின. விழிகள் மொய்க்கும் மகரந்தங்களென தமது உடல்கள் துடிப்பதைக் கண்டு நாணி விலகித் திரளில் தொலைந்தனர் இருவரும்.
*
சத்தகனும் நிலவையும் தாலத்தை நோக்கியிருப்பதைக் கண்டாள் சுவடிகை. “புதிய அணிகளா அரசி” எனச் சொல்லியபடி பனியில் குளிர்ந்த வெள்ளிச் சூரியனை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துப் பார்த்துவிட்டு “இது அழகாயிருக்கிறது அரசி. நீங்கள் அணிந்து கொண்டால் அணியின் அழகு மேலும் கூடும்” என்றாள்.
நிலவை சிரித்துக் கொண்டு எழுந்தாள். அவளது பேருடல் கனிந்து இளகுவது போல அசைந்தது. விழிகளில் கோர்த்திருந்த நீர்மணிகள் இமைகளில் தூங்கியாடி ஒளிர்த்துத் துலங்கின. சத்தகன் நிலவையின் உளத்தை அறிந்து விலகி அமர்ந்து கொண்டான். சுவடிகையின் கரத்திலிருந்த வெள்ளிப் பதக்கத்தை எடுத்து அவளின் கழுத்தில் அணிவித்தாள் நிலவை. சுவடிகை அதிர்ந்து ஒசிந்து “அரசி” எனக் கூவினாள். “ஏய். பாரத வானரமே. என் அக்கை அணி கொடுக்கும் இரண்டாவது பெண் நீ. இதை எங்கள் மண்ணில் வரமெனச் சொல்வோம். தெய்வமென எழுந்தவள் ஒருத்தியின் கழுத்தில் சுடர்ந்த வெள்ளித் தாரகையை அணிந்திருக்கிறாய்” என்றான் சத்தகன். அவளில் அந்த அணி அவளுக்கென விட்டுச் சென்ற அன்னையின் பரிசென மினுங்கியது. நிலவை சுவடிகையை அணைத்து நெற்றி வகிட்டினை முகர்ந்தாள். ஒரு துளிக் கண்ணீர் துளித்துச் சிந்தி வகிட்டில் விழுந்து நெற்றியில் பதிந்தது.