97: ஊர்தி
“எனது காமம் உடலில் நிகழ்வதில்லை பொன்னா. உடலை ஊர்தியாக்கிக் கற்பனையிலேயே என்னைக் கண்டு கொள்கிறேன். நான் முற்று விழையும் ஆணென்று ஒருவரைப் புடவியால் ஆக்கியளிக்க ஒண்ணாது. நான் என்ற இருப்பிலிருந்து மேனி கடந்து எழும் இருத்தல் நான். என்னை நீ உன்னுடையவள் ஆக்க இயலாது. பல பருவங்களுக்கு ஒருமுறை விண்ணில் தோன்றும் எரிவிண்மீன் போன்றது என் இருப்பு. என்னை நான் யாரென்று கண்டெடுத்து விட்டேன். இங்கிருந்து திரும்பி நான் என் மெளனத்திற்குள் இருளுக்குள்ளும் செல்ல இயலாது” என்றாள் விருபாசிகை அவன் தலையைக் கோதியபடி. குழலின் மெல்லீரம் கரத்தினில் பூசிக் கொண்டிருந்தது. பொன்னன் மெல்லிய மூச்சுடன் அவள் முலைகளில் வாயை வைத்து உறிந்து கொண்டிருந்தான். விழிகள் மயங்கிக் கலங்குபவை போல மூடி விரித்தான். நாவினால் காம்பைத் தீண்டும் பொழுது மயிலகவல் போன்ற முனகலாகவும் உறியும் பொழுது அங்கிருந்து சொல்லிலேறி வேறொரு வெளியில் மேதமையாகவும் விரிந்தாள்.
விருபாசிகையின் குரலில் கையில் அளையும் நீர்மை படர்வது போல் ஒலிக்க “ஆண்கள் எளியவர்கள். அழகானவர்கள். அதேவேளை தீங்கிருள் கொண்டவர்கள். இனிமையெனத் திகைக்கும் ஒவ்வொன்றிலும் கசந்திருக்கும் ஒன்றை நான் நீக்கி விட தீராது விழைகிறேன். அன்னையென ஆவது பெண்ணின் முற்றுடல். மகவுகளைக் கனவு காணும் பெண்ணும். காணும் ஆணில் மகவைக் கண்டு கொண்டவளும் காதலில் நுழைகிறாள். நான் உன்னில் எழும் குழந்தையை விரும்பவில்லை. நீ ஏன் ஓர் எளிய களிக்காதலனாக இருக்கக் கூடாது. ஆண் அன்னையெனப் பெண்ணை அழைப்பது இருவரும் அறிந்த பொறி முனையொன்றில் சிக்கிக் கொள்வது. பிறகு அங்கிருந்து மீளும் ஒவ்வொரு கணமும் சித்தம் மகவையே தேடும். நான் உன் அன்னையல்ல. நான் உன் தோழி. கலவிக் காதலி மட்டுமே” என்றாள்.
பொன்னன் வலமுலையிலிருந்து இடமுலைக்கு அசைந்து உறியத் தொடங்கினான். அவளது சொற்கள் அவனைத் தொட்ட பாவனையே எழவில்லை. அவனது நெற்றியில் தெளிவானம் போன்ற விகசிப்பு சுடர்ந்தது. “பொன்னா. நான் விழைபவள். பரத்தை. நெறியற்றவள். பெண் நெறியற்று எழும் பொழுது தெய்வங்களின் பீடங்கள் அசைகின்றன. புதியொரு தெய்வத்திற்கென பீடம் அமைக்கப்படுகிறது. அவள் அங்கு சென்று அமையப் போகிறவள். அவளை ஆக்கும் விசைகளையும் கனவுகளையும் மேதமை கொண்ட ஆடவராலும் அறிய இயலாது. பெண்கள் அவளை அறிந்து அஞ்சுவர். நான் புதிய காலத்தின் தெய்வமென்று என்னை அறிந்தவள். நான் உண்டாக்கப் போவது பேரழிவுக்கு நிகரனா நெறி மீறல்கள். என் தேகம் சுழன்றெழுந்த முதற் காமத்தில் நான் என்னை அறிந்து கொண்டேன். உனக்கு நற்காதல் வாய்க்க வேண்டும்” என்றாள்.
பொன்னன் சினந்து முனகுபவன் போல ஒலியுடன் இளம் பிஞ்சு முலை சூப்புவது போல முலைக்கோட்டில் தூங்கினான். அதுவே அன்னையெனக் கண்டது போல.
விருபாசிகை அவனுள் சொற்கள் நுழையும் வழிகள் தொலைந்ததைக் கண்டு சிரித்துக் கொண்டாள். அவனது முகம் பெருஞ்சுடர் பட்டுத் தகதகக்கும் பொற்குடமென ஒளிர்ந்து கொண்டிருந்தது.
*
முன் திண்ணையில் அமர்ந்திருந்த காப்பிரிகளையும் யவனர்களையும் நோக்கினான் இளம் பாணன். திண்ணைத் தூண்களில் சாய்ந்து கொண்டும் தீயிலை புகைத்தும் களிவெறியிரவின் பித்துகளை அவர்கள் மொழியில் சொல்லியும் உடலில் காட்டியும் களி கொண்டிருந்தனர். வேறுகாடார் உடற் சோம்பலை முறித்துக் கொண்டு உதறியெழும் பெரிய கரடியைப் போல நடந்து கொண்டார். “கிழவரே. இன்று என்ன களி இருக்கிறது” என்றான் இளம் பாணன். சூரிய ஒளி முகத்திலெறிந்து அவனது விழிகள் கூசின. வேறுகாடார் தன் கூகை விழிகளை உருட்டிக் கசக்கி ஒளிக்கு அமைத்துக் கொண்டு “நூற்றியெட்டுப் பறைத் திருவிழா இன்று. ஓசைகளின் பெருங்கூச்சல் நிகழவிருக்கும். பாடு மீன் பட்டினத்தின் கூத்தர்களின் கொற்றவைக் கூத்தும் இருக்கிறது. யவன சர்க்கரீஸ் கூடாரத்திற்கும் செல்லலாம்” என்றார். இளம் பாணன் சிந்திப்பவன் போல முகத்தை உறுத்தபடி நடந்தான். “கொற்றை கூத்திற்குச் செல்லாம். எங்கள் மண்ணின் தெய்வம் உங்களில் எப்படி நிகழ்கிறாள் என நோக்கலாம். அதுவே நான் உங்களை அறியும் வழி” என்றான் இளம் பாணன். வேறுகாடார் உரக்கச் சிரித்துக் கொண்டு “இன்னொன்றின் உதவியின்றி எப்பாணரும் உலகை நோக்குவதில்லை அல்லவா இளம் பாணரே. ஒப்புமை இன்றி அறிவதே மெய்யறிதல்” என்றார். “நான் அறிய விழைவது கனவை. ஒப்புமை நினைவில் ஒன்றைச் சேகரித்துக் கொள்ளும் உத்தி. மானுடம் எனும் பெருக்கின் முன் பாடுபவன் அதன் அனுபவப் பெருக்கின் மைய அறிதல்களுடன் தன் அனுபவத்தை இணைத்துச் சொல்கிறான். அறிந்த உலகைக் கொண்டு அறியாத அனுபவத்தை விரிப்பது. நீங்கள் காவியத்தில் கேட்பது மெய்யை அல்ல. ஆக்கியவரின் தற்கனவையே வாழ்கிறீர்கள். அதன் வழி கனவு மெய்மையை உணர்கிறீர்கள். புடவியுடன் தன் கனவை இணைக்கும் இழைகளே ஒப்புமைகள்” என்றான் இளம் பாணன். வேறுகாடார் சாலையில் ஒழிந்திருந்த விரைவையும் சரசரப்பையும் நோக்கிக் கொண்டு மதுச்சாலை வாயில்கள் மட்டும் குடிகளால் நிறைந்திருப்பதை பார்த்துச் சிரித்தார். எரிவிறகுகள் நூர்ந்து புகைச் சிறகுகள் கொண்டு எழுவன போல எழுந்து கொண்டிருந்தன. அணையாத தீ என எண்ணிக் கொண்டார் வேறுகாடார்.
இளம் பாணன் திண்ணைகளில் துயின்று கொண்டிருந்த குடிகளை நோக்கினான். பலவண்ண முகங்கள். மானுடர் நெருங்கி நிற்கையில் களிகொண்டு அயர்ந்து துயில்கையில் தெய்வங்கள் அவர்களை நோக்குகின்றன. மகவுகளே இனிய துயில் கொள்க. கனவின் பொன்னாழங்களையும் வைர விரிவுகளையும் சூடிக் கொள்க. அனைத்து துயர்களும் மறக்கப்படவே துயில் தினமும் வருகிறது என எண்ணிக் கொண்டான். உளம் மானுடம் எனும் பெருங்கனவின் நூறு நூறு முகங்களை நோக்கியபடி வாழ்க என் குடிகளே எனக் கூவியது.
மானுட இருப்பே துயர் நிறைந்தது. இயற்கையையும் சக மானுடர்களையும் அஞ்சி அஞ்சியே காலங் கழிவது. நிலையான வாழ்க்கைக்குள் நகர மானுடம் கடந்து வந்த பெருங்காலத்தை எண்ணிக் கொண்டான் இளம் பாணன். மலரில் நறுமணமென மானுடரில் சுடரும் மானுடம் எனும் நறுவாசம் அவர்களை அழகர்களாக ஆக்குகிறது. வாழும் தகுதியுடையதாய் மாற்றுகிறது. மானுடர் விழையும் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் காலமென்னும் பெருங்கடலுக்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு குடி நதியென எண்ணிக் கொண்டான்.
எங்கும் நிறையும் காற்றைப் போல காற்றென்றான விசையைப் போல விசையென்றான மூலம் போல அவர்கள் வாழ்க. எஞ்சாது நிறைவுறுக. யோகம் அமைக. செயல் பொழிக. ஞானம் கனிக என அவன் அகம் இன்சொற்களால் நிறைந்து வழிந்தது. வேறுகாடரை நோக்கியவன் பற்றற்ற நடையுடன் தொடர்ந்து வரும் காலம் அவரென எண்ணமெழ வியந்து கொண்டான். பற்றற்று விரிகையிலேயே அவரால் அனைத்து மானுடரிலும் உறையும் ஒன்றைத் தொட்டெடுத்து அறிந்து உள் நுழைய இயல்கிறது. பற்றின்மை அளிக்கும் புலன் இருப்பின் களங்கமற்ற விழிகள் கொண்டது. அகத்தில் நிகழும் பற்றின்மை ஒரு கவசமென அவர் மேல் ஒளிவீசுகிறது என எண்ணிக் கொண்டான். விழிகளில் இளம் புன்னகை. சொல்லில் குறும்பு. களியில் பேரரசன். அவரையும் அவனையும் இணைக்கும் ஊழின் கயிற்றில் எந்தச் சலனமுமின்றி அவனால் நடக்க முடிந்தது. பற்றற்ற கயிறு ஆடுவதில்லை என எண்ணிச் சிரித்தான்.
அவன் அகத்தில் எழுந்தது தன்னைப் பற்றிய எண்ணமே எனக் கண்ட வேறுகாடார் “என்னை எத்தனை மானுடர் தான் எண்ணிக் கொள்வர்” எனச் சொல்லி குறும்புப் புன்னகை உதிர்த்தார். “ஓம். கிழவரே. நீங்கள் ஒரு வியப்பு. அதேவேளை குரூரம். நீங்கள் ஒரு இனிய தோழன். ஆனால் வஞ்சகன். நீங்கள் உங்களிற்குள் கரந்து வைத்திருக்கும் மந்தணங்களால் புதிரொளி பெற்று மின்னுகிறீர்கள்.
எதனால் நீங்கள் இங்கனம் ஆகினீர்கள். இக்குடியில் உங்கள் தேகம் பிறிதொரு காலத்தில் மலர்ந்திருப்பதாகத் தோன்றுவது தீயிலை மயக்காலா என எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றான் இளம் பாணன். நிலக்கிளிகள் தத்திச் சண்டையிட்டுக் கத்தும் ஒலிகள் செவிகளில் படர்ந்தன.
வேறுகாடார் சிரித்துக் கொண்டே “சிலர் நோன்பு நோற்று தன்னை வருத்தி புலன்களை அடக்கி சித்தத்தை அகற்றி இருப்பை ஒருக்கும் சித்த நிலை சிலருக்கு ஊழால் அளிக்கப்படும் இளம் பாணரே. நான் என்னை ஆக்கிக் கொள்ளவென்று முயன்று எதையும் பயின்றவனல்ல. பற்றிக் கொள்ள வேர்களுமின்றிப் படர்ந்த பெருநதியில் நான் அலை. அந்த ஒருமை எனக்கு உண்டு. அதை எங்கனம் வந்து சேர்ந்தேன் என எண்ண இயலவில்லை. காலம் அளித்த பணிகளைச் செய்தேன். என் முற்றும் அளித்து வாழ்ந்தேன். வாழ்க்கை இனியது இளம் பாணரே. அதை ஆக்கிக் கொள்ளத் தெரிந்தவர் அதை மேலும் இனியதாக்கிக் கொள்கிறார்.
மானுடரை அறிதலென்பது தீராத களி விளையாட்டு. ஒவ்வொரு அகமும் ஒரு தனிப் புடவி. ஆனால் அனைத்தும் ஒன்றே. ஒரே இருளில் நீந்தும் விண்மீன்களென” என்றார் வேறுகாடார்.
இளம் பாணன் கைகளை வீசி நடந்தான். மன்றின் முன் நின்ற இருதியாளையும் அவளது தோழிகளையும் கண்டவன் பலநாட்கள் பழகிய மனைக்குச் செல்பவன் போல கிளர்ந்தெழுந்து சிரித்தபடி அவர்களை நோக்கிக் கையைத்தான். கர்ணிகை அவனை நோக்கித் திருப்பிக் கையசைத்து சிப்பியிடமும் யாதினியிடமும் அவனைக் காட்டினாள். நடையில் மெல்லிய தாளம் கூட நடந்து சென்றான் இளம் பாணன். கர்ணிகை அவனை நோக்கி ஓடி வந்து “இப்படி எங்களைத் தவிக்க விட்டு எங்கு சென்றீர் பாணரே” எனச் சினந்து கொண்டாள். “தவிப்பே காதலின் முதல் இனிமையல்லாவா” எனச் சொல்லி அவனுள் ஒளிரும் சிறுவனின் புன்னகையை வீசினான். கர்ணிகை அவனது கரங்களைப் பிடித்து அழைத்துக் கொண்டு மன்றுக்குச் சென்றாள். மன்றின் கரையிருந்த மனையொன்றின் திண்ணையில் இரண்டு விறலிகள் சொல்லாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி கனிந்த இரும்பென வண்ணங் கொண்டிருந்தாள். மற்றையவள் கார் திரண்டு பொழிந்த மஞ்சென வண்ணமுற்றிருந்தாள்.
இருதியாள் வேறுகாடாருடன் சொல்லாடிக் கொண்டு திண்ணையில் சென்றமர்ந்தான். யாதினி முகங் கழுவிக் கொண்டு வாயில் நீரை பூமழை பொழிவது போல் ஊதிக் கொண்டு மார்பில் அந்தத் துளிகள் பட்டு நனைவதை விளையாட்டென நோக்கிக் கொண்டு வந்தாள். சிப்பியும் கர்ணிகையும் இளம் பாணனை இருபுறமும் சேடியரென அழைத்து திண்ணையில் அமர வைத்தனர். அமர்ந்த பின் வலப்புறம் கர்ணிகையும் இடப்புறம் சிப்பியும் அமர்ந்து கொண்டனர். மனையின் உள்ளிருந்து முதுவிறலிகள் பேசும் ஒலிகள் கோழிகள் சொல்லாடிக் கொள்வது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. மனையின் முன்னே மூன்று புரவிகள் கட்டப்படிருந்தன. எரிவிறகுகள் முழுதும் நூர்ந்து கரிக்கட்டிகள் குவிந்திருந்தன.
திண்ணையில் அமர்ந்திருந்த விறலிகளை நோக்கிய இளம் பாணன் கர்ணிகையிடம் திரும்பி “எப்படி அனைத்துப் பெண்களும் அழகாய் இருக்கிறீர்கள்” எனக் கேட்டான். தத்துவக் கேள்வி போல தீவிரமாகக் கேட்டவனின் தோளில் அறைந்த கர்ணிகை. “காமம் முற்றியவனுக்கு எல்லாத் தேகமும் அழகே. இளையவளும் முதியவளும் இல்லை. நீங்கள் விழையும் அளவுக்குச் செயல் கொண்டவரில்லை என்பதை நேற்றே பார்த்தோம். ஆகவே அச்சமில்லை” எனச் சொல்லி நகைத்தாள். சிப்பி அவனது கரத்தைப் பிடித்து மடியில் வைத்துக் கொண்டு “அவளை விடுங்கள் பாணரே. என் அழகை நீங்கள் இன்னும் பாடவேயில்லை” என்றாள். இளம் பாணன் அவளது விரல்களை வருடிக்கொண்டு “உனக்கான சொல் என்னுள் தோன்றும் பொழுது உனது அழகு அழியாத பெருமொழியில் என்றைக்கும் ஊன்றப்பட்ட பொற்தண்டம் என நின்றிருக்கும் தோழி. உனது அழகில் நான் காணாதது இன்னும் எஞ்சியிருக்கிறது” எனச் சொல்லி அவள் முலைகளை நோக்கிச் சிரித்தான். சிப்பி நாணங் கொண்டு விழிகள் கூச்சலிட அவனது கரத்தைத் தொடை வளைவில் விழுத்திக் கொண்டாள். கர்ணிகை அதைக் கண்டு மெல்லிய விலக்கம் கொண்டாள். கர்ணிகையின் மேனி அங்கிருந்து மெல்லிய விலகலுடன் நகர்ந்ததை இளம் பாணன் உணர்ந்தான். கர்ணிகையின் முகத்தை நோக்கிச் சிரித்துக் கொண்டு “பொறாமை பெண்களைப் பேரழகிகளாக்குகிறது. இல்லையா” எனக் கேட்டான். அடுமனைப் பாத்திரங்கள் உருள்வது போல எழுந்த குரலுடன் “யாருக்குப் பொறாமை. இவள் ஒரு காமுகி. இவளிடம் சென்று நீங்கள் காமம் பயில்வதில் எனக்கென்ன எரிச்சல்” என்றாள் கர்ணிகை.
சிப்பி மெல்ல அவன் கரத்தை விடுவித்துக் கொண்டு “ஏன் சினக்கிறாய் கர்ணிகை. சினம் வந்து விட்டதென்றால் நீ அவரை விழையத் தொடங்கி விட்டாய் என்பதே அர்த்தம். மேலும் சினந்து நடித்தால் இன்னும் காதல் கொண்டு விடுவாய். நாடோடிப் பாணனுடன் யாழைத் தூக்கியபடி அலையப்போகிறாயா” எனச் சொல்லிச் சிரித்தாள். “நான் எவரையும் விழையவில்லை சிப்பி. இவன் முகத்தைப் பார். நன்கு கழுவாத இளங் கரடியின் முகம் போலிருக்கிறது. குழல் மட்டும் இல்லையென்றால் இவனைக் கரடிகள் கூட்டத்திடம் சேர்த்து விடலாம்” என்றாள் கர்ணிகை. இளம் பாணன் சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். “பார்த்தாயா. சினம் கூடத் தொடங்கி விட்டது. இவரென அழைத்த பாணர் கரடிப் பாணன் ஆகி விட்டார். பாணரே அவளுக்கு இதழ் முத்தமொன்று கொடுங்கள். காதலை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் வஞ்சம் கொண்டு உங்களை எரிப்பாள்” என்றாள் சிப்பி. அவளது வேடிக்கை கர்ணிகையை சினமேற்ற எழுந்து கொண்டவளை இளம் பாணன் கைபற்றிப் பிடித்தான். “இனியவளே. எங்கு செல்கிறாய். உன் வேய்குழல் குரலின்றி நான் எதைக் கேட்பேன். உன் தண்ணவிழ் முகமின்றி எதை நோக்குவேன்” எனக் காதலன் போல பாவனை செய்தான். கர்ணிகை உதட்டைச் சுழித்து கரத்தை உதறிக் கொண்டு “அவளுடனேயே உங்கள் காதல் நாடகத்தை ஆடுங்கள் பெருங்கவியே. என்னைப் போன்ற பிறவிகளை நீங்கள் எண்ணவும் கூடுமா” எனச் சொல்லி அவனது முகத்தை நோக்கினாள். எழுந்து கர்ணிகையின் முன் சென்ற இளம் பாணன் “தோழி. காதல் ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொருவரிடம் மலரும் சாபங் கொண்ட எளியவன் நான். என் மேல் கோபம் கொள்ளலாமா” என்றான். அவனது பாவனையைக் கண்ட கர்ணிகை சினம் அடங்கிக் கொண்டிருப்பதை விலக்கியெழ நச்சுக் கொண்ட சொல்லொன்றை அகத்தில் துழாவினாள். வேறுகாடார் இடை புகுந்து “இளம் பாணனே. காலையிலேயே இரு காதலிகளுடன் பூசலா. இதற்காகவா பட்டினம் நோக்கப் போகிறேன் எனப் பொய் பகர்ந்து என்னை இங்கே அழைத்து வந்தீர்கள். காணுமிடமெல்லாம் காதலிகள் அமைவதென்பது நீங்கள் வாங்கி வந்த வரமா” எனச் சொல்லிச் சிரித்தார். கர்ணிகை அந்தச் சொற்களை சீராய்க் குளத்தில் எறியப்படும் கற்களென அகத்தில் ஏந்திக் கொண்டாள். “வேறு காதலிகளும் உண்டா. நல்லது. நான் இவருடன் சொல்லாடவும் விழையவில்லை” எனச் சொல்லி நகர்ந்து மன்றை நோக்கிச் சென்றாள். துடியன் ஓலைச்சுவடி ஒன்றை வைத்து குடிகளுக்கான ஆணைகளை மீளவும் வாசித்துக் கொண்டிருந்தான். சிறு குழுவொன்று அவனது குரலை ஆர்வமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தது. கர்ணிகை அவனைக் கடந்து மன்றுக்குள் சென்றாள்.
“என்னவானது இவளுக்கு” எனச் சலித்துக் கொண்டாள் இருதியாள். “காதல் பெண்களை அழிக்குமளவு எதுவும் அவர்களை அழிப்பதில்லை” எனச் சொல்லி வேறுகாடார் திண்ணையின் தூணில் சாய்ந்து கொண்டார். புரவிகளில் வந்த புலிவீரர்கள் அருகிருந்த காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து சுற்றிலும் நோக்கிக் கொண்டு சொல்லாடிக் கொண்டிருந்தனர். உலகளந்தோன் வேறுகாடாரைக் கண்டு கையசைத்தான். “ஆண்களை வெறுக்க ஒரே காரணம் வந்துவிட்டான்” எனச் சொன்ன வேறுகாடார் அவனை நோக்கிக் கையசைத்தார். போர்களை வென்று கபாலங்களைக் கழுத்தில் சூடி குடிகளை நோக்கி வருபவனென நடை கொண்டு அவரை நெருங்கினான் உலகளந்தோன்.