100: எதிராட்டக்காரி : 02

100: எதிராட்டக்காரி : 02

இவள் பிறிதொன்றின் தெய்வம் என அதிர்ந்தான் பொன்னன். சொல்லில் எழும் மயக்கிற்கு அப்பால் எங்கோ ஒரு தொல்முனையில் வீற்றிருக்கும் மானுடர் அறிய ஒண்ணாத மானுட தெய்வம். இவளை அறிந்தால் மானுடம் தன் முதல் கூழாங்கல்லை அழகுடன் தொட்டு நோக்கியவருக்கு அதன் அழகுமை எதனால் தோன்றியதென்ற புதிருக்கு விடை கிடைக்கும். அழகு தன்மையால் உண்டாக்குவது. நெறி விலகுபவள் புதிய இன்பங்களை மானுடருக்கு ஆற்றும் பொருட்டு எழுந்த பெருந்தெய்வம். கருணையால் அன்றி பிற உணர்வுகளால் அறிய முடியாதவள். அவளின் காமம் ஒரு கருணை. அவளின் கொல்வேட்கை ஒரு கருணை. ஞானத்தின் சொட்டில் சுடர அவள் தன்னை தனது மொத்த வாழ்க்கையையும் வைத்து ஆடும் சூதாட்டம். சூதில் வெல்பவரும் தோற்பவரும் அடையும் தினவும் களியும் ஆற்றாமையும் இழப்புணர்வும் இவளுக்கு இல்லை. அழிகையில் தானழிந்து சுடரும் பொன்னொளிச் சுடரிவள். எக்காலமும் தாங்கும் பேரிருட்டின் ஒளிப்பொட்டு. எதிரில் நின்று ஆடுபவள் தொல் அரக்கி என அறிந்தவன் அடையக் கூடிய அச்சமும் உவகையும் அடைந்தான் பொன்னன். அங்கு அவளும் அவளது சொற்களும் இல்லை. கிடப்பது பேரிரிப்பின் பரிநிர்வாணம். சொற்களும் மானுட வாழ்க்கைகளும் புரந்து அளித்தவற்றை அவள் சொல்லில்லா மெளனத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறாள். வரம் கொடுப்பதால் அல்ல. வரங் கொடுக்க எண்ணியிருப்பதால் தெய்வமாகியவள். தான் அன்பு கூரும் எல்லையை மானுட விழைவுகளிற்கும் அப்பால் கொண்டு சென்று நிறுத்துபவளை அவளே இனிவருங் காலத்தின் அறம். அறத்தின் முலைகளில் பாலருந்திக் கொண்டிருக்கிறேன் அதன் விழைவின் முதல் சொட்டு விழும் நாவாகியிருக்கிறேன் என்ற எண்ணம் பொன்னனில் எழுந்த அனைத்துச் சொற்களையும் களியிரவில் துகில்களென விலத்தின.

அறிக மானுடரே. யுகம் யுகமாய். ஊழி ஊழியாய் இது இவ்வண்ணமே நிகழ்கிறது. எதிராட்டக்காரியே வாழ்வின் சூதுகளை அவிழ்ப்பவள். அவள் அருங்கொடையை முலைகளாய்ச் சூடியவள். கனவுகளை விழிகளாய் ஆக்கிக் கொண்டவள். மெய்யை சொல்லாய் கூவுபவள். அவளை நீங்கள் அறிய முடியாது. நெருங்க இயலாது. சுடும் தீயில் அனலெனத் தழல்பவள் அவளே. பெருமலைகளில் பாறைகளில் உறைந்து ஒழிப்புக் காட்டும் தொல் மெளனமும் அவளே. அவள் சொல்லுக்கு எதிர். கற்பனைக்கு எதிர். காலங்களுக்கு எதிர். களங்களுக்கு எதிர். வாழ்வுக்கு எதிர். அறங்களுக்கு எதிர். அவள் எதிரால் நிலை கொண்ட பேறு. விழைவால் உயிர் கொண்ட ஆற்றல். அதனை நீங்கள் அஞ்சித் தான் ஆக வேண்டும். இதோ நான் முலை அருந்திக் கொண்டிருப்பவள் மானுடன் தன்னை முழுது கொண்டு அவளை விழைந்தால் தன்னை அழித்து அவ்விழைவை அழிப்பவள். விழைவு அடையப்படுகையில் இழக்கப்படுகிறது. தாகம் தீர்ந்த பின் தண்ணீர்க் குளிரின் இனிய நினைவு போல.

அறிக முன்னோரே. இவள் தன் எதிரும் புதிரால் வாழ்வெழுந்தவள். இவளை அளக்கும் கருவிகள் நீங்கள் ஆக்கிக் கொண்டதில்லை. ஒருமுனை உங்களை விட மெய்யைத் தீண்டும் வரங் கொண்டவள். விழைவை ஒரு பூத்துக் கனியும் மலர்க்கனி மரமென ஆக்கிக் கொண்டவள். நான் அறிய ஒண்ணாது. எந்த ஆணும் முழுதறிய இயலாத மாபெரும் சக்கரவர்த்தினி தன் முலையளித்து ஏந்தியிருக்கும் மகவு நான். காமன். விழைவு பற்றிய பின் விலகிச் செல்லும் கனவு. என்னை அவள் எளிய கனவைப் போல மார்பில் ஏந்திக் கொள்வாள். அவளது அணி திமிர்த்தல். அவளது கொடை இளகல்.

அறிக வருங்காலத்தோரே. நான் உருக்கிச் செதுக்கிய சதைச்சிற்பத்தை இங்கனம் விழைபவன் ஆகிறேன். அனைத்தும் எளிய கணக்குகளே. வகுத்தலும் பிரித்தலும் கழித்தலும் எளியோர் கணக்கு. கூட்டலும் பெருக்கலும் விரித்தலுமே தெய்வக் கணக்கு. பெருகுவதினால் அவள் உங்களைத் தொடுவாள். கருணையினால் அவள் நீடிப்பாள். கனவுகளினால் அவள் நீடு வாழ்வாள். மானுடத்தால் அவள் சூடப்படுவாள்.

கனவை அறிந்தவள் பெண். கனவை ஆக்குபவள் தெய்வம். கனவை அளிப்பவள் பெருந்தெய்வம். கனவை பெருக்குபவள் படைப்பின் மூலம். இயல்பினால் தருக்குவதே மெய்விவாதக் களங்களின் முடிச்சு. அவள் மெய்யாய் அவிழ்பது எளிய தருக்கங்களின் கடினமான முடிச்சுகளையே. இங்கனம் இவள் பிறந்திருக்கும் போது அனைத்தும் அவளை தொல் அரக்கி எனவே விளிக்க வேண்டும். என் பிலவுகளில் உறங்கும் பெருமஞ்சமே. உன்னை அறிந்த போது நான் மானுட விவாதத்தின் ஒரு பொறி முனையளவும் திசை விலகவில்லை. உன்னை நான் எங்கு சந்தித்தேனோ அங்கேயே ஒரு ஆண் ஒரு பெண்ணை சந்திக்க விழைகிறான். அங்கனமே தன் விழைவுடன் ஆடலுக்கு அழைக்கிறான். தன்னை அழித்து முழுதை அளியெனக் கெஞ்சுகிறான். எதிரில் ஆடுபவளே. இம்மையும் மறுமையும் புலன்களை அணிந்தவளே. புலனால் அறியப்படும் மெய்யாலே அனைத்து விலங்குகளும் அடையும் போதம் சிடுக்கான சொற்களால் என்னை நீங்குகின்றது. நீயோ மெய்மை மட்டுமே. புலனால் அறியப்படுபவள். கற்பனையால் நூர முடியாதவள்.

தாகங் கொண்ட பெண்ணளவுக்கு மானுடரைப் பிறிதெவரும் அச்சப்படுத்துவதில்லை. அவள் நெறிகளையும் அறங்களையும் அழிப்பதால் அல்ல. அவள் காண விழையும் கனவின் மெய்யை அறிய விழையாமல் அச்சம் கொள்வது எளிது. மானுடருக்கு அச்சம் ஒரு போதைச் செடி. புதிய அச்சங்கள் புதிய கிளர்வை அளிக்கும். ஆனால் அறிக. அவள் எதிரில் நின்று ஆடுபவள். எதிர் நிற்பதனாலேயே பிரிந்து நிற்கும் வாழ்வைப் போல.

எதிராட்டங்கள் எங்கும் நிகழ்ந்து கொண்டேயிருப்பவை. ஒன்றை இன்னொன்று எதிர்த்தே அனைத்தும் நிலைக்கிறது. வளர்கிறது. கனிகிறது. எதிர்ப்பது ஓர் இயற்கை ஆற்றல். எதிர்ப்பவர் எவரோ அவரை விட ஒரு முனையளவேனும் மேலெழும் ஆற்றலே செயல்களின் ஊற்று. ஆகவே மானுடரே உங்களில் மகத்தான விழைவென உச்சமாயுள்ளது எதுவோ அதை வென்று எழுக. தயக்கமின்றிச் சொல்கிறேன். மானுடம் இதுவரை அறிந்த அனைத்துக்கும் அப்பால் நான் ஒரு முனை உளிச்செதுக்கை நிகழ்த்துவேன். நான் அறிகிறேன். அறியப்படுவதும் நானே. நான் ஆக்குகிறேன். ஆக்கப்படுவதில் திகழ்வதும் நானே. குன்றாத தன்முனைப்பால் செயல்கள் என்றும் முட்படுக்கையில் வைத்திருக்கப்பட வேண்டியவை. தன்னை வென்றெழும் ஆற்றலே அகங்காரம். தினவும் மதர்ப்பும் அறிதலின் இன்ப நதியில் நீந்தும் அழகிய முதலைகள். முற்றறிக. முற்று வெல்க. முற்றாய் அமைக. அதுவன்றி நான் பிறிதல்ல எனும் தருணம் மானுடருக்கு வாய்க்குமெனக் கண்டேன். இதோ இவள் மெய்யில் தானின்றி அமைந்திருக்கும் விழைவி. ஊர்தியாய் ஆகிக் கொண்டவள். அதுவே நானும் என ஆகுவேன். நான் ஒரு தனிக் கனவு. என்னில் தழையும் கனவுகளில் நானுமோர் பெருங்களியே.

நன்றி. நன்றி எனப் பொன்னன் விசும்பலுடன் அவள் முலைக் காம்புகளிலிருந்து வாயை எடுத்தபடி கேவினான். விருபாசிகை அவளது சொற்கள் எட்டாத தொலைவிலிருந்து வந்தவனை நோக்கி கனிந்த மூதன்னை எனப் புன்னகைத்தாள். நற்சொல் மட்டுமே உரைக்கும் நாவு கொண்டவளாய் “பொன்னா” என அழைத்தாள். அச்சொல் அவனில் உளி மலரிதழாய் ஆக முடியும் என எண்ணச் செய்தது.

பொன்னன் எழுந்து அமர்ந்து கொண்டான். மேகங்கள் திரண்டு முதலைப் பூதங்கள் வானில் வருவதைக் கண்டான். சாளரத்தில் கருமை அலையலையாய் வந்து நுழைந்தது. குளிர் வருடி நுழைந்த போது விருபாசிகை அவனை அணைத்துக் கொண்டு துயிலுக்குச் சென்றாள். காட்டின் இருள் மூலையில் உறைந்திருந்த பாறைக்குள் ஒரு இளவேர் தன்னைத் தான் ஒரு நுண்விரிவு கொண்ட போது பாறையின் உச்சி பிளக்கத் தொடங்கியது. மேலிருந்த கிளைகளில் அமர்ந்திருந்த மந்தி மூதன்னையொருத்தி சிரித்தாள். பெரிய பற்கள் வாழ்வை எண்ணிச் சிரித்துக் கொள்ள அவளது வால் கிளையில் நீண்ட பாம்பென தூங்கிக் கொண்டிருந்தது.

*

மேகக் குவைகள் போருக்கு எழுந்த அத்திரிக் கூட்டமென விரைந்து கனைப்பொலி எழுப்பியபடி வருகிறதென எண்ணினான் சத்தகன். சுவடிகையை அழைத்துச் சென்று ஆழிக்கரையைக் காட்டிக் கதைகள் சொல்ல வேண்டுமென எண்ணினான். இடைநாழியால் சென்று கொண்டிருந்த தானகியை அழைத்தான். “அக்கா. சுவடிகையை நான் பட்டினம் உலாவ அழைத்துச் செல்ல விழைகிறேன். அவளுக்குப் பொழுதிருந்தால் கேட்டுச் சொல்லுங்கள் என்றான். தானகியின் விழிகளில் தோன்றியிருந்த கலக்கத்தை நோக்கும் பார்வை அற்ற சத்தகன் மீண்டும் கேட்டான். “பெருந்தளபதி. சுவடிகையும் அரசியும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அவர் வருவார் என எண்ணவில்லை” என்றாள். அவளுடையை குரலிலிருந்த நடுக்கைக் கண்ட சத்தகன் அத்தகைய நடுக்கை தவறு புரியும் இளம் வீரர்களிடம் கேட்ட நினைவு எழுந்தது. சொல்லை அடக்கிக் கொண்டு “நான் மருத்துவ நிலைக்குச் சென்று அரசரையாவது பார்க்கிறேன்” என மெல்லிய சினப்பொலியுடன் திரும்பினான்.

*

நிலவை நிமிர்ந்து நோக்கிய போது சுவடிகை மெய்ப்புக் கொண்டாள். சிம்மத்தின் மூச்சை எதிர்கொள்ளும் எலியெனத் தன்னை எண்ணிக் கொண்டாள். அவளில் திடுக்கிட்டெழுந்த உணர்ச்சிகளை அவள் முன்னர் அறிந்ததில்லை. லீலியாவின் புலக்காட்சிகளை சுவடிகை அறிவாள். ஆனால் நிலவையின் குரலில் எழுந்த பெருந்தனிமை கொண்ட முதுவிலங்கின் ஊளையை அவள் எங்கோ தன் ஆழத்தில் எக்காலத்திலோ கேட்டிருக்கிறேனென அவள் உளம் விரட்டிக் கொண்டிருந்தது. நினைவுகள் நிலவையின் குரலால் அதிர்ந்து கொண்டிருந்தன. எதைத் தொட்டாலும் அது அங்கிருந்து நழுவி விடுகிறது. நிலவையும் லீலியாவும் நிகரான பேரெடையும் பேரெழிலும் பெரும் விந்தைகளும் கண்ணுக்கு அப்பாலான ஆற்றல்களுடன் உரையாடக் கூடியவர்களும் என எண்ணினாள் சுவடிகை.

நிலவை மூச்சு அமர்ந்த போது லீலியா குழந்தை முகம் கொண்டு அமர்ந்திருந்தாள். உசை கூண்டிலிருந்து கீச்சியது. அக்குரல் ஒரு கொத்தலென நிலவையின் உடலில் விம்மியடங்கியது.

லீலியாவின் முகத்தை நோக்கிய எக்கணத்தில் இருவரும் பிறிதொரு வெளிக்குச் சென்று திரும்பினர். எதனால் இத்தனை மாயமாய் பொழுதுகள் விரிகின்றன. சுவடிகை தனது அறிவு சிறியதென எண்ணினாள். அது அவளை ஆற்றியது. நாம் அறிந்து கொள்ள முடியாதவற்றின் மீது உண்டாகும் விலக்கம் உளத்தை வேறு வெளியில் ஆற்றிக் கொள்ள உதவும் எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

செலினி மீண்டும் நீள்மஞ்சத்தில் படுத்து துயிலத் தொடங்கினாள். மஞ்சத்தறையில் காரிருள் திரைச்சீலைகளில் வழிந்து மெளனமென உறைந்திருப்பதை நோக்கினாள் சுவடிகை. ஒரு பேய் வந்தாடிச் சென்ற பெண்ணின் உடல் போல என எண்ணிக் கொண்டாள். எழுந்து சென்று விட எண்ணினாள். ஒரு நடுக்கம் அவளில் தொட்டுக் கொண்டேயிருக்கும் எண்ணமெழ உதறிக் கொண்டு எழுந்தாள்.

பெண்ணின் அகம் அஞ்சுவது எதை. அனைத்திலும் அஞ்சத்தக்க ஓர் அம்சத்தை காலம் பெண்ணுக்கு அளிக்கிறது. அச்சமே புலன்களை விரிக்கும் ஆழ்விசை. மகிழ்ச்சி மந்தமாக்குவது. போதை பிறழ்வளிப்பது. ஊழ்கம் அளிக்கும் நோக்கொருமை பயின்று அடையப்பட வேண்டியது. ஆனால் நோக்கும் ஒவ்வொன்றினுள்ளும் அதன் ஆழத்தை அறியும் பெண் அஞ்சுபவள். அச்சம் குறைந்து செல்லும் பெண் வாழ்வில் தனது நுண்மையைப் பிறிதொன்றால் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆணில் அச்சம் ஒரு பயில்வென ஆகியிருக்கிறது. புலன்களை முற்றொருக்கி ஒருங்கிசைவது ஆணுக்கு ஒண்ணாது. அவன் புலன் பெயர்பவன். பெயர்ந்து கொண்டேயிருக்கும் புழுதிக் காற்றுப் போன்றவன். நடக்கும் செடிகள் என எண்ணிக் கொண்டாள். அவர்கள் அஞ்சுவது எளிய உலகியல் எதிர்ப்புகளுக்கு. அது கூட அக்கணத்திற்கு மேல் பொருளுள்ளதா. போரில் வாள் முனையிலோ கதை வீச்சிலிருந்தோ விலகித் தப்பித்துக் கொள்பவருக்கு நிகழ்வது வேறு. அஞ்சாதவர்கள் போல் காட்டிக் கொள்வதை ஆண்மையென உரைக்கும் மூடர்கள் ஆண் ஆழத்தில் அஞ்சுவது பெண்ணையே என்பதை கரந்து கொள்கிறார்கள். ஆண் தருக்கி சொல்லாடி நியாயம் உரைத்து வெல்ல முடியாத பெரும் எதிராட்டம் பெண்களுடனேயே ஆடப்படுகிறது. சிதறிக் கிடந்த ஆடுகாய்களை நோக்கிய சுவடிகை அவை அனைத்தும் ஆண்களே என எண்ணினாள். அங்கு விரிந்திருக்கும் சதுரங்க வெளியே பெண். அவள் மீது அனைத்தும் ஆடப்படுகிறது. அவளுக்கு எதிராய் அனைத்தும் ஒருக்கப்படுகிறது. இக்களத்தில் நான் யார் என எண்ணிக் கொண்ட போது நிலவை விழிமடல்கள் நீர்கோர்த்து விரிய கார்மை திரண்ட மஞ்சத்தறையில் திகைத்து அமர்ந்திருந்த சுவடிகையை நோக்கினாள். விழிகளை இறுக்கி மூடி மீண்டும் திறந்து எழுந்தமர்ந்து ஆடையை ஒருக்கிக் கொண்டாள்.

சாளரத்தில் தோன்றிய கார்மையொளி ஈச்சியின் தோல்வண்ணம் என எண்ணினாள் நிலவை. சுவடிகை அவளைப் போலொரு பாவை என நோக்கிய பின் அவள் அகம் மெல்ல எழுந்து நகரத் தொடங்கியது. சீரான புரவிக் குளம்படிகளென எண்ணங்கள் தொடுத்துச் செல்ல லீலியாவைத் திரும்பி நோக்கினாள். சதுரங்கப் பலகையின் எதிரில் சிரித்தபடி வீற்றிருந்தாள். அவளது அகத்தில் நான் உன்னை எதிர்த்தமர்ந்திருக்கிறேன் என்ற சொல் எழுந்த போது தனது பிள்ளைத் தனத்தை எண்ணிச் சிரித்தாள் லீலியா. அந்த எண்ணம் ஒரு செம்மேகக் கூட்டம் கடந்து சென்ற வெண் ஆகாயமென அவள் முகத்தை ஆக்கியது. விழிமணிகள் எனும் இரண்டு நிலவுகள் கொண்ட ஆகாயம் என எண்ணிப் புன்னகை கொண்டாள் நிலவை.

TAGS
Share This