102: இளமழைத் தூவல்

102: இளமழைத் தூவல்

சுவடிகை வலக்கரத்தின் முழங்கையை இடக்கர விரல்களால் பற்றிக் கொண்டு ஒசிபவள் போல நடந்து வந்ததை தொலைவிலிருந்தே நோக்கினார் வேறுகாடார். அவள் கழுத்தில் தூங்கிய வெள்ளிப் பதக்கம் காரிருட்டில் வெள்ளி நிலவு என மினுங்கியது. மென் தூவல்கள் இமைப் பீலியளவில் வீழ்ந்து கொண்டிருந்தன. காற்றின் ஈரலிப்பு இனியதெனத் தோன்றியது. இடையில் தென்றல் சுமந்து வந்த குளிர் மலர்கள் முட்டுப்படுவதைப் போல மேனிகள் மெய்ப்புக் கொண்டன.

அரசர் எழுந்த செய்தி மஞ்சத்தறைக்கு நுழைந்த போது நிலவை நெஞ்சு நெகிழ எழுவதைக் கண்டாள் சுவடிகை. லீலியாவுக்குச் சொன்ன போது லீலியா நிலவையை நோக்கி உதடு குவித்துக் காற்றில் முத்தமிட்டுச் சிரித்தாள். தானகி நடுங்கும் இனிய குரலில் “யவன மருந்தைப் பற்றி மருத்துவர்கள் அறிய விழைகிறார்கள். தங்களையும் லீலியாவையும் மொழிபெயர்ப்பாளரையும் அழைத்து வரச் சொன்னார்கள்” என்றாள். அந்தரத்தில் எழுந்து சுழன்று இமைகள் துடித்து துடித்து விழும் இடைவெளிகளில் சிறிய அணிகளைப் பூட்டி எழிலில் ஒரு சுட்டிகை மேலும் சேர்த்துத் தயாரானார்கள். தானகியும் பெய்யினியும் முன் செல்ல லீலியா பெருவெண் ஆடையில் விண்புரவியொன்று சிறகு கொண்டு விரிந்து நடப்பதைப் போல கைகளை அசைத்துக் கொண்டு நடந்தாள். நிலவை கருவண்ண ஆடை உடுத்தி பொன் குழைகளில் அன்னங்கள் ஆட கூந்தல் குழைத்துருட்டி பாறை வளைவில் வேர்கொத்து மடிவெனத் தூங்க ஒற்றை வெண்மல்லி அங்கிருந்து உரத்துச் சிரிக்க நடந்தாள்.

சுவடிகை வெள்ளிப் பதக்கத்தைக் கழற்றி வைக்க எழ நிலவை தடுத்தாள். “இவ்வணி உன் கழுத்தில் இருக்கும் வரை இதை அறிந்தவர்கள் அனைவரும் உன்னை தெய்வமென நோக்குவர் சூட்டிகைப் பெண்ணே. இது நான் உனக்கு அளித்த கவசம்” என்றாள். சிரித்த சுவடிகை அவளில் ஊறிய கருணையின் சுனையில் முகம் நோக்கும் சிறு மானெனத் தன்னை எண்ணிக் கொண்டு உடனெழுந்தாள். ஐவரும் எதனாலோ இழுக்கப்பட்டு விசை கொண்டு முன்னேகினர்.

குடிலின் நீள் முகப்பில் மரப்பெட்டிகள் ஒருக்கப்பட்டிருந்தன. நீலன் நடுவில் அமர்ந்திருந்தான். அவன் பின்னே இளம் மாணவன் பூமிதன் நீலனின் மேனியை அன்றிப் பிறிதை நோக்காது ஊழ்கம் கொண்டிருந்தான். அவனது குழலும் செவிக் குண்டலங்களும் மேலாடையும் கூட நீலரையே நோக்கியிருக்கிறதென சுடர் மீனன் எண்ணிக் கொண்டு அருகிருந்த மரப்பெட்டியில் அமர்ந்திருந்தான். சத்தகன் இடப்புறம் அமர்ந்திருந்தான். அவனருகில் வேறுகாடார் நிமிர்ந்த மார்புகள் யானை மத்தகமென விரிந்திருக்க உற்சாகமாக வேடிக்கைகள் சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். நீலன் சிரித்துக் களைத்த முகத்துடன் “போதும். போதும்” எனக் கூவினான். இனி இல்லையேல் என்றும் இல்லையென்ற அளவு சிரிப்பை அவர் உதிர்க்கிறார் என எண்ணிக் கொண்டான் சுடர் மீனன். இளம் பாணன் சுடர் மீனனின் அருகில் அமர்ந்து கொண்டு வேறுகாடார் தன்னை எங்கனம் தென்னகத்திலிருந்து கவர்ந்து வந்தார் எனச் சுவைபட எழுந்து நடித்தும் அமர்ந்து துயர் கொண்டும் வெடித்துச் சிரித்தும் குழந்தை போல் நீலனிடம் முறையிட்டும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினான். “இருவரும் தந்தையும் தனயனும் போலிருக்கிறீர்கள்” என நீலன் சொல்ல “தென்னகத்தின் எந்தப்புரத்திலாவது இவரது அன்னையை நான் முன்னொரு காலம் சந்தித்திருந்தால் வாய்ப்பிருக்கிறது” எனச் சொல்லி வேறுகாடார் சிரிக்க “என் அன்னையையா அப்படிச் சொன்னாய்” எனக் கூவியபடி காற்றை வாளாக்கி எழுந்த இளம் பாணனை சுடர் மீனன் இழுத்து அமர்த்திக் கொண்டிருக்கும் பொழுது சுவடிகை வருவதை அக்கூட்டத்திலிருந்து தனித்து வேறுகாடாரின் விழிகள் கண்டன.

ஐவரும் ஐந்து தனித்த ஆறுகள் நடந்து வருவதைப் போலத் தோன்றியது. சொற் கூச்சல்களும் வேடிக்கைகளும் வழிந்தன. “பெண்கள் நெருங்கி விட்டால். ஆண்கள் பிறிதொரு விலங்குகள்” எனத் தன் கண்டுபிடிப்பைச் சொன்னான் சத்தகன். நீலன் அவர்களை நோக்கினான். லீலியாவின் பேருருவை நோக்கிய பின் நிலவையின் முகத்தில் தெரிந்த தவிப்பின் நரம்புகள் அவனது உடலில் தைத்து ஏறுவதைக் கண்டு அகம் இனித்தது.

சுடர் மீனனும் இளம் பாணனும் எழுந்து வேறுகாடாருக்கு அருகில் மரப்பெட்டியை இட்டு அமர்ந்து கொண்டனர். அரசி நெருங்கிய போது நால்வரும் எழுந்தனர். நீலனும் ஒருகணத்தில் தன்னை அறியாது எழுந்ததைக் கண்டு வேறுகாடாரும் சத்தகனும் தமக்குள் சிரித்துக் கொண்டே தாழ்விழிகளால் நீலனையும் நிலவையையும் நோக்கினார்கள். நிலவை உதட்டில் ஆணையென்றான புன்னகை சுடர அமரும் படி நீலரைக் கைகாட்ட வேறுகாடார் வெடித்துச் சிரித்தார். நீலன் சிரித்துக் கொண்டு அமர்ந்தான். அனைவரும் மரப்பெட்டிகளில் அமர்ந்து கொண்டனர். பெய்யினியும் தானகியும் நிலவைக்கும் லீலியாவுக்கும் பின்னால் துணை தெய்வங்களென நின்றனர்.

நிலவை சுடர் மீனனை நோக்கி விழிகளை ஒருக்கிய போது வினாவை அகத்தில் அறிந்து “எண்ணியிராத அளவு மாற்றம் நேர்ந்துள்ளது அரசி. சூரியன் பட்ட பனியென நோயின் திரைகள் விலகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது மயக்கோ எனும் எண்ணம் எழாமலில்லை. ஆகவே தான் மருந்தின் குணத்தை அறிய விழைந்தேன்” என்றான்.

சுவடிகை கைகளை வாயில் மறைத்து லீலியாவின் செவிகளில் செய்தியைச் சொன்னாள். லீலியா சிறுபறவையின் குரலில் சுவடிகைக்கு விளக்கினாள். ஒவ்வொரு செய்தியையும் உள்வாங்கிய பின்னர் தலையசைத்து ஓம் என்றாள் சுவடிகை. சுவடிகை அவளிடம் செவி கூர்ந்திருந்த பொழுது தூங்கிய வெள்ளிப் பதக்கம் காற்றில் ஊஞ்சலாடியது. நீலன் அதை நோக்கிய பின்னர் வியப்புடன் நிலவையை நோக்கினான். ஓம் எனக் கண்ணிமைகள் தழைய நிலவை பதில் பகர்ந்த போது இளமையின் நினைவுகள் நீலனில் ஆயிரமாயிரம் வண்ணத்துப் பூச்சிகளெனச் சிறகடித்து எழுந்து மேனியென்பது குட்டிக் குட்டிச் சிறகுகளால் ஆனது போலானான். வேறுகாடார் சத்தகனின் முழங்காலில் தன் முழங்காலால் எருது போல முட்ட சினம் கொண்டு திரும்பியவன் என்னவென விழிகளால் கேட்டான். அவள் தானே என அபிநயித்த வேறுகாடாரின் விழிகளில் மின்னிய குறும்பைக் கண்டு மேலும் சினம் கொண்டு வேறு எவர் என்பது போல பாவனையால் பதிலுரைத்தான். இளம் பாணன் குடிலுக்கு வெளியே மழைத் தூவல்களின் பொழிவு ஒரு நாழிகையாக இங்கனமே தொடர்வதை வியப்புடன் நோக்கினான். சுடர் மீனனிடம் திரும்பி ஐயத்தைக் கேட்டான்.”இங்கு இங்கனம் தூவல் மழை நாழிகைக்கு மேல் பொழிவதுண்டா” என்றான்.

“என் வாழ்நாளில் இப்படி நான் காண்பது இதுவே முதன்முறை” என்றான் சுடர் மீனன். அவனது விழிகளில் மண்ணிற நரம்புகள் விரிந்திருப்பதைக் கண்டான் இளம் பாணன். வேறுகாடாரும் சத்தகனும் பூனைச் சண்டை பிடிப்பதை ஓரவிழிகளால் நோக்கிய நீலன் அனைத்தும் எங்கோ எதனாலோ ஒரு மகத்தான ஓவியம் போல தீற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என எண்ணினான். இந்த இனிய புலரியைப் போல. தூவல் மழையைப் போல. தன் முன் அமர்ந்திருபவர்களின் இனிய உடனிருப்பைப் போல. அவனது அகம் இத்தனை இனிமையும் உவகையும் கொண்ட நாட்கள் பலபருவங்களாக இல்லை என எண்ணிக் கொண்டிருந்தான்.

அனைவரும் எவருடனாவது சைகையிலோ சிறு சொற்களிலோ உரையாடிக் கொண்டிருந்தாலும் இதயத்தின் ஆழத்தில் அக்கணத்தின் உவகை இனியொரு பொழுதும் வாய்க்காது என்பது போல உவகை தம்மீது அன்னையென பரிந்திருக்கிறது என்ற எண்ணம் எழுந்து கொள்ள மேனிகளில் மெய்ப்புல்கள் எழுந்தன. இளம் பாணன் தானும் அத்தகைய உளநிலையில் இருப்பதை வியந்து கொண்டு அனைவரின் உடலிலும் எழும் அசைவுகளில் கூடியிருக்கும் ஒருமையைக் கண்டு அவர்களில் மகிழ்ச்சி ஊடுருவுவதைக் கண்டு கொண்டிருந்தான். பிறரின் மகிழ்வால் தன் உளமும் கிளர்ந்திருக்கிறது என எண்ணிக் கொண்டான். லீலியாவின் பேருருவம் இப்போது அவனுக்கு அச்சமளிக்கவில்லை. அவள் ஒரு பருத்த விளையாட்டுப் பாவையென எண்ணினான்.

சுவடிகை எழுந்து நின்று தனக்குச் சொல்லப்பட்டவற்றை அகத்தில் தொகுத்துக் கொண்டு குரலை ஒருக்கி கைகளை வணங்குபவள் போலக் குவித்துக் கொண்டு விழிகளை மூடிச் சொல்லத் தொடங்கினாள். சுடர் மீனன் அவளது சொற்களை தீவிரமான கவனத்துடன் கேட்டான். பூமிதனின் விழிகள் நீலனை விட்டு அகலாது செவிகள் மட்டும் அவளது சொற்களை உறுத்துக் கேட்டன. நிலவை அச்சொற்களை அமைதியாக விழி மூடிக் கேட்டாள். சத்தகன் சொல்லின்றிக் காற்றில் உதடசைக்கும் மலரென அவளை நோக்கி மெய்மறந்திருந்தான். அவனது கரங்களும் குவிந்து வணங்குவது போல ஏறியபோது வேறுகாடார் கரத்தைப் பற்றி அவனது தொடைகளில் போட்டார். இளம் பாணன் அனைவரது முகத்திலும் ஓடுகின்ற உணர்ச்சிகளையும் ஒவ்வொரு பாவனைகளையும் ஓவியம் வரைபவரின் விழிகள் கொண்டு நோக்கினான். ஒவ்வொரு பிசிறும் வளைவும் வண்ணமும் ஒளிர்வும் கார்மையும் நெளிவும் திகைப்பும் அவனுக்குத் தெரிந்தது.

சுவடிகை அருவி பொழிவதெனச் சொல் ஒழுகிக் கொண்டிருந்தாள். சிறிது நீள் மூச்சை எடுத்துக் கொண்டு இறுதிச் சொட்டையும் உதிர்த்து விழிகளைத் திறந்து சுற்றியிருந்தோரை நோக்கினாள். சிலகணங்கள் விழிகளில் பல்லாயிரம் புள்ளிப் பூச்சிகள் நெளிவதைப் போலத் தோன்ற விழிகளைக் கசக்கிக் கொண்டு லீலியாவின் அருகு சென்று அமர்ந்தாள். சுடர் மீனன் முகத்தில் படர்ந்திருந்த ஆறுதலைக் கண்டு நிலவை அமைதியடைந்தாள். நீலன் சுடர்மீனனை நோக்கிய போது “அரசே. இவர்கள் உரைக்கும் சில கனிமங்கள் நம்மண்ணில் இல்லை. ஆனால் அவர்கள் நெடுநாள் பயில்வினால் அங்கிருக்கும் வீரர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் நீடுநாள் வாழ்ந்தார்கள் என்பது நமக்கு ஆறுதலளிக்கும் செய்தி. நோயுடன் மருந்து போராடும் வலியை நீக்கவே மயக்கு அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இன்னும் ஒன்பது நாட்கள் மருந்து தொடர்ச்சியாக அளிக்கப்பட வேண்டும். நிசியின் பின்னரோ அல்லது முற்புலரியிலோ அளிக்கலாம். எனது கலக்கம் சற்றுத் தெளிந்திருக்கிறது. இருநாளில் இத்தனை மாற்றங்களை உள்வாங்குவதற்கு உடலில் மட்டுமல்ல உயிரிலும் வேட்கை கனன்றிருக்க வேண்டுமெனச் சொன்னார். ஒரு மருத்துவனாக அதுவே நோய் தீர்க்கும் முதல் மருந்து எனச் சொல்வேன். நீங்கள் அவ்விழைவை எதன் பொருட்டும் கைவிடாதிருங்கள் அரசே. பிறிதனைத்தும் நம்மை ஆக்கிய புடவி நமக்கு அளிக்கும்” என்றான்.

மகிழ்ச்சி தூவல் மழையாகிப் பொழிகிறது என எண்ணினான் சத்தகன். “அண்ணன் களம் ஏகி உருகம் ஏந்தும் காட்சி இப்பொழுதே என் கண்ணில் தோன்றுகிறது” எனச் சொல்லி உரக்கக் கூவினான். சுவடிகை அவனை நோக்கி புன்புன்னகை அவிழ வசியவைக்கும் பார்வை ஒன்றை வீசினாள். சத்தகன் அவளைக் கண்டு கூவல் அடங்கி ஒடுங்கிக் கொண்டு நாணினான். நீலன் வழமைக்கு மாறாக உணர்ச்சி கொண்டிந்தான். இருவரையும் நோக்கிய பின் “உங்கள் மணநாள் காணாமல் செல்ல மாட்டேன்” எனத் தாழியைக் கைதவறிப் போட்ட மழலையென நின்றிருந்தான். நிலவை அன்னையெனக் கடிந்து கொள்ள மற்றையவர்கள் தோழர்களெனப் புன்னகைத்தனர். சுவடிகை அதிர்ந்து நாணி நிலவையின் அருகில் சென்று அவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

நீலன் தன்னை ஒருக்கி “மெய்தான் மதுரை மாநகரின் செல்வியே. நானே கேட்கிறேன். என் இளவல் வளர்ந்த பேருடலில் விளையாடும் குழந்தை. அவனது ஈடிணையற்ற அன்பை எங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உன்னில் எனதவள் ஈச்சியைக் கண்டில்லா விட்டால் இப்பதக்கம் உன்னில் ஏறியிருக்காது. எங்களது குடியின் மகத்தான செல்வம் என் இளையவன். அவனை நீங்கள் மணந்து கொள்வீர்களா” எனத் தயவுடன் கேட்டான். சுவடிகை நிலவையின் கரங்களை இறுக்கினாள். “தம்பியை அவள் பார்த்து முழுதாய் மூநாழிகை பெயரவில்லை. அதற்குள் மணம் வரைக்கும் சென்று விட்டீர்கள்” எனச் சினந்து கொண்டாள். நீலன் ஆழ யோசிப்பவன் போல முகத்தை வைத்துக் கொண்டு எழுந்து நடந்தான். மற்றையவர்களும் எழுந்து கொள்ள முயன்ற போது இடைநிறுத்தி அமர வைத்துக் கொண்டே மார்பில் கைகளைக் கட்டிக் கொண்டு சிந்தித்தான். பின்னர் நிலவையை நோக்கி “சரி. இன்னும் இருநாழிகை கழித்து எப்பொழுது மணநாளை வைத்துக் கொள்ளலாம் எனக் கேட்பது முறையா” என அறியாச் சிறுவனின் முகத்துடன் கேட்டான். அவனது பேதமையைக் கண்ட சுவடிகை வெடித்துச் சிரிக்கத் தொடங்க அனைவரும் நீலனை நோக்கி தொடரலைகளெனச் சிரித்தனர். தான் செய்த குறும்பை அறியாத சிறுவனைப் போல திகைத்து நின்றவன் வேறுகாடாரை நோக்கினான்.

வேறுகாடார் சிரிப்பு மறையாத முகத்துடன் “அரசே. இது பெண்களின் காரியம். அவர்கள் அறிவார்கள் அனைத்தும். இறுதியில் தலையசைப்பது மட்டுமே நமது பணி” என்றார். நிலவை வேறுகாடாரை நோக்கி உறுமியபடி “எனது கணவர் முதன்முறையாக ஒரு மணமுடிப்பை பேசியிருக்கிறார். உங்களுக்குப் பொறுக்காதே. பெண்களைப் பற்றி அனைத்தும் அறிந்தவர் நீங்கள் தானெனெ அகங்காரம் கூடிவிட்டது. பெண்கள் விரும்புவது இப்பேதமை கொண்ட சிறுவனை மட்டுமே” என்றாள். “சினத்தில் என்னை எரித்து விடாதீர்கள் அன்னையே. நான் எளியவன். என்னைப் பற்றிய இத்தகைய செய்திகள் எங்கும் நோயெனப் பரவியிருக்கிறது. நான் பெண்களை அன்னையென்றே மதிப்பவன்” என வேறுகாடார் எளிய குடியினனைப் போல பாவனை கொண்டு சொல்ல நிலவையுடன் சேர்ந்து மீண்டு வெடிச்சிரிப்பொலிகள் குடிலை மோதி மழைத் தூவல்கள் அதிர்ந்தன.

நீலன் திரும்பிச் சென்று மரப்பெட்டியில் அமர்ந்து கொண்டான். அவனது முகத்தில் களி கூடியிருந்தது. உளம் பரந்து விரிவது போல உவகை கொண்டான். நிலவை தனக்கென வாதிட்டு நின்ற போது தன் இளங் காதலியை மீண்டும் கண்டு உளக் கூச்சலெழுந்தான். இன்று தான் மணநாள் என்பது போல மகிழ்ச்சி மோதினான். நிலவை நீலனை நோக்கி புன்னகை கொண்டு அவன் கரத்தை எட்டித் தொட்டு இருமுறை தட்டினாள். நீலனின் மேனி மின்பட்டது போல் அதிர்ந்தது. அக்காதல் காட்சியைக் காண ஒண்ணாது என அருகிருந்தவர்கள் தலைகள் திரும்பிக் கொண்டன. ஒருவரை ஒருவர் தாங்களே காதல் கொண்டவர்கள் என நோக்கி நாணினர். இளம் பாணன் சிறு புன்னகையுடன் அரசனையும் அரசியை நோக்கி நின்ற போது அவனில் காதலின் சொற்கள் அலையார்த்து எழுந்தன.

“முதிர்கையில் காதல் இளமழைத் தூவல். உதிக்கையில் காதல் பெருமழைப் பெருக்கு” என்றான். அவனை அறியாது உரத்து எழுந்த அவனது சொற்களைக் கேட்ட அனைவரும் அவனையே நோக்கத் திகைத்தான். நீலன் அவனை நோக்கி “பாடுக பாணரே” என்றான். நிலவை அவனை நோக்கி நிற்க இளம் பாணன் தன்னை அறிமுகம் செய்யவென எழுந்து உடையை ஒருக்கிய போது முதல் நாள் பாடத்தை அடுத்த நாள் அதேபோல ஒப்பிக்கும் மாணவனென முகத்தையும் குரலையும் வைத்துக் கொண்ட வேறுகாடார் “நான் தென்னகத்துப் பாணன். களிபார்க்க வந்திருக்கிறேன். வேறுகாடாரின் நண்பன்” என்றார். இளம் பாணன் அவமதிப்புக் கொண்டு அவரை எரிப்பவன் போலப் பார்த்தான். அனைவரது சிரிப்பொலியும் எழ அவனது அகங்காரம் மேலும் அழலானது. குரலை ஒருக்கினான். அருகிருந்த குடிலில் அமர்ந்திருந்த பாணர்களை நோக்கி “வருக” என ஆணையிட்டான்.

நான்கு இளவயதுப் பாணர்கள் தங்கள் யாழ்களுடன் வந்து குடில் முன்றலில் தூவல் மழையில் நின்றனர். அவர்கள் உள்ளொருங்க இடமின்மை தடையாகியது. மரப்பெட்டிகளை அருகருகாக அமைத்து அமர்ந்து கொண்டனர். நீலனின் அருகே வலப்பக்கம் நிலவை அமர்ந்து கொண்டாள். இடப்பக்கம் சத்தகன் அமர்ந்தான். அவனருகே வேறுகாடாரும் சுடர் மீனனும். நிலவையின் அருகே லீலியாவும் சுவடிகையும். கைகளை முன்கோர்த்தபடி நின்ற தானகியையும் பெய்யினியையும் அமரச் சொன்னாள் நிலவை. அவர்கள் சாணத்தால் மெழுகப்பட்டு ஈரம் கசிந்த தரையில் அமர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவர் முகமும் இளம் பாணனை நோக்கியது. ஒவ்வொரு மேனியிலும் இனிய காற்று தழுவி விலகமாட்டேன் என அணைப்பது போல வீசியது. மேனிகள் அருகருகே அமர்ந்த போது வெம்மை கதகதப்பான குழந்தையின் கன்னங்களென ஒட்டிக் கொண்டது.

நான்கு பாணர்களையும் இருவர் இருவராகப் பிரித்து தன் இடப்புறமும் வலப்புறமும் அமர வைத்தான் இளம் பாணன். அவர்களிடம் சில ஆணைகளைப் பிறப்பித்த பின் தான் நின்று கொண்டு தன் மேலாடையை இழுத்துப் போர்த்தினான். குழல் காற்றில் எழுந்த யாழில் மீட்டும் விரல்களென அலைந்தன. செவிக்குழைகள் கார்பட்டு அமைந்தன. அவனது தோற்றம் அழகிய தெய்வச் சிலை போலிருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். வேறுகாடார் அவைபுகும் மைந்தனின் ஆற்றலை அறிந்து மெல்லிய செருக்குடன் அமர்ந்திருந்தார்.

அவனது இடக்கை கீழ்த்தொங்கி விரல்கள் குவிந்து விலகிய போது நான்கு இளைய பாணர்களும் விரல்களை யாழில் வைத்து ஒருமுறை தீண்டி விலகினர். காற்றும் மழையும் பின்னணியில் ஒலித்தன.
அவனது குரலில் காதலின் தெய்வங்கள் வந்து குடியேறின. மலர்கள் அவிழும் வாசனையுடன் உதடுகள் திறந்து பாடத் தொடங்கினான் இளம் பாணன்.

“முதிர்கையில் காதல் இளமழைத் தூவல்
உதிக்கையில் காதல் பெருமழைப் பெருக்கு.
அமைகையில் வேட்கை உயிர் சிந்தும் அமுது
எழுகையில் தாபம் எரிதீயில் நாவு.

அவிழ்கையில் புலரி ஆனந்தச் சிரிப்பு
குவிகையில் இரவு களிவெறிக் கூத்து
இனிக்கையில் காதல் பனங்கட்டிப் பால்
இழக்கையில் காதல் இணையற்ற போர்

கொழிக்கையில் காதல் படர்பற்றும் மலர்க்கொடி
தவிக்கையில் காதல் முதலற்ற பெருமுடி
சிரிக்கையில் பெண் நிகரற்ற பதும்மை
கரைகையில் பெண் அழிவற்ற கண்ணீர்

காதலில் ஆண் கனிவற்ற சிறுவன்
வேட்கையில் ஆண் சுவைபடும் இரை
காமத்தில் ஆண் கள்ளங் கொண்ட இரவு
களிக்கையில் ஆண் காதல் கொண்ட கனவு”

இளம் பாணனின் சொற்கள் தாளத்தில் இடறியும் கூடியும் ஒலித்தன. நீலனின் விரல்களில் அவிழ்ந்த தாளத்தை நிலவை தன் விரல்களில் தொடர்ந்தாள். சுவடிகை இளம் பாணனைக் காதலுறுபவள் போல நோக்குகிறாள் எனச் சினம் கொண்ட சத்தகன் உறுமிக் கொண்டிருந்தான். அவன் பாடலை முடித்து விழிகளைத் திறந்த போது அவனை நோக்காது சத்தகனை நோக்கி எவருமறியாத கணத்தினால் நுழைந்து சிரித்த சுவடிகையை அள்ளி முத்தமிடும் விழைவு துடித்து எழ மெல்ல ஆடல் கொண்டான். எழுந்து சென்று இளம் பாணனை அணைத்துக் கொண்டு “அருமையான பாடல். தென்னகப் பாணரே” எனச் சிரித்தான். நீலன் நிலவையை நோக்கித் திரும்பி “பரிசு கொடுப்பது உன் முறை” என்றான். அச்சொல்லால் கிளர்ந்த நிலவை தன் கழுத்தில் அணிந்திருந்த ஒற்றைப் பதக்கத்தை கழற்றி அவனை அழைத்து அவனின் கரத்தில் வைத்தாள். “வாழ்க உங்கள் சொற்கள். பெருகுக உங்கள் புகழ்” என வாழ்த்தினாள். இளம் பாணன் வேறுகாடாரை நோக்கி தலையை உயர்த்தினான். அவரது முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை ஐயத்துடன் நோக்கினான். பின்னர் அவனது அகத்தை துளைத்து உள்ளிறங்கிய அவரின் பார்வைக்கு அப்பால் தெரிந்த கனிவை ஒருகணம் கண்டு தெளிந்தான். எழுந்த பின்னர் மற்றைய பாணர்களையும் அழைத்து “இவர்களுக்கும் பரிசு வேண்டும்” என்றான். நிலவை நீலனைத் தோளால் மெல்ல இடித்து “இப்போது உங்களின் முறை” என்றாள்.

தன் கைவிரல்கள் கணையாழிகளின்றி மரக்குச்சிகள் போல வெறுமையாக இருப்பதை விரித்துக் காட்டினான் நீலன். நிலவை அவனை நோக்கினாள். வனக்குடிலில் வெறுவிரல்களால் மேனி தழுவிக் கூந்தல் அளையும் நீலனின் இளவிரல்கள் ஒருகணம் மின்னி மறைந்தன. அம்புகளில் குவிந்து மென்னதிர்வுடன் பற்றி குறிபிசகாது எய்யும் நீலனின் கூர் விரல்களை மறுகணம் எண்ணினாள். கொல்வேல் ஆடவர் குடியின் குழந்தைகளுடன் விளையாடிக் கதை சொல்லி அன்னமூட்டி அன்னையென அவர்கள் தலைகோதும் நீலனின் தழை விரல்களை மேலுமொருமுறை கண்டாள். இன்றும் அக்கரம் அரசனென்ற தோற்றமின்றி எளிய விரல்களுடன் அணிகளற்று எஞ்சுவதைக் கண்ட பொழுது அவள் அகம் விம்மலுற்றது. இளகிக் கரைந்தாள். தானகியைத் திரும்பி நோக்கிய போது அவள் தன் இடைப்பையிலிருந்த பொன்னாணயக் கொத்தைக் கொடுத்தாள். அதனை அங்கனமே அவர்கள் நால்வருக்கும் கொடுங்கள் என நீலனின் கரத்தில் வைத்தாள். நீலன் அவளைக் காதலுடன் ஒரு வெட்டு நோக்கிய கணத்தில் அவள் மேனி துடித்து அடங்கியது. பாணர்களுக்கு பொற்கிழியைக் கொடுத்தான் நீலன்.

அக்காட்சியை நோக்கிய வேறுகாடார் ஆழ்ந்த மூச்சை இழுத்துக் கொண்டு அக்கணத்தை நினைவில் உறைய வைத்தார். அவர்களிடையில் தோன்றிய அந்த நெருக்கத்தை தானகி உவகையுடன் நோக்கினாள். ஒன்றுடன் ஒன்று கலந்து விட்ட மலைகள் என எண்ணினாள். இரண்டும் ஒன்றும் பொழுதும் ஒரே உயரம். ஒன்றுடன் ஒன்று மூடும் படி என எண்ணிய போது அப்பெரு மலையில் குடிகள் ஏறி நின்று களியாடுவதைக் கண்டாள். ஆறுகள் பெருகி வழிந்து பெருகுகிறது. பறவைகள் பலவண்ணங்கள் கொண்டு அலைகின்றன. விலங்குகளும் மானுடரும் ஆறுகளின் தீரங்களில் ஒன்றாய் அமைந்து நீரருந்துகிறார்கள். பெருமலை ஒரு மடியென விரிந்திருக்கிறது. வற்றாத அன்னை மடியே நீலனும் நிலவையும் என எண்ணி நெஞ்சு கிளர்ந்தெழுந்தாள்.

நீலனின் முகத்தில் எழுந்தாடும் புதிய மகிழ்ச்சியைக் கண்ட சுடர் மீனன் அவர் அரண்மனைக்குத் திரும்பலாம். உடனே பணிகளை ஒருக்குங்கள் என பூமிதனுக்குச் சொன்னான். நூற்று வீரர்களும் குடிலின் முன் ஒருங்கினர். இளமழைத் தூவலில் நூறு மகவுகள் என எண்ணினான் நீலன். நூறு காவல் தெய்வங்கள் எனவும். அவனை அறியாமல் அவன் அகம் இனிமையில் ஊறியது. கடந்து முடிந்த காலங்களை அவன் நோயை மேனி உதறியதைப் போலச் சித்தமும் உதறியது. இளமழையில் இறங்கி நின்று மேலாடையை ஒருக்கினான். குழலில் வீழ்ந்த சின்னஞ் சிறு தூவல்கள் பனித்துளிகள் ஒளிரும் மலர்க்கொத்தென அவனை ஆக்கியது. சத்தகன் மெல்லிய பாய்ச்சலுடன் முற்றத்திற்குத் தாவினான். நிலவை வீரர்களுக்கிடையில் தனது பெருவீரனின் குழலில் சூடியிருக்கும் மழைத்தூவல்கள் தானென எண்ணினாள். முகத்தை உயர்த்தி கருவானை நோக்கிய போது ஆயிரம் தூவல்களாய் உதடுகள் கொண்டு விழுந்து கொண்டிருந்தாள் நிலவை. நீலனின் பெருங்காதலி.

TAGS
Share This