106: இளமழை விளையாட்டு
நீலனின் பின்னுருவைக் கண்டு அவன் உடலில் எழும் வனப்பை நோக்கிக் கொண்டே சுவடிகையின் சடசடவென வெடிக்கும் வினாக்களுக்கு தலையை அசைத்தபடி சீரான தாள அடிகளுடன் நடந்தாள் நிலவை. இளமழை அனைவரின் மீதும் தழைந்து இறங்கி ஒட்டிக்கொண்டிருந்தது. சத்தகன் நீலனுக்கு வேடிக்கை சொல்லி உரக்கச் சிரித்துக் கொண்டு உடன் சென்றான். வேறுகாடாரும் இளம் பாணனும் மருத்துவக் குடில் வாயிலில் நின்றபடி சுடர் மீனனுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். இளம் பாணன் நிலவையின் பின்னுருவையும் லீலியாவின் நெடுவளைவுகளையும் நோக்கி ஒப்புமை ஒன்றை உண்டாக்க விழைபவன் போல உறுத்துக் கொண்டிருந்தான். வேறுகாடார் அவன் விழிகள் படிந்து கிடக்கும் திசையை நோக்காமலேயே அறிந்து கொண்டு மெல்லச் செருமி அவனை நிலைக்குக் கொணரச் செய்தார். இளம் பாணன் “செல்லலாம் கிழவரே. மழையில் உங்கள் பட்டினம் பாவங்களைக் கழுவிய கங்கையெனப் புத்தெழில் பூண்டிருக்கும்” என்றான். அச்சொல்லால் நடுக்குக் கொண்ட சுடர் மீனன் “என்ன பாவம்” என்றான். அவனது நீளமலர் விழிகளில் சோதி நடுங்குவது போல நெளிவு தோன்றி மறைந்ததைக் கண்ட இளம் பாணன் “ஒரு ஒப்புமைக்காகச் சொன்னேன் மருத்துவரே. மானுடர் புதிய பாவங்களைப் புரிவதே இல்லை. பாவமோ காலத்திற்குக் காலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது” என்றான். வேறுகாடார் சிரித்துக் கொண்டு “செல்லலாம்” என்றார்.
இருவரும் இளமழையில் இறங்கி பெருவீதிக்குச் செல்லும் வழியால் நடக்கத் தொடங்கினர். “கிழவரே. அரசியின் அழகை இன்று தான் அருகு நோக்கினேன். எத்தனை பேரழகியென அகமிருத்திக் கொண்டேன். அவரது ஆணை கொண்ட அசைவுகளால் அழகு மேலும் பொலிகிறது” என்றான் இளம் பாணன். “நீ விழிமலர்ந்து முழுது விழுங்கிக் கொண்டிருந்ததை நானும் நோக்கினேன் இளம் பாணனே. அவர் இளமையில் போர்க்களங்களில் எழுந்ததைக் கண்டிருந்தால் நீ இன்று இங்கனம் அவரின் அழகை அழகென்றே எண்ணியிருக்க மாட்டாய். இந்த இளமழை போன்றது அவர் இன்றிருக்கும் அழகு. விழிகளெல்லாம் மறைந்து வடியும் பேரழகை அவர் இளமையில் சூடியிருந்தார். படைக்கலன்களை அவர் கையாளும் திறனை நோக்கினால் எவரும் அவரை தெய்வமென்றே எண்ணுதல் கூடும். அஞ்ச வேண்டிய போர்த்தெய்வம் அவர்” என்றார் வேறுகாடார்.
பெருஞ்சாலையில் அத்திரிகளும் காளைகளும் இளமழைக்கு ஒடுங்கி மேனியை சிலிர்த்துக் கொண்டு கொட்டில்களிலும் மனை முற்றங்களிலும் மரங்களின் கீழும் அணைந்து கொண்டிருந்தன. குடிகள் திண்ணைகளிலும் சத்திரங்களிலும் உடல்கள் உரச அமர்ந்து கொண்டு தீயிலை புகைத்தும் பாக்கு வெற்றிலை குதப்பித் துப்பியபடியும் இளமழையை விந்தையெனச் சொல்லி நோக்கியிருந்தனர். மழை மானுடரை பிறிதொரு மோனத்திற்குள் ஆழ்த்துகிறது. விலங்குகளும் பறவைகளும் மானுடரும் சமமான இருக்கைகளில் அமர்ந்து மழையை நோக்குகின்றனர் என எண்ணிக் கொண்டான் இளம் பாணன். சாலையில் ஈரம் அல்குலில் மதனமென உள்ளிருந்து ஊறிவருகிறது என எண்ணினான். “பசிக்கிறது” என வேறுகாடாரை நோக்கிச் சொன்னான். அன்ன சத்திரம் நீராவி எழும் யானமென விரிந்து புகைமணம் பரப்பிக் கொண்டிருந்தது
அன்ன சத்திரத்தில் குடிகள் பந்திப் பாய்களில் அமர்ந்து கொண்டு பிட்டும் அப்பமும் உண்டு கொண்டு சுவை பற்றிச் சொல்லாடிக் கொண்டிருந்தனர். ஒரு அப்பத்திற்கும் இன்னொரு அப்பத்திற்கும் அளவுகளில் வேறுபாடுகள் உண்டென்றும் பிட்டில் தேங்காயின் துருவல்கள் போதாதென்றும் வசை பாடிக் கொண்டிருந்தனர். பரிமாறுபவர்கள் அவர்களின் வசைச் சொற்களுக்குச் சீறும் சினமொழிகளை அளித்துக் கொண்டே இன்னும் எவ்வளவு உண்டாலும் நிறையாத யானங்களே தமிழ்க்குடிகளின் வயிறுகள் எனச் சொல்லி சிரிப்பும் சினமும் கலக்க உணவை இலைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர். புதிய அப்பமும் பிட்டும் நீராவியென எழுந்து நாசிகளில் பரவி இலைகளுக்கு வந்தமர்க என இன்சொல்லுடன் அழைக்கின்றன என எண்ணிய இளம் பாணன் ஒருவர் எழுந்து கொள்ள வேறுகாடாரை நோக்காது சென்று அமர்ந்து கொண்டான். “பட்டினம் வந்த இருநாளிலேயே குடிப்பழக்கங்களில் மூழ்கி விட்டாயா இளம் பாணனே. நல்லது” எனச் சொல்லிச் சிரித்தார் வேறுகாடார். “உண்டியே பிரதானம் என்பது தமிழ்க்குடியின் பொது நம்பிக்கை கிழவரே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னான் இளம் பாணன். பிட்டும் கூட்டுக் கறிகளும் மாட்டு ஊன் கறியையும் குழைத்துப் பிசைந்து சூடு விரல்களிலிருந்து ஆவியெனப் பிரிய உண்ணத் தொடங்கினான் இளம் பாணன். வேறுகாடார் அவனுக்கு முன்னே அமர்ந்து கொள்ள நீள வாழை இலையில் பிட்டும் கறிகளும் அப்பங்களும் கொணர்ந்து குவிக்கப்பட்டன. காட்டு தெய்வங்களுக்குப் படையிலிடும் இலை போல நிறைந்திருந்த உணவை மெல்ல ருசித்து விழிகளை மூடி அவற்றை ஊழ்கத்தில் இருத்தி உண்ணத் தொடங்கினார் வேறுகாடார்.
இருதியாளும் கர்ணிகையும் சிதியும் சிப்பியும் யாதினியும் வருவதைத் தொலைவிலேயே கண்ட இளம் பாணன் வேறுகாடாரை நோக்கிச் சைகை செய்தான். வேறுகாடார் அவர்களைத் திரும்பி நோக்கிய பின் “அனைவருக்கும் உண்டி முக்கியம் தானே இளம் பாணனே. உண்ட பின் சொல்லாடலாம் எங்கும் சென்று விட மாட்டார்கள். இப்பொழுது உண்க” என்றான். வேறுகாடாரிற்கு அடுத்த நிரையில் ஐவரும் அமர்ந்து கொண்டனர். கர்ணிகை திரும்பி இளம் பாணனை நோக்கிய பின் தலையை வெடுக்கெனத் திருப்பினாள். யாதினி அவனை நோக்கித் திரும்பி முகத்தைச் சிரிப்பில் குவித்து விழித்தோகையால் நலமா எனக் கேட்டாள். நலமே என விழி ஒருக்கித் தாழ்த்தினான் இளம் பாணன். வேறுகாடார் ஈக்களை விரட்டிக் கொண்டு அப்பத்தை விழுங்கிக் கொண்டிருந்தார்.
இளம் பாணன் வாழையிலையை வழித்துத் துடைத்து உண்ட பின்னர் தொண்டை வரை நிறைந்திருந்த உணவால் எழமுடியாது மானை உண்ட மலைப்பாம்பென அமர்ந்த இடத்திலேயே சுழன்றான். வேறுகாடார் ஒவ்வொரு பதார்த்தமாக உண்ட பின்னர் நீராடச் செல்லும் இளமங்கை போல துள்ளியெழுந்தார். இளம்பாணனைக் கைகொடுத்துத் தூக்கிய பின்னர் இருவரும் சென்று கைகளை அலம்பிக் கொண்டு நீரை அருந்தினர். அன்ன சத்திரத்தின் திண்ணையில் சுடுபால் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. பனங்கட்டியுடன் சுடுபாலை வாங்கி அருந்திக் கொண்டே “உயிர் மீண்டது போலிருக்கிறது கிழவரே” என்றான். வேறுகாடார் சிரித்துக் கொண்டே “உணவின் இன்பமே உயிரளித்தல் தானே” என்றார். “சுவையும் மிக நன்று கிழவரே. ஆயிரக்கணக்கான குடிகளுக்கு இத்தனை சுவையான உணவை ஆக்குதல் எளியதல்ல” என்றான். வேறுகாடார் தீயிலைத் துதியை தேவ இலை மலர்களால் நிரப்பிச் சென்று அடுமனை நெருப்பில் மூட்டியபடி புகைபரவ வந்தார். அவரது வெண்தாடி வெண்தழற் புகையாக விரிகிறது என எண்ணினான் இளம் பாணன்.
திண்ணையில் அமர்ந்திருந்த குடிகளில் சிலர் உண்டி நிறைந்த பெருவயிறுகளைத் தடவிக் கொண்டு இளங்காலைத் துயிலில் சரிந்தனர். விறலிகளும் முது பெண்டிரும் நேற்றைய இரவின் கதைகளைச் சொல்லில் சொல்லி விவாதித்துக் கொண்டிருந்தனர். நாகணவாய்களும் நிலக்கிளிகளும் சொல்லாடும் ஒலிகள் என எண்ணினான் இளம் பாணன். “பெண்கள் சொல்லிச் சொல்லி அனைத்தையும் பெரிதென ஆக்குகிறார்கள்” என்றான் இளம் பாணன். வேறுகாடார் தீயிலையை இழுத்த பின் புகையை ஊதிவிட்டு “அவர்கள் சொல்லிச் சொல்லி ஆயிரமாய் விரித்து மீண்டும் ஒன்றெனச் சுருக்குபவர்கள். பந்திப்பாயைப் போல. விரிப்பது எத்தனை நீளமானாலும் மெல்லத் தொட்டு உருட்டியதும் பரபரவெனச் சுருண்டு ஒற்றை உருளை ஆகிவிடும்” என்றார்.
இளம் பாணன் குழந்தைகள் மழையிலிறங்க அனுமதி கேட்டு அன்னையரிடம் ஏச்சு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் புன்னகைத்தான். அன்னையர் மறுத்த குழந்தைகள் அவர்கள் அயர்ந்து அப்பால் விழிவிலக்கும் கணங்களில் எட்டிக் கைநீட்டி மழையின் சில துண்டுகளை அள்ளிக் கைகளில் பற்றிக் கொண்டனர். எழுந்து சென்ற அன்னையரின் குழவிகள் எவருமறியவில்லை என எண்ணிக் கொண்டு இளமழையில் குதித்து மெல்லக் கால்களை குளிர் மண்ணில் புதைத்துச் சுற்றி விளையாடி மீண்டும் திண்ணைகளில் தாவிக் கொண்டனர். பெண் குழந்தைகள் அன்னையர் சொல்லை எளிதில் மீறி நிலத்தில் இறங்குவதை நோக்கிய இளம் பாணன் உதடுகள் விரியப் புன்னகைத்தான். அன்னையென்று ஆன பின்னர் தன் குழவியை முதலாவதாக கண்டிக்கப் போகிறவள் இதோ இளமழையில் அன்னையின் சொல்லை எளிதில் மீறுபவளாய் இருப்பவளே என எண்ணினான். ஆண் குழந்தைகள் அஞ்சி தயங்கி அன்னையை நோக்கி நோக்கி மெல்லக் காலெடுத்து வைத்த பின்னர் சிலகணங்களில் அன்னையின் எண்ணம் வர விரைந்தெழுந்து திண்ணைக்குத் திரும்பினர். இளம் தந்தைகள் அன்னையருக்கு அஞ்சி குழந்தை மழையில் விளையாடுவதை அறியாதவர்கள் போல சொல்லாடல்களில் மூழ்கினர். சிலர் விழிகளை வேறு திசையில் அமர்த்தி இடைக்கிடை தங்கள் குழந்தைகள் மழையிலாடுவதை நோக்கிப் புன்னகைத்தனர். முதுகிழவர்கள் மழையில் தத்தி ஆடும் குழந்தைகளைக் கைகளைத் தட்டி வாயை சுருட்டியும் குவித்தும் கூக்குரல் எழுப்பி உற்சாகப் படுத்தினர். முது பெண்டிர் இளமழைக்குக் காய்ச்சல் பிடிக்கும் எனக் கசந்து கொண்டு கிழவர்களைச் சென்று குழந்தைகளை தூக்கிக்கொள்ளுமாறு வசை சொல்லிப் பேசினர். மழையும் வெய்யிலும் அறியாத மேனிகள் துவண்டு விடுபவை. குழந்தைகள் அவற்றை அறியட்டும் என்றனர் சிலர்.
ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் உவகையின் சிறுசாரல் பெய்து கொண்டேயிருந்தது. அஞ்சாமையின் உவகை. அஞ்சியும் விழைவு கொண்டும் எழும் உவகை. அறியாமையின் உவகையென ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் மலர்ந்தன. விழிகளை உருட்டிக் காட்டி முதியவர்களைக் கேலி செய்தன சில. எவரையும் நோக்க மாட்டேன் என மழையையும் மண்ணையும் பிசைந்து தொட்டு நோக்கி ஆராய்ச்சியில் இருந்தன சில. சில குழந்தைகள் சண்டையிட்டுச் சேற்றை வாரி இன்னொருவரில் இறைத்தன. சில அழுதன. அழுதபடி அன்னையைத் தேடின. அழும் குழந்தைகளை மூத்த குழந்தைகள் ஆறுதல் சொல்லின. அணைத்து ஒன்றுமில்லை. அனைத்தும் நீ வளர்வதற்கு முன்னர் ஆறிவிடும் எனத் தேற்றின. சிறுகாயங்களில் எச்சில் தொட்டு வைத்தன சில. மண்ணை அள்ளி மறைத்தன சில.
அன்னையர் திரும்பி வருவதைக் கண்டு அழுகை மறைத்தன சில. விழிநீர் கன்னங்களில் எஞ்சியிருப்பது அறியாது ஓடிச் சென்று ஒழிந்து கொண்டன சில. முதுபெண்டிரின் மடிகளில் தாவியமர்ந்தன சில. கள்ளம் புரிந்தேனென எண்ணிய குழவிகள் தந்தையரின் முதுகின் பின் மறைந்து கொண்டு அன்னையரை நோக்கின. குழந்தைகள் மழையிலாடியதை அறிந்த அன்னையர் ஏசும் பொழுது முகத்தைக் கள்ளமற்று வைத்துக் கொண்டு நான் ஏதும் புரியவில்லைத் தாயே என நடித்தன சில. அகப்பட்டுக் கொண்டோம் என தன்னைக் காப்பாற்றுபவர் எவருளர் எனச் சுற்றை நோக்கின சில. அழுது நடித்தன சில. முகத்தை சோகமாக வைத்து நிலத்தை நோக்கின சில. பெண் குழந்தைகளில் சில எதிர்த்து அன்னையரிடம் சொல்லாடின. பூசலிட்டன. அழமாட்டேன் என வஞ்சினம் உரைத்து திமிர்த்து நின்றன. அடிக்கக் கை ஓங்கிய அன்னையருக்கு முன் போருக்கு எழுந்த சிறு கொற்றவைகள் என தருக்கி நின்றன சில. ஓடி மறைந்தன சில. அன்னையர் பிடிக்க எழுகையில் மாயம் காட்டி மறைந்து தோன்றி அவர்களைச் சலிக்க வைத்தன சில.
மானுடரின் நாடகங்கள் குழந்தையிலேயே தொடங்கி விடுகின்றன என எண்ணினான் இளம் பாணன். குழந்தைகள் உலகு நோக்க நோக்க விரிந்து வளர்ந்தவர்களின் ஆடிப்பாவைகளென அவர்கள் தோன்றுகிறார்கள் என எண்ணினான். பிறகு இந்த விதைகளே முளைத்து வளர்ந்தவர்கள் ஆகின்றனர் என எண்ணிக் கொண்டான். மானுடரில் குழவிகள் விந்தையும் தொல்லையும் என எண்ணிச் சிரித்தான். வேறுகாடாரின் கையிலிருந்த தீயிலைத் துதியை வாங்கிப் புகையை ஆழ இழுத்து ஊதினான் இளம் பாணன்.
சிறுகுழலில் இளஞ் சேறு பூசியிருக்க வெண்ணாடை சேறெனக் குழைய கருவதனத்தில் குறும்புப் புன்னகை சூடிய சூட்டிகை ஒருத்தி அன்னைக்கு வேடிக்கை காட்டி அவள் துரத்தி வர விண்ணுக்கும் மண்ணுக்கும் பாய்ந்து தாவிப் பறந்து கொண்டு இளம் பாணனின் முதுகின் பின் ஒளிந்து கொண்டாள். “சாலினி இங்கே வா” எனக் கூவிக் கொண்டு இளந்தாயொருத்தி தனங்கள் குலுங்க ஓடி வந்தாள். சாலினியின் கரத்திலிருந்த மண் துணிக்கைகள் இளம் பாணனின் தோள்களில் பட்டு மென் தளிர் விரல்கள் அளைந்த போது மேனி விதிர்த்து மெய்ப்புல்கள் எழ தலையைத் திருப்பித் தானும் சாலினியைத் தேடினான். அவள் அவன் நோக்குக்கும் மறைந்து தோன்றி மலர்முகத்தில் சிரிப்பலைகள் நெளியச் சுடர் கொண்டு ஒழிந்தாடினாள். அவளின் தாய் திண்ணையில் ஏறி அடுமனையில் உருளும் கலங்களுக்கிடையில் பூச்சியைப் பிடிப்பவள் போல அலைந்தாள். சாலினி இளம் பாணனை ஒரு அச்சென வைத்துச் சுற்றிச் சுழன்று ஆடினாள். எதிர்ச்சொல் பேசி அன்னையைச் சீண்டினாள். இளம் பாணன் சாலினியை நோக்க “என்ன நோக்குகிறாய் மாமா” எனச் சொல்லி அவன் கன்னத்தில் மண் கரத்தால் அறைந்தாள். அடிக்காதே அடிக்காதே எனக் கூவியபடி அன்னை நெருங்கி வர அவனை ஒருகணம் நன்கு நோக்கிய பின் மீண்டுமொருமுறை அறைந்து விட்டுத் திண்ணையிலிருந்து இறங்கிக் காற்றைப் போல ஓடினாள் சாலினி. முகத்தில் குறுமணற் குழைவு இளம் பிஞ்சு விரல்களின் பரிசென ஒட்டியிருந்தது. வேறுகாடார் இளம் பாணானை நோக்கிப் புன்னகைத்தார். தாயிற்கு வேடிக்கை காட்டி இடுப்பை ஆட்டி சிறு சுழல் காற்றைப் போல மாயம் புரிந்த சாலினி வானை நோக்கி வெண்பற்கள் விரித்துச் சிரித்தாள். இளமழை எழிலை நோக்கி மெல்லத் தாழ்ந்து விழுவது போலப் பெய்துகொண்டிருந்தது.