107: இளமழை விளையாட்டு : 02

107: இளமழை விளையாட்டு : 02

சாலினியின் சிறுசெவியை முயலின் காதெனப் பற்றியபடி ஏசிக் கொண்டு அவளைத் திண்ணை நோக்கி இழுத்துச் சென்றாள் இளந்தாய். முதுபெண்டிர் சாலினிக்காகப் பரிந்து பேசினர். அவள் இளையவள். குறும்பினி அவளை விட்டுவிடு எனச் சொல்லி சாலினியின் சிணுங்கல் முகத்தை நோக்கினர். அகம் கரைப்பது போல முகம் கொண்டு சிணுங்கி அழுகை வர பிடிபட்டு அவமானம் கொண்டவள் போல அன்னையுடன் இழுபட்டுச் சென்றாள். திண்ணையில் அமர்ந்து என்ன செய்வதென அறியாது முகம் கோணி அமர்ந்திருந்த அவளது தந்தை அவளைத் தூக்கி மடியிலமர்த்திக் கொண்டு வேடிக்கை சொல்லிச் சிரித்தான். அடங்கொண்டு சிரிக்கமாட்டேன் என துறவியின் சினமென முகம் அமைத்து அமர்ந்திருந்தாள் சாலினி. புருவங்கள் இருபுழுக்களென நெளிவு கொண்டிருந்தன. உதட்டில் சுழித்த ஓவென்ற வளைவு காற்றை ஊதியும் இழுத்தும் உலைத்துருத்தியெனக் கனல் மூட்டிக் கொண்டிருந்தது. தொலைவுக்கும் அப்பால் என விழியுறுத்தி அமர்ந்திருந்தாள். சட்டென எழுந்து திண்ணையின் காலைப் பிடித்துக் கொண்டு நிலத்தில் இளமழை சிந்துவதை நோக்கிக் கொண்டிருந்தாள். அவளது தாய் முதுபெண்டிருடன் சொல்லாடிக் கொண்டு அவ்வப்போது அவளை நோக்கினாள். இரண்டு பகைவர்களை ஒரே சிறையில் இட்டதைப் போல. உனக்கென்னடி என மகளும் என்ன செய்கிறேன் பார் உன்னை எனத் தாயும் நோக்கின்மையில் கறுவினர்.

இளம் பாணன் அவளின் நடிப்பையும் அன்னையின் சினத்தையும் நோக்கியிருந்தான். எப்பொழுதும் இப்படித்தானா என எண்ணினான். இளமழை சாரலின் விசிறலென சாலினியின் முகத்தை வந்து தொட்டுப் பூசிக் கொண்டது. சினம் உறைந்த தேவியென தன் ஆடையின் சேற்று வண்ணத்தை நீரளாவிய விரல்களால் துடைத்தாள். மேலும் ஆடை மண்வண்ணம் கூடியதும் கைகளை மழைக்கு நீட்டினாள். கழுவி விடு என ஆணையிட்டவள் போல மழையை நோக்கினாள். சிறுசாரல் நான் இவ்வளவு தான் நிறைந்திருக்கிறேன் இளையவளே எனப் பெய்து கொண்டிருந்தது. மழையைச் சினக்கத் தொடங்கினாள். ஆடையில் பட்டு விலகிச் சுழன்று செல்லங் கொஞ்சிய காற்றை கைகளால் விரட்டினாள். தொடாதே எனச் சொல்லி விரல்களால் கோபங் காட்டினாள். சிறிய விரல்கள் குளிர்ந்த தீத் தளிர்கள் என நெளிந்தன. அவளது தாய் அவளை நோக்கியிருந்த பின்னர் எழுந்து சென்று பின்னாலிருந்து தூக்கிக் கொள்ள விழைந்தாள். அன்னை தூக்க உந்தியதும் விலகிப் பாய எழுந்து சினந்து உடைந்து பேரழுகையுடன் கத்தத் தொடங்கினாள். என்னை விடு விடு எனக் கூவினாள். சுற்றியிருந்தவர்கள் அவளை நோக்கிச் சிரித்து “சினங் கொண்ட கொற்றவை” எனக் கூவினர். அவர்களின் நகையாட்டால் சினம் மேலுமேறிய சாலினி அன்னையின் மார்பில் கால்களால் உதைத்தாள். அவளைத் திருப்பி இழுத்து உதைத்த மார்போடு பிணைத்துக் கொண்டு அன்னை சொல்லின்றி அவளை அணைத்தாள். கரங்களிலிருந்து பாய்ந்து விலகத் துடிக்கும் மீனெனத் துள்ளினாள் சாலினி. அன்னை அவளது முதுகைத் தடவிக் கொண்டு மூச்சால் அவளுடன் பேசினாள். அன்னையின் நெடுமூச்சுகளைக் கேட்டுக்கொண்டே அமைதியானாள். அசைவின்றித் தூங்கும் கனி போல சாய்ந்து கொண்டாள். அன்னை மார்புகள் போல மானுடர் அசைவின்றியும் அஞ்சலின்றியும் துயரின்றியும் துயிலும் இடங்கள் பூமியில் பிறகெப்போதும் வாய்ப்பதில்லை என எண்ணினான் இளம் பாணன்.

சாலினி அன்னையின் தோளில் சாய்ந்து மல்லிகைக் கொடியெனத் தூங்கிய போது கால்கள் இலைத்தழைப்புகள் என ஆடின. விரல்களில் காற்றை மீண்டும் அளைந்தாள். மண் நீங்காத கரத்தினால் மழையை அழைத்தாள். வா வாவெனக் கூவினாள். அன்னை அவளைத் தூக்கி நுதலில் முத்தமிட்டு செல். விளையாடு எனச் சொன்னாள். ஒருகணம் தயங்கி அன்னையை நோக்கியவள் அவளை ஓடிச் சென்று அணைத்தாள். கால்களைக் கட்டிக் கொண்டவளை நோக்கிப் புன்னகைத்தாள் அன்னை. முதுபெண்டிர் அவர்களைக் காட்டி உரக்கச் சிரித்தனர். தந்தை சாலினியை நோக்கிக் கண்சிமிட்டிப் புன்னகைத்தான். கிழவர்கள் அவளைக் காட்டி “சாதித்துக் கொண்டாள். பெண் அல்லவா” எனச் சிரித்தார்கள். ஆண் குழந்தைகள் அங்குமிங்கும் அலமலந்து கொண்டு அடியும் உதையும் ஏச்சும் வாங்கிக் கொண்டிருந்தனர். இதுவும் எப்பொழுதும் இப்படித் தானா என எண்ணிக் கொண்ட இளம் பாணன் நகையெழச் சிரித்தான். “குழவி இன்பமா இளம் பாணரே” எனச் சொல்லி அவனது முதுகில் அறைந்தார் வேறுகாடார். “பார்த்துத் தீராத மானுட பாவனைகள் குழந்தைகளுடையவை மட்டுமே கிழவரே. பிறதனைத்தும் இன்னொரு கணத்தில் கொள்ளும் மடமை குழந்தைகளிடம் மட்டும் கவிச்சொல்லென ஆகுவது விந்தையானது. அவர்களின் தூய அறியாமையும் வளரும் கள்ளமும் ஒரு வினோதமான கலவை. அதுவே அம்மாய வண்ணத்தை அளிக்கிறது” என்றான் இளம் பாணன். தீயிலைத் துதியை வாங்கி இழுத்துக் கொண்டு முகத்தில் உலர்ந்து உதிர்ந்த மண் துகள்களைத் தொட்டுத் தடவினான். “சிறுகை அளாவிய மண்” எனச் சொல்லலாம் என்றவன் “மானுடர் ஒவ்வொருவரும் முதலில் கொல்வது தன்னுள் வளரும் குழந்தையையே. பிறகே அனைத்தும் தூய்மையை இழந்து களங்கம் கொள்கின்றன. அறியாமை இன்பமென நிகழக் கூடியது குருத்து வயதினேலேயே” என்றான்.

வேறுகாடார் சிரித்துக் கொண்டே “அறியாமையை அறிந்தவர்களே விரும்புகிறார்கள் இளம் பாணரே. அறியாமை எந்த நிலையிலும் கொடியதே. குழந்தைகள் தூய நிலையில் அடையும் இன்பமென்பது சொல்லின்மையின் காலத்திலேயே. சொல் நுழைந்த குழந்தை களங்கத்தின் வாயிலை நெருங்கி விடுகிறது. ஒரு சொல் இன்னொரு சொல்லுடன் கொள்ளும் உறவையும் கரவையும் அறியும் குழவி புடவியைச் சொற்களால் தன்னை நோக்கி வளைக்கத் தொடங்குகிறது. விரைவில் முதிர விரும்பாத குழந்தைகளே இல்லை. மானுடர் வளர்ந்தவர் பொருட்டே ஆக்கிய உலகமிது. குழந்தைகள் குழந்தைகளாகவே நீடிக்க விழைவதற்கு உலகு தன்னை அதற்கென ஆக்கிக் கொள்ள வேண்டும். போரும் வறுமையும் இன்மையும் துயரும் சொற்களினாலும் அனுபவங்களினாலும் குழந்தைகளின் உலகில் துர்சொப்பனங்கள் என நுழைகின்றன. குழந்தைகளுக்கு நாம் விதைக்கும் அச்சங்கள் அவர்களை விரைந்து அச்சம் நீங்கியெழத் தூண்டுகிறது. வளர்ந்தவரே அச்சத்தை வென்றவர்கள் எனக் குழவிகள் எண்ணுகின்றனர். அவர்கள் மேல் எனக்கு இரக்கமே உண்டு” என்றார்.

“குழந்தைகள் இன்புற்று கற்றலில் திளைக்கும் அரசே மானுடர்கள் சென்று சேரும் உச்ச அரச கட்டமைப்பு என எண்ணுகிறேன். ஒவ்வொன்றும் குழந்தையின் பொருட்டென ஆக்கும் அரசு உலகில் மகத்தான அறங்கள் திகழும் பேரரசாக நிகழும். ஒரு குழந்தை அரசு. அதன் ஆழம் கற்பனைகளால் ஆனது. அறங்கள் எளிய செயல்களெனத் திகழும். மானுடர் ஒருவரை ஒருவர் சினந்து கொள்வதும் சிரித்துக் கொள்வதும் களிகொள்வதும் இனிமையென ஆகும். புடவியே ஒரு பெரிய விளையாட்டுத் திடலென ஒரு குழந்தையே எண்ணிக் கொள்ள இயலும்” என்றான் இளம் பாணன். அவனது குரலில் தீவிரம் கொதிப்பதைக் கண்ட வேறுகாடார் புன்னகைத்துக் கொண்டார்.

“தெய்வங்களின் முன் உருகி நிற்கும் குழந்தைக் கரங்களினை நோக்கி கற்சிலைகள் கரைவதை நோக்கியிருக்கிறீர்களா. கூர்ந்து உச்சரிக்கும் தெய்வத்தின் பெயர் காற்றில் ஒரு ஆணையென விழ தெய்வங்கள் அஞ்சுகின்றன. பணிந்து சிலைகளுக்குத் திரும்பிக் கொள்கின்றன. ஒரு குழந்தையின் விருப்பத்தை மறுக்கும் தெய்வம் தன்னை அழித்து இறந்து விடுகின்றது.

தெய்வங்களின் குழந்தைத் தோற்றத்தையே மானுடரும் விழைகின்றனர். குழந்தையாய் இருக்கும் தெய்வம் வரங் கொடுக்காத போதும் தெய்வம். குழந்தையாய் கரங்களில் தவழ்வதே அது கொடுக்கும் அருளென மானுடர் எண்ணிக் கொள்கின்றனர். மானுட வாழ்க்கை ஒரு குழந்தையின் தெய்வமாக வாய்த்திருந்தால் எவ்வளவு இனியதாக அமைந்திருக்கும்” என்றான் இளம் பாணன். “இளையவர்களிடம் தூய்மை சற்று மிகுந்து இருப்பது இயற்கையே இளம் பாணனே. பாலில் நுரையென அமைந்திருப்பது” என்றார் வேறுகாடார். சுடுபாலில் பனங்கட்டி கரைந்து சாலினியின் ஆடை வண்ணம் போலிருக்கிறது என எண்ணிய இளம் பாணன் புன்னகையுடன் அருந்திக் கொண்டிருந்தான்.

இருதியாள் உரத்த சிரிப்புடன் சொல்லாடியபடி திண்ணையில் தோழியருடன் வந்தமர்ந்தாள். யாதினி இளம் பாணனின் அருகில் சென்றமர்ந்தாள். வேறுகாடார் யாதினியை நோக்கி “குழந்தைகளை நோக்கி இன்புறுகிறார் பெருங்கவி” எனச் சொல்லிச் சிரித்தார். “நான் வேண்டுமானால் குழந்தையாகி மடியில் தவழவா” எனச் சொன்ன யாதினி இளம் பாணனின் விழிகளை நோக்கினாள். “மெய்யான குழந்தை என்பது மெய்யாகவே மெய்மையின் சிற்றுடல்” என்றான் இளம் பாணன். “நான் பொய்மையின் பேருடல் என்கிறீர்களா பெருங்கவியே” என நடித்துச் சினந்தாள் யாதினி. “பெண் ஒரு போதும் குழந்தையாக முடியாது. குழந்தை என்பது தர்க்கமற்ற உவகை. பெண் என்பது தர்க்கங்களின் உவகை” என்றான் இளம் பாணன். “தடித்த சொற்களால் பயனில்லை இளையவரே. கற்பனையில் குழந்தைகளை நோக்குபவர்கள் காட்டும் பாவனை அன்பும் கருணையும் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற உதவப்போவதில்லை. குழந்தைகள் சார்ந்து வாழ வேண்டியவர்கள். மானுடர் சார்பிற்கு எதிரானவர்கள். கூட்டில் இணைந்தாலும் தனித்திருத்தலும் அடிப்படையானதே” என்றாள் யாதினி.

இளம் பாணன் நெஞ்சை விரித்துத் தோள்களை திமிர்த்திக் கொண்டு கைகளை இருபுறமும் ஊன்றி சொல் ஆணையென எழுந்த முதுபெரும் பாணனென முகம் அமைந்தான். குரலில் நெக்குருகும் வாசனையும் தெய்வங்களுடன் தருக்கும் இழைவும் கூடியது. “அறிக. மானுடரில் குழவியென வந்தமைவது மானுடர் கற்றமைந்து ஞானமுற்றுச் சென்று சேர வேண்டிய பீடத்தின் சிற்றிருக்கை. முதல் விடிவெள்ளி. முதன்மையான இருப்பு. குழவிகளை எங்கனம் நடாத்துவதென மேன்மையான நெறிகள் உண்டாகிய குடிகளே புவியில் ஆகச் சிறந்த மக்கள். குழந்தைகள் அறியாமையின் உவகை அளிக்கும் இயற்கையின் பேரிருப்பின் நுழைவாயில்கள். அவர்களின் வழி மானுடம் ஒவ்வொரு முறையும் அனைத்துக் கீழ்மைகளையும் உதறும். அனைத்துப் பாவங்களையும் கழுவிக் கொள்ளும். அனைத்தும் மன்னிக்கப்படும். அவர்களே நமது காப்பும் மீட்பும் வற்றாத நம்பிக்கையும்.

நம்மில் குழந்தைகளென வந்துதிப்பது நம்முன்னோரே. நம் தொல் அன்னையரும் தாதையரும் குழவிகளெனக் கரங்களில் வந்தமைந்து மீண்டுமொரு வாய்ப்புக் கொடு மைந்தா மகளே என முத்தமிட்டு அளவளாவுகின்றனர். குழவிகள் சொல்லின்மையில் குழறும் நாவில் தோன்றும் மிழற்றலே அத்தொல் மொழி. அது சங்கீதமென இசை கொள்வது அதனாலேயே. காக்கைகளும் குருவிகளும் நாய்களும் பன்றிகளும் அத்திரிகளும் வேழங்களும் கொல்விலங்குகளும் கூடக் குழந்தைகளை காப்பது அதனாலேயே. ஒவ்வொரு விலங்கிலும் குட்டியெனக் கருவில் ஏந்துவது ஒரு பேற்றை. ஒரு வரத்தை. ஒரு வாய்ப்பை. மானுடம் ஒருபோதும் தவற விடக்கூடாத பெருங்கனவை. நீட்டிப்பை குழந்தைகள் நமக்கு அளிக்கிறார்கள்.

குழந்தையென்றாகி முதுமையில் கனியாதவர் வாழ்வை அறியாமல் அதன் பலிபீடத்தில் சென்றமைபவர். அவர் மீண்டும் பிறக்கிறார். பிறப்பின் சங்கிலியைத் தொடர்கிறார். எவர் குழவியாகிப் புன்னகை கொண்டு மீள்கிறாரோ அவருக்குப் புடவி மீண்டும் கருப்பை ஆகின்றது. இன்பங்கள் அவரை வாழ்த்துகின்றன. குழந்தைகள் அவரிடம் நட்புக் கொண்டு விரல் பற்றி நடை பழகுகின்றன” என்றான்.

யாதினி அவனது சொல்லில் விழியூன்றி அமர்ந்திருந்தாள். வேறுகாடார் உவகை கொண்டு “நானும் குழந்தையல்லவா இளம் பாணனே” என்றார். சினமெழுந்த இளம் பாணன் அவரது தொடையில் மெல்ல அறைந்து அவரை நோக்கிய பின் விழிகளில் மின்னிய குறும்பைக் கண்டு “ஒரு குழந்தை தான் குழந்தை என்பதை அறியாத வரையே குழந்தை” எனச் சொன்னான். “அறிந்த குழந்தையே தன்னை விடுவித்துக் கொள்கிறது இளையவனே. நாம் மிகையாகச் சுமையேற்றும் எம்மானுடப் பருவமும் ஒரு தோற்ற மயக்கே. அறிதலே அனைத்துப் பருவங்களுக்கும் துணை நிற்பது. குழந்தைகள் கலைகளில் கவிதை போன்றவர்கள். தூய எளிய மெய்மையானவர்கள். அதுவோர் கனவு மட்டுமே” என்றாள் இருதியாள். அவரது குரலைக் கேட்ட இளம் பாணன் உருகியவன் போல தோள்கள் தளர சாய்ந்து கொண்டான்.

சாலினி இளமழையில் துள்ளிக் குதித்து ஓடிவந்து இளம் பாணனின் முன்னே இடையில் இருகை ஊன்றி இருபுறமும் சில தொலைவு நடந்து அவனை எதற்கோ காத்திருந்தாள். யாதினி சாலினியை நோக்கிய பின் “விளையாட அழைகிறாள் பெருங்கவியே. குழந்தையின் அழைப்பு சொல்லின்மையில்” என்று சொல்லிச் சிரித்தாள். இளம் பாணன் குட்டிக் குரங்கென இளமழை மென்சேற்றில் குதித்தான். சாலினி ஓடத் தொடங்கினாள். அவளின் முன்னே பாய்ந்து தவளை போலாகி வாயைப் பிரட்டி வேடிக்கை காட்டினான். சாலினி அறைய வர பின்னால் பாய்ந்து கொக்கு நீரிலென நடந்து காட்டினான். அவளும் அவனுடன் சேர்த்து கொக்கு நடை நடந்தாள். இளம் பாணன் பாறி வீழும் மரமென சேற்றில் சரிந்தான். அதிலொரு மலரென அவன் மேல் வீழ்ந்தாள். பற்றிக் கொண்டேனென வானுக்குப் பூக்காட்டும் மரமென அவளை ஏந்திக் கொண்டு சிரித்தான். அவனது கால்கள் குழவியைப் போலச் சுருண்டு குவிந்து காற்றில் ஓடின. குழல் சேற்றில் தாமரை இலையென விரிந்து கிடந்தது. இளமழை அருளெனப் பொழிந்து கொண்டிருந்தது. சாலினி புலிக்குருளையென உறுமல் கொள்ள சிம்மத்தின் முகமொன்றைச் சூடியவன் கர்ஜித்தான். காற்றில் மிதக்கும் புலியை ஏந்திய சிம்மம் என எண்ணிய வேறுகாடார் தீவை ஒருகணம் பெருஞ்சிம்மம் எனவும் அதன் கரத்தில் விளையாடும் குருளையெனத் தமிழ்க்குடிகளையும் எண்ணிய பின் நெடுமூச்சை ஆழ இழுத்துக் கொண்டு தீயிலையைப் புகைத்து காற்றில் ஊதினார்.
இளமழைத் தூவலில் புகை படர்ந்து விலகியது.

ஒரு இனிய கனவென மழை கழுவிக் கொண்டிருக்கும் காலை நனைந்து கொண்டிருந்தது. சிற்றாலயங்களின் தூங்கு மணிகள் ஒலியெழுப்பின. வெண்சங்குகள் முழங்கியெழும் ஓசைகள் குடிகளை உரப்பின. காற்றில் நறுந்தூப வாசனைகள் எழுந்தன. குடிகள் சோர்வை முறித்துக் கொண்டு உடலை வளைத்து நெட்டிகளை ஒடித்து மேனியை சிலிர்த்துக் கொண்டனர். இளம் பாணன் பெருங்கரடியெனவும் அவன் முதுகில் சிறுதேவாங்கெனச் சாலினி தூங்கியாடவும் அவர்களை நோக்கி குழவிகள் கூட்டம் மொய்க்கத் தொடங்கின. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவனை காட்ட மண்ணில் வாழும் அனைத்தும் மானுடரில் கலந்து நடித்துக் கொள்ளும் பருவமே குழந்தைகள் என எண்ணிக் கொண்டான் இளம் பாணன். உவகையில் அவன் உளம் எழுந்தாடி களிகொட்டிக் கூவியது. காகங்களெனக் கரைந்தனர் குழவிகள். நாய்களெனக் குலைத்தனர். நரிகளென ஊளையிட்டனர். சேவல்களெனக் கூவினர். கோழிகளெனக் கொக்கரித்தனர். கைகளைச் சிறகுகளாக்கி மிதந்தனர். மேனியைப் புழுக்களாக்கிச் சேற்றில் நெளிந்தனர். அன்னையர் அவர்களையும் இளம் பாணனையும் அழைத்துக் கொண்டு சிற்றாலயத்தின் கேணியை நோக்கி சென்றனர். வாத்துகளின் நடையுடன் அன்னை வாத்துகளைத் தொடர்ந்தனர் அனைத்துக் குழவியரும் குழவியென்றானவனும். காற்றும் இளமழையும் அவர்களுடன் உடன் நடந்தன. மண் ஒவ்வொரு அடியையும் தாங்கிக் கொண்டு என் மகவுகள் எனச் சொல்லி ஊறும் மார்பைப் திறந்திருந்தது. நீரென்பது மண்ணின் முலைப்பால். மேகங்களின் முலைப்பால். இயற்கையின் முலை சுமந்த பாலே நீரென்று ஆகியது என எண்ணியெண்ணி வாத்தென்றாகிய இளம் பாணன் சாலினியை வலத்தோளின் அமர்த்தி கேணியின் விளிம்பில் நின்று இளமழை பெய்யும் கேணியை நோக்கினான். நீருக்குத் திரும்பும் ஆமைக் குட்டிகளென கைகளைத் தூக்கி விரித்து பாய்ந்தனர் குழவிகள். இளம் பாணன் நீரில் கல்லென சாலினியை எறிந்தான். நீருள் மூழ்கி எழுந்து அவனை நோக்கி உவ்வே எனக் காட்டிய சாலினி இருகரங்களையும் நீட்டி வாவென்று அழைத்தாள். ஆயிரம் தாமரைகள் விரிந்த கேணியில் இன்னும் சிலநூறு தாமரைகள் அவிழ்ந்து கொள்ள இடமளித்த இயற்கையே உன் கருணைக்கு நன்றியெனக் கூவியபடி முதலை போல நகர்ந்து சிறகடித்துப் பாய்ந்தான் இளம் பாணன். நீரலைகள் ஆர்த்து ஆர்த்து அமைந்தன. குழவிகள் கூக்குரலிட்டு நீரலையானார்கள். சிற்றாலயத்தின் ஒளிச்சுடர்கள் விம்மி விம்மி எரிந்தன. உள்ளிருக்கும் தெய்வமொன்று புன்னகையுடன் நோக்கியிருந்தது. காலமின்மையில்.

TAGS
Share This