109: அன்னைக்கடல் : 02

109: அன்னைக்கடல் : 02

ஆழியை விழிகளால் அணைத்தபடியிருந்த இளநீலனின் அருகில் அவனது முதல் தனுசு பாணங்களற்றுத் தனித்திருந்தது. குழல் காற்றில் மெல்ல விசிறும் மழையில் இலைத்தழைப்புகளென ஆடின. இளஞ் செவிகளில் குண்டலங்கள் மொட்டு உலகுகளெனச் சுழன்று கொண்டிருந்தன. இடையாடையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு கால்களை ஆமைத் தலையென மண்ணுள் புதைத்தபடி எல்லையற்ற ஆகாயத்தில் ஒளிப்பதக்கமென மினுங்கிக் கொண்டிருந்த சூரியனை நோக்கிக் கொண்டிருந்தான். சூரியனை நோக்குவதில் அவன் இணையற்ற உவகை கொண்டிருப்பதை அன்னை அறிவாள். அவனது புலன் வட்டம் நீண்டது என்பதை அறிந்தவள் தொலைவில் பாறையொன்றில் அமர்ந்து முடிவேயில்லாத சூரியனை நோக்குபவளென அவனை உற்றிருந்தாள். அவளுக்கு அவனே சூரியன் என்பது போல.

அவனது முதுகின் மைய எலும்பு கூர்வேலென நிமிர்ந்திருந்தது. அவன் துயிலும் பொழுதும் இருக்கைகளில் அமரும் பொழுதும் கூட அவை நேராகவே நின்றிருக்கும். எப்பொழுதும் வளையாதவை என எண்ணிச் சிரித்துக் கொள்வாள். கையில் சின்னக் கருஞ்சூரியனென அவனை ஏந்திய காலங்களில் அவன் கருவண்ண மேனியில் மச்சங்களை எண்ணுவாள். இருள் வானில் இருள் மீன்களென அவற்றை தொட்டுத் தொட்டு ஒரு வரைபடத்தை தனக்குள் உருவாக்கிக் கொண்டிருந்தாள். இடச் செவியின் கீழே ஒன்று. வலமார்பின் காம்பிற்கு வலப்பக்கம் இரண்டு. இடையில் ஒன்று. பிருஷ்டத்தில் ஒன்று. தொடையில் ஒன்று. பின் தொடையில் ஒன்று. முதுகில் ஆறு. உள்ளங்காலில் விழிமணியளவு வட்ட மச்சமொன்றும் கொண்டிருந்தான். வளர வளர அவை தளிர்கள் இலைகளாவதென விரியும் என எண்ணிக் கொண்டாள்.

அவனது மச்ச வரைபடத்தை வானில் விண்மீன்களில் பொருத்தி நோக்கி நிற்பாள். தென் திசையில் நீலனின் மச்ச வரைபடம் துலக்கமாகத் தெரிகிறதென எண்ணுவாள். கையில் அம்பும் காலில் துருக்குமாக வேட்டைக்காரன் ஒருவனை விண்ணில் காண்பாள். அவனை நீலனின் விரிவானுரு என எண்ணுவாள். அவனில்லாத நாட்களில் வேட்டைக்காரனை விண்ணில் நோக்கியபடி காலமற்று அவனை நோக்கிக் கொண்டிருப்பாள்.

நீலன் மெல்ல எழுந்து அலையை நோக்கிச் சென்று அதன் விரல்தொடு எல்லையில் நின்று கொண்டான். அன்னைக் கடல் நுரையால் அவனைத் தொட்டாள். உமையின் மார்புக்குள் அவை அரூபமாக விரிந்த தன் விரலே என எண்ணமெழ மெய்ப்புக்கொண்டாள். தன்னுள் ஓயாது ஒலிக்காத ஒன்று தன் மகவுக்கும் இருக்கப் போவதில்லை என எண்ணினாள். அன்னையில் விளையாத ஒன்று மகவில் நிகழ்வதில்லை. அவளே பிறிதொரு உடலில் ஆணென எழுபவள். அவளது விழைவும் வேட்கையும் கனவும் கனலாத ஆணென்று எவரும் புவியில் இல்லை என எண்ணினாள்.

நீலன் கழுத்தை பூவைத் திருகுவது போலத் திருப்பி அன்னையை நோக்கினான். சூரியன் அவன் தலைக்குப் பின் ஒளிரும் செம்பொன்னொளிர் வட்டமென ஒருங்கியது. குழல் காற்றில் வீசி முதுகால் தீநாவுகள் கருமை கொண்டு படபடப்பதென நீந்தியது. அவன் விழிகளில் உவகையும் நிதானமும் மின்னிய புன்னகையொன்று தாய் மார்பில் பாலெனத் தூயதாய்ச் சுரந்தது. பிறகெப்போதும் அவனை அவ்வளவு நெருக்கத்தில் அவள் பார்த்ததில்லை என்பதால் அந்த நினைவை ஒரு அருங்கனவெனக் கரந்து வைத்தாள். அவனது ஈர்க்கும் கரும்பொன் தேகமும் உவகை மாறாத பைதலின் இளமுகமும் என்றைக்கும் நினைவில் இனிதென அவளை எண்ணச் செய்தது. ஒரு எளிய நாளில் நிகழ்ந்த எளிய நோக்கு என்றைக்கும் ஒளிர்வதாய் ஆகிவிடும் சாத்தியத்தை எண்ணி நினைவெழும் காலங்களில் நகைத்துக் கொள்வாள். அவன் நின்று சென்ற கடலின் கரை. அவள் அமர்ந்து நோக்கிய பாறையின் இருப்பு. இரண்டும் எப்பொழுதைக்கும் அப்படியே காலங்களில் உறைந்திருக்குமா என்ன. அலைகடல்களின் நுனியில் கால் நனைய சூரியவட்டம் சூடிய குமாரர்களின் முகத்தில் தோன்றும் அன்னையர் உள்ளவரை பறையும் கரைகடலும் புடவியில் நித்தியமாய் தோன்றிக்கொண்டேயிருக்கும்.

அன்னையின் நோக்கினைக் கண்ட இளநீலன் அப்போது என்ன எண்ணியிருப்பான். அவனுக்கு இதன் பொருள்களேதும் பிடிபடுமா. நுண்மையான கூர்போன்ற மகவுகள் மானுட உறவுகளுக்கு அப்பாலென நுழைந்து விடுகிறார்கள். அன்னையரை ஈர்ப்பதுவும் குன்றாத அன்பில் நித்தமும் நினைக்கவும் அப்படியொரு பெருமைந்தனை ஈன்றேன் என எண்ணிக் கொள்ளவும் கிடைத்த இப்பிறப்பைச் சொல்லி தெய்வங்களிடம் நன்றி சொல்வாள். அன்னையின் விழிகளில் நிறைமணியாய்ச் சுடராத மகவுகள் சாபங் கொண்டவர்கள். அன்னை மன்னிக்காத எந்தக் குற்றத்தையும் புடவியில் எவரும் மன்னிக்கப் போவதில்லை. அன்னையே குற்றங்களின் எல்லை. பூமியின் நியாயக் கோல். சென்று தலை மோத வேண்டிய தெய்வத்தின் கால். அவனை அவள் என்றைக்கும் சூரியக் கிரீடம் சூடியவனாக மட்டுமே எண்ணிக் கொள்வாள். பிறகெந்த உருவும் அவனைப் பற்றிய புகழ்ச் சொற்களும் வசைகளும் கூட தீண்ட முடியாத தொலைவான தொன்மையான பாறையில் அவள் அமர்ந்து கொண்டாள்.

நீலன் அரசனான போது ஒரே ஒருமுறை அவளை மனையில் சந்தித்தான். சொல்லின்றி அன்னை முன் அமர்ந்திருந்தான். நிலவை நீலனின் பின்னே அன்னையை நோக்காது விழி தாழ்த்தி நின்றிருந்தாள். சூர்ப்பனகரும் தமிழ்ச் செல்வனும் அன்னையின் அருகே தழைந்து கொண்டு நின்றனர். அன்னை நீலனை நோக்கி பிறிதொரு முன்காலத்திலிருந்து சிரித்தாள். அந்த நோக்கைக் கண்டு அஞ்சிய நீலன் அது அவனறிந்த அன்னையல்ல என எண்ணினான். அதில் ஒற்றை அகலுடன் தொல் ஆலயங்களில் அமர்ந்திருக்கும் அன்னைத் தெய்வங்களின் நோக்கற்ற நித்திய புன்னகை. பாறையில் செதுக்கிய காலமின்மையின் புன்னகை. எதுநேரிடினும் மாறாதது. எதற்காகவும் விலகிக் கொள்ளாதது. எவருக்கென்றோ என்றைக்கும் காத்திருப்பது.

நீலனின் சடைத்த குழலைத் தடவி அவனது கன்னத்தையும் தாடியையும் தொட்டு அளைந்து தோள்களில் வருடி மீண்டும் புன்னகை கொண்டாள். அவனைத் தொட்ட கணத்தில் தான் அறிந்த அன்னை அவளுடலில் தோன்றி தொட்டு அறிந்து மறைந்தாள் என எண்ணினான் நீலன். தொடுகையில் அன்னை நோக்கும் குழவி காண்பதுவே அவனைச் சுமந்த அன்னை. நோக்கினால் காண்பது என்றைக்கும் உள்ள மகனை தொடும் அன்னையின் நோக்கு மட்டுமே.

இளமழை சிலிர்த்து மெய்ப்புக் கொள்கிறதென எண்ணினாள் உமையம்மாள். அவனை சென்று நோக்க வேண்டும் என்ற எண்ணம் புலரியிலிருந்தே அவளை அருட்டிக் கொண்டிருந்தது. மழை இனிமையை மேலும் இனியதாக்கி விடும் நினைவுகளைத் தொடும் போது மானுடர் மழையை தெய்வமென்றாகிக் கொள்வதன் மர்மம் பிடிபடுகிறது என எண்ணினாள் உமையம்மாள். பைந்தமிழியின் மகவுகள் களிக்குச் செல்ல ஆடை உடுத்தி அன்னையிடம் சொல்லாடிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் விழியசைவையும் உடலின் ஆடல்களையும் நோக்கிய உமையம்மாள் அவர்கள் எவரிலும் ஒரு துளியெனவும் எஞ்சாமல் நீலன் வேறொரு உடலில் நிற்பதைக் கண்டு வியந்து கொண்டாள். அவன் அவள் மட்டுமே கரந்த ஒற்றை ஆணுடல். அவள் அவனுக்கென்றே சுரந்த ஒவ்வொரு துளி பாலையும் பிறருக்கு அவள் அளிக்கவில்லை. முலை சுரக்கும் பொழுது அன்னை காண்பதுவே மகவெனும் கனவு என எண்ணினாள்.

பைந்தமிழி அன்னையின் முகத்தில் தோன்றிய சிரிப்பை வியப்புடன் நோக்கிய பின் அவளிடம் நெருங்கி “என்னவாயிற்று அன்னையே” என வினவினாள். “நீலன்” எனச் சொன்னாள் அன்னை. அச்சொல்லை அன்னையே கேட்டுக் கொண்ட போது உடல் துடித்து எழுவதைக் கண்டு நாணினாள். பைந்தமிழி அன்னையை நோக்கி உறுத்த பின் “நல்லது அன்னையே. நானும் அவனை எண்ணிக் கொண்டிருந்தேன். நீங்கள் பார்க்க விழைவதாகத் தகவல் சொல்லி விடுகிறேன்” என்றாள். “நாம் சென்று பார்க்கலாம். அதுவே முறை” என்றாள் அன்னை. பைந்தமிழி மெல்லிய சினத்துடன் அன்னையை நோக்காது “அவன் வருவான். அப்படித் தான் புலரியில் இருந்தே தோன்றுகிறது” என்றாள். அன்னை சிரித்துக் கொண்டு “ஓம். அது நல்லது தான். அவன் இங்கு வரட்டும். இந்த மனையே அவனது முதலாவது அரண்மனை” எனச் சொல்லி மேலும் தன் உதிருடல் குலுங்கச் சிரித்தாள். அவளது விழியில் பெருகிய ஒளியை நோக்கிய பைந்தமிழியின் அகம் துணுக்குற்று அடங்கியது. என்றைக்குமாகப் பிரிவதன் முன்னர் பிரியவிருப்பவர்களே அறியாது காலம் அவர்களில் எழுந்து கொடுக்கும் பேருவகையின் ஒளி என எண்ணமெழ தலையை ஆட்டி எண்ணத்தைக் கலைத்து மனைக்குள் சென்றாள் பைந்தமிழி. இளமழை அன்னையை நோக்கியபடி பெய்து கொண்டிருந்தது. அலைகள் பாறையின் கால்களைத் தொட்டு சீறியெழுந்து அணைந்தன. நீலமா கடல் மாவென்று ஒலிக்கும் ஓசையில் அன்னை கரைந்து கிடந்தாள்.

TAGS
Share This