110: மெய்த்தோழன்

110: மெய்த்தோழன்

அரண்மனை வாயில் கோபுரத்தில் நின்ற இளம் புலிவீரர்கள் இளமழைக்கு ஒடுங்கி கோபுர அறைகளில் ஒதுங்கியிருந்தனர். மூங்கில் ஏணியால் மேலேறிய தமிழ்ச் செல்வனைக் கண்ட போது பதைபதைத்து தம் இடங்களுக்கு மீண்டு கொண்டிருக்க கையால் சைகை காட்டி அறைகளுக்குச் செல்லும்படி கூறினான் தமிழ்ச்செல்வன். பிடிகோலை மீளவும் ஊன்றிக் கொண்டு மெல்லிய நடையுடன் உடலை ஒருக்கிக் கொண்டான். பச்சை மேலாடை காற்றில் பறந்து கொண்டிருந்தது. இளவெண் இடையாடை அணிந்திருந்தான். கூத்தனொருவன் அம்பலம் ஏறியதைப் போல என எண்ணினான் கோபுரக் காவலன் லாகர்த்தனன். அவனது புன்மீசையில் இளமழையின் தூவல்கள் படிந்திருந்தது. கரிய இளந்தேகத்தில் படைக்கவசங்கள் பூண்டிருந்தான். பரபரக்கும் கால்களுடன் தமிழ்ச்செல்வனை நோக்கி வந்தான். தமிழ்செல்வன் இடவழியால் நுழைந்து கொண்டிருந்த நீலனின் நூற்றுவர் படையையும் நீலனும் சத்தகனும் உரக்கச் சிரித்து வேடிக்கையான உடல்மொழிகளுடன் நடந்து வருவதையும் நோக்கினான். சற்றுத் தொலைவில் நிலவையும் தானகியும் லீலியாவும் சுவடிகையும் பெய்யினியும் குலைந்த தேனீக்கூட்டம் போல வருவதைக் கண்டு மெல்லிய சிரிப்புக் கொண்டான்.

நீலனது தேகத்தில் தோன்றிய உறுதியும் இளகலும் அவனது நடையில் தெரிந்ததைக் கண்டு மெல்லிய உவகை விரிந்தது. நீலனை மந்தணன் எனச் சொல்லுரைத்தவன் தமிழ்ச்செல்வனே. தமிழ்ச்செல்வன் நீலனுக்கு ஒருவயது இளையவன். சொற்களை படைக்கலங்களுக்கு நிகராக எண்ணிக் கற்றுக் கொண்டவன். அரசு சூழ்தலிலும் விவாதங்களிலும் இளம் புலியெனச் சுழன்று பற்கள் சீற உரையாடுவான். அவன் மெல்ல மெல்லத் தணிந்து புன்னகையை ஒரு முகமென அணிந்து கொண்ட போது நீலனும் அவனும் நெருக்கமாயிருந்தனர். நீலனின் மந்தணத்திலிருந்து பிறந்தது தமிழ்ச்செல்வனின் மந்தணப் புன்னகை என்றார் உகும்பர்.

உகும்பர் முதல் முறையாக இருவரும் தனித்தமர்ந்து சிங்கை புரியின் கொடுமைகளைப் பற்றி விவாதித்ததைக் கண்டு உவகை கொண்டார். இளையவர்கள் அரசைப் பற்றி அக்கறை கொள்வது காலத்தினால் உண்டாக்கப்பட்ட அழிமுகம் என எண்ணினார். கல்விச் சாலையின் முன் மண்டபத்தில் சுவடிக் கட்டுகளின் மேல் வலது கையை ஊன்றிக் கொண்டு இடது கையை மேலே தூக்கி விரல்களால் நடித்து விழிகள் கூச்சலிட நீலன் சொல்லாடியதையும் அன்று தான் அவர் முதலில் கண்டார். தமிழ்ச் செல்வன் நீலனை உணர்ந்த மெய்த்தோழனென அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். நீலனின் சொற்பெருக்கு நின்ற வேளை இருவரிகளில் ஒரு சேர்க்கையை இணைத்தான். அவ்வரிகளின் இணைப்பினால் உண்டான திகைப்பில் நீலன் மெய்ப்புல் எழ புன்னகை கொண்டு தலையை அசைத்து ஓம் எனச் சொன்னான். உகும்பர் நெருங்கி அவர்களிடம் சென்ற போது இருவரும் எழுந்து கொண்டு ஒருவரை ஒருவர் நோக்காது உகும்பரின் பாதங்களையே நோக்கியிருந்தனர். உகும்பர் சிரித்த பின்னர் “தோழர்களாக நீடியுங்கள் மைந்தர்களே. உங்களுக்கு அது உங்களின் ஊழால் வகுப்பட்டிருக்கிறது. இளமையில் நற்துணை நட்பாய் அமைவது ஒவ்வொரு மானுடரின் வாழ்விலும் அளப்பரிய வேறுபாடுகளை உண்டாக்கும். நட்பே நம் முதல் துணையென களங்கள் தோறும் நின்றிருக்கும்” என வாழ்த்தினார்.

தமிச்செல்வன் வரலாற்றை நோக்கும் திறனை நீலனிடமிருந்து கற்றுக் கொண்டவன். கதைகள் அல்ல தமிழ்ச்செல்வா. அதன் நீதியும். நீதியை அடைய வழிகளுமே அடிப்படையாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்பதை தமிழ்ச்செல்வனுள் ஆழ விதைத்தது நீலனின் சொற்களே. தானறியாமலேயே நீலனின் வயப்பட்டமையை எண்ணி அவன் மகிழவே செய்தான். நீலனின் கனவு நெருக்கடிகள் மிகுந்தெழுந்த அவர்களின் முன்னிளமைக் காலத்தில் ஆற்றும் மழையாய் தகிக்கும் நிலத்தில் பொழியுமென எண்ணுவான் தமிழ்ச்செல்வன். தமிழ்க்குடிகளின் இளையவர்கள் சிறு எதிர்ப்புக் குழுக்களாக மாறி தமிழ் அரசையும் சிங்கைபுரியின் எல்லைத் தளங்களையும் தாக்கத் தொடங்கிய போது நீலனின் கனவு குடிகளின் கரங்கள் வழி பெருகி எழுகிறதென உணர்ந்தான். அல்லும் பகலும் இருவரும் விவாதிப்பார்கள். இவர்களுடன் இணைந்து கொண்ட இளைஞர்கள் குழு மெல்ல மெல்ல இருளில் நதியென தனித்து விலகல் ஒளி கொண்டு குடிகளுக்கு அப்பால் பிறிதொரு நிலத்தில் உதிக்கும் கனவுப் பட்டறையென வளர்ந்து கொண்டிருந்தது.

மாபெரும் தமிழரசை நிறுவி மீளவும் படையைத் திரட்டித் தொகுத்து நெறிகளைச் சீராக்கி கடுமையான தண்டனைகளின் வழியும் கூர்மையான வருங்காலத்திற்கான கனவுகளை விவாதித்து எழுவதற்கான ஓர் அரசு. மக்களிலிருந்து எழுந்து வரும் இளையர்களின் குருதியினால் மண் குழைத்துக் கட்டப்படும். குடி அறங்கள் மேலும் விவாதிக்கப்பட்டு குடிகளில் உறையும் காலத்துக்கு ஒவ்வாதவனவற்றை நீக்கி புதியதை இணைத்து பெருநீதியொன்றை நிறுவ எண்ணிய இளையவர்ககென அவர்கள் விரிந்து கொண்டிருந்தனர். திமிலரும் வேறுகாடாரும் இணைந்து கொண்ட போது பரதவக் குடிகளின் ஆற்றலும் ஒற்றுப்படையினை திறம்பட உருவாக்கும் நுட்பங்களும் நீலனின் படையில் உண்டானது. நீலனின் கனவே புலிக்கொடி. புலிகளின் வற்றாத உறுதியும் விரைவும் அச்சமின்மையும் கொண்டெழும் குடிகளென தமிழ்க்குடியை எண்ணிக் கொண்டார்கள். ஆயிரம் வேழங்கள் எதிர்வரினும் நூறு புலிகள் வெல்லும் படையென ஆக முடியும் என விவாதித்தனர். வேறுகாடார் புலிகளுக்கிடையில் நரிப்படை ஒன்றை உண்டாக்கினார். காட்டை ஆள வேண்டுமென்றால் அதன் அதிகாரத்தை ஆளும் அனைத்து விலங்குகளையும் பறவைகளையும் உடனழைத்துக் கொள்ள வேண்டுமென்றார்.

ஆலோசனைகளை நீலன் செவி திறந்து கேட்டுக் கொண்டேயிருப்பான். அவனது அகம் எழுந்து ஓம் எனும் ஒலியை எழுப்பியதும் அதைச் செயலென ஆக்குவான். தமிழ்ச்செல்வன் படைக்குழுவிற்கான பாடங்களை வரைந்தான். நீலன் செவ்வை பார்த்து திமிலரும் வேறுகாடாரும் உகும்பரும் தங்களது கருத்துக்களை தொகுத்து முன்வைப்பார்கள். ஒவ்வொருவர் சொல்லுக்கும் ஒரேயளவு பொருள் ஏற்கப்பட்டது. ஒரேயளவு எடை அளிக்கப்பட்டது. புலிகள் தமிழ்க்குடி அரசனைக் கொன்று வீழ்த்திய போது ஏனைய எதிர்ப்புக் குழுக்களும் வெளிப்படையாகப் படை திரட்டத் தொடங்கினர். எதிர்ப்புக் குழுக்களுக்கான இடங்களை நிறுவினர். பயிற்சிச் சாலைகளை உண்டாக்கினர். அரச குடும்பத்தையும் அமைச்சர்களையும் விசுவாசிகள் என அறியப்பட்டோர் அனைவரு புலிகளால் மெல்ல மெல்ல வேட்டையாடப்பட்டனர். புலிகளின் தாக்குதல்கள் சக குடிக்குழுக்களுடன் உண்டான போது முதலில் கடுமையாக எதிர்த்தவர் வேறுகாடார். நீலன் எவ்வளவு கடுமையாக எதிர்வினை புரிந்தும் வேறுகாடார் இது எவ்வகையிலும் அறமில்லையென்றே வாதிட்டார். மரத்தை வேரிலிருந்து அரிக்கும் கிருமியென்றார். தமிழ்ச்செல்வன் நீலனின் நிழலென அங்கு இருந்து கொண்டு மட்டுமே இருந்தான். அவனுக்கு நீலனே சொல். அவனது சொல்லில் எழுவது பிறருக்குப் பொருளாகிக் கொள்ளாமல் போனாலும் அவனுக்கே அச்சொற்கள் பொருளாகவில்லை எனினும் அவன் அதையிட்டு எண்ணிக் கொள்வதில்லை. நீலனுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து அடியமர்ந்த பக்தென அவன் ஆகியிருந்தான்.

நீலனை கொல்லும் குடிப்பகை முறைகள் எழுந்த போது வேறுகாடாரை இணங்கச் செய்து ஒற்றுப்படையை மீள ஒருக்கி குடிகளை உளவு பார்க்கும் அரச முறையை மீண்டும் ஒருக்கியவன் தமிழ்ச்செல்வனே. தமிழ்ச்செல்வனின் மெளனமான நிதானமான நோக்குக் கொண்ட அணுகலை வேறுகாடார் மதிப்பவர். அவனது சொற்கள் தூக்கணாங் குருவியின் கூடென அரிதான மரத்தில் நுட்பமாக முடியப்பட்டு ஆக்கப்பட்டிருப்பவை என்பது வேறுகாடாரின் சொல். நீலன் தணிந்து ஆற்றலை ஒருக்கி பெருந்தலைவனென எழுச்சி காணும் ஒவ்வொரு அடியினிலும் தமிழ்ச்செல்வன் எவருமறியாத தெய்வமொன்று துணையிருப்பது போல் அவனுடன் இருந்தான். நீலன் களங்களை நோக்கியே விசை கொண்டவன். அரசனென அமர்ந்திருக்க அறமே போதுமென வாதிடுபவன். தமிழ்ச்செல்வனே அரசின் நீதியையும் அறத்தையும் நீலனின் நாவால் எழுதுகிறான் என்பது  ஆய்வோரின் மந்தண எண்ணம். குடிகள் அதை எளிய உண்மையெனவே ஏற்றுக் கொண்டார்கள். நீலனில் சுடர்ந்த வேட்கையின் அருமணியொன்றெனவனே தமிழ்ச்செல்வன் என திண்ணைச் சொற்கள் உலாவின.

வேறுகாடார் மெல்ல மெல்ல புலிகளிலிருந்து விலகியவர் போலானார். ஒற்றின் வலையை படைக்கு வெளியிலிருந்து தனித்து செயலாற்றும் நோக்கைக் கொண்டு உருவாக்குவதே நோக்கை படையின் புலன் வெளிக்கு வெளியே அனைத்தையும் ஒற்றறிவாக்கும் என தமிழ்ச்செல்வனை இணக்கினார். வேறுகாடார் குழுவை இரண்டாக பிரிக்கவிருக்கிறார் என நீலனை சிலர் எச்சரித்தனர். வேறுகாடாரின் நுட்பங்களும் மந்தணமும் தமிழ்ச்செல்வனை சற்றே அச்சப்படுத்தியது. அவரில் இயற்கையாக அமைந்த அரச இயல்பும் தோற்றமும் கூர்மையும் அஞ்சக் கூடியது என்றாலும் அவரது இயல்பில் குடியிருந்த விட்டேற்றித் தனமும் விழைவுகளும் தலைமையை யோகமென ஆக்கிக் கொள்ள ஒப்பப் போவதில்லை எனக் கணித்தான். அதன் பிறகே அவருக்குரிய இடத்தை வகுப்பதும் அவரே அறியாது அவரை உளவறியும் இருவரை அவர் படையில் நுழைத்ததையும் செய்தான் தமிழ்ச்செல்வன். வேறுகாடாரின் கூகை விழிகளுக்கு முன்னர் தமிழ்ச்செல்வனது ஒற்றர்கள் இருளில் திரும்பும் ஆந்தையின் பின் தலையென எப்பொழுதும் அவரறியாமல் அவருடனிருந்தனர்.

TAGS
Share This