114: ஒருகணம் : 03
பெருந்தோல்வியைச் சந்தித்து உச்சங்களிலிருந்து வீழ்பவனை விட ஆயிரஞ் சின்னஞ் சிறு தோல்விகளால் வீழ்பவன் கொள்வதே மகத்தான அவமதிப்பும் தீமையின் விழைவும் என எண்ணினான் அசல. நீண்டு விரிந்திருந்த குளத்தில் இளமழை தாமரைகள் மேல் பொழிந்து கொண்டிருந்தது தன் பல்லாயிரஞ் சின்னஞ் சிறு தோல்விகளை. வனத்திலிருந்து பெயர்ந்து வந்த காற்று குளத்தின் கரையில் ஒற்றை இளமரமென நின்று கொண்டிருந்தவனின் குழல்களை மோதி விழுத்திச் சென்றது. ஆறாத அகக்காயங்களே ஒருவனுக்குத் தன் ஆழமான தீமைகளுக்கான நியாயங்களை அளிக்கிறது. அசல இளவயது முதல் அடைய எண்ணுவது ஒவ்வொன்றும் விலகிச் சென்று அப்பால் வீழ்வதை பிறிதொருவருக்கு அது மிகவும் பொருந்தி ஒளிர்விடுவதை நோக்கியிருக்க வாய்த்தவன். குடியால் சிறுமையோன். எண்ணிய காதல்கள் கூடாதவன். அடைய விழைந்த வெற்றிகள் தவறியோன். பிறர் பொருட்டென வாழ்க்கையை ஆக்கிக் கொள்வதன் துயர்க் கரையில் அமர்ந்திருப்போன். பிறரறியாத அவன் அகம் உலகின் நெறிகளாலும் இயலுமைகளாலும் கட்டப்பட்டவை. அவன் அவனுக்கென்றே ஆக்கவிருக்கும் அரசும் கூட அவன் எண்ணிய முழுமை கொள்ளப் போவதில்லை என்பதைத் தூலமாக அறிந்திருந்தான். அவனை உந்தும் விசைகளை ஆடையை உதறும் காற்றென எண்ணுவான். அவன் அங்கேயே வேர் பதிந்து நின்றிருப்பவன். அவனைக் காலங்கள் மகிழ்விப்பதில்லை. மகிழ்ச்சியைத் துயரற்ற நிலை என்ற புத்தரை நோக்கி அவன் உறுமும் விழிகளுடன் நின்றிருக்கிறான். இக்கணம் அவன் மேலெனப் பறந்த பருந்து தன் விசைகொள் சிறகுகளை ஒருக்கிக் கொண்டு வனவிளிம்பில் நின்றிருந்த இலைகளற்ற முது மரத்தில் அமர்ந்து கொண்டது. அசல விரிவெளியில் பெய்திடும் மழையை நோக்கிக் கொண்டே தன் மேனியில் தொடுபவற்றை எண்ணினான்.
அகமென்பது நீட்டப்படும் கைகளுக்கு மறுக்கப்படும் யாசகம் என வலியுடன் நொந்து கொண்டிருந்தது. குவேனியின் எண்ணம் மட்டுமே அவனுள் பனிக்கும் ஒரே கண்ணீர்த் துளி. அதற்கும் சில காலங்களின் பின் என்ன பொருளிருக்க இயலும். வெல்லப்படும் அரசுகளோ போர்களோ பெண்களோ கனவோ கூட நிறைவை அளிக்கப் போவதில்லை. பிறகு எதற்கு வாளும் நுட்பங்களும் திட்டங்களும் சூடி சித்தம் கனன்று கொண்டிருக்கிறது. எதிலாவது தீப்பற்றிக் கொள்ளா விட்டால் நூர்ந்து உயிரற்று மாய்ந்திருக்கும் பெருந்திரிக் குவியல் எனத் தன் சித்தத்தை எண்ணிக் கொண்டான். பற்றுவதால் மட்டுமே ஒளிகொள்ளும் திரியே வாழ்வு என எண்ணமெழுந்த போது கூடவே சிரிப்பும் எழுந்தது. பித்திலும் கசப்பிலும் ஊறிய கொலைச் சிரிப்பு அவன் உதட்டில் அவிழ்ந்தது.
நீலனிடம் எஞ்சும் புன்னகை எதனால் என எண்ணினான் அசல. அவனை ஒற்றறிய அனுப்பும் ஒவ்வொருவரும் திரும்பி வந்து தகவல்களை ஒப்பிக்கையில் அவனுடைய அகத்தின் நிலையை ரகசியமாக அறிந்து கொண்டிருந்தான் அசல. எது அவனைப் புன்னகைக் வைக்கிறது. மாசிலாச் சிரிக்கும் விழிகள் எனச் சொன்னான் ஓர் ஒற்றன். அவரது விழிகள் நீர்ப்பரப்பில் முத்துக்களென ஒளிவீசுகிறதென்றான் பிறிதொருவன். உடல் தேய்ந்து நடக்கையிலும் வலி நெஞ்சை அழுத்துகையிலும் அவனிடம் ஒளிமிக்க புன்னகையொன்று ஊன்று கோலென உடன் நிற்கிறது என்றான் கடைசி ஒற்றன். எந்த தெய்வங்கள் அவனைக் காக்கின்றன. எவற்றின் மீது அவன் நிழல் தாங்கப்படுகிறது. என்னை ஏன் அவை நெருங்கவில்லை. தன்னை விட நூறு மடங்கு கொலைகள் புரிந்தவன் நீலன். தன்னை விட ஆயிரமாயிரம் விழிகளின் கண்ணீர்ப் பெருக்கில் சிறு தெப்பமென மிதப்பது அவன் வாழ்வு. புதிராலோ மாயத்தாலோ அல்ல. பிறிதொன்று அவன் சித்தத்தில் ஆணையை எடுக்கிறது. காலமா. எழுந்திட்ட தெய்வமா. மரணமா. பேரரசன் என்று அவன் அமர்ந்திருக்கும் பீடமா. எது அவனை இத்தனை தொலைவு உயர்த்திப் பிடிக்கிறது. பல்லாயிரம் உடல்களின் நிணச் சேற்றில் நான் ஏன் நசிகிறேன். அசலவின் அகம் சொற்களை வாள்களெனச் சுழற்றி ஒன்றுடன் ஒன்று பொருதி ஒழிந்து கொண்டிருந்தது.
கரும்புரவி கனைக்குமொலி கேட்டுத் திரும்பி நோக்கினான் அசல. அதன் மேல் தூவிய மழைத் தோகைகளை வால் சுழற்றிக் குடையாக்க எண்ணித் தவறிக் கொண்டிருந்தது புரவிவால். புரவியை நோக்கி நடக்கையில் அடிக்கொருமுறை அவன் தேகம் மண்ணுள் மண்ணுள் நுழைந்து அடுக்குகளின் அடுக்குகளைத் திறந்து பிலவுகளின் பிலவுகளின் ஆழத்தில் நீங்கா இருட்டில் கைவிடப்பட்டு ஒற்றை அகலுமின்றிச் செல்லப் போகிறதென எண்ணிக் கொண்டான். தான் வியக்கும் மகத்தான பேருருக் கொண்ட வாழ்வினை அழிக்குமிடத்தில் அமர விரும்பாத மானுடர் உண்டா. அழித்துக் கொள்கையிலேயே அகங்காரம் முழுதொளி பூண்கிறது.
தமிழ்குடியின் கிழக்குப் பட்டினத்தில் பாடுமீன்கள் ஒலிக்கும் ஆற்றின் கரையொன்றில் நீலனைப் பற்றிய முதல் கூத்தை இளவயதில் கண்டிருந்தான் அசல. தீப்பந்த ஒளி பற்றுக பற்றுக என காற்றை இறைஞ்சிக் கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் குழவிகளும் அத்திரிகளும் காளைகளும் வண்டில்களும் சூழ்ந்திருந்த மணல் வெளியில் நிலவின் குளிர்மை வெள்ளொளிச் சிரிப்பில் அலையடித்துக் கொண்டிருந்தது. ஆற்று மீன்களின் சுட்ட வாசனையும் தீயிலைப் புகையின் நறுவாசமும் கள்ளின் வீச்சு மணமும் நாசியில் நுழைந்து மயக்கேற்றியது. இளம் அசல தன் தோழர்களுடன் சென்று சுட்ட மீனை வாங்கிய பின்னர் கள்கலயத்துடன் கூட்டத்தின் பின் நிரையில் அமர்ந்து கொண்டான். ஆற்று மீனின் சுடுசதையிலிருந்து பிரிந்த ஆவி நாசியை நிறைத்து சித்தத்தில் நீந்தியது. ஒரு துண்டு சதையைப் பிய்த்து வாயிலிட்டான் அசல. வாழையிலையில் சுற்றப்பட்ட மீன் இளந்தேகமென குழைவும் பொலிவும் கொண்டிருந்தது. கள்ளை ஒருவாய் அருந்தியவன் தன் தலைப்பாகையை ஒருக்கிக் கொண்டு ஊழ்கத்திலென உடலை ஒருக்கி அமர்ந்தான். அருகிருந்த தோழனொருவனிடம் தீயிலைத் துதியை வாங்கியவன் அதன் மீன்வாய் போன்ற இழுபகுதியை வாயில் வைத்து வாலில் புகைந்த தீயிலையை உறிந்தான். இதழிதழாக முத்தங்கள் இறங்குவது போல அவன் தொண்டைக்குள் புகை நுழைந்தது.
சிற்றம்பலத்தில் விறலியொருத்தி கையில் சீறியாழுடன் தோன்றினாள். காற்றில் கரைந்து விடுபவள் போல அவள் தேகம் உருகிக் கொண்டிருந்தது. விழிகள் கொவ்வைகளின் சதையுடல்களெனச் சிவந்திருந்தன. உதடுகள் ஒட்டிய இரு மேனிகளென அணைந்திருந்தன. அவளது கழுத்தில் உடுக்களைக் கோர்த்தது போல முத்தாரமொன்று மினுங்கியது. வெண்ணாடையில் புழுதி படிந்திருந்தது. தேக்கின் பூங்கொத்தென ஆடை வண்ணம் தோன்ற கருவுடல் நழுவும் யாழொலியென ஆடைக்குள் நின்றிருந்தது. குடிகள் விறலியை நோக்கி விழி கூர்ந்தனர். அவள் அமர்ந்து கொண்ட போது சிற்றம்பலத்தின் தோற்பரப்பில் மெய்ப்புல்கள் எழுகின்றன என எண்ணினான் அசல. அவனது தாடியை நீவிக் கொண்டே குழலை வலப்புறம் ஒருக்கினான்.
நிலவொளியில் அவள் மேனியும் தோற்றமும் தெய்வமொன்று யாழெடுத்து மானுடருக்கென இசைக்கவிருப்பது போல தோன்ற அசலவின் இளநரம்புகள் வேர்களெனப் பின்னிக் கொண்டு நுண்மயிர்கள் விரிந்திருக்க அகம் கனலத் தொடங்கியது. விறலியின் குரல் காற்றில் மெல்லிய ஹம்ம் என்ற ஒலியை எழுப்பி அமைந்தது. இசைப்பதற்கு முன் கருவியைத் தொடும் வாத்தியமெனக் காற்று இசைத்தமைந்தது. அவளது குரலில் எழுந்த பாடல் இனிய காதற் பாடலென்றே அவன் எண்ணினான். அக்காதலின் சொல்லில் இழையும் நீலனின் முகம் அவனெதிரில் நின்ற பெண் தேவியின் தகிக்கும் பக்தியென எண்ணிய போது நஞ்சென அப்பெயர் கசக்கத் தொடங்கியது. விறலியின் குரல் காற்றில் மலர்ந்து மிதந்தது.
“உன்னையல்லால் பிறிதெவரை நோக்குவேன்
என்னை ஆளும் படையோனே
கற்றனைத்தூறும் யாவும் மறந்திட்ட
போதிலும்
நேசேனே உன்னை
நான் மறவேனே
எத்திக்கும் எழுந்திட்ட உன் முகம் காணவே
எத்திக்கும் நானும் மலர்வேனே
உலகங்கள் யாவும் உன் பெயர் இட்டேன்
கனவுக்கு யாவும் உன் குரல் கொண்டேன்
இருளிட்ட புலரியில் இளமழை போலவே
கனியிட்ட சாறின் பிழிதுளியே
பிறை வட்ட தேகனின் நிறைவைத்த குடமென
புடவியின் மேலே சுடர்கனலே
சுரந்திட்ட மார்புகள் இனியமுதாகவே
எழுக என் வேந்தே நீயெழுக
தருக என் கோனே உன் கழல்கள்
அடிவைத்த பாதம் ஏந்திடுவோம்”
அவள் குரல் ஏறியும் இறங்கியும் காதலின் வழித்தடங்களில் தொடரும் ஆறென நகர்ந்து கொண்டிருந்தது. விறலியின் கண்களில் மின்னிய உருக்கம் அவனை நுனிவாள்முனையென தொட்டகன்றன. இருளைத் தொட்டு அகல்வது போல என எண்ணியவன். இருளில் அவள் அவனைப் பார்த்தாள் என எண்ணமெழ வியந்து கொண்டான். மூன்றாவது முறையும் அவள் இருளில் மின்னும் அவன் விழிகளை நோக்கிய போதே அவள் நோக்குவது எதையென அவனகம் அதிர்ந்தது. அவனில் ஒருகணம் நீலன் தோன்றியிருப்பானா. நீலனின் எதுவோ ஒன்று அவனிலும் குடியிருக்கிறதா. அதைத் தான் அவள் விழிகள் கண்டு தொட்டுத் தொட்டு மீள்கிறதா. அசல தலையை உதறிக் கொண்டான். தீயிலைத் துதியின் மீன்வாயில் ஆழ்முத்தமெனப் பற்றி புகையை உறிந்து மீண்ட போது நீலனைப் பற்றிய வரிகள் அவன் குரலில் ஒலிக்க அதிர்ந்த வானை நிமிர்ந்து நோக்கினான். விண்மீன்களின் ஒளித்துள்ளற் பெருக்கில் நிலவு சுடர்ந்து தண்மை கொண்டிருந்தது. நிலாவை நீலனின் முகம் வரையப்பட்ட சித்திரச் சீலையென எண்ணிய போது அசல தன் சொந்தச் சொற்களால் பாடலைத் தொடர்ந்தான். அச்சொற்கள் நீலனைக் கொண்ட தன்னைப் பற்றியது. நீலனாக விழைந்த தன் கனவைப் பற்றியது எனக் கண்ட போது உவகையெழ அகத்தில் கூச்சலுடன் பாடலைத் தொடர்ந்தான். விறலியின் கரங்களில் தந்திகள் ஒலித்து அனுப்பும் நாதங்கள் அவனை அறுத்து அறுத்து ஒட்டின. ஒவ்வொரு இசைத் துணுக்கும் குரல் நெளிவும் காதலில் தழைந்தது. பக்தி காதலென்றாகுவது அரசன் இறையென்றாகுவது என எண்ணினான் இளம் அசல.
*
பருந்து இலையற்ற கிளையிலிருந்து சிறகை அடித்துப் பறக்கத் தொடங்குகையில் அவனது சித்தம் மீண்டும் புரவியைக் கண்டது. கரும்புரவி கால்களை மாற்றிக் கொண்டு அவன் வரும் திசையை நோக்கி தலையசைத்தபடி நின்றிருந்தது. தன்னுள் எழும் கசப்பு எதனால் என எண்ணிய அசலவின் நாவு காய்ச்சல் கொண்டது போலக் கசப்புச் சுவை நீட்டியது.
குடச மரத்தில் கட்டப்பட்டிருந்த கரும்புரவியை அவிழ்த்துக் கொண்டிருந்த போது குடச மரத்தின் கழுத்து வளைவில் குவிந்திருந்த நத்தைக் கூடுகளின் வெண் கோதுகளை நோக்கினான். சுழிகொண்ட சிறு வெண் கற்களெனக் கூடுகள் அசையாது அமைந்திருந்தன. குவிந்திருந்த நத்தைக் கூட்டத்தை தன் அகம் என எண்ணிச் சிரித்தான் அசல. அடையப்பட்ட ஒவ்வொரு சிறுமைக்கும் அவன் அகம் சுருண்டு கோதுக்குள் ஒடுங்கிக் கொள்வது. பல்லாயிரம் நத்தைக் கூடுகள் ஒட்டிய மாபெருங் குடச மரமெனத் தன்னை எண்ணிக் கொண்டு கரும்புரவியில் ஏறினான். புரவி பிடரியைத் தூக்கி செல்வழியை அகத்தால் அறிந்து முன் நடக்கத் தொடங்கியது. அசலவின் உதட்டில் நீலனைப் பற்றிய விறலியின் பாடல் முணுமுணுப்பென எழுந்து பித்துக் கொண்ட காதலன் போலப் பாடினான். பூமியில் எவருமில்லையென்ற போது அப்பாடல் மட்டுமே தனித்துணையென. நத்தைகளின் குரல் அப்படித் தான் ஒலிக்கும் என்பதைப் போல. சிறுமை கொள்பவர்களுக்குள் ஒளிரும் கடைசிச் சுடர் போல.
பருந்து வானிலெழுந்து அரண்மனையின் திசை நோக்கி நூலறுந்த பட்டமென விரைந்து நீங்கத் தொடங்கியது. அசல ஒருகணம் அப்பருந்தின் சிறகுச் சுழல்வையும் விழிமணிகளையும் நோக்கினான். இளமழை நுண் கொடுக்கென அவனைத் தீண்டிக்கொண்டே பெய்தது. அதை வேண்டுபவன் போல இளமழையில் பட்டினத்தின் பெருஞ்சாலை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது அசலவின் கரும்புரவி.