115: ஒருகணம் : 04

115: ஒருகணம் : 04

நீர்க்குமிழியில் காற்று நுழைவது போல வெண்தலை கொண்ட பருந்து சிறகை அசையாது ஏந்தியபடி அரண்மனையின் காவற் கோபுரத்தின் மேலே தாழ்ந்து கொண்டிருந்தது. அரசு சூழும் அவையின் சாளரத்தில் நின்றிருந்த நீலழகனின் முகத்தில் சாம்பலின் வண்ணமிகு சிற்றொளி பரவி உறைந்திருந்தது. சாளரத் துண்டில் நீலன் ஆடியில் முகமெனத் தோன்றினான். பருந்து முன்முகப்பில் புறாக்களற்ற மேற்பரப்பில் அமர்ந்து கொண்டது. கால் நகங்களை ஒருகணம் உற்று நோக்கிய பின்னர் நீலனை நோக்கியது.

நீலன் பட்டினத்தின் மனைகளும் மன்றுகளும் சிற்றாலயங்களும் நோய் மூத்த மேனியின் கொப்பளங்கள் என எண்ணினான். சிறுவீதிகளும் சாலைகளும் முதிர்ந்த தோலெனச் சுருக்கங்கள் கொண்டிருக்கின்றன என நோக்கியவன் நோய் நீங்கிய பின்னரும் சித்தம் அந்தக் காலங்களின் நோக்கு முறையை மாற்றிக் கொள்ளவில்லை என எண்ணிப் புன்னகை கொண்டான். அவனுள் நூறு நூறு கொப்பளங்கள் எழுந்தன. விழியிமைகளிலேயே முதற் கொப்பளம் தோன்றிப் பருத்து இமை நுனிகளெங்கும் சீழென நுரைத்துப் பரவத் தொடங்கியது. மெய்யான நோய் அகம் கொள்வதே எனச் சுடர் மீனன் சொன்னதை நினைத்துக் கொண்டான்.

மானுடருக்கு எதற்குத் துயர்கள் அளிக்கப்படிருக்கின்றன. சிறுமையாளர்கள் அடையும் பெருந்துயர்களுக்கு இணையாக பிற எதுவேனும் வஞ்சம் கொண்ட விசையென எழ முடியுமா. தன்னுள் ஒடுங்கியிருக்கும் அகமே தன் நோக்கென ஆகியிருக்கிறதென நீலன் எண்ணிக் கொண்டான். ஆற்றுவதை யோகமென்று எண்ணிச் செயல் பெருக்கும் வரை அவன் அகம் அவனுள் அவன் அட்டையெனச் சுருண்டு படுத்திருப்பது. கைவிடப்பட்ட தொல் ஆலயமொன்றின் பாசி படர்ந்த எந்த முக்கியமுமற்ற மூலையொன்றில் தனித்துருண்டு காலத்தில் பொருட்டின்மையுடன் ஒழிந்திருப்பது. ஆனால் அவன் நீண்ட யாத்திரையை இயற்றியிருந்தான். இக்கணம் வரை செயல்களே அவனை அள்ளி வந்த பேராற்று வெள்ளம். அதற்கென அவன் புரிந்தவை அனைத்தும் அவனை ஊழெனப் பின் வருகின்றன. அவன் தேகத்தை வெய்யிலில் உலர்த்தி உப்பிடுபவை அவையே. காய்ந்த மார்புப் புண்ணில் சீழ் இனியதென வழிகிறதென எண்ணினான் நீலன்.

சிறு வயதில் அவன் அன்னையின் அன்னை திருவிழியாளுடன் கதை கேட்ட திண்ணையிரவு ஒருகணம் நினைவில் எழுந்தது. சின்னஞ் சிறு கதைகளை நெடுநேரம் ஒவ்வொரு பருப்பொருளையும் தொட்டெழுப்பி அதில் கனவின் வண்ணங்களைப் பூசி கதை சொல்வதில் திருவிழியாள் நூதனமானவள். நிலவளவு வட்டக் கரும்பொட்டு நுதலில் தீற்றியிருப்பாள். விழிகளின் இருகரைகளிலும் மூன்று புல்லிதழ்களெனக் கருங்கோடுகள் வரைந்திருப்பாள். அகன்ற விழிகள் சிற்பத்திலென விறைத்திருப்பவை. நீண்ட வெண்கூந்தலை இருதோள்களாலும் பெருக விட்டு நிசிகளில் அவள் சொல்லும் பேய்க்கதைகள் கனவுகளை அஞ்ச வைப்பவை. நீலன் ஒவ்வொரு முறையும் மெல்லிய அச்சத்துடன் கதை கேட்கத் தொடங்குவான். பின்னர் கதையின் இடையில் அலறலுடன் எழுந்து அழும் குழந்தைகளை அன்னையர் இழுத்துச் செல்வதை நோக்கி நோக்கி ஒவ்வொரு கணத்தையும் பற்றி அஞ்ச மாட்டேன் அஞ்ச மாட்டேன் எனச் சொல்லிக் கொள்வான். அவனுள் எழும் அச்சத்தை அவன் ஆணவம் வந்து தொட்டு விலக்கி அகற்றும். நான் கதைகளை விட பயங்கரத் தோற்றமும் ஆற்றல்களும் கொண்ட பேய்களையும் விட பெரியவன் என எண்ணிக் கொள்வான். தன்னை வெல்லும் கதையை கேட்கவே திருவிழியாளின் முன்னே நேரிருக்கையில் வந்தமர்ந்து விழிகள் அசைக்காது அவளையே கூர்ந்து அமர்ந்திருப்பான். திருவிழியாள் அனைத்துக் குழந்தைகளும் அலறி வெளியேறிய பின்னரும் அமர்ந்திருக்கும் இளநீலனை நோக்கி குறும்புடன் முது இதழ்களைக் குவித்து அச்சமில்லையா என் செல்லக் கொழுந்தே எனக் கூவிய பின்னர் தான் கரந்து வைத்திருக்கும் அதிசயமும் அச்சமும் கொடுங்கணங்களும் கொண்ட உக்கிரமான கதைகளை தொல்தெய்வமொன்று எழுந்ததைப் போல உடல் விதிர்க்கச் சொல்லுவாள்.

பயம் நீலனின் நரம்புகளின் குருதியில் ததும்பி ஓடுகையில் அவனது சித்தம் அம்பின் முனைநுனி போல கூர் கொண்டிருக்கும். இன்னும் சில கணங்கள் தான். அனைத்துக் கதைகளும் எக்கணத்திலோ முடிவடைய வேண்டியவை. அதுவரை பொறுத்திரு என் நெஞ்சமே. அஞ்சாதே. அஞ்சாதே. அனைத்தும் சொற்கள். அவை உன்னை வெல்லப்போவதில்லை என எண்ணிக் கொள்வான். ஒரு முழுவெண்ணிலா நாளில் திருவிழியாள் தனித்திருந்த நீலனை நோக்கி உறுமலின் ஒலியில் ஒரு ராட்சதனின் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

மாமுதலையென எழுந்த ராட்சசன் ஒருவன் தொல்பழங் காலத்தில் தலைப்பட்டினத்தின் வனக்கரையில் ஆநிரைகளைக் கவர்ந்து வந்தான். அவனது கரங்கள் முதுயானையின் சொரசொரப்பான தோல் போல தடித்துக் கறுத்திருக்கும். முகத்தில் இரண்டு தந்தங்கள் கொண்டவன். அவனது பெருமுகம் யானையின் மத்தகம் போன்று விரிந்திருக்கும். இருகால்களிலும் இரண்டு தேர்களைக் கட்டி இழுக்கக் கூடியவன். அவனை வெல்லும் வீரருக்கு அரசர் ஆயிரம் பொன்னும் ஆயிரம் பசுவும் அளிப்பார் என்ற செய்தி முரசறையப்பட்ட போதும் திண்ணையில் மாலைப் பேச்சென அது பொருளாகவில்லை. அவனைப் பற்றிய அச்சக் கதைகளே முதியவர்களுக்கும் குழவிகளுக்கும் பெண்களுக்கும் நெஞ்சறைய வைத்தன. ஆடவர்கள் தாங்கள் அக்கதைகளைச் செவியுறவில்லை என்பது போல இருளில் சர்ப்பங்களென நெளிந்து வளைந்து அகன்றனர்.

நாளும் பொழுதும் அவனது பல்லாயிரம் ஆந்தைகளின் பேரலறல் போன்ற குரல் பட்டினத்தின் பகல்களையும் இரவுகளையும் அறைந்து அறைந்து அதிரச் செய்தது. பசுக்களும் ஆடுகளும் பலியாகி முடிந்த பின்னர் கோழிகளும் புரவிகளும் காணாமலாகின. அவனது உடலிலிருந்து எழும் வாசனைக்கு எந்த விலங்கை உண்கிறானோ அந்த விலங்கை ஈர்க்கும் மணம் உருவாகிவிடும் என்றனர் முதியோர். இருளிலும் பகலிலும் வசியப்பட்டவை போல நடந்து செல்லும் தங்களின் விலங்குகளை வனவிளிம்பு வரை தொடர்ந்து துரத்திச் சென்று அதற்கப்பால் செல்ல முடியாது என்று திரும்பி அழுது கொண்டே வரும் குடிகள் பின்னர் அவற்றைத் தொடராமலாயினர். இருளில் கடலிலிருந்து மீன்களும் ஆமைகளும் நண்டுகளும் பட்டினத்தின் தலைக்கு மேலே பறந்து கூட்டங் கூட்டமாகச் செல்வதை நோக்கினோம் எனக் கதைகள் எழுந்த பின்னர் எவரும் தூங்கமலாயினர். இருளில் வானை நோக்கியே வலையென விரிந்த கண்களை பரத்தியிருந்தனர்.

அவனைக் கொல்வதெற்கென்று பல தேசங்களிலிருந்தும் வீரர்களை அழைத்து வந்தனர் குடிகள். அதற்காகத் தாம் திரட்டி வைத்த செல்வத்தையெல்லாம் அள்ளியிறைத்தனர். அரச கருவூலம் வற்றி உலர்ந்தது. மனைகளும் மன்றுகளும் செல்வம் ஒழிந்தன. அவனது பெரும்பசியோ நில்லாததாகியது. புகழ்பெற்ற வீரர்கள் ஒவ்வொருவராய் வனத்திற்குள் செல்வதும் பிறகு அவன் வயிற்றுக்குள் செல்வதுமாக இருந்தனர். அவன் வனக்கரையை விட்டு அசையவில்லை. பட்டினத்திற்குள் நுழையவோ வெளியேறவோ அவன் இயன்றானில்லை. அவனாக எண்ணாமல் அவன் இங்கிருந்து மீளப் போவதில்லை என்றனர் நூலாய்ந்தோர். அவனது பசிக்கும் உலை வயிற்றுக்குள் மானுட ருசியும் கலந்த போது ஒருவரை ஒருவர் சங்கிலியிட்டுக் கொண்டு மனைகளில் உறைந்தனர் குடிகள். அவன் வாசனையில் பித்துக் கொண்டு எவரேனும் இரவுகளில் ஓலமிட்டுக் கூவி அவனை நோக்கிச் செல்லவெனச் சங்கிலிகளை அறுக்க பற்களால் கடித்து மனைச் சுவர்களை அறைந்து வெறித்தனர்.

சமன் என்ற சிறுவன் தன் வீட்டின் கீழே நிலவறை ஒன்றை அமைத்து அதில் மூன்று கோழிகளையும் ஒரு சேவலையும் வளர்த்து வந்தான். ராட்சசன் பற்றிய கதைகளைக் கேட்பதை அவன் இறுதி வரை நிறுத்தவேயில்லை. ஆயிரம் கதைகளின் வழி அவன் இராவண மகாராசனின் முதுதாதையொருவன் எழுந்து வந்தது போல ஆயிரந்தலைகள் கொண்டான். ஈராயிரம் கரங்கள் கொண்டான். ஆனால் சமன் அப்பேருருவைக் கற்பனையிலும் அஞ்சவில்லை. தன் கோழிகளைக் காப்பாற்றும் வகையை மட்டும் எண்ணித் திட்டமிட்டான். செங்கொண்டையும் தாடியுங் கொண்ட கருஞ்சேவலை அவன் இரியன் என்றழைப்பான். மூன்று கோழிகளும் சரசுவதி லட்சுமி பார்வதி என அழைத்தான். அவை குஞ்சென மண்ணில் நிகழ்ந்தது முதலே அவனை அறிந்திருந்தன. அன்னைக்கும் தெரியாமல் சமன் நிலவறையை உண்டாக்கிக் கோழிகளை வளர்த்தான். அவனது தந்தை அவனுக்கொரு கவணை அளித்திருந்தார். அவனது ஒரே படைக்கலம் அதுவே. பருந்துகளிடமிருந்தும் ஏனைய விலங்குகளிடமிருந்தும் தன் கோழிகளைக் காத்துக் கொள்ள அல்லும் பகலும் கவணைப் பயின்றான். கவணை அவன் இழுத்துக் கல்லை எய்கையில் அதுவோர் அம்பென்றே எண்ணிக் கொள்வான்.

படைக்கலம் எதுவென்பது காத்தலில் முக்கியமே அல்ல. ஒரு ஆயுதமே நம்மை முற்றிலும் வெல்ல வைக்க அடிப்படையானது. அகத்தில் கூர்ந்திருக்கும் நோக்கின் நுண்மையே படைக்கலனைத் தேர்கிறது. தன் நோக்கை ஒரு பருவடிவென ஆக்கிக் கொள்கிறது. பீமனுக்குக் கதை போல. அர்ஜூனனுக்குக் காண்டீபம் போல. சமனுக்குக் கவண். ஒரு படைக்கலம் ஒருவரின் அகமென்றான பின்னர் அகமும் அப்படைக்கலனின் ஞானத்தை அடைந்து கொள்ளும். கவண் மனிதரின் ஆதிப் படைக்கலங்களில் முதன்மையானது. எறிந்து கைகள் ஓய்ந்த எவரோ ஒரு முதுதாதையின் கரத்தில் முதற்கிளை தீட்டப்பட்டு தோல் வார் பூண்டு இழுவிசை பயின்று நாணென்று ஆகி கல்லில் ஏறி தன்னை எய்தது அவரின் அகத்தின் கூர்மையே. அறிக மைந்தா. அகம் கூராதவன் எப்போரிலும் வெல்வதில்லை. அவன் அஞ்சுவது அவன் அமர்ந்திருக்கும் நிலையின்மையால். உறுதி கொண்டவன் தன் அகத்தையே தன் படைக்கலமென ஆக்கிக் கொள்வான். அதுவே எதற்கும் தன்னை மாற்றிக் கொள்ளாத முழுமை ஞானம். அதையே நீ நம்ப வேண்டும். நீ கையில் ஏந்துவது உன்னை. போரென உன் முன் படைக்கலம் தூக்கியொருவன் எழுந்திட்டால் அவன் தெய்வமே ஆனாலும் நீ எதிர்நின்றே ஆக வேண்டும். வீரனே காலங்களைச் சமைக்கிறான். அறமும் அக்காலம் அளிக்கும் திரண்ட ஞானமும் அவன் சமையலில் உப்பு.
அவன் குருதியிலும் கண்ணீரிலும் உண்டாக்கும் உணவே அடுத்த காலத்தில் பசிதீர்க்கும் அருமருந்து.

சமன் தன் படைக்கலத்தை அவன் அகமென்று ஆக்கிக் கொண்டான். கருநிலவு நாளொன்றில் கோழிகளின் கூவலில் பிசகும் தாளத்தையும் அவை உச்சாடமென ஒலியெழுப்புவதையும் திண்ணையில் துயின்ற சமன் கேட்டான். அவ்வொலி கேட்டதும் அனிச்சையாக அவன் கரம் கவணை எடுத்துக் கொண்டது. இடையாடையை இறுக்கிக் கட்டி சிறு குழலை உதறி முடிந்து கொண்டான். அவன் மேனியில் தீயலைகள் போல குருதி பரவி எரிந்தது. அவன் எதிர்நோக்கியிருந்த நாள் அதுவென அவன் ஆழகம் சொல்லியது. ஒரு மெய்வீரன் கேட்க வேண்டியது ஆழகத்தின் குரலையே. பிறதனைத்தும் அவன் அகத்தை ஒருக்கிக் கொள்ள முன்னர் ஒருக்க வேண்டிய சொற்கூச்சல்களே. ஒரு மெய்வீரன் நிகழ்ந்தவற்றிலிருந்து தன்னை எடுத்து அமைத்துக் கொள்கிறான். தான் தனது படைக்கலத்தை ஐயமின்றி ஏந்தி நிற்கும் கணம் வரை அது அவனுக்கு வணங்கும் தெய்வம் மட்டுமே. போரிற்கான கணம் எழுந்திட்ட பின்னர் அவன் ஆளும் தெய்வம் அது.

சமன் அரவமின்றிக் கால்களை எடுத்து வைத்து நிலவறை வாயிலை நோக்கிச் சென்றான். இருளில் மரங்கள் அசைத்த காற்று மேனியில் சில்லிட்டுப் பரவிய வியர்வையின் சிறு கோடுகளை அழித்துக் கொண்டிருந்தது. இரியன் மூன்று கோழிகளின் பின்னரும் சீரான நாரைக் கூட்டக் கோட்டு வடிவில் சென்று கொண்டிருப்பதைக் கண்டவன் அவனும் கூட்டத்திலொரு சேவலென ஒருங்கிக் கொண்டான். வனவிளிம்பில் காட்டு மரங்களின் நிழல்கள் இருளில் கிழிந்த கருவண்ணப் போர்வையென விரிந்து விழுந்து கொண்டிருந்தது. கோழிகளின் உடல்கள் நிழல்களுக்கும் இருளுக்குமிடையில் மினுங்கின. ஒவ்வொன்றும் ஒரே திசையை நோக்கி சீர் தாளத்தில் நடந்தன. போருக்கு அணிவகுத்த படைப்பிரிவென.

மரங்களற்ற குகையொன்றின் வாயிலில் அவை நிரையில் நின்றன. குகையின் வாய் பேராமையொன்றின் ஓடென இருளில் திறந்திருந்தது. குகைக்குள்ளிருந்து வெப்பங் கலந்த மூச்சுக் காற்றொன்று மூசி மூசி அடங்கியது. பெரும்பசியில் நின்றிருக்கும் வேழமொன்றின் முன் சிதறிய அன்னப் பருக்கைகளென கோழிகளும் சேவலும் நின்றிருந்தன. சமன் சிறிய பாறையொன்றின் பின் நிலையெடுத்தான். கவணை எடுத்து தன் தோற்பையிலிருந்த கூர்மையான கற்களை தொட்டுப் பார்த்துக் கொண்டான். முதற் கல்லை எடுத்து அதன் கூரைச் சரிசெய்த பின்னர் கவண் வாரில் பொருத்திக் கொண்டு குகை வாயை நோக்கியிருந்தான். பார்வதி முதலில் குகைக்குள் நுழைந்த போது குஞ்சொன்றின் செட்டையொலி அடங்குவது போல ஒலி கேட்டது. லட்சுமி இரண்டாவதாய் தயங்கியது போலக் காலெடுத்து குகையுள் நுழைந்தாள். ஒற்றை இறகு முரசுத் தோலில் விழுந்ததென ஒலியெழுந்தடங்கியது. சரசுவதி நேராகச் சென்று ஒலியின்றி அடங்கினாள். இரியன் ஒருகணம் காலைப் பின்னால் வைத்து நீள் தொண்டையை உயர்த்திக் குகை வாயிலை நோக்கிய போது தலை மட்டும் வெளியே நீட்டி பாறைக் கட்டிகள் போன்ற பல்லை நெருமி இரியனை நோக்கினான் ஒற்றை விழிகொண்ட ராட்சசன். அவனது விழி ஓவியம் போல அசைவற்று காற்றிலாடும் திரைச்சீலையென மினுக்கம் கொண்டிருந்தது. அறியாமை கொண்ட குழவியின் விழிகளென அவை தோன்றுவதை எண்ணி சமன் வியந்து கொண்டே கல்லை இழுத்து அவன் விழியை நோக்கி எய்தான். முதலையின் வாயென இமை மூடிக்கொண்டது. கல் அகன்று விழுந்தது. உறுமியபடி அலறலோசை எழுப்பிக் கொண்டு குகைக்கு வெளியே வந்து மாமரங்களைப் பெயர்த்தெறியும் பெருவேழம் போன்ற மேனியை சினத்தில் சுழற்றிக் கொண்டு அங்குமிங்கும் நோக்கினான் ராட்சசன். தோலில் முதலைகளின் தோல் மினுக்கு. கரங்களில் பெருமரங்களின் வேர்ப்புடைப்பென நரம்புகள். இருளில் விழுந்த மலையின் நிழல் போல நின்றிருந்தான்.

சமன் நேர்ப்போருக்கு அழைப்பவனென அவன் நிழல் விழும் தொலைவிலிருந்த சிறுபாறையில் ஏறி நின்று கவணை எந்த நடுக்குமின்றிப் பற்றிக் கொண்டிருந்தான். ஒற்றை விழியிமையை மடித்து அவன் விழியிருக்கும் உடல் அளவைக் கணித்து கற்பனையில் அவன் பேருடலை வரைந்து கொண்டான். அவன் தன் முன் எழுந்து நிற்பதைப் பார்த்த ராட்சசன் ஒருகணம் குழம்பிக் கலங்கினான். நிறுத்து என்பது போலக் கையை நீட்டினான். அவனது குரல் நூறு பசுக்களின் குரல் வளையிலிருந்து ஒலிக்கும் அலறல் போல ஒலிக்க “யார் நீ. நிறுத்து. என்னைக் கொன்று விடாதே” என்றான். அச்சொற்களைக் கேட்ட சமன் விழிகளை முற்றாகத் திறந்து கொண்டு கவணையும் கையையும் இறக்காமல் “இங்கிருந்து போய்விடு ராட்சசனே. இல்லையேல் இங்கேயே நான் உன்னைக் கொல்வேன்” என்றான். குருவிகளின் குரல் போல் ஒலித்த சமனின் குரலைக் குனிந்து உறுத்துக் கேட்ட ராட்சசன். “எனக்குப் பெரிய பசியிருக்கிறது சிறுவனே. நானும் மண்ணில் வாழப் பணிக்கப்பட்டவனே. எனக்குப் பசியளித்தது உனக்கும் பசியளித்த அதே தெய்வமே” என்றான். சமன் சற்று நிதானித்துக் கவணைச் சற்றிக் கீழிறக்கியபடி “ஆனால் நான் உன்னை என் பட்டினத்திற்குள் அனுமதிக்க இயலாது. என் கோழிகளுக்கு நானே காப்பவன். அவை என்னுடன் வாழ்பவை. நீ அவற்றை எடுத்துச் செல்ல என்னால் ஒருபோதும் ஒப்ப முடியாது. நீ இங்கிருந்து அகல்வதே உன் முன்னிருக்கும் ஒரே பாதை. வனங்களுக்குச் செல். வனமிருகங்களை உண். என்னுடையதென்று ஆகி விட்ட ஒன்றின் உயிர் காப்பது மானுடரின் அறம்” என்றான்.

ராட்சசன் இருகரங்களையும் இறுக்கிக் கோர்த்துக் கொண்டு சிலகணங்கள் அமைதியாய் நின்றான். “சிறுவனே. நான் மிகவும் சிறிய குடியினன். ராட்சதர்கள் இன்று அருகி விட்டார்கள். எங்களைத் துரத்தி துரத்தி மானுடர் வேட்டையாடினர். நாங்கள் வனங்களுக்குள் ஒழிந்து கொண்டோம். எஞ்சியவர்கள் மடிந்து போக என் குடியில் மீதமிருப்பவன் நான் ஒருவனே. நான் மடியும் வரை உண்டாக வேண்டும். என் குடியின் கடைசி மகவு நான். நான் நின்றிருந்து என் குடி பெருக்கும் ஒரு வாய்ப்பு நிகழுமென்றால் அதுவரை நான் உயிரை நீட்டித்து வைக்க வேண்டியவன். சொல். நீயே மானுடரில் கடைசி மனிதன் என்றால் நீ மாயவோ சென்றொழிந்து கொண்டு உணவின்றி அழியவோ விழைவாயா. அறம் என்பது சொல் சிறுவனே. அவை அனைத்துக்குமானது அல்ல. மானுட அறங்கள் மானுடருக்கே பொருந்துபவை. நான் ராட்சசன். எனது நெறியில் நான் மாமிசமே உண்ணப் படைக்கப்பட்டவன். நான் உண்டு உயிர் வாழ எது தேவையோ அது என வேட்டை. நான் அதைப் பயின்றிருக்கிறேன். எனது எல்லையை நான் என்றும் மீறியதில்லை. வனத்தைத் தாண்டி நகருக்குள் நுழையவில்லை. என் வாசனை கண்டு வசியப்படும் விலங்குகளையே நான் உண்கிறேன். என்னை கொல்ல வரும் ஆபத்துகளை அழிக்கிறேன். என்னால் இங்கிருந்து நீங்க முடியாது. இந்தத் தீவில் எஞ்சியிருக்கும் உணவு நிறைந்த பகுதி இப்பட்டினமே. நான் இதை நீங்குவது என் குடி நீட்சியின் கொடியை அறுப்பது போன்றது” என்றான் ராட்சசன்.

சமன் கவணை உறுதியாகப் பற்றி ஏந்திக் கொண்டு ஒற்றை விழியிமையை மூடினான். “ராட்சசனே. நீ சொல்வது புரிகிறது. ஆனால் நான் என் நெறிகளையும் அறங்களையும் மீற முடியாது. உன்னை இன்று நான் உயிருடன் விட்டால் என்னிடமிருக்கும் கடைசிச் சேவலையும் நீ உண்பாய். பின்னர் மானுடர்களை உண்பாய். மொத்தக் குடியும் உன் வயிற்றுக்குள் சென்ற பின்னர் நீ கடலிடம் செல்வாய். பின் புவியெங்கும் அலைவாய். நான் இந்த மண்ணின் குடி. என் குடிகாக்க நான் உன்னைக் கொல்வது அறமே. உனக்கு அறத்தின் பொருட்டு நீங்கிச் செல்ல ஒரு வாய்ப்பை அளித்தேன். கொன்று உண்பதே உன் அறம் என்றால் கொன்று காப்பது என் அறம்” என்று சொல்லியபடி ராட்சதன் எண்ணியிராக் கணத்தில் விழிமணியில் கொட்டப்பட்ட கருவண்ணமென மினுங்கிய திரையை நோக்கி ஒன்றன் பின் ஒன்றென மழைத்துளிகள் கொட்டுவதென கூர் முனை கொண்ட கற்களை எய்தான். ராட்சசன் குகையின் தலையில் கையூன்றி நின்று பெருத்த வானம் இடியிடித்து அலறும் பேரொலியுடன் சரிந்து இரியனின் அருகில் விழுந்தான். இரியன் அவன் மேலே தாவி மார்பில் நின்றபடி அவனது முகத்தை தலையைத் திருப்பித் திருப்பி நோக்கிக் கொக்கரித்தது. கருஞ்செட்டைகளை அடித்துக் கொண்டு விடியலை அழைத்தது. முற்புலரியில் வனத்திலிருந்து வெளிவந்த சமனின் கையில் துயில் கொண்டிருந்த இரியன் நகருள் அவன் நுழைந்த பொழுது எழுந்த கூச்சல்களைக் கேட்டு இமைத்திரை அகற்றி நோக்கியது.

ஒவ்வொருவர் முகத்திலும் வியப்பும் அச்சமும் குழப்பமும் மகிழ்ச்சியின் மின்னல் விரிந்து விழக் காத்திருக்கும் வானத்தின் பாவனையும் தோன்றிக் கொண்டிருந்தது. அவன் ராட்சசனை எப்படிக் கொன்றேன் என்பதை சிறிய கதை போன்று சதுக்க முற்றத்தில் நின்று சொல்லிய பின்னர் இரியனின் தலையைத் தடவிக்கொண்டு மனைக்குச் சென்றான். அவன் சொன்னதை நம்ப முடியாத குடிகள் பேச்சற்றுக் கலைந்து திண்ணைகளில் அமர்ந்து கொண்டனர். துணிவு கொண்டிருந்த சில வாலிபர்கள் வனத்திற்குள் சென்று ராட்சசனின் தேகத்தைப் பார்த்து வந்து உறுதி செய்த பின்னர் அரசன் அறிவித்ததன் படி ஆயிரம் பொன்னும் ஆயிரம் பசுவும் அளிக்க ஆணையிட்டான். நகரில் பசுக்கள் முற்றொழிந்த பின்னர் அண்டை தேசத்திலிருந்து பசுக்களைக் கொணர்ந்தான். சமனின் பட்டியிலிருந்து குடிகளின் பட்டிகள் பெருகின. தூய பசும்பாலென சமனின் வெற்றி மடிதாளாது இன்றும் நம் பசுக்களில் சுரக்கிறது. மைந்தா. அறமென்று எண்ணி இயற்றிய பின்னர் நீ ஒருபோதும் இழைத்ததை எண்ணி வருந்தத் தேவையில்லை. தீங்கென்பது எப்போதும் எவ்விடமிருந்து நோக்குகிறோம் என்பதைப் பொறுத்து மாறிக் கொள்கிறது. நீ உன் அறத்தை ஏற்றுக் கொண்டு அதைக் காக்க ஏந்தும் படைக்கலம் எதுவோ அதுவே உன் தன்னறம் எனும் கவசம். அது உன்னையும் உன் குடியையும் காத்து நிற்கும்” என்றாள் திருவிழியாள். அவளது முகம் கனிந்த தீச்சுடரென வண்ணங் கொண்டிருந்தது. திருவிழியாள் அவன் விழியில் தோன்றிய சமனைக் கண்டு நகைத்துக் கொண்டே அவன் குழலைக் கோதிவிட்டாள்.

*

நீலன் முன்முகப்பில் அமர்ந்திருந்த பருந்தை நோக்கினான். அதன் விழிமணிகள் ஒளிகொண்டு தன்னை நோக்குவதைக் கண்டு வியந்தான். அவ்விழிகளில் ஒருகணம் திருவிழியாளின் கூர்விழிகள் மின்னிச் சுடர்ந்தன. நீலன் புன்னகையுடன் சமனை எண்ணிக் கொண்டான். பசிபெருத்த வயிறென பட்டினம் கொதித்துக் கொண்டிருந்தது.

TAGS
Share This