117: நீர்க்கொடி : 02

117: நீர்க்கொடி : 02

உளத்தில் கசந்து கொண்டிருந்த நச்சில் ஒருதுளியை எச்சிலென மண்ணில் உமிழ்ந்தான் வாகை சூடன். “பாணரே. காமம் கூடாதவன் பழக வேண்டியது போரே. உடலை ஒருக்கி அதைப் படைக்கலமென மாற்றினால் ஒழிய ஆணால் காமத்தை வெல்ல முடியாது. எய்யப்படாத காமம் கொண்ட ஆணளவுக்கு கீழ்மை கொண்டவன் அக்கணம் மண்ணில் பிறரில்லை. காமம் அழகின் போர். எதுவோ ஓர் அழகு சென்று தொட்டு அடையும் நுண்விளையாட்டு. அழகின்மையில் காமம் அமைய இயலாது.

நான் ஒரு பெண்ணைத் தொட்டு எத்தனை பருவங்கள் ஒழிந்தன என நினைவில்லை. மதுவும் தேவ இலை மலர்களும் என் மேனியும் விழிகளுமாயின. என்னை நானே அழித்துக் கொள்ளும் ஒரு அருவருப்பை என்னுள் கண்டேன். அது புழுக்களின் மலக்குவியலென சின்னஞ் சிறியது. மானுடர் சுயகசப்பை அருந்திக் கொள்கையில் தெய்வங்களை நோக்குவதில்லை. மானுட எல்லைகளை மதிப்பதில்லை. உறவோ பிரிவோ அதற்குப் பொருட்டில்லை. எளிய வாழ்க்கையை எத்தனை தொலைவு தான் விண்மீன்களின் கீழ் தூக்கிக் கொண்டு அலைவது. சலிப்பு ஒரு இனிய மஞ்சம்” என்றான். அவனது விழிகள் அறியாக் கணத்தில் ஒளிகொண்டு விட்டிருந்தது. தூய கீழ்மையை அறிந்து கொண்டவர்களின் விழிகளில் மினுங்கும் தூய அறிதல். அதுவன்றிப் பிறிதிலாது அமைதல் கீழ்மையில் எளிய ஊழ்கம். இளம் பாணன் செருமிக் கொண்டு தீயிலைத் துதியைப் பற்ற வைத்தான். அகலில் கரைந்த செம்பொன் வெளிச்சம் அவனுள் இனிமையென வீழ்ந்தது. தீயிலை மலர்களை தீயென மாற்றி புகையென இழுத்து காலமென ஊதி வெளியே நோக்கினான்.

“வீரரே. மானுடர் கசப்பை அணிவது ஒரு வகை நாடகம். மெய் எப்பொழுதும் அடைய விழைவது தூய உவகையையே. நாம் எவரும் எளிய பேதமையாளர்கள் அல்ல. அனைத்து உயிர்களும் தன்னலமானவை. அதன் மாபெரும் பொதுத்தன்மையால் மானுடம் ஒற்றைப் பேரலகாக ஆகியிருப்பது எத்தனை விந்தையானது. ஆக மகிழ்ச்சிக்குரியது எதுவோ அதுவே ஒருவருக்குச் சூரியன் என்பது நூலோர் சொல். நம்முடைய அறங்கள் நாம் இன்பத்தைத் துய்க்கையில் மலர்களென மஞ்சத்தில் மென்மை கூட்ட வேண்டியவை. காமம் மானுடரை நுண்மையாகக் கொடுவிலங்காய் மாற்றக் கூடியது. போரில் மானுடர் அடையும் விலங்குக் கணங்களும் உக்கிரங்களும் அதனாலேயே காமத்தைப் போல உச்சத்தில் நிகழ்கின்றன.

நம்முடைய பாவனைகள் ஒவ்வொன்றும் நம்முடைய அகத்தின் அணிகலங்கள். விரும்பும் பருவத்தில் அணிகலங்களை மாற்றி உடுத்திக் கொள்கிறோம். செயலூக்கம் கொண்டவர். குன்றா விசை கொண்டவர். அறம் பொலிபவர். மேதை. பித்தர். அறிஞர். மூடர். துயரார்ந்தவர். சலிப்புக் கொண்டவர். புறக்கணிக்கப்பட்டவர். கீழ்மையாளர். இழிவினர். எத்தனை பாவனை அணிகளை நாம் பூண்கிறோம். என்ன விந்தையென்றால் மானுட அகம் ஒவ்வொன்றிலும் அதுவெனச் சுடரும் அருமணியெனப் பொருந்திப் போகிறது” என்றான் இளம் பாணன்.

சாலினி அருகிருந்த காக்கைகளின் மேல் பாய்ந்து விழுந்தாள். நீர்க்கொடிகளைப் பற்றியிறங்கும் விண்தேவியென அவள் கரங்கள் நீர்க்கொடியைப் பற்றுவது போல உயர்ந்து நிற்க சேற்று நீரில் பாய்ந்தாள். காகங்கள் கரைந்து பறந்து மீள நீருள் வந்தமர்ந்து நீர்பிரட்டிச் சிலிர்த்தன.

சாலினியின் அன்னை அவளைத் தேடி நடந்து வருவது தொலைவில் தெரிந்தது. இளைய முலைகள் குலுங்கித் திமிறி அடங்குவதை நோக்கினான் இளம் பாணன். புடவி அத்தனை நுண்மைகளால் மழையெனப் பொழிவது என மெய்ப்புக் கொண்டான்.

TAGS
Share This