118: ஒரு தீச்செந்தழல்

118: ஒரு தீச்செந்தழல்

“எத்திசை செல்வதென எண்ணாது திசை தோறும் பொழிந்திட்ட பெருமழைப் பெருக்கிலும் ஆழ்சுனை ஊற்றுகளின் கனவுகளிலும் உருவேறி ஓடிய மகத்தான ஆறொன்று எத்திசையும் திறக்காத பாழிருளில் தான் எங்கு பிரிகிறேன். எங்கு அழிகிறேன். இருக்கிறேனா. உலர்ந்தேனா என அறியாது திகைத்து நின்ற போது பாதாளம் உடைந்து ஆயிரமாயிரம் அடுக்குகள் கீழ்வெளியே திறக்க ககனங்கள் விதிர்விதிர்க்க இடியிடித்து இறங்கும் பல்லாயிரம் பெருமுரசுகளின் கார்வையுடன் ஒலித்தெழுந்த மாபெரும் வீழ்ச்சியே என் காவியம்” என்றான் இளம் பாணன். “திகைத்து நிற்கையில் கீழ்விழுபவர் அளப்பதும் மேலிருப்பதன் அளவையே. தன்னிலை மறந்தவர் ஏந்தி எய்த அம்புகளில் வானத்துக் கிளிகளெல்லாம் அறைபட்டு வீழ்வது போல சொற்களை ஏந்தும் தன்னிலையே காவியர்” எனத் தொடர்ந்தான். அவனது குரல் சிட்டுக் குருவிகளின் கலகலத்துக் குழையும் ஒலித்தாள் என உருமாறியிருந்தது. குழல் மடிவுகள் தோளில் சரிந்து தூங்கின. காற்றில் மலரிதழ்கள் என அவன் கன்னங்கள் துடித்துக் கொண்டிருந்தன.

வாகை சூடன் சூதுக்களத்தில் பணையம் வைக்கப்பட்டவன் போல அமர்ந்திருந்தான். வாகை சூடனின் அருகில் தூவெள்ளியர் தன் முதுபேர் கலையுடல் நெளிந்து கீழிருக்கும் துகிலில் தழைய அமர்ந்தார். அவரது இருவெண் புருவங்களும் துடித்தமைந்து கொண்டிருந்தன. நீர் மேல் துள்ளும் இளமீன்களென. வாயிலுக்கு அடுத்திருந்த திண்ணையில் ஒருகாலை மடித்து முழங்காலில் தலையைச் சாய்த்து விழைபவனின் வருகைக்கெனச் சாலையை நோக்கியிருக்கும் இளம் பெண்ணைப் போல அமர்ந்திருந்தார் அலகிலாள். அவரது மென்முது மேனியில் சதைகள் கறுத்த மண்குடத்தை எண்ணையில் மின்னுகியது போலிருந்தது.

இளம் பாணனைச் சுற்றிலும் இளங் கூத்தர்கள் குழுமி விட்டனர். தாய்க்கோழியைச் சுற்றி அலையடிக்கும் குஞ்சுக் கூட்டமென கீச்சிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் இளவண்ண ஆடைகளை உடுத்திருந்தனர். சிலர் தலைப்பாகை அணிந்திருந்தனர். புன்மீசை குருவிச்சிறகு நுனிகள் போல முளைத்திருந்தன. விழிகளில் மயக்கும் குறும்பும் சூடியிருந்தனர்.
ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு இளமழைக்கு ஒடுங்கி திண்ணையை நிறைத்திருந்தனர். வாயிலில் நின்றபடி பெண் கூத்திகள் இளம் பாணனின் எச்சில் மென்சாரலெனத் தெறிக்கும் உதட்டசைவுகளை நோக்கி ஒருவரை ஒருவர் கிள்ளிச் சிரித்துக் கொண்டனர். யீலை அவனது விழிகளை நோக்கினாள். கனவு கொண்டவனின் விழிகளளவுக்குப் பெண்களைப் பித்தாக்கும் பிறிதொரு உறுப்பு ஆணுக்கு அளிக்கப்படவில்லை என எண்ணினாள்.

வாகை சூடனின் ஒரு கேள்விக்கு அணை மேவிய புதுவெள்ளம் போல இளம் பாணன் சொற்பெருக்காடினான். இளையோர் சொல்லெடுத்து சுழற்றி பிறரை விழிமலர்த்தி நிற்கையில் ஒருவனில் கூடும் பேரழகு அவனில் சுடர்ந்தது. சாலினியின் தாய் இளம் பாணனின் அருகிலிருந்தாள். சாலினி அன்னைக்குக் காலையும் இளம் பாணனின் மடியில் தலையையும் வைத்தபடி துயின்றிருந்தாள். இருவரது மூச்சுக் காற்றும் தொடப்பட வீசப்பட்ட இரு ஊஞ்சல்களென நெருங்கி நெருங்கி அகன்றன. இனிய சொற்பித்தை ஊதிவிடும் அனல் வீச்சு மூச்சுக்கு உண்டு. அதில் அவன் அவளுடன் அமர்ந்திருந்தான்.

இளங் கூத்தர்களின் வியக்கும் விழிகளை ஒவ்வொன்றாய் நோக்கிய பின்னர் “கலையில் தோல்வியடையாதவர் கலையை மெய்யறிய முடியாது. காமத்தின் கொடும் பேரின்பத்தை கற்பனையிலும் காண முடியாதவர் தவறவிடும் ஒன்றைப் போல. தீமையின் ஆழத்தில் மெய்மேனியுடன் துயில்கையில் அச்சம் ஒழிந்து யாரொருவர் கனவில் திளைக்கிறோமோ நாமே அதுவென்றாகி காற்றில் இலைத்தழைப்பின் நுனியென வீசி இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில் தோல்வியடையும் மானுடரே காவியம் புனைகின்றனர். ஒவ்வொரு துகிலும் உரிந்து மெய்மேனியுடன் இருளில் ஒருவரை ஒருவர் கண்டு கொள்வது போல பொய்கள் அகன்று நோக்கும் மெய்யே காவியம். அதில் தொடப்படாத எதுவும் புடவியில் இல்லை. காவியத்திற்கு வரையறைகள் அளிப்பவர்கள் சென்ற காலத்தைச் சேர்ந்தவர்கள். புதியவர்களோ ஒவ்வொரு முறையும் இடப்பட்ட எல்லைகளைக் கடப்பதற்கென்றே மண் நிகழ்பவர்கள். ஓம். அது அவ்வாறே ஆகும்” என்றான் இளம் பாணன்.

அவனது முகம் அழல் பற்றிக் கொண்ட பட்டுச் சீலையென சரசரவென குருதி வண்ணங் கொண்டு காதலனின் முகமெனத் தோன்றியது. சுற்றியிருந்தவர்கள் அவனது சொற்களின் பொருளுக்காகவன்றி அந்த முகம் கொண்டு சுடரும் பெருங்களிப்பை நோக்கியே விழிகூர்ந்திருந்தனர். எச்செயலையும் முழுப்பித்துடன் ஆற்றுபவர்களில் கூடும் அழகு அவனில் எழுந்தது.

“ஒரு தொல்தெய்வத்தின் சிற்றாலயத்தின் முன் மேனி நடுநடுங்கி விழிநீர் அதிர்ந்ததிர்ந்து கொட்டுண்ட நிற்பவர் இருவரே. ஒருவர் அதன் மடியில் தான் அடைத்து வைத்த கண்ணீர்ப் பொதியின் எடை தாளாமல் சிந்திச் சிதறுபவர். மற்றையவர் காலங்களின் பெருக்கில் கரைந்தொழியாமல் மானுடருடன் நின்றிருக்கும் அதன் கருணையின் முன் உதிர்க்கப்படும் மலர்களை தூய கண்ணீரினூடே காண்பவர். காவியர் இரண்டாவது வகையினர். காவியத்தைப் பயில்பவரும் அங்கனமே உணர்கின்றனர்.

தெய்வமென்று ஏறிவிட்ட மானுடரை மீண்டும் மானுடரில் வைத்து நோக்கி அளப்பதே காவியரின் பணியென என் ஆசிரியர் கூறுவார். எளிய குடிகள் மேன்மக்களை தெய்வமென்று சென்னி சூட வேண்டியிருப்பது எதனால். மானுடரின் ஒளிகளும் இருள்களும் மோதிக்கொண்டு மின்னும் பல்லாயிரம் வண்ணத் துளித்தீகளாய் ஆகும் பேருருவர்களே மானுடரில் தெய்வமென்று அமர்த்தப்படுகின்றனர். சொல்லால். செயலால். முழுவாழ்வால் அவர்கள் மானுடத்தின் ஒவ்வொரு சிறைக்கூண்டையும் திறக்கிறார்கள். அவர்கள் அங்கனம் ஆக்கியளிப்பதை காவியர்கள் சொல்லில் நிறுத்தி மானுடக் கதைகளென ஆக்குகின்றனர். அவையே மானுடம் எனும் பெருங்கனவில் ஊற்றப்படும் நெய். என்னை எரிப்பவற்றுக்கே நான் அவியாகின்றேன் என்பதே காவியர் உணரும் அகமெய்மை” என்றான் இளம் பாணன். துயிலிலிருந்த சாலினி சிலகணங்கள் இமைகளை அரைச்சரிவில் தூக்கி அவனது முகத்தையும் அதில் அவன் புரியும் பாவனைகளை நோக்கிய பின்னர் மீண்டும் இமைகளை சாற்றிக் கொண்டாள். அவளது தாய் அவன் சொல்பவை ஏற்கெனவே தான் அறிந்தவை என்பது போல தலையை அசைத்து ஒப்புதல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தூவெள்ளியர் மெலிதாகத் திரும்பி வெளியை நோக்கிய பின்னர் இரண்டு கூர்ந்த வெண்ணிறப் புருவங்களையும் சுருக்கிக் கொண்டு வாகை சூடனை நோக்கினார். அவரது நோக்குத் தொட்ட வாகை சூடன் மெல்லிய நிமிர்வு கொண்டு அவரை நோக்கிப் புன்னகைத்தான். தூவெள்ளியர் முகம் விரியப் புன்னகை புரிந்த பின்னர் “பொருத்தமில்லாத இடத்தில் மாட்டிக் கொண்டு விட்டீர்களா பெருந்தளபதி” என்றார். தன்னை அவர் அடையாளங் கண்ட போது இழந்த அத்தனையும் ஒருங்கித் தன் பின்னே ஒளிவட்டம் சூடியெழுகிறதென அகம் கிளர்ந்து முகம் விரிந்தான் வாகை சூடன். அவனது தோள்கள் திண்மை கூர்ந்தன. தொடைகள் முறுக்கிக் கொண்டு கால் விரல்கள் சீர்பெற்று அமைந்தன. தன் மொழிக்கையை ஆடைக்குள் நுழைத்துக் கொண்டு மறுகையால் குழலைக் கோதினான். ஒருவர் தன்னை அங்கனம் அடையாளங் கண்டவுடன் தன்னுள் ஒடுங்கியிருந்த போர்வீரன் எங்கனம் எழுந்து தன் பீடத்தில் அமர்ந்து கொண்டான் என வியந்தான். இன்னும் துல்லியமாகச் சொன்னால் அங்கு அமரவெனவே அவன் இவ்விடத்தை நாடி வந்தான்.

அலகிலாள் ஒரு நோக்கில் தூவெள்ளியரையும் வாகை சூடனையும் கடந்து சென்றதை உணர்ந்த தூவெள்ளியர் முதுகை நிமிர்த்திக் கொண்டு “நலம் தானே பெருந்தளபதி” என்றார். அவ்விசாரிப்பில் இருந்த தண்மையால் சற்றே நெகிழத் தொடங்கிய வாகை சூடனுக்குள் அறியாத சுடுதிரவத் துளியொன்று விழிநீரென மல்கியது. இவ்வளவு தொட்டவுடன் கரைவதற்கா அத்தனை இறுக்கமும் என எண்ணிக் கொண்டான் வாகை சூடன். “நலம் தான் பெருங்கூத்தரே. பாடு மீன் பட்டினத்தில் அனைவரும் நலமா. நெடுநாளாயிற்று அங்கு சென்று நோக்கி. இப்பொழுதும் அதன் வனமண்ணின் கருஞ்சேறு என்னுள் குருதித் துளியென ஒட்டிக் கொண்டிருக்கிறது” என்றான் வாகை சூடன். தூவெள்ளியார் மார்பில் வெண்பூங்கொத்தெனத் தூங்கிய தாடியை தொட்டுக் கொண்டிருந்தார். சிந்தனையில் வேறெங்கோ நுழைந்து நிகழ்காலத்தைத் தாடியின் தொடுகையினால் பற்றிக் கொண்டிருப்பவரெனத் தோன்றினார்.

வாகை சூடன் மெல்லிய இனிகுரலில் “நாம் வாழுங் காலத்தில் நாம் புறக்கணிக்கப்படுவதைப் போல வீரன் அடையும் துன்பம் பிறிதில்லை மூத்தவரே. எனது இருப்பை புண் என உணர்கிறேன். எளிய இன்சொற்களும் என்னைக் கரைத்து அணையுடைக்கிறது. முன்னர் நானொரு பெரும் பாறை மலையென என்னை எண்ணியிருந்தேன். முடிவிலா ஊழ்ப் பெருக்கின் முன் நான் என நெஞ்சு விடைத்து நின்றிருந்தேன். இன்று புழக்கமற்ற நாணயமென பிச்சைக்காரரின் தட்டில் வீசப்பட்டிருக்கிறேன். மானுடர் தம் வாழ்நாள் எல்லாம் திரட்டியதைக் கொண்டு சென்று பாழும் இருளில் கொட்டி விட்டு என்ன எண்ணுகிறார்கள் என ஒவ்வொரு இருளிலும் துயிலும் கனவுமின்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன். சொற்கள் அடைகாத்துக் காத்துக் கூழாகின்றன. எதுவும் உயிரென இல்லாத வெளியில் நான் மட்டும் தனித்திருக்கிறேன். இதைத் துயரென்று அழைக்கிறேன். பிறகு இதுவே மானுட மெய்மையெனத் தத்துவம் புனைகிறேன். வென்ற களங்களின் குருதிச் சூடு ஒரு தீச்செந்தழல் என என் நுதலில் எரிவதை உணர்கிறேன். அனைத்துக்கும் இங்கெயே நிகரெடை வைக்கப்பட்டிருக்கிறது” என்றான். இனிமையான குரலில் சொல்லப்படும் துயரம் நுனியே முழுவேலென்றான கொல்கருவி போன்றது. மானுட இதயங்களில் கண்ணீராலான ஊசியெனத் தைத்து இறங்குகிறது என எண்ணினார் தூவெள்ளியர். சொல்லி முடிக்கையில் இத்தனை எளிதான பதிலறிந்த துயரையா கரந்து வைத்துக் கசப்பில் ஊறிக் கொண்டிருக்கிறோம் என எண்ணினான் வாகை சூடன்.

தூவெள்ளியர் உறுமல் போன்ற தனது குரலைக் கரைத்துச் சொல்லெடுத்தார். நோப்பட்டு விடக் கூடாதென மருத்துவக் கருவியைப் பற்றியிருப்பவரின் கையென அவரது குரல் நடுக்கமின்றி ஒலித்தது. “இளையவரே. செயலில் நிறைவடைபவர் எவரோ அவர் தன் ஆயுள் முழுமைக்கும் அதில் திளைத்திருந்தால் ஒழிய முழுமையை அறிவதில்லை. செயலின் வழி அது. உங்களையும் எண்திசைத் தோளனையும் அவ்வப்போது எண்ணிக் கொள்வேன். அவரின் நிழலென. அவரின் பேருருவின் இள வடிவென உங்களைக் கண்டிருந்தேன். மெய்வீரர்கள் ஒருவரிலிருந்து ஒருவரென உடல் மாற்றி அணிந்து கொண்டு மண் வருபவர்கள் எனவே எண்ணுகிறேன்.

உங்கள் வழிகள் இங்கனம் பிரிந்து கலைந்து திசைகெட்டமை ஒரு செயலால் வகுக்கக் கூடியதல்ல. ஊழெனும் பெருவலையை நெய்யும் மாயக் கரங்களே அதை அறியும். அல்லது அதுவும் அறியாது. நீங்கள் கலங்குவது கடந்த காலம் திரைந்து கிடப்பதை எண்ணி. தன்னை ஒன்றென வகுத்துக் கொண்டு உலகியலில் ஈடுபடுபவர் வழிதொலையும் பொழுது அடையும் பெருந்துயர்களில் ஒன்று அது. ஆற்றல்கள் அனைத்தையும் வாழ்வனைத்தையும் உருக்கி வார்த்த ஒருபயணம் நம்பியவர்களாலேயே கைவிடப்படுதலின் துயரம். மெய் என்னவென்றால் அத்தகைய விலகல் நிகழாத செயற்களங்களே மானுடருக்கு வாய்ப்பதில்லை. அனைத்துக் களங்களிலும் வஞ்சமும் கீழ்மையும் மடமையும் புறக்கணிப்பும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். புவியின் மெய்க்களம் ஒவ்வொன்றும் பல்லாயிரத்தவரால் விசையூன்றப்பட்டது. ஒவ்வொரு கணமும் மின்னி மறையும் பல்லாயிரம் உணர்ச்சிகளால் கொந்தளித்துக் கொண்டேயிருப்பது.

பெருஞ்செயலாற்றும் ஒருவர் தான் மட்டும் எழுவது இயலாது. ஊழும் அப்பாதையை வகுத்திருக்க வேண்டும். நீங்கள் இப்பெருங்காவியத்தின் மைய இழைகளில் ஒருவர். உங்களைத் தவிர்த்து இக்குடியை ஆராய இயலாது. நீங்கள் அதன் ஒரு முனை. உங்களைப் போல பெருவீரர்களும் மேதைகளும் அறிஞர்களும் எழுந்து ஆக்கி களம் வென்று உண்டாக்கியதே தமிழ்க்குடியின் தனியரசு.

ஒரு அரசு ஒருவரால் ஆனதல்ல. தலைமை கொள்பவராலேயே பெரும்படை ஆற்றல் பெறுகிறது என்பது மெய்யே. ஆனால் ஒவ்வொரு வீரரும் தளபதியும் வியூகியும் அதேயளவுக்கு முக்கியமானவர்கள். அரசைத் தாங்கும் குடிகளும் அமைச்சுகளும் கற்றோரும் களப்பணியாளரும் கலைஞர்களும் கூட அவ்வகையினரே. அதைக் காலம் விளைவித்துக் கனித்திருந்தால் மாத்திரமே அரசனென்றோ அரசியென்றோ அவ்விளைச்சலை திறமையாக பயன்படுத்த இயலும். பீடமென்பது பலரின் குருதியினால் ஆக்கப்பட்டது. வெற்றுச் சுவரில் ஒரு பேரரசை வரைந்து விட இயலாது. இது எளிய உண்மை. ஆனால் விளைவதில் ஊழின் நதிகள் எங்கு கலந்து எங்கு விலகுகிறது என்பதை அதை வகுத்த தெய்வங்களாலும் அறிய முடியாது என்பது காலம் எனக்குச் சொல்லிய பாடம். உங்களின் துயர்கள் என்னையும் வருத்துகின்றது. உங்களில் உறையும் மெய்மை உங்களின் வாள் நுனியைப் போன்றே ஒளிமிக்கதும் கூர்மையானதும். அதை நீங்கள் இழக்கலாம். ஆனால் இன்னொன்றைப் பற்றியாக வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் குறும்புள்ள சிரிப்பொன்றில் தடக்கி வாகை சூடனைத் திரும்பி நோக்கி அவன் விழியை உறுத்து “களம் நீங்கியவர்கள் அறிய வேண்டிய உலகொன்றும் உளது பெருவீரரே. காதலும் களியும் உங்களுக்கென்று உலகு கரந்தளித்த பிற களங்கள். அதில் வென்றமைக. மானுடத்திற்கு மொத்தப் பொருளில் அமைந்துள்ள சாரமின்மையை மானுடரே சாயந்தீட்டிக் கொண்டது இரண்டிலும் தான்” என்றார். வாகை சூடன் அவரை நோக்கிப் புன்னகை விரிய “அக்களங்களில் நான் வில் பயிலா இளவீரன் மூத்தவரே. பெண்கள் என் கரத்தைக் கண்டதுமே விலகி ஓடி விடுகிறார்கள். அதை விட என் கதையோ உலகப் பிரசித்தம். ஒவ்வொரு பெண்ணின் விழியிலும் அது ஒவ்வொரு நச்சுக் கொண்ட சர்ப்பக் குட்டிகளென வளைந்து நெளிவதை நோக்குகிறேன். நான் அறியப்பட்ட துரோகி. என்னளவுக்கு இக்கூட்டத்தில் மூச்சுத் திணறும் வயோதிபர்கள் கூட இன்று கிடையாது” என்றான்.

அவனது சொற்களில் துயரெழவில்லை. நுண்ணிய கசப்பான நகைச்சுவை மட்டுமே ஊடாடியது. இளமழை சாரல்களால் அவனைத் தொட்டுக் கொண்டிருந்தது. மூதாசான் வாகை சூடனுடன் சொல்லாடுவதை நோக்கிய இளங் கூத்திகள் சிலர் வாகை சூடனது பேரெருதின் தேகத்தை நோக்கினர். தூவெள்ளியர் வலக்கண்ணால் அவர்களை நோக்கிய பின்னர் “காலம் விந்தையான பெருக்கு இளையவரே. உங்களின் கதை இப்பொழுது தொல்கதை என ஆகிவிட்டது. பாணர்கள் இக்கதைகளை கறையான்களுக்கு அளித்து விட்டார்கள். புதிய வரலாறும் புதிய துயரங்களும் அவர்கள் நாவை எடுத்துக் கொண்டு விடும். இன்றுள்ள பெண்களோ உங்களது பெயரைக் கூட அறிய மாட்டார்கள். எல்லாப் பெருவீரரும் காலத்தில் வெறும் பெயர் மட்டுமே. அவர்கள் மெய்யிலே தோன்றினால் இவனா என ஒரு இளிவரலே தோன்றும். மானுடம் வற்றாதது இளையவரே. அதை நம்புக. அதைத் தடுக்காது ஏந்திக் கொள்க. அனைவருக்கும் அனைத்தும் எங்கோ வைக்கப்பட்டிருக்கிறது. செயலின்மையே உங்களை மூழ்கடிக்கும் பெருநோய். மீறி எழுந்து விட்டால் இதோ இங்கே சொற்பெருக்காடும் இளையவரின் களியைப் போல பலமடங்கில் நீங்கள் குடிகளைக் கவர்வீர். நீங்கள் எமது பட்டினத்தில் ஆற்றிய களவெற்றிகளை இன்னமும் மறக்காத பெண்களை நான் யாத்திரை செல்லும் வழியில் பக்தர்களைக் காண்பது போலக் கண்டு கொண்டே இருக்கிறேன்” என்றார். வாகை சூடன் உரக்கச் சிரித்தான். அவனது சிரிப்பில் அதிர்ந்த காற்றை நோக்கிய இளங் கூத்திகள் அவனது எருதுத் தேகம் கரும் வைரமென ஒளிர்விடுவதை நோக்கி ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டனர். வாகை சூடன் ஒருமுறை தனக்கு வெளியுள்ள உலகை தன்னுள் என்றோ மறந்து வைத்த இளவிழிகளால் நோக்கினான். அனைத்தும் இனிமையாய் தோன்றியது. உலகும் வாழ்வும் இனியது என தித்தித்தது. கடந்த காலம் உரிந்த பாம்பின் தோலென அகன்றது. அவ்விடத்தில் அவன் எவருமறியா வெளியில் அன்று தான் இத்தீவுக்கு வந்தவன் எனத் தன்னை எண்ணிக் கொண்டு விழிநீர் மல்கச் சிரித்தான். உதிர்ந்து விடக் கனன்று கொண்ட பனித்துளியை இறுதிக் காற்றுத் தொட்டு விலகியதைப் போலத் தூவெள்ளியரின் சொற்கள் வாகை சூடனை நலுக்கின. இளம் பாணன் வாகை சூடனை நோக்கிய போது அவனறியாத மின்னலின் சரடொன்று அவனைக் கடந்து சென்றது. அனைத்தையும் தழுவி அனைத்துக்கும் அப்பாலென அது எறித்துக் கொண்டே சென்றது.

*

இளம் பாணனை நோக்கிய யீலை அவனது காதைத் திருகி அடக்கமாயிரு எனச் சொல்ல விழைந்தாள். அவ்விழைவே காதலில் சென்றமரும் இளையவள் சூடிக் கொள்ளும் அன்னை பாவமென எண்ணி நாணினாள். இளங் கூத்தர்களில் பெருந்தேகனாய் இருந்தவனொருவன் எழுந்து இளம் பாணனை நோக்கி “பாணரே. காவியமென்றால் என்னவென விளக்குகிறேன் எனச் சொல்லி இத்தனை காலமும் நீங்கள் உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தோன்றும் பாவை விரிவுகளைப் போல ஒவ்வொன்றையும் நோக்கிச் சொல்லெடுக்கிறீர்கள். எனது மூளையோ சிறியது. எளிமையாக எனக்குச் சொல்லுங்கள். காவியம் என்றால் என்ன” என்றான். அனைவரது செவிகளும் தனக்குள் தானென இளம் பாணனின் உதடுகள் நோக்கிக் குவிந்தன. அலகிலாளும் தூவெள்ளியரும் அவனை நோக்கினர். வாகை சூடன் அக்கூட்டத்தை ஒருகணம் நோக்கிய பின்னர் கால்களை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி குழலைப் பின்கோதிய பின்னர் அவனை நோக்கிச் சிரித்தான். இளம் பாணன் தனக்குள் ஒருங்கி மலரிதழ் நுண்காம்பைத் தொடும் வண்ணத்திப் பூச்சியின் நுண்காம்பின் இழையிணைப்பென ஊழ்கத்தில் அமர்ந்தான். வினா மட்டும் அந்தர இருளில் அவனிடம் நின்றிருந்தது. இளங் கூத்திகளின் ஆடை ஒருங்கும் ஒலியும் சிலம்புகள் அசைந்தமரும் நடுக்கும் கைவளைகள் உரசும் இசையும் எழுந்து கொண்டிருந்தன. திண்ணையிலும் அருகமைந்த அன்னசத்திரத்திலும் எழுந்த ஒலிகள் இளமழையில் மறைந்த அப்பால் காட்சிகளென அவனுள் அமிழ்ந்தன. மெளனத்தில் மெய்க்கணம் மூழ்கி எழுந்தான். பிறகு அவனது கீழுதடு சிரித்து விரிந்தது.

குரலில் ஓர் அசரீரியின் பாவனை தொட்டெழ “அறிக இளையோரே. காவியம் என்பது துயரின் கலை. மானுடம் எனும் மாபெரும் துயரிருப்பின் நிச்சயமின்மையைக் களைய கனவுகளால் துன்னிய மாபெரும் ஆடையே காவியம். அதைப் போர்த்தபடியே பண்பாடுகள் புவியின் அனலையும் குளிரையும் தாங்கிக் கொள்கின்றன. கதைகளே மானுடரை தேர்கின்றன. ஒவ்வொரு மானுடரும் அவரது இன்பமும் துன்பமும் அறமும் மீறலும் உச்சமும் கீழ்மையும் அவரறிந்த கதைகளால் ஆனவையே. அறிக. புனையப்படாத எதுவும் மானுடரில் தோன்றுவதில்லை. அனைவரும் காவியத்தின் பாத்திரங்களே. இம்மாபெரும் உலகு ஒரு அம்பலம். நாம் அனைவரும் இங்கு நடித்துக் கொள்கிறோம் என்பது நூலோர் சொல்.

காவியம் பண்பாட்டைக் கனவுகளால் புனைவாக்கும் கலை. ஆக்குதலும் விரித்தலும் விவாதித்தலும் நிறுத்தலும் சுட்டுதலும் தொகுத்தலும் அதன் தொழில்கள். சாரமளித்தல் அதன் விளைச்சல். மானுடம் எனும் பெருங்கதையைக் காவியம் துயரின் கிண்ணத்தில் வார்த்து அளிக்கிறது. துயரமளவுக்கு போதையளிக்கும் பிறிதொன்று மானுட உணர்ச்சிகளில் நீடித்ததில்லை. துயரே அறுதி உணர்ச்சி. மானுடம் தன்னை ஆழ்த்தியிருக்கும் பெருங்கடல்கள் அனைத்தும் துயரின் நீலவிடம் கொண்டவை. துயரை அறியாத குழவியரும் இல்லை எனும் அளவுக்கு துயரென்பது மூத்த உணர்ச்சி. உவகையை விட முன்னையது என்பதாலேயே துயரைக் கொண்டே உவகை அளக்கப்படுகிறது.

காவியம் காற்றைப் போன்று ஒவ்வொரு குடியிலும் நிலைக்கிறது. எங்கும் அதுவே சொல்லப்படுகிறது. கேட்கப்படுகிறது. விளக்கப்படுகிறது. நிலைநாட்டப்படும் நீதியென்பதும் அறமென்பதும் காவியமெனும் ஆற்றில் அழிமுகத்தில் திரளும் பேரெழுச்சிச் சுழல்கள். மானுடம் எனும் பேருருவம் காவியத்தின் பேராடியில் தன் ஆடிப்பாவைகளின் பெருக்கை நோக்கி மலைக்கிறது. நுணுகுகிறது. நாணுகிறது. சினங் கொள்கிறது. அமைகிறது. கருணை கூர்கிறது. அறிகிறது. தொகுக்கிறது. கண்ணீர் சிந்துகிறது.

காவியம் என்பது கோபுரத்தின் உச்சிக் கலச விதை நெல்முடி என்பது என் ஆசிரியர் சொல். ஒவ்வொரு மரபும் ஒரு ஆசிரியரிலிருந்து இன்னொருவருக்கென அக்கலசத்தை அளிக்கிறது. அதில் நிறைமணிகள் சேர்க்கப்பட்டு ஊழி ஊழிகளாய்க் காக்கப்பட்டு கையளிப்படுகிறது. நாளை பிறக்கவிருக்கும் குழவிக்கு மானுடம் திரண்டு அளிக்கும் ஞானவிதைக் கலசமே காவியம். அதில் சேர்க்கப்படாதது மீண்டும் முளைக்காது. எண்ணிச் சொல் தேர்ந்து அறிகரங்கள் தொட்டெடுப்பவையே காலத்தில் எஞ்சுகின்றன. எஞ்சுவதே காவியம் எனவும் வகுக்கலாம். ஓம். காட்டெரியில் எஞ்சும் மரங்களில் எஞ்சிய துளிர்த்தலைகள் போல. முழுக்காட்டையும் திரும்பக் கொடுக்கும் பெருமழையின் கனிவைப் போல. குழவிக்கு அன்னையளிக்கும் முலைப்பாலைப் போல. காவியம் மானுடருக்கு அளிக்கப்படுகிறது” என்றான் இளம் பாணன்.

யீலை இமைக்க மறந்த விழிகளால் அவனை அருந்திக் கொண்டிருந்தாள். அந் நோக்கிலேயே அவனது ஆழங்களைக் கண்டவளென. பாடு மீன் பட்டினத்தின் வாவிகளில் அவனுடன் இருட் படகுகளில் மிதந்து கொண்டு அச்சொற்களைக் கேட்பவளென. ஒவ்வொரு பெண் மீனும் அங்கு பாடியது எவனையென. அவள் கண்டாள். தன் இளவிழிகள் சுரக்கும் நீர்மை எதனால் என உளமழிந்து. தன் முலைகள் துயர் கொண்டு விம்முவது எதனால் என அறியாது திகைத்தமர்ந்து. அவள் நோக்கினாள். நோக்கும் இளம் பெண்ணின் விழிகளன்றி ஒரு பாணன் எவர் முன் சொல்லெடுத்து விண் சுழலும் படையாழியென விசிறி மீண்டும் கைசேர்த்து அமர்வான் என எண்ணினார் தூவெள்ளியர். வாகை சூடன் இளம் பாணனை நோக்கிய போது இளம் பாணனும் அவனை நோக்கினான். இருவருக்கிடையிலும் இருந்த பழந்திரையொன்று நழுவி விழுமொலி கேட்டு நெஞ்சம் அறிந்து கொண்டு நோக்கினர். தூவெள்ளியர் வாகை சூடனின் முகத்தை நோக்கினார். அவனும் இளம் பாணனும் நோக்கியதை கண்டு அனிச்சையாய் அவரது விழி அவனது மொழிக்கையை மூடியிருந்த துகிலைத் தொட்டு அகன்றது. அனைத்துச் சொற்களுக்குள்ளும் மானுடர் கரந்து வைத்திருக்கும் ஒன்றைப் போல வாகை சூடனின் மொழிக்கை துகிலுக்குள் துடித்துக் கொண்டிருந்தது.

சாலினி வாயில் வீணீர் அமுதமெனச் சுரக்க அதைத் துடைத்துக் கொண்டு புவியின் நஞ்சு வேண்டுபவளென உதட்டைக் குவித்துத் துயின்றாள். அவளது அன்னை அவள் குழலை ஒருமுறை கோதி அதில் சிக்கியிருந்த வெண்தாமரை இதழின் சிறுதுண்டை கையிலெடுத்து உதறினாள். அது நீரில் விழுந்து மிதந்தது சின்னஞ் சிறு வெண்படகனெ. பிறகு மூழ்கி ஓடத் தொடங்கியது வெண்மீன் குட்டியென. அவள் அதை நோக்கியிருந்தாள்.

TAGS
Share This