121: ஆழிசூடிகை

121: ஆழிசூடிகை

தன் மெய்யாற்றல் எதுவென அறியாதவர் பெருங்களங்களை வெல்ல இயலாது. எத்தனை சிறியவையாய் இருந்தாலும் அறிந்து கணித்துப் பெருக்கிக் கொண்ட விசையே பெருவுருவென்றாகும். அதுவே களம் வெல்லும் படைக்கலம். வேறுகாடார் அகன்ற மார்பில் வெண்பாசியென மயிர்கள் இளமழைச் சாரலால் நனைந்திருக்க கூகை விழிகளால் இருதியாளை நோக்கியிருந்தார். இருவரும் புலிப்படையிலிருந்து சிலகாதங்கள் விலகியிருக்கத் தொடங்கி ஆறு பருவங்கள் பெயர்ந்து விட்டன. ஒரு அணுக்க உறவெனும் வகையில் நீலரிடமும் புலிப்படையினருடனும் அவர்கள் அணுகியமைவது உண்டு. முழுதுள்ளம் கொண்டு அவர்கள் எழாத பொழுதிலேயே நீலன் அவர்களை அவர்களின் திசைகளில் எவரும் குறுக்கிடலாகாதென்ற ஆணையைப் பிறப்பித்தான். இருதியாள் நீலனுக்கு அக்கைக்கு நிகரானவர். வேறுகாடார் நீலனுக்கு ஊழ் வகுத்தளித்த தெய்வங்களில் ஒருவர். இருவரும் முழுதமைந்து களம் செருக்கி எழுந்த காலங்களில் புலிகளின் படையில் கடற் சிம்மமும் இருட் சிம்மமும் இணைந்து களியாடியது போல எனக் குடிச்சொல் இருந்தது.

இருவரும் மூப்பால் விலகினர் எனும் சொல் தயக்கத்துடன் மன்றுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அச்சொல் அவர்களை தளை நீக்கும் பொருட்டு புலிகளால் அளிக்கப்பட்டது. ஆனால் இருவரும் இப்பொழுதும் புலிகளே எனும் எண்ணமே குடிகளில் நீடித்தது. அவர்களும் அணுகாது அகலாது அங்கிருந்தனர். வேறுகாடார் நினைவுகளின் மேட்டில் கருகிய புற்களென நீண்டிருந்த தன் காலங்களை மார்பின் மயிர்களென வருடிக் கொண்டிருந்தார். இருதியாளுக்கும் அவருக்குமிடையில் அலையடிக்கும் கடலொன்று இருகரைகளென இருவரையும் தொட்டுத் தொட்டு ஆர்த்தது. இருவருக்கும் அருகிருந்தவர்கள் மெல்ல ஒழிந்தனர். இருவரும் இருகரைகளில் ஊன்றிச் சாய்ந்து ஒட்ட விழையும் இரு தென்னைகளென ஞாபகத் தோகைகள் மழையில் நனையும் ஒலிகேட்டிருந்தனர்.

இருதியாளை முதற் பார்த்த கணமெதுவென சர்வ நிச்சயமாக வேறுகாடார் அறிவார். ஆண் எவனும் அங்கனம் நோக்கும் பெண்ணை நினைவொழிய இயலாது. ஈராவது பருவ நெடு யுத்ததில் வேறுகாடார் ஆழி வழித் தாக்குதல் திட்டங்கள் பற்றிய செய்திகளை ஒற்றுப் புறாக்கள் மூலம் அனுப்பியபடியிருந்தார். கடலை இப்போது ஆள்வது பெண் என்பதை மட்டுமே அவரறிவார். திமிலரது தேகம் நோய் நீண்டு நடுக்கும் நினைவழிவும் கொண்டிருந்த காலமது. வாகை சூடன் களமுனைகளுக்குப் பொறுப்பாயிருந்தான். ஆழிக் கொற்றவைகள் எழுந்த பின்னர் கடல் நித்திய காவலில் இடப்பட்டது எனக் குடிகள் நம்பினர்.

இருநூறு கலங்களில் பாய்மரங்கள் காற்றூதி இராட்சத தோல்கள் என விரிய சிங்கை புரியின் பெரும்படையொன்று வடகடலைத் தாக்க முற்புலரியில் எழுந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் அம்புகளும் தொலையெறி கவண்களும் கொண்டிருந்தனர். வடகடலின் எல்லைகளைத் தாக்கிக் கொண்டே மாந்தையின் கரைகளையும் பிறிதொரு படைப்பிரிவு தாக்க முன்னேறி வந்தது. வேறுகாடார் தாக்குதலுக்கு முந்தைய அந்தியில் இருபது ஒற்றுப்புறாக்களை நீலனுக்கு அனுப்பினார். அவை ஒவ்வொன்றும் ஒரே சேதியைச் சுமந்து ஒவ்வொரு திசைக்குளாலும் சுழன்று மூன்று புறாக்கள் நீலனை அடைந்தன. தாக்குதல் என செய்தி கிடைத்த நீலன் களிக்கு அனுமதி கிடைத்த இளஞ் சிறுவனென எழுவதுண்டு. அவனுள் உறையும் தெய்வங்கள் குருதியாடும் களங்களுக்கென வாய் விரித்திருப்பவை என்பதை வேறுகாடார் அறிவார். ஆயினும் அத்தாக்குதல் அசலவின் நுட்பமான வியூகங்களுடன் நிகழவிருப்பது ஆபத்தானது. அது ஏற்கெனவே அறிந்த சிங்கைப் படையாக இருக்காது. அசலவின் மெய்த்தோற்றத்தைக் களங்களிலன்று எவரும் கண்டிலர். அவனது ஓவிய உருவும் ஒவ்வொரு முறையும் பயிலா இளம் ஓவியனின் கனவுத் தோற்றங்களென ஓலைச் சுருள்களில் வந்து கொண்டிருந்தன. சலிப்பில் அவனது கதாப்பாத்திரத்தின் நுண்மையான சித்திரத்தை குடிகள் வழியும் தன் கரவு வழிகளினாலும் திரட்டித் தொகுத்துக் கொண்டிருந்தார் வேறுகாடார்.

அசலவின் இயல்பை அவர் தொகுக்குந்தோறும் ஒற்றை அறிவது நீலனைக் குறித்தா என ஐயம் எழுவதை அவரால் விலக்க முடியவில்லை. ஒவ்வொரு அணுவிலும் நீலன் தோன்றினான். நீலனென்றே ஆகிய நீலனை எதிர்கொள்வது எங்கனம் என அதிர்ந்து கொண்டார். அசலவின் ஆழங்களை அறிவது எளிதாய்த் தோன்றியது. மூர்க்கன். எளியவன். பற்றிலாத யோகியென்று போர் புரிபவன். ஒவ்வொரு படைக்கலமும் ஒரு இசைக்கருவியெனப் போரை மாபெரும் இசை வேள்வியென நிகழ்த்தும் கலைஞன். வெல்வதை அன்றிப் பிறிதை எண்ணமிலாதவன். அக்கணத்தில் அவன் அழைக்கும் தெய்வங்கள் அவனுடலில் ஏறியாடும் அம்பலம் எனத் தன்னை ஊழ்கப்படுத்த அறிந்தவன். மெய்யாலும் அகத்தாலும் சிங்கை புரியின் அறங்களின் ஆன்மாவெனத் தன்னை உருக்கிக் கொண்டிருப்பவன். அறமே பெருங்களங்களில் வெல்லும் முதன்மைப் படைக்கலமென அறிந்தவன். ஆகவே வெல்லப்பட முடியும் என்ற நம்பிக்கையை குருதி கொடுத்தேனும் ஈட்டும் ஆற்றலைப் படைகளுக்கு அளிப்பவன்.

முல்லைப் பட்டினத்தில் ஒரு தெருப்பாணன் பெருஞ்சாலைக் கரையிலிருந்த மருதமரங்களின் கூடலொன்றில் கள் குடித்துத் தீயிலை புகைத்தபடி சொல்லாடிக் கொண்டிருந்தான். அவனது தேகத்திலிருந்த வியர்வையெல்லாம் கள்ளென மணத்தது. அவனது மனைவி அன்னத்தை உருட்டி அவன் வாயில் ஊட்டினாள். அடங் கொண்ட சிறுகுழவியென அவள் கையை விலக்கியபடி வேறுகாடாரிடம் சொன்னான் “ஐயா. அவரை நான் ஒரு நாள் வென்ற செருக்களம் நீங்கிச் செல்கையில் சிங்கைப் பட்டினத்தில் கண்டேன். தூவப்பட்ட மலர்கள் எவருக்கோ என்றும் சொல்லப்பட்ட புகழ்ச் சொற்கள் பிறிதொருவருடையது என்றும் புரவியின் கால்நடையின் தாளத்தில் அலை மேல் மலரென அவர் நடந்தார். மெய்யாகவே ஒருகணம் நீலர் எழுந்தார் என மெய்ப்புக் கொண்டேன். அங்கிருந்த சிங்கை மூதாட்டியொருத்தி அவனை நோக்கி ஆயிரம் முலையுடையாய் எங்கள் மகவுகளைக் காத்தருள்க எனக் கூவினாள். அச்சொற்கள் எய்யப்பட்ட இலக்கில் பிசகாது பொருதும் புலிவீரனொருவனின் அம்பென அவர் காதுகளில் தொட்ட போது அவர் விழிகளில் நீர்த்திரை எழுவதைக் கண்டேன். அறிக. பிறருக்கென விழி நீர் சிந்தும் ஒருவனைக் களத்தில் வெல்வது அரிது. அவன் தன் குடியினைக் காக்கவென மண் நிகழ்ந்த அவன் தேவன். அவன் அவனது பெருஞ்செயலை ஆற்றியே முழுதமைவான். அவனை வெல்வது அறத்தால் மட்டுமே இயல்வது. நம் குடியோ அதன் எல்லைகளை எப்பொழுதோ முற்றிய வயல்வெளியில் மதயானைக் கூட்டமென அழித்து வந்திருக்கிறோம். போரில் முதன்மை வெற்றியை வருங்காலத்தை எவன் மகத்தானதாக ஆக்குவானோ அவனுக்கே அமையும். அவனே வருங்காலத்தின் கனவு. அவன் காண்பதை நம் எளிய விழிகள் காண ஒண்ணாது” என்றான். அப்பாணனின் சொற்கள் அச்சமூட்டும் கனவொன்றை விபரிப்பதைப் போலக் குரலில் ஏறியிருந்தது. அவனது மனைவி அன்னத்தில் மீனின் சதையொன்றைப் பிய்த்துக் குழைத்து மீளவும் ஊட்டினாள். அவன் அதை உண்டபடி வேறுகாடாரை நோக்கி கள்ப்புன்னகை வீசினான்.

பிறிதொருமுறை சிங்கை புரியின் பரத்தையொருத்தியுடன் சொல்லாடிக் கொண்டிருந்த வேறுகாடார் “நீ கனவிலேனும் புணர்ந்து களிக்க விழைபவன் எவன்” எனக் கேட்டார். அவள் கூந்தலில் நதிகளில் எழும் மூங்கில் வாசனை பரவியிருந்தது. விண்மீன்கள் ஒளியள்ளிச் சொட்டிக் கொண்டிருந்த இரவின் ஆகாயத்தை நோக்கியிருந்தவள். “அங்கனம் நான் புணர விழையும் மானுடர் என எவருமில்லை. ஆனால் காதல் கொள்ள பெருவிழைவு கொண்ட ஆண் மகன் ஒருவன் உளன்” என்றாள். வேறுகாடார் ஒருகணம் தயங்கிய பின்னர் அப்பெயரை அவர் அறிந்திருப்பதை எண்ணி வியந்து கொண்டே “எவர்” என்றார். “பெண் விழைபவன் மானுடரில் தன்னை தெய்வமென்று நிறுத்தியவன் அல்ல. தன் மடியில் மகவென அமைந்து அவளின் நெஞ்சு சுரப்பதைக் கனவென்றாக்கி மண் நிகழ்த்தும் எளியவனே தெய்வங்களும் அஞ்சும் பேருருவன். நான் ஒருவரைக் காதலிக்க விழைந்தேன் என்றால் அவன் என்னை நானென எக்கணம் சூடும் ஒருவனையே. சிங்கை புரியின் கனவுகளில் மயக்கும் இசையென ஒலிக்கும் அசல என்னும் பெயரே அவர்” என்றாள்.

வேறுகாடார் மேலுமொரு கணம் மெளனமாகிய பின்னர் “எப்பெரு வீரனும் பெண்களின் கனவில் ஒலிப்பவனே. அதற்கென்றே அவர்கள் களங்களில் பேரொலியுடன் போர் புரிகின்றனர். களங்களில் அவர்களில் எழுவது காமம் எனும் வேட்கையின் தீயை அணைக்கும் குருதி மழைக்கான ஏக்கமே. களங்களில் குருதியாடும் தெய்வங்கள் அவர்களுக்குக் காமத்தை நெய்யென ஊற்றுகின்றன. அவர்களோ காட்டெரியென உளங்களில் பரவிச் செல்கிறார்கள்” என்றார்.

பரத்தை சிரிக்கத் தொடங்கினாள். “நல்லது. நீங்கள் அவர் மேல் கொள்ளத் தொடங்கிய பொறாமையின் நெருப்பு ஆயிரங் காட்டெரிகளை விட ஆற்றல் மிக்கது” எனச் சொல்லி மேலும் உரக்கச் சிரித்தாள். வேறுகாடார் தணிந்த குரலில் “இல்லை பெண்ணே. அவரை நானும் அறிவேன். மானுட அகங்கள் காதலை ஒரு பரிசென எண்ணியே தங்களைக் காக்கும் வீரர்கள் முன் அளிக்கின்றன. இல்லையேல் அதுவொரு மாபெரும் ஆணவத்தின் உச்சிப் பீடம் என ஆழகம் தேர்கிறது. அதன் மேல் எழுந்தருள விழைகின்றன. காதல் நுண்மையானது. பெருங்களக் கொல்வீரமோ நுண்மைக்கு எதிரிடையில் தன்னை வைத்துக் கொள்வது. போரில் தோன்றும் நுண்மை அழிவதன் களியில் உவகை. அதை அடையாதவர் போரை வெல்ல இயலாது. போரில் அழிவது மானுட அகத்தின் அனைத்து நுண்மையும். அங்கு கொல் எனும் வெறியே உச்சமான சொல்” என்றார்.

பரத்தை சிலகணங்கள் இமைகள் சரிய துயிலில் இருப்பவள் போல அவரின் மார்பில் சாய்ந்திருந்தாள். புற்கள் அடர்ந்து செறிந்திருந்த ஆற்றங் கரையில் நிலவொளி பட்டு மணல்வரை ஒளி வீசியது. அவள் தனது நாவைச் சுழற்றி உதட்டை ஒட்டிக் கொண்டு “கொல்பவன் காதலிக்க மாட்டானா” என்றாள். அசொல் அவரை மெழுகுத் தூணொன்றை அக்கணம் தீயில் வார்த்துக் கொண்டிருந்த வாளால் அறுப்பது போல கீறியது. வசுதாவின் முகம் வெண்நாகமென புற்செறிவுகளின் இடையிருளால் தோன்றத் தொடங்கியது.

வசுதா தன் மின்னல் நிறம் கொண்ட பெருநாகச்சிரசை விரித்துப் புல்வெளி மேல் எழுந்தாள். அவளது வெண்ணிற நாவுத் துடிப்புகள் இருளில் மின்னலின் நரம்புகளெனத் துடித்துள்ளாடின. விழிகள் நீளாற்றை நோக்கியிருந்தன. வேறுகாடார் மேனியில் மெய்ப்புல்கள் எழுவதை நோக்கிய பரத்தை அவர் விழிகள் நிறை வானை நோக்கியிருப்பதைக் கண்டு அஞ்சத் தொடங்கினாள். அவரது மார்பை உலுக்க திரும்பி அவள் முகம் நோக்கினார். “பிறிதொருவர் உள்ளார்கள் அல்லவா. நீங்கள் அவளைக் கொன்றீர்கள் அல்லவா” என்றாள். அக்கேள்வியால் வாலில் தீபட்ட நாகமென எழுந்தார் வேறுகாடார். “என்ன சொன்னாய். என்ன சொன்னாய்” என அதிர்ந்தபடி கேட்டார். மண்சுவற்றில் யானை மோதுவதைப் போல மேனி நடுங்கினார்.

வானை உயர்ந்து நோக்கியவர் வசுதா தன் வெள்ளியுடல் நாகமேனியை வளர்த்தபடி நிலவில் சென்று தீண்டுவதை அருகிலெனக் கண்டார். நிலவினருகில் வசுதா ஒரு நாகமென அதை விழுங்கிக் கொண்டிருந்த போது வேறுகாடாரின் மேனியில் வியர்வை அரும்பியது. பரத்தை அவரை உலுக்கினாள். அடிவேரில் பற்றியிழுத்த செடியென நனவுலகு மீண்ட வேறுகாடார் அவளை உதறினார். “யார் நீ. யார் நீ” எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். அழும் விலங்கைப் போல ஓலமிட்டார். கண்ணீர் தளதளத்துக் கொட்டியது.

“கொல்பவனே காதலன்” எனக் கூவினார். காற்றை உதறி அச்சொல் விண்மீன்களை அதிர்த்தது. வேறுகாடார் எழுந்து உடலை இறுக்கி ஒடுங்கி நின்றார். கண் முன்னே ஒருசிறு வெண்நாகக் குழவியொன்று இளநீல வண்ண நச்சு மலர் சூடியிருந்தது. அதன் நோக்கு பெண் விழிகளில் அவர் எப்போதும் காண்பது. அழகிய நஞ்சு எனச் சொல்லிக் கொள்வார். இக்கணம் இங்கு எழுந்த வெண்நாகக் குழவி வசுதா. அவளுக்கு பல உடல்கள். பல பெயர்கள். விழையும் அகவையைத் தேர்ந்து கொள்வாள். மானுட வாழ்வில் நஞ்சென்றான விசை அவளே. அவளை நான் கொன்றேன். என் கரத்தில் அவளது இளந்தண்டுக் கழுத்து பற்றிக் கொள்ளென ஒட்டியிருந்தது. என் வாள் கீறிய ஓசையின்மையளவுக்கு எடை கொண்ட பிறிதொன்று என் மார்பை பெருவிசையுடன் அழுத்தியதில்லை. வேறுகாடார் தன்னுள் எழுந்த சொற்களின் பேரிரைச்சல் பொறுக்காது எழுந்து சென்றார். புற்களின் கரிய இருளில்.

*

இருதியாளை ஒருகணம் திரும்பி நோக்கியவர் அவளின் வெண்வண்ணக் கூந்தல் இழைகள் அவளை மூதன்னையாக்குகிறது என எண்ணினார். பிறகு அவள் எப்போதும் அப்படித் தோன்றியவளே என எண்ணிக் கொண்டார்.

தாக்குதல் செய்தி இருதியாளுக்குச் சேர்ந்த பொழுது அவள் ஆழிக்கரையில் தனது கலனைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தாள். புலரியின் பனித்திரைகளை விலக்கியபடி வேறுகாடார் பொலிமேனி தினவு கொண்ட இளம் புரவியென நடந்து வந்தார். இருதியாளின் நோக்குத் தொட்ட பொழுது அவ் ஊழை அறிந்த மெய்யகணத்தில் உடல் காற்றென்றாக அவர் நடந்தார். இருதியாளுக்குச் செய்தியைச் சொன்னவர் தானும் உடன் வருகிறேன் என்றார். “ஆழி பழக்கமா தோழரே” என்றாள் இருதியாள். “ஆழியளவுக்கு ஆணை ஆழ்த்தும் மயக்கு உண்டோ உலகில்” என்றார் வேறுகாடார். இருதியாள் கலனை நோக்கித் திரும்பி புன்னகைத்துக் கொண்டாள். பெண்ணின் உடலில் புன்னகை எழும் பொழுது மேனியின் அத்தனை அணுவிலும் ஒன்று புன்னகைக்கிறது. அதை நோக்கிய வேறுகாடார் கையில் தன் வில்லைத் தூக்கி கலனில் ஏற்றினார்.

நானூறு வீரர்கள் கொண்ட ஆழிக்கொற்றவைகளின் படை கடல் காக்க நுரைகளைச் சீறிக் கலன்களை ஏற்றி பாய்மரங்களை விரித்து இருளில் செந்தீக் கொடியை ஏற்றுபவர்கள் போல புலிக்கொடியை ஏற்றினார்கள். ஆழிக்காற்றில் தீச்சுவாலைகள் என புலிக்கொடி காற்றில் தகதகத்தது. வேறுகாடார் தன்னைச் சுற்றிலும் நிரை வகுத்த ஐம்பது கலன்களையும் நோக்கினார். கரையில் நின்றபடி கைகளை மார்புக்குக் கட்டிக் கொண்டு நீலன் அவர்களை நோக்கியிருந்தான். அவனருகில் தமிழ்ச்செல்வன் உடைவாளைப் பிடித்தபடி புன்னகை பூத்து நின்றான். வேறுகாடாரின் உடலுக்குள் உப்பின் மணம் நெஞ்சை உதிர்த்து ஆழியை அனுப்பியது. தேகம் கடலால் ஆனது என எண்ணினார் வேறுகாடார். விண்மீன்கள் நலுங்கும் இமை நுனி நீர்த்திவலைகள் என வானில் தூங்கின. இருதியாள் சுக்கானைப் பிடித்தபடி நின்றிருந்தாள். ஒரு வெண்நாகம் போரெழுந்ததென. அவள் மேனி கருமையின் சுடரில் அனல் கொண்டிருந்தது. கலனுள் தளர்ந்த ஆடையென வீசிக் கொண்டிருந்தது ஆழிக்காற்று.

TAGS
Share This