ஒற்றைக்கோடை

ஒற்றைக்கோடை

கவிஞரும் நண்பருமான ஆதி பார்த்திபனின் கவிதைத் தொகுதி தாயதி பதிப்பக வெளியீடாக ஒற்றைக் கோடை எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அதன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அவரைப் பற்றி எழுதிய குறிப்பொன்றை மீளவும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். தொடர்ந்து செயல் புரிக!

*

யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் எதிர்கொண்டது இரண்டு வகையான அடிப்படைகளிலான வாழ்வை, ஒன்று, அவர்களது இளமைக் காலம் யுத்தத்தின் ஏதோவொரு பகுதி நினைவைக் கொண்டது. அதே நேரம் அது நடந்து கொண்டிருந்த போது அவர்கள் இளையவர்கள். போர் உக்கிரமாக நிகழ்ந்த நிலத்திற்கு வெளியில் வேறொரு வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. உள்ளிருந்தவர்கள் அதன் மிகுதிகளையும் இறுதியையும் ஞாபகக் கிண்ணங்களில் ஏந்தினர். மற்றையவர்கள் வாழ்வின் ஆதார உணர்வுகளின் திசையில் முன்னேகினர்.

இரண்டாவது, அவர்களது வாசிப்பும் இலக்கிய உரையாடல்களும் இணையம் உண்டாக்கிய வாய்ப்பும் தமிழ்நாட்டு எழுத்துகளையும் மொழிபெயர்ப்புகளின் ஊடாக உலக இலக்கியங்களையும் வாசிக்க வாய்ப்பளித்தது. நானும் அத்தலைமுறையைச் சேர்ந்தவன். யுத்தத்தின் உக்கிரமல்லாத சாயைகள் விழுந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவன். ஆதி பார்த்திபன் அக் காலகட்டத்தையும் சமாந்தர இளம் பருவத்தையும் கொண்டவர். இந்தக் காலம், இன்னொரு வகையான எழுத்து முறையையும் நம்பிக்கைகளையும் உரையாடித் தீவிரமாகத் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டது.

அவரும் நானும் உயர்தரம் படித்ததற்குப் பின்னர் ஒன்றாக இலக்கியமும் கவிதைகளும் கதைத்துக் கொண்டு, கூட்டங்களும் புத்தகங்களும் எனத் தீவிரம் கொண்டு அலைந்தவர்கள். அவரது இயல்பு தீவிரம் கொண்டது, மனிதர்களையும் சமூகத்தையும் அவர் அப்பாவித்தனமாக அணுகுவதில்லை. அதன் நம்பிக்கையின்மையுடன் மோதிக்கொண்டேயிருப்பார். அவற்றின் போலித்தனங்களை, வாழ்வை என்னவாக ஆக்கிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம் என்பதில் கூருணர்வுடன் எதிர்வினையாற்றியபடி இருப்பார். நெருங்குபவர்களுடனேயே கதைப்பார். அவரது இயல்பை இங்கு அளிக்கக் காரணம், அது அவரின் கவிதையெனவும் ஆகியிருக்கிறது என்பதாற் தான். 2012 களின் பின் அவர் தீவிரம் கொண்டு இலக்கிய ஆக்கங்களில் ஈடுபட்டார். அவை புதிதான ஒரு சொல் முறையையும், இசையையும் ஈழத்தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியது.

அவை வாழ்வின் உணர்ச்சிகரமான காதலின் முன் பருவ உறவின் நீளத்தைப் பலநூறு வரிகளாக்கியது. ஏராளமாக எழுதித் தள்ளினார். அவரது வாழ்வும் நிலையற்று அலைந்து கொண்டேயிருந்தது, அதன் சரிவான பள்ளங்களைக் கவிதைகளை ஊன்றி நடந்து வந்தார். மனிதர்கள் மீதான அன்பும் நம்பிக்கையும், அன்பற்ற நிலையும் நம்பிக்கையின்மையும் அவரது கவிதைகளிலும் புனைவுகளிலும் ஊடாடிக் கொண்டேயிருக்கும். அவர் பின் வந்த நாட்களில் எழுதுவது குறைந்து போனது. அண்மையில் ஒரு உரையாடலில் இப்ப எழுத வருதில்லை என்று சொன்னார். அவர் தனது மொழியையும் மனதையும் தொடர்ந்து தக்க வைக்கவேண்டுமென விரும்புகிறேன்.

அவர் பத்து வருடங்களுக்கு முன்னரே அவரது தனிக்குரலை அடையாளம் கண்டு கொண்டார். தொடர்ந்து எழுதி முன் செல்லக் கூடிய நுட்பங்கள் வாய்க்கபெற்றவர். வாழ்வை நேரிடையாக எதிர் கொள்ளும் தோறும் அது கவிதையையோ புனைவையோ உருவாக்கியளிக்கும். அதிலிருந்து வேறொன்றாக எங்களைக் கற்பனை செய்து கொள்வதும் விலகிச் செல்தலும் பல எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்திருப்பவை. அதே நேரம் சிறிது காலத்தின் பின் தன்னை மூடியிருக்கும் புறவுலலை உரித்துக் கொண்டு, உண்மையின் வெளிச்சத்தில் நிர்வாணமாக நிற்கும் கலையை ஆக்கியவர்களும் உண்டு.

ஆதி பார்த்திபனின் முன் பருவத்துக் கவிதைகள் இவை. அவரது எழுத்துக்கள் மீது வாசக கவனம் நிகழ்த்தப்பட வேண்டும். அவர் தொடர்ந்து தீவிரமாக வாழவும் எழுதவும் வேண்டும்.

(ஆதி பார்த்திபன்)

*

பிரியமற்ற வெளி

பிரார்தனைகளோ கருணையின் கடைசியிருப்புகளோவற்ற
கூட்டைவிட்டு எடுத்தாகிவிட்டது ஒரு முட்டையை -கோதுகழன்று பிரமாண்டமாய் வளரும்
சிறகற்ற தனிப்பறவை வெறுப்பு
அதுவதன் நம்பிக்கையின்மையை துரோகத்தை ஏமாற்றுதலைக் கொண்டு பறக்கும்
எனது பறவைகளே கூடு திரும்புங்கள்
ஒளியற்றது உறவுகளற்ற பூமி – இருந்தும்
அழியாது இவ்வுலகு
பறவைகளே! அன்பின் சிறகிருந்தும் அனாதையானது காலம்
வானம் தனிப்பது மழை
ஆறு கடல் ஆழி பிரியமற்றவெளி
கண்ணீர் பொதுத்திரவம் -வாழ்தல் என்பதோ வலிகளின் ஞானம்
நேசமற்றது என் பறவை -ஆயினும்
அன்பின் இறுதித் தானியத்தையும் எனது
வளர்ப்புப் பறவைகளுக்கே எறிகின்றேன்
கருணையின் கடைசித்தானியமுமற்றது பசி
பறவைகளே கண்ணீரே ஞானம்.

TAGS
Share This