126: மழைக்குயில் : 02

126: மழைக்குயில் : 02

நீலன் உருவிய வாளுடன் சங்கறுத்து விழுவது போல சூர்ப்பனகரின் கனவு விரிந்தது. நீலன் மன்றில் உருகம் ஏந்தி என்னை அன்னையர் எவரேனும் கொல்க என இரந்து நிற்பவன் போல எழுந்தபோது தனது அனிச்சையாய் கால்கள் எழுந்து நிற்பதை தானே தனக்குள் வியப்புடன் நோக்கினார். அதுவொரு நாடகமில்லை என்பதை அவர் அகமறியும். அங்கனம் எவரேனும் அன்னையர் “கொடு உன் வாளை. இன்றோடு செத்தொழி” என வாளைப் பற்றி எழுந்திருந்தால் அவன் மெய்யாகவே சங்கைக் கொடுத்து நின்றிருப்பான். மூடன். முழு மூடன் என எண்ணிக் கொண்டார். அரசு சூழ்கைகளின் தந்திரங்களை அறமின்மையென எண்ணும் எளிய குடியினன் நீலன்.

ஒரு பேரரசை நிறுவி அறங்களை ஆக்கி குடியை ஒருங்கிணைத்து என்றைக்குமிருக்கும் தமிழ்க்குடியின் அரசை நிறுவுவதென்பது மூடக் குரங்கின் கையிலிருக்கும் வாள் அல்ல. அது பெருங்கனவுகளின் விடாயை கனவாலும் அறிவாலும் இணைக்க வேண்டியது. நீலன் எழுந்து வாளுடன் நின்ற போது தமிழ்ச்செல்வன் அருகில் சென்று உடைவாளில் கைவைத்தபடி நின்றதை எண்ணினார். நீலன் மடியுங் கணத்தில் தானும் சங்கறுத்து விழ எழுந்த அறிவிலி. அந்தந்த நேரங்களின் விசைக்கு நெருப்பெரிவது போல தழன்று கொண்டிருப்பவனா பேரரசன். உருகாத தொல் உலோகத்தில் வார்க்கப்படும் பெருஞ்சிலை. அங்கனமே அவனை வார்த்துக் குடிகளின் நெஞ்சில் அவர் அமர்த்தியவர். நீலனின் கூர்மை சூர்ப்பனகரின் சொற்களினாலேயே தோன்றுவது. நீலனின் எளிய சொற்கள் குடிகளையும் வீரர்களையும் கவர்வது. உளங் கவர் சொற்காரன் நீலன். ஆனால் அரசு சூழ்தலில் கடை நிலை மாணவன். மூர்க்கமும் அறிவும் கொண்ட நித்திய பகைமையில் மூர்க்கத்தின் படைப்பிரிவில் முதன்மை மூர்க்கன். அவனில் சொல்லின்றி ஊறும் கருணையும் அன்பும் செயலில் மூர்க்கமென்று உக்கிரமடைகிறது. இருவிழிகளும் போதாதென்று நுதலிலும் விழியெழுந்த ஈசனைப் போல உலகை மூர்க்கத்தின் மூவிழிகளால் நோக்குபவன்.

ஒவ்வொரு கூட்டத்திலும் கவனிக்கப்படாத பெண் அடையும் வஞ்சம் போன்றது அவன் தாழும் இடங்கள். அவன் தன் பள்ளங்களை மூடிக் கொள்ள இருளை அள்ளித் தெளித்திருப்பவன். எவரும் நோக்க முடியாத இருள். அதிலிருந்து எது எழுந்து வருகிறதென அது எழுங்கணம் வரை உய்க்க முடியாது. அனிச்சையாக வேறுகாடாரின் நினைவு சூர்ப்பனகரில் எழுந்தது. நீலனில் குறைபடுவது வேறுகாடாரில் நிகர் கொள்கிறது. ஆனால் வேறுகாடாரின் மூர்க்கமின்மை அவரை ஆற்றல் குன்ற வைத்தது. அறிவுடையோர் மெய்யரசை விட அதை ஆளும் சொல்லரசையே தேர்கிறார்கள். அச்சொல்லின் படைக்கலமென எழுபவனே அரசன் என்றாகிறான். வேறுகாடார் ஊழின் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார். தன்னைத் தானே வகுத்து இழந்து விலகிக் கொண்டார். ஆனால் நீலன் எளிய மலைகளைப் போன்று பெரியவனும் உறுதியானவனும் ஆற்றல் பொருந்தியவனும். அவன் நுண்சொல்லை ஒரு படைக்கலத்தைப் போல ஏந்திக் கொள்ளும் அகம் கொண்டவன். அதை எங்கனமோ முழுதறிந்து தன்னுடையதாக ஆக்கிக் கொள்வான். அந்த நுட்பமே அவனை வெல்லற்கரியவனாக்குகிறது. எண்ணியிராக் கணத்தில் குடிகளை அவன் எளிய சொற்களாலும் செயல்களாலும் வென்று விடுகிறான். தமிழ்க்குடி திரட்டிய மொத்தப் பேரறங்களும் அவனிடம் கூடின. மிகத் துல்லியமாக விண்மீன்களை இணைத்து வரையப்பட்ட ஓவியம் போல அனைத்தையும் இணைத்து உருவொன்றானவன்.

அவனை அவர் எண்ணி வியந்து கொள்ளும் கணங்கள் உள. அவை அவனை மீறியும் எழும் அறியாத் தெய்வத்தின் வெறியாட்டெழுந்த கணங்களே. போர்க்களங்களில் எழும் நீலன் சூர்ப்பனகரின் அகத்தின் மெய்யுரு. அவரில் ஊறிய சொல்லும் நுண்மையும் படைக்கலமென ஆவதில்லை என அவர் அறிவார். மெய்யான படைக்கலங்களே நிலங்களை வென்று உறுதியை உண்டாக்குவது. நீலனிடம் அவர் சினந்து கொள்ள ஆயிரம் கணங்கள் எப்பொழுதும் உடனிருக்கும். அவனது மூர்க்கம். பிடிபடாத உறுதி. வஞ்சினமென எழுந்திட்ட அவன் இருப்பு. அனைத்தையும் அவர் ஆழத்தில் வெறுத்தார். அவையின்றி அமைந்ததாலேயே அவரால் படைக்கலம் ஏந்த இயலவில்லை என நொந்து கொள்வார். இரண்டு எதிர்முனைகளில் ஆடும் ஊசல்.

நீலன் அவரை வியப்பூட்டும் பிற கணங்களை அவர் எண்ணினார். பெருந்தோல்வியும் பேரிழப்புகளும் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் வெல்வேன் எனத் தருக்கி நிற்கும் எளியவனை அவர் வியக்கும் வெறுப்புடன் நோக்குவார். அன்னையிடம் சொல்தருக்கித் தான் வென்றே ஆவேன் என வஞ்சினமுரைக்கும் குழவியென அவன் களமெழுகையில் நின்றிருப்பான். எதுவும் துணையில்லை. யாவும் இழக்கிறாய். தெய்வங்களும் உனைக் கைவிட்டன
என அறுதிச்சொல் உரைக்கப்படுகையிலும் அவன் வெல்வேன் எனக் குழந்தையைப் போல எண்ணுவான். குழந்தையின் எண்ணத்தின் முன் தெய்வங்கள் பணிவது போல அவன் அக்களத்தை வென்ற பின்னர் சூர்ப்பனகரை நோக்கி மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்ப்பான். அப்புன்னகையின் மொழியை அவர் அறிவார். “நீங்கள் எண்ணியிருக்கவில்லை தானே மூத்தவரே. நான் வென்றேன். நான் நம்பினேன். என்னை ஆளும் ஊழை விட வலியது என் கனவு எனக்களித்திருக்கும் ஆணை. நான் வெல்வேன். அறுதியில் வென்றே அமைவேன்” என நீலன் சொல்வதாக எண்ணிக் கொள்வார்.

நீலன் கழுத்தில் வாளுடன் நின்றிருந்த கணத்தை நூறு முறைகளாவது எண்ணிச் சலித்திருக்கிறார். ஒரு காவியத்தில் நாயகனென வியந்து நோக்கியிருக்கிறார். பிறிதொரு பொழுதில் அறியாச் சிறுவனிடம் அளிக்கப்பட்ட வாளின் எடை தாழாது அவன் அதைக் கையில் பற்றியிருக்கிறானெனக் கருணை கொண்டிருக்கிறார். மூடன். முழுமூடன் என சினந்து கொண்டிருக்கிறார். எத்தனை எண்ணியும் பிடிபடாத ஒன்று அக்கணத்தில் நிகழ்ந்ததென எண்ணி அமைவு கொண்டிருக்கிறார். இழைக்கப்பட்ட குடிச் சாவுகளுக்கென ஒரு பெருஞ்சாவைக் கோருதல் நிகரே என எண்ணியிருக்கிறார். பிறகு அவ்வெண்ணம் தன்னுள் எங்கு ஒளிந்திருக்கிறதென ஒவ்வொரு நாளும் துழாவிக் கொண்டிருந்தார். நீலனை வெறுக்கவோ அன்பு கூரவோ தேவையானது அவன் அளவுக்கேயான மூர்க்கம் ஒன்றே. இரண்டில் ஒன்றில்லாது அவனை அறியும் எவரேனும் இக்குடியிலோ எதிரிகளிடமோ இருக்கிறார்களா என ஐயுற்றார். அல்லது இரண்டையும் இருவேறு பொழுதுகளிலெனவோ. வெவ்வேறு தருணங்களுக்கெனவோ அவனிடம் அளிக்காதவர்கள் எவருளர் எனவும் எண்ணினார். ஒருவேளை தமிழ்ச்செல்வன் அன்பை மட்டுமே அளித்து அவன் முன் நின்றிருக்கலாம். அது அவனால் ஆகக் கூடியது. எளியவன். தன் தெய்வம் ஏறிய ஊர்தி.

அந்தக் குடியவையில் எழுந்து நின்ற போது குடிகளின் ஒவ்வொரு முக அசைவுகளையும் நூறு நூறு திரைச்சீலைகளில் அவர் வரைந்திருக்கிறார். ‘ஐயனே’ என்று கேவும் முகத்தசைகள். உதட்டில் சொல்லென எழுந்தது அச்சொல். எங்களை கைவிடாதே என இரப்பவர்கள் தன் தெய்வத்திடம் கோரிப்பெறுவது போல. உன் வாழ்வை எனக்கு அளியென யாசிப்பதைப் போல. அவை கூர்ந்து ஒலித்து அதிர்ந்தன. முழுமேனியும் நடுங்கி ஒற்றைச் சொல்லென அதிர்ந்தது.

முதுகிழவர்களின் முகங்களை அருகிலெனக் கண்டார். தொலைகாண் ஆடியில் மேலும் மேலும் ஆடிகளைப் பொருத்தி விழிமணிகளின் முன்னே அம்முகங்களைக் காண்பது போல. அம்முகங்களில் மின்னல் உதிர்வது போல எழுந்தது ‘வேண்டாம்’ எனும் மறுப்பு. இது அல்ல மகவே நீ உன் குருதி கொடுக்கும் பீடம். உனக்கான களங்களைக் காலம் திசையெட்டும் விரித்திருக்கிறது. வெல்லப்பட முடியாத உன் திறல் போரிலன்றி எங்கும் வெளியாற்றத் தேவையற்றது. எளிய குடிகளின் முன் நீ இரக்கத் தேவையில்லை. அவர்களின் கருணையின் முன் நின்றிருக்க உனக்கு அவசியமில்லை. உன் அளியில் வாழ்வு கொண்டெழுந்த குடிகள் இவர்கள். பற்றைக் காடுகளிலும் கொடுமிருகக் கூட்டத்தின் அருகிலும் எப்பிடியும் இன்றி நீயே அறுத்து உண்டாக்கிய பாதையில் அனைவரும் நடந்தோம். இனி முடிப்பில் உன் சிரசு தெய்வங்களால் வகுக்கப்படும் களத்தில் வீழ்கையில் அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இப்பொழுது வேண்டாம் மூத்தவனே. அச்சொற்களை அம்முது கிழவர்களில் ஒருவராக நின்றபடி சூர்ப்பனகரும் சொல்லிக் கொண்டிருந்தார். அதையெண்ணி அகமதிர விழி திருப்பி இளையவர்களை நோக்கினார்.

இது இங்கனம் நிகழாது என மலைத்து நின்றன அவர்கள் விழிகள். பெருங்கனவொன்று மாசின்மையுடன் எழுந்து நிற்கையிலேயே இளையவர்களின் வாழ்வு பொருள் கொண்டதாகிறது. உண்டு. குடித்து. உழைத்து. புணர்ந்து. நோயுலர்ந்து முதுமை கொண்டு மடிவது போல வீணான வாழ்வை எவர் வாழ ஒண்ணுவர். பெருங்கனவுகள் சூடியவர்களே இளையவர்களின் அரசர்கள். பெருங்கனவாளர்களே இளையவர்களின் வாழ்வைப் பொருளளிக்கும் சொல். இருப்பு. வாய்ப்பு. அத்தகையவர்கள் ஒழிந்த பின்னர் சூழும் இருளை அஞ்சாதவர் எவர். அதன் பின்னர் அக்கனவு தொல்கதைகளில் பாடலென்றாகி ஒலிக்கும். நாயகர்கள் மண் நீங்குவர். கல்விச் சாலைகளில் புழுதி படியும். குடியில் களியே எங்கும் எழும் பெருங்கனவென. அதுவே அவர்கள் தங்களைத் தாங்கள் மகிழ்ச்சியுடன் இட்டுச் செல்லும் அழிகளம். அங்கிருந்து எவரும் மீள விழைவதில்லை. இளையோரின் உதடுகளையே அவர் நோக்கிக் கொண்டிருந்தார். அவை சொல்லின்மையில் உறைந்திருந்தன. ஆனால் அகத்திற்குள் தீ நடுக்கனெ அவர்கள் ஒவ்வொருவரிலும் நீலன் எழுந்தான். அவனே அம்மன்றில் இளையோர் என எழுந்து நின்றிருப்பவன் என நோக்கினார். அதை அவர் கண்டார். நீலனின் இள விழிகள். அதை அவர் ஒவ்வொரு நாளும் எவரிலேனும் கண்டு கொண்டேயிருப்பார். துள்ளும் விசையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு இளையவரிலும் அவனே விழிகளென்றாகிக் குடிகளை நோக்குகிறான். அவர்களில் நோக்கென்று அமைந்தவன். அல்லது அவர்கள் அஞ்சும் நோக்கு.

பெண்களின் நிரையை நோக்கினார் சூர்ப்பனகர். விழிகொள்ளாத் துயருடன் நீர்ததும்ப விம்மும் மார்புக்குலைகளைப் பற்றியபடி நீலனை நோக்கியிருந்தனர். விழிகளால் எறிந்த மந்திரக் கயிறுகளால் அவன் பற்றியிருந்த வாளையும் கையையும் இழுத்து நிறுத்துபவர்களென இமையா விழிகள் பூண்டிருந்தனர். கால்கள் ஆடைத்துணி தளர்வது போலச் சரிய நின்றாடினர். மன்றில் ஒலித்த மூச்சுகளில் ஒலியேயின்றி அமைந்தவை பெண்களுடையவை. அவர்கள் மூச்சை மறந்தார்களா என எண்ணினார் சூர்ப்பனகர். அவர்களின் உதடுகள் தீக்காய்ச்சலில் நடுக்கெனத் துடித்தன. தெய்வங்களின் பெயர்களை உரக்கக் கூவின உளங்கள். அடிவயிற்றில் ஈரம் சுரந்து வலிகொண்டு பரவுகிறதென வயிற்றை உட்சுருக்கி விம்மினார்கள். சிலர் எழவே இயலாமல் சரிந்து ஒருவர் மீது இன்னொருவர் உலைந்து வீழ்ந்திருந்தார்கள். விழிகளில் நீர் பெருகி வடிந்து கொண்டேயிருந்தது. மார்புகளை நனைத்து ஊறியது கண்ணீர்ப் பொழிவு. ஆடைகள் குலைந்து நழுவ மேனியின் போதமின்றி உறைந்தனர். நீலனின் முகத்தை விட்டகலா ஒற்றை நோக்கு அங்கு பெண் என்று நிலைத்தது.

TAGS
Share This