127: மழைக்குயில் : 03

127: மழைக்குயில் : 03

மானுடரில் சிலருள் எரியணையாக் கலமொன்று தன்னைத் தானே அமைத்துக் கொண்டு மண் நிகழ்கிறது. வற்றாத தாகத்தின் நாக்குகளால் அம்மானுடரை அவரின் இறுதிக்கணம் வரை குன்றாத தவிப்புக் கொள்ளச் செய்கிறது. எதனாலும் எரிக்கப்படாத எதானாலும் பெருக்கப்படாத எதனாலும் அழிக்கப்படாத அது அதனாலேயே முற்றமைகிறது. அதைத் தாகநாவு என்றனர் நூலோர். நீலன் நின்றிருந்த பெருங்கணத்தில் அக்கலம் வெகுண்டெழுந்து என்னை எரியால் போர்த்துக என அறைகூவியதைக் கேட்டார் சூர்ப்பனகர். அவர் அறிவார் அக்கலம் அங்கனம் சூதில் தன்னை வைத்தே தான் ஆடக் கூடியதென்று.

மானுடரில் பெரும் ஒருங்கிணைவுகள் கூடுவது அக்கலங்களின் எரிவாலேயே. எண்ணி எண்ணிப் பயில்பவரும் அடைய முடியாத ஒன்று அவர்களுக்கு அவர்களின் கருப்பையிலேயே அளிக்கப்படுகிறது. அவர்கள் அவர்களறியாத அக்கலத்தை தம் வாழ்நாள் முழுவதும் தாம் கொண்டவை அனைத்தையும் கொண்டு நிறைத்துக் கொள்கிறார்கள். அதில் என்றும் ஒரு நிறைவின்மை எஞ்சிக் கொண்டேயிருக்கும் வண்ணம் சமைக்கப்பட்ட அக்கலமே மானுடம் எனும் பெருங்கனவை ஆக்கும் யாகக்கலம். அதில் அவர்கள் எரிந்தே முழுமை கொள்வார்கள். பிறிதொன்றில்லாது அவர்களைப் பற்றியிருக்கும் ஒற்றைப் பொருள் அதுவே. அதன் குரலை அவர்கள் மட்டுமே அறிவார்கள். அது குரல் கூட இல்லை. ஒரு உணர்வாகவே ஆகிவிடுவது. அந்த உணர்வுக்கு முன் மானுடரின் எளிய பிற உணர்வுகளோ அறங்களோ மெய்மைகளோ கூடப் பொருட்டில்லை. அது அங்கனம் தன்னை ஒரு முழுபுடவியென்றும் அவரை அதன் முழுப்பெருக்கெனவும் ஆக்குவது. சூர்ப்பனகர் நீலனில் எரியும் கலத்தில் தன் சொற்களை அவியாக்கியவர். அச்சொற்களை அது உண்டதென்றாலும் அதற்கான அதன் மெய்மையை நீலனே கூட முற்றறிய ஒண்ணாது என்பதை அறிந்தவர். ஓம். அவன் பெருந்தெய்வங்களின் நிகரற்ற பெருவடிவும் புத்திளமையும் கொண்டவன் என்பதை ஏற்க மட்டுமே இயலும். மானுடர் அளியெனக் கோரப்போவது எதை என வகுத்த தெய்வம் அளியை அளிக்கையில் ஆடும் ஆடலின் பொருளின்மை போல. அங்கு அவ்வண்ணம் நின்றிருக்க மட்டுமே எளிய மானுடரால் இயல்வது. தன்னை அங்கனம் எளியதாக்க ஊழின் முன் நின்றாடும் தேவனே அவன் என எண்ணியமைவு கொண்டிருந்தார்.

திரியில் சுடருக்கும் காட்டெரியில் பெருந்தீச்சுழல்வுகளுக்கும் இடையில் தீயின் இயல்பில் எம்மாற்றமும் நிகழ்வதில்லை. தீ நிகழும் பருப்பொருட்களின் அளவினாலேயே அவை பெருங்கொதிப்பெனவும் சிறுவெளிச்சமெனவும் ஆகின்றன. ஆகவே பெருங்கனவுகளைச் சூடுக இளையோரே எனக் குடிகளுக்கு சொல்லளித்து கனவளித்தது சூர்ப்பனகரே. எரியும் தழலின் பெருக்கே மானுட விடுதலை எனும் பெருங்காடு கோரும் ஒளி. ஒவ்வொன்றையும் அனலிட்டு அதில் எஞ்சுவதைக் கொண்டு உயிர்த்தால் ஒழிய குடிகள் உறுதியுடன் வருங்காலத்தை ஆக்க இயலாது. இத்தனை குருதிக்கும் பேரிழப்புகளுக்கும் பின் எஞ்சுவது மட்டுமே புலிவீரரின் நோக்கில் தெரிய வேண்டியது. ஆயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின் ஓர் நாள் எழுந்து புலரப்போகும் சூரியனே விடுதலை என்றறிக. அச்சூரியனின் கதிர்க்கரங்களே புலிவீரர்களில் கரமென்றாகுவது. அதன் நிகரில்லா அனலே அவர்கள் உள்ளமென்றாகுவது. அதன் இணையற்ற ஆற்றலே களங்களை வென்றேகுவது.

தனது சொற்களைத் தானே கேட்டு அமர்ந்திருந்தார் சூர்ப்பனகர். இங்கனம் ஆயிரம் சொற்கூட்டங்களை அவர் உண்டாக்கியிருக்கிறார். நூறு நூறு தருக்கங்களின் வழி அதை உளங்களில் நிறுவியிருக்கிறார். நீலன் களங்களை வென்றும் அரசமைத்தும் முற்றொருமை கூடிய பொழுது சூரியனை உள்ளங்கையில் ஏந்திச் சென்று வான முகட்டில் இட்டவரெனத் தன்னை உணர்ந்தவர் அவரே. அனல் எழுவது வரை மட்டுமே ஏந்துபவரின் கைகளுக்குரியவை. பிறகு அதை ஊழின் தெய்வங்கள் விளையாட்டுத் திடலில் சிறுவர்கள் என ஊதி விளையாடுகின்றன என எண்ணிக் கொண்டார்.

நீலனின் கரத்தில் உருகம் வளர்ப்பு விலங்கெனத் தாவி ஏறிய கணம் ஒளிபெருக்கெடுத்து வாழும் அனைத்தையும் வெளிச்சத்தில் நிறுத்தும் மின்னலென தோன்றியது. சூர்ப்பனகர் உருகத்தின் கூர்மையை நோக்கினார். மங்காக் கூர்மையுடன் எப்பொழுதும் அது அவனுடனிருக்கிறது. நிழலில்லாத போதுகளிலும் உடனிருப்பது. புவியில் எவரை விடவும் அவனைத் தனித்தறிந்தது. அவன் கரத்திலேயே தன் முழு ஆற்றலையும் பொருத்தி நின்றிருப்பது. அதனாலேயே அவன் கொல்லப்படுவானா. இயலாது. பெருமானுடர் அங்கனம் எளிய இறப்புகளைத் தேர ஒண்ணாது. அவர்கள் மாபெரும் உச்சத்தில் எரிவிண்மீன் பெருக்கென விழுவது போல உதிர்வார்கள். அதுவொரு உச்சம். அம்மரணம் உண்டாக்கும் பேரதிர்வு சந்ததி சந்ததிகளாய் கொடி கொடியாய்ப் பற்றியேறி அணுவணுவாய் அறியப்படப் போவது. பெருமானுடரின் இருப்பை விட இன்மைக்கு எடை அதிகம். மாகனவு அதன் துலாத்தட்டில் தனக்கிணையான ஒன்றைக் கோருகிறது. தன் முழுதெடை கொண்டு மண் திகழும் வல்லோரே அதை நிகர் செய்கின்றனர்.

நீலன் எண்ணியவை அவனுக்கு விஞ்சியவை. ஆயிரமாயிரம் தலைகள் கொண்டு நிகழ்த்தப்பட வேண்டிய போர். அதை அவர் நினைவு கூர்ந்தார். ஒரு ஆழத்து தீவெளிச்சமென அந்த நினைவு அணையாது சுடர்ந்தது. நீலன் வென்றமைந்து களம் திரும்பிய முதற் பெரும்போரின் பின்னர் அவனை வரவேற்பதற்கென நகரில் ஏற்பாடுகளை ஒருக்கியிருந்தார் சூர்ப்பனகர். ஒரு வெற்றி பல்லாயிரம் வழிகளால் குடி உளத்தில் ஆழப் பயிரிடப்பட வேண்டியது. மேகங்களில் தோன்றும் கதிரவனென அவனை சிரசேற்றியாக வேண்டும். அவனே கனவுகளைக் காக்கும் படையோன் எனக் குடியேற்க வேண்டும். அதுவரையான அவன் பிழைகள் அவ்வெற்றியின் ஒளியில் கூசி அகல வேண்டும். இதோ எழுந்து விட்டான் என் படைப்போன் எனக் குடிகள் நெஞ்சு தொழ வேண்டும்.

தீவின் முதன்மை பாணர்கள் அழைக்கப்பட்டனர். கூத்தர்களும் விறலிகளும் நிரையிடப்பட்டு நீலனின் புகழ் சொல்லும் கதைகள் ஆக்கப்பட்டன. விடுதலைத் தீயில் விளைந்திட்ட பெரும்புலியென அவன் பொருளாக வேண்டும். அவன் என்பதே நிலம் என்பதாக வேண்டும். எவரொருவர் நிலமென குடிகள் உளத்தில் ஆகிறார்களோ அவரே அவர்களின் முதன்மைத் தெய்வம். வணங்கும் ஒரே பீடம். அதை சூர்பனகர் ஒவ்வொரு இழையாக நெய்தார். பயின்ற காவியங்களிலிருந்து நாடகீய உச்சங்களை வனைந்தெடுத்தார். தேர்ந்த குயவனின் விரல்களென மண்குழைவை பெரும்பாவையென ஆக்கினார். ஒவ்வொரு நூலிழையாகக் கோர்த்து பெரும்பின்னலை ஆக்கியிருந்தார். தமிழ் நிலம் ஒற்றைப் பேராடையென பின்னப்பட்டது. வடக்குக்கும் கிழக்கிற்கும் அவனே முதன்மையானவன். தெற்குக்கும் மேற்குக்கும் அவனே அதிபதி. பாணர்கள் சொற்கள் பத்தி விரித்த நாகங்களென மன்றுகளிலும் மதுச்சாலைகளிலும் அன்ன சத்திரத் திண்ணைகளிலும் விரிந்தாடின.

ஒற்றைப் பெரும்போரின் ஓராயிரம் நுண்கணங்கள் சொல்லென்றாகின. களத்தில் அவன் தொட்ட அம்புகள் எவையெவையாகின. எதிரிகளின் ஓலத்திலும் குருதியிலும் நீர்மேல் பெருமுதலையென அவன் எப்படி நீந்தினான். மதயானைக் கூட்டத்தில் பெருவீரர்கள் புறம் காக்க ஒற்றைத் தேரேறி ஏழு புரவி பூண்டு ருத்ரம் வெடிப்போசையென ஆயிரம் அதிரலைகளென விம்மிக் களத்தைச் சிதறடிக்க எதிரிகளின் விழிகளில் அச்சம் இடியிடிக்க அதிர்வான் வெளியில் கொடும்பெருந்தெய்வமென எழுந்தான் நீலன் எனச் சொற்கள் அலைமோதின.

இளவீரர்களின் காதல் கதைகள் பாடப்பட்டன. அவன் காத்திருப்பில் ஒவ்வொரு கணமும் வாளைத் தீயுருக்கெனக் கரைப்பதை அறிந்த ஒவ்வொரு தோழியரும் நெஞ்சு விம்மிக் கரைந்தனர். புலிவீரர் ஒவ்வொருவரும் குடியிடை மகவென அறமேற்றப்பட்டனர். லட்சம் கோடி முறைகள் மந்திரம் ஓதி உருவேற்றப்பட்ட தெய்வச் சிலைகளைப் போல அவர்களை நோக்கின குடிகள்.

நீலன் எளியவன் என்பதாலேயே எளியவரின் உளத்தைத் தனதகமெனவே அறிவான். குடிகளைப் புலிகள் தந்தையரும் அன்னையரையும் போன்று நடத்தினர். கூலக் களஞ்சியங்களைக் குடிகள் நிறைத்தனர். அமுதும் நீரும் ஓயாது அளிக்கப்பட்டன. ஒரு பிடி அன்னமும் அவர்களுக்கு அளிக்காத இல்லமே தமிழ்க்குடியில் இல்லை. அவர்கள் அனைத்து மனைகளுக்கும் ஒரே பிள்ளைகள். அவர்களை மடிதொட்டு ஆற்றும் மண்ணின் காற்றை அவர்கள் ஆழகம் உவகையென்று கொண்டது. சூர்ப்பனகர் உண்டாக்கிய கதைகள் ஒவ்வொன்றும் மெய்வாழ்க்கையென்றாகியது. உருவாக்கப்பட்ட நாடகங்களில் சிலகணங்கள் நடித்துக் கொள்ள மானுடர் விழைவதுண்டு. துயரமும் உவகையும் கூட அந்த நாடகத்தின் கணங்களே. வீரமும் பெருங்கனவும் கூட கதைகள் அளிக்கும் மாயையே. சூர்ப்பனகர் அதை அறிவார். ஆகவே இளையோரின் ஆழத்து விசைகளை பெரும்மரக்கப்பலின் சுக்கானை இயற்றுபவரென அவர் அக்கதைகளை ஆக்கினார். ஒவ்வொரு அறமும் பண்பாடும் கதைகளின் வழி பரவப்பட்டு நிறுவப்பட்டவையே. அவற்றை வகுக்கும் கரங்கள் பிரம்மனுக்கு நிகரானவை. தானே படைப்போன் என நின்று காலத்தின் முன் தருக்கும் கணம்.

நீலன் இயல்பிலேயே புகழ்ச்சொற்களை அஞ்சுபவன். அவனைப் பற்றிச் சொல்லப்படும் மிகச்சிறந்த புகழ்ச் சொற்களை செவிப்பட்ட கணத்திலேயே அம்பை ஒழிவது போலக் கடந்து செல்வான். அவன் தன்னைத் தானே எண்ணிக் கொள்ளும் உச்ச கணங்கள் மட்டுமே அவனுக்குப் பொருட்டு. வென்றமைகையிலென்று அல்ல. அவன் நுண்மையான உச்ச கணங்களையும் அறியக் கூடியவன். அவனில் பசுமுலையில் கண்களென எங்கிருந்தெனத் தெரியாது பொழியும் பால் போல அன்பு உண்டு. அந்த அன்பை சூர்ப்பனகர் எவ்வளவு விளக்கியும் அறியவோ அகற்றவோ இயலவில்லை. அது அவனை ஒரு படைக்கலமெனக் காத்து நின்றது. அதுவே அவன் புதைந்து கொள்ளும் சேறும் என எண்ணினார். குடிகளை மானுடர் என நிகர் நடத்தும் ஒருவரால் அரசாள இயலாது. அரசர் ஒருபடி மேல் நின்றிருக்கக் கூடியவர்.

அன்பினால் குடிகளை முற்றாள இயலாது. கடிவாளமற்ற புரவியெனக் குடிகள் சிதறும் பொழுது தோல்வாரைப் பெருங்கரங்களெனப் பற்றியிழுத்து இலக்கை வகுத்தாக வேண்டும். அங்கு செல் எனக் கனவைக் காட்டியாக வேண்டும். அவன் அதனால் கொல்பவன் ஆகிறான். தன் கனவைத் தவிரப் பிறதனைத்தும் பொய்மை என எண்ணுகிறான். அங்கனம் அவனுடைய ஊழின் இறுதிக்கணம் நோக்கி அப்புரவியும் சென்றே ஆகும். அவன் மடிவின் பின் அனைத்தும் தொகுத்தெழுந்து அவனை மீறிச் சென்றே தீரும். வரலாற்றின் விசையூற்றுக்கு எவர் மீதும் கருணையில்லை. தான் தன்னைப் பெருகி நின்றிருப்பதாலேயே காலமென நீண்டிருப்பது. உறைவது அதன் இயற்கையே அல்ல. யாவும் பிறிதொன்றாகும். அதுவே மெய் என எண்ணினார் சூர்ப்பனகர்.

இளமழையின் யாழொலி அதிர்வுகளுக்கு மேனி சிலிர்ப்பதென தலை உயர்த்தி நின்ற குயில் மழையை நோக்கியிருந்தது. சானு மீண்டும் துதியை நிரப்பத் தொடங்கினான். அவர் தொண்டையைச் செருமிக் கொள்ள நீர்க்குடுவையை கையில் வைத்தான். அருந்திய பின்னர் முகம் சற்று மகிழ்ச்சி கொண்டது. ஒரு கணக்கின் விடை ஒவ்வொரு முறையும் பிழைக்குமொருவர் அக்கணக்கையே தவறென்று கண்டு கொண்டது போல.

TAGS
Share This