128: நதிவழி
ஒருவன் எண்ணப் போவதை அக்கணத்திற்கு முன்னரே அறிபவரே தோழனும் எதிரியும் என எண்ணிக் கொண்டான் தமிழ்ச்செல்வன். அவனது நரையிழைத்த குழல் காற்றின் துள்ளலில் நலுங்கிக் கொண்டிருந்தது. காவற் கோபுரத்திலிருந்து மீண்டு தன் ஊன்றுகோல் கற்தரையில் எழுப்பும் ஒலியை ஊழ்க நுண்சொல்லென எண்ணியபடி நடந்து சென்று சொல்லவையில் அமர்ந்து தனித்திருந்தான். சாளரத்தால் மென்சாம்பல் வெளிச்சம் சொல்லவைக்குள் நிறைந்திருந்தது. கருங்கல்லாலான நிலத்தில் மிருகத் தோலாலான போர்வைகள் இடப்பட்டிருந்தன. ஆசனங்கள் வெறுமையில் அமர்ந்திருந்தன. திரைச்சீலைகளை அசைக்கும் மெல்லிய காற்று மட்டும் இங்கிருக்கிறேன் என நெளிவு கொண்டு வீசியது. வாயிலில் நின்ற இருவீரர்கள் முன்னை நாள் களைப்பினால் துயில் மயக்கிலென வேல்களைப் பற்றியிருந்தனர்.
வழமையில் பகலில் துயில்பவன் அல்ல தமிழ்ச்செல்வன். அவன் நாழிகைகளைக் கொண்டே காலத்தை வகுப்பவன். அதன் படியே ஆற்றொழுக்கென விரிந்து சென்று மீண்டு அமைபவன். காலத்தை வகுப்பதன் நெறியே மானுடரை அவர்கள் எண்ணும் செயல்களை ஆற்றும் கருவியை அளிக்கிறதென எண்ணுவான். காலமே அனைத்தும். வெல்லப்பட வேண்டியதும் அதுவே. அன்றாட அரச பணிகள் உள்ள நாட்களில் புலரியில் எழுந்து ஊழ்கம் முடித்த பின்னர் அணிபூண்டு அரசவை நுழைவான். வகுக்கப்பட்ட அன்றைய பணிகள் எளியவை. ஒன்றைச் சங்கில் எழும் பணியாட்கள் போல அவை உடனடியாக நிகழ்பவை. நெடுங்காலத்திற்கென உண்டாக்கிக் கொண்டிருக்கும் பெருஞ்செயலை நோக்கிய ஒவ்வொரு சிற்றடியுமே ஒவ்வொரு நாழிகையும் அவனுக்கு அளித்தது. அதை அவன் பழுதின்றிச் செயல் புரிவதன் மூலம் கற்றிருந்தான். கல்விச் சாலைகளில் பயின்ற ஒவ்வொன்றையும் அவன் நிகழ்த்திப் பார்த்து அதன் வழி அவை செயல்படும் வகையை அறிந்து அதில் மேலும் எதை இணைப்பதன் வழி செயலொன்று திறன் மிகுந்ததாகிறது எனக் கணித்தான். மாபெரும் உடலை இயக்கும் மூளையெனவே சொல்லவை நிகழவேண்டியது என அறிவான். அம்மூளை சிலபோது ஊக்கமளிக்கப்பட வேண்டியது. சிலகாலங்களில் தொடப்பட்டதும் எழுந்து பணியாற்றி அமைவது. சிலபருவங்களில் சோர்வு குழலைப் பிடித்தாட்டும். சிலகணங்கள் அரிதாக கைகளை அப்படியே போகவிட்டு நீச்சலும் தேவையற்ற ஆற்றுபெருக்கெனத் தானே ஒழுகிச் செல்வது.
பருவங்கள் பெயர்ந்து அனுபவங்கள் மிக மிக அவன் ஆணைகளின்றியே அவ்வுடல் அசைவதை நோக்கியிருந்தான். பழுதுநேர்கையில் அதை நோக்கிப் பிழையறுத்தான். களி விழவு நிகழ்கையில் காவல் பணியும் ஒருக்கப் பணிகளும் மிகையே ஆயினும் அது களிக்காலம் என்பதாலேயே துல்லியமாய் எதுவும் அமையத் தேவையிருக்கவில்லை. மானுடர் திரளென மகிழ்வுடன் ஆற்றும் செயல்களில் பழுது நேர்வது அரிது. போர்க்களம் மட்டுமே அவ்வகையில் விந்தையான திரள். அங்கு எழுவது அச்சம் எனும் கூர்மை. வெறி எனும் உச்சம். அவையிரண்டும் மானுடரை மகிழ்ச்சிக்கும் அப்பால் ஒரு உச்சத்தில் பிசிறின்றி ஒருங்கச் செய்கிறது.
தமிழ்ச்செல்வன் அன்று புலரி முதல் விந்தையான உளநினைவுகளால் அகமகிழ்ந்தும் இன்னதென்று அறிய முடியாத மாபெரும் நிழற்பாரம் தோள்களில் விசை கொண்டு அழுத்துகின்றதெனவும் எண்ணிக் கொண்டான். அவனில் செயலின்மை கூடும் கணங்கள் அரிது. செயலே வெல்லும் வழியின் கரங்களிலிருக்கும் வாளும் கேடயமுமென அவன் அறிந்தவன். ஆயினும் அவன் நுண்ணகம் தீரா நோயுற்றது போலக் காந்தத் தொடங்கியிருந்தது. எதுவோ பிழைக்கும் ஒலி. அந்த நுண் ஓசையைக் கேட்ட பின்னர் அரசனால் கூடத் துயில இயலும் அமைச்சனால் முடியாது. அந்த ஓசையைக் கேட்கும் படியே அகத்தை செவியென ஆக்கிக் கொள்பவர்கள் அமைச்சர்கள். அதன் வழி குடியின் ஈற்றுச் சரடு வரை நோக்கி அறிவதே அவர்களின் மெய்ப்பணி. அறியும் செய்திகளைப் பொருளென்றாக்கி அதன் உள்ளடுக்கைத் திறக்கும் நுட்பங்களை வகுத்துச் செயலாற்ற வேண்டியவர்கள். களி விழவு கூட அங்கனம் ஓர் ஏற்பாடே.
தமிழ்ச்செல்வன் சொல்லவையின் சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை ஒருபடரல் நோக்கில் நோக்கினான். கருங்கல்லில் பாசியென ஓவியங்கள் பரவியிருந்தன.
எப்பொழுதும் அவை மாறிக்கொண்டே இருப்பவை. இப்பொழுது அவை இன்றைய அரசின் கனவை வண்ணங்களெனக் குழைத்து வரைந்திருப்பவை. கடந்த கால அரசர்களின் மெய்யுருக்களும் கீர்த்திகளும் சுவரில் பொருக்கை அகற்றுவதைப் போல அகற்றப்பட்டிருந்தன. இன்று நீலன். நாளை எவருமாயிருக்கலாம். இப்பெருங்கனவு எதுவோ ஓர் ஊழ்முடிச்சில் அவிழ்ந்து பிறிதொன்றாகலாம். அதை உணராத அரசு சூழ்வோர் எவர். அதுவே முதன்மைப் பாடங்களில் கற்றுக் கொடுக்கப்படுவது. கடந்த காலமும் வருங்காலமும் அற்ற ஒருவனை அரியணையில் அமர்த்தும் நிலைத்தலற்ற பணி. ஆனால் அவர்களின் வழியேயே காலம் ஓடிச் செல்லும் நதிவழி அமைய இயலும். அதை ஆக்கும் கரங்களென்று அமைவதே அமைச்சர்களின் ஊழ். முற்றமைந்து அதன் செயல்வழி ஒழுகுபவர் அடைவது செயலின்பம். அதுவன்றி அவர் பிறிதொன்றாக அமைய முடியாத பெருந்தவம்.
ஆடிய திரைச்சீலைகளில் உலுக்கலென ஒரு மின்னலொளி கடந்து சென்றது. அதுவரை இளமழையில் மின்னல்கள் எறிந்திருக்கவில்லை என எண்ணிய தமிழ்ச்செல்வன் சாளரத்தை நோக்கினான். அதற்கு அப்பால் சாம்பலின் பெருமலைகள் அசைந்து கொண்டிருந்தன. இமை மயிர்களென மழைத்துளிகள் உதிர்ந்தன. ஒரு இமைத்துளியில் நீலன் சங்கறுக்க எழுந்த கணம் தமிழ்ச்செல்வனில் இன்னொரு மின்னலென அதிர்ந்து கடந்தது.
நீலனை நோக்கி எழுந்த அப்பெண் எரியும் தீமலர் போல கரங்கள் தழலாட கருவறையிலிருந்து எழுந்த கொற்றவையென நின்றிருந்தாள். அத்தகைய பெண்களை அவன் போர் நிகழத் தொடங்கிய காலம் முதலேயே அறிந்திருந்தான். கூந்தல்கள் மின்னல் விரிவென நடுங்க. விழிகள் கனற் பொந்துகளெனக் குழிந்து தீயுமிழ. முகத்தசைகள் இழுபட. பற்கள் நெரித்து ஒன்றையொன்று கடித்துக் கொள்ள. உதடுகள் வெடிக்கப்போகும் பெருஞ்சினத்தில் தகதகக்க. அவர்கள் ஒவ்வொரு வீதியிலும் எழுந்தனர். முதலில் தெய்வங்களை நோக்கியும் பிறகு ஊழை நோக்கியும் கெஞ்சினர். கேவினர். இளையோரின் மரணங்களை நிறுத்தச் சொல்லி மன்றாடினர். கருங்கல் சிலைகளில் எதிரொலியென அவை ஒலித்து ஒழிந்தன. பிறகு அவை தெய்வங்களின் உருவென எழுந்து நிற்கும் மானுடரைத் தேர்ந்து கொண்டன. சொல்க என்று ஆணையுடன் தருக்கித் தருக்கி உணர்வென்றாகின.
நீலன் குடிகளைச் சந்திப்பது மிக மிக அரிதென்று ஆனது அவ்விழிகளை நோக்கும் அச்சமே என முதிய வீரனொருவன் தமிழ்ச்செல்வனிடம் கூறியிருந்தான். முதலில் அச்சொற்களை பொருட்படுத்தாதவன். நீலனில் அமையும் குகை பதுங்கு புலிக்குணம் எளியவர்களை நேர்கணம் சந்திக்கும் பொழுது இளங்குருளை வேழத்தையென அஞ்சுவதை அகமறிந்தான். நூலால் எறும்புகளின் நிரையை விலத்தி பாதையொன்றை வகுப்பவன் போல நீலனுக்கும் குடிகளுக்குமான சந்திப்புகளை ஆக்கியழித்துக் கொண்டது தமிழ்ச்செல்வனின் திறன். நீலன் குடிகளிலிருந்து ஆற்றாமையையும் இழப்பின் மெய்நிகர் வலியையும் ஏற்றிக் கொள்வது வீரன் செருக்கி நின்றெழும் கணங்களில் அவன் முன்னோரும் தெய்வங்களும் ஆசிரியர்களும் எழுந்து நின்று தீச்சொல்லிடுவதைப் போல. எப்பெரிய மாவீரனும் அச்சொற்களின் பின் அகத்தாழத்தில் நலுங்கலைக் கேட்பான்.
நீலனில் உருகம் மினுங்கிக் கொண்டிருந்ததை நோக்கிய தமிழ்ச்செல்வன் தனது ஊன்று கோலுடன் எழுந்து மெல்ல அவன் அருகணைந்த போது நோக்கிலிருந்தது நீர்மல்க முன் விழிப்படலம் கொள்ளும் நுண்வலி. அடுத்தகணம் உடைவாளில் தன் இடக்கரம் சென்றமைந்து ஒட்டியதை அவன் நோக்கினான். அனிச்சையாய் அக்கணம் அவனுள் நிகழ்ந்த அச்செயலை அவனே வியந்தான். நீலனை நோக்கிச் சொல்லப்படும் தீச்சொற்களும் வசைகளும் இளிவரல்களும் புதிதல்ல எனும் பொழுதும் எக்கணத்தில் வாழ்வின் எந்த நிலையில் சொற்கள் முற்றாழம் கூடுமோ அக்கணத்தில் இடப்படும் தீச்சொல் இறுதிக் கணத்தில் கொல்லும் வாளென அறுப்பது. அதன் முன் நின்றெதிர்ந்து என்னை எடுத்துக் கொள்க என அவன் வாய் உரைத்த போது ஒவ்வொரு கணமாக காலத்தில் நீந்தித் திரும்பினான் தமிழ்ச்செல்வன்.
நீலன் இளவயது முதலே தன்னுயிரைப் பேணுபவன். உயிரைப் போலவே உடலையும் மதிப்பவன். அதைத் தன் தோழருக்கும் பின்னர் புலிவீரர்களுக்கும் சொல்லிச் சொல்லி வளர்த்தவன். நமது உயிரும் உடலும் குடிக்கடனென்று மண் நிகழ்ந்தவை. எண்ணியவை ஈடேறாமல் உடலின் ஒருமயிர் கூட உதிரக் கூடாது. எம்மிலிருந்து எதிரிகளால் பிடுங்கி எடுக்கப்படும் கணம் வரையும் இரண்டும் குடிச்செல்வமென்று காக்கப்பட வேண்டியது. தமிழ்க்குடியின் மெய்யான கருவூலம் புலிவீரரின் உயிரும் உடலுமே. அதை வீணாக்க ஒருவருக்கும் உரிமையில்லை எனக் கற்பித்தான். அத்தகையவன் எழுந்து என்னுயிரை எடுத்துக் கொள்க என அறைகூவுவது எதன் முன். அவன் தெய்வங்களையும் பொருட்டென எண்ணுபவனில்லை. அவை காக்காது விட்ட குடிகளையே நாம் காக்க வேண்டியிருக்கிறது என எண்ணுபவன். ஆகவே தான் அவன் ஊழைச் செறுத்து முன் நிற்கத் துணிந்தான். ஊழை வகுத்த கரங்களுக்கு முன் உருகம் தூக்கி எழுந்தான். ஓம். அக்கணம் அவன் எழுந்தது ஊழென்று அவன் முன் எழுந்து நின்ற அறங்களின் எதிரே.
நீலன் அறங்களின் முன்னர் பைதலெனக் கலங்கி நிற்பவன். நீலனை அதுவரையான தமிழ்க்குடியின் மாபெரும் அறங்களின் தொகுப்பு என நூலாய்வோர் வகுப்பதுண்டு. அவன் அறங்களின் அரிதான இணைவு கொண்ட அருமணியென குடியிடை ஒளிர்பவன். ஆனால் அறங்களின் நுண்மைகள் அத்தனை எளிதானவையல்ல. எதைப் பற்றிக் கொள்வது எதை எங்கே கைவிடுவது. எதை எண்ணிச் செய்வது என எத்தனை நூல் பயின்றாலும் அறிய முடியாதது. ஒருவர் அறத்தை அறிகையில் அதன் நிறைவின்மையையும் இணைத்தே அறிகிறார். அது அனைத்து மானுடருக்கும் பொதுவல்ல. அனைத்து நிகழ்வுகளிலும் ஒன்றெனவே ஆகுவதல்ல என உணர்கிறார். அதுவே நீலனை ஆட்டும் சிடுக்கு. வலையில் நீரென அவனிடம் வழுக்கிக் கொண்டேயிருப்பது.
தமிழ்ச்செல்வனின் நிலை மேலுமொரு எடைக்கல் கூடுதலானது. நீலன் பற்றியிருக்கும் வலையில் நீரென அகல்வது எதுவென அவன் அகமறியும். ஆனால் தமிழ்செல்வனின் விழிகளுக்குத் தெரிவது நீலன் பற்றியிருக்கும் வலையில் விழும் ஒளியின் தெறிப்புகள். அதைக் கொண்டு அவனால் அக்காரியத்தை முற்றறிய இயலாது. அக்கணம் வகுக்கப்படும் ஒன்றுக்கும் அதற்கு முன்னர் கற்கப்பட்ட சொல்லுக்கும் இடையில் ஒரு மின்னல் வெட்டு ஒவ்வொருமுறையும் விழுகிறது. நீலனில் எழுந்த எந்த தெய்வம் அவனுக்கு அதை அளிக்கிறதென தமிழ்ச்செல்வன் அறியான்.
ஊசி முனையில் நீர்த்துளியென நின்றாடுவதே அறத்தின் மேல் அமைவது. என்றும் அது நிலைகொண்டு எஞ்சும் அணுத்துமி ஒன்றென ஆகும் நிகழ்தகவு. அறம் எளியது. ஆகவே சிறியதாய்த் தோன்றுவது. எவரும் தொட்டு எடுத்துவிடக் கூடியதென அமைவதும் அதனாலேயே. ஆனால் மானுடர் எவரும் முற்றறத்துடன் அரசாள ஒண்ணாது. முற்றறம் என்பது பல்லாயிரம் ஊசி முனைகளில் பல்லாயிரம் நிரை மழைகள். ஊசி முனைகளை ஊசி முனைகளால் தொடுவதைப் போல இழைக்கப்பட்ட தீமைக்கு நீதியளிக்கப்படுகிறது. நீலன் இக்காலத்தின் மாங்கனி போன்ற இத்தீவின் ஊழின் ஊசி முனையைப் பல்லாயிரம் நிகழ்தகவுகளில் காலம் கண்டடைந்த ஒற்றைக் கணமுனை. அவன் தொட்டு இக்காலத்தைத் திறக்கும் ஒரு ஊசி முனை மட்டுமே. பனியாலானது போன்றது. அல்லது புகையைப் போல. அருங்கணத்தில் அவன் புகையை கடந்திடும் ஒளிக்கீற்றென எழுவான். அவை ஊழ் அவனுக்கென அமைத்து வைத்த கூத்தின் உச்ச கணங்களில் உண்டு. இளமை முதலே அவன் அக்கணங்களில் நின்றாடும் பொழுது தமிச்செல்வன் அருகிலெனக் கண்டு வளர்ந்தான். நீலனில் எழும் தெய்வங்களை அவன் தோலின் உட்புறம் மட்டுமே மெய்ப்புல்கள் எழ நோக்கியிருப்பான்.
நீலழகனின் முதல் அவையிருப்பு நாளில் குலமூத்தோர் முன்னிலையில் செங்கோல் ஏந்தி புலியாசனத்தில் அமர்ந்த போது நீலனின் முகத்தில் தோன்றிய கதிரொளியை எண்ணி விம்மல் கொண்டான். அவன் மெய்யிலேயே கதிரவனின் அம்சம் எனப் பாணர்கள் சொல்லுண்டு. கலையாடிகளின் நாக்கில் ஒரு நாகமென எழுந்து தொல்நாகங்கள் அவனை வாழ்த்தின. அவன் கடலும் நிலமும் தொட்டுக்கொண்டிருக்கும் உறவின் தீராத முடிச்சில் ஒரு இழை. அவனை தேவனென்றாக்கி தெய்வங்களின் திருவழகு சொட்ட எழுச்சிகொண்ட நிகர்காலத்தில் தமிழ்ச்செல்வன் அலைகளில் நுரைமிதப்பென இளம் புன்னகையுடன் அதை நோக்கியிருக்கிறான்.
முடிசூட்டு விழா நாகதேவி ஆலயத்தில் துவங்கி தலைப்பட்டினமே விழவு பூண்டு எழுச்சி கொண்டு நிகழ்ந்தது. நினைவிலும் வரலாற்றிலும் எவர் மாபெரும் அரசனென மக்கள் உளத்தில் நிலை கொண்டு வாழ்ந்தனரோ அவர்களின் மெய்யுருவாய் நீலன் செங்கோலும் அறச் சொல்லும் உடனெழ மக்கள் அவையின் முன் நின்றிருந்த கணம் குடிகளின் அகத்திலும் மெய்சிலிர்த்த பெருங்கணமென உறைந்தது. நீலழகன் முற்றணி பூண்டது அதுவே முதன்முறை என்பதால் நிலவையின் விழிகளை ஒருமெய்க்கணம் தமிழ்ச்செல்வன் தொட்டு நின்றான். அவன் பேரழகை மறைக்கவே அணிகள் உதவுகின்றன என எண்ணியவள் போல தமிழ்ச்செல்வனை நோக்கிக் குறும்புன்னகை வீசிச் சிரித்தாள் நிலவை. ருத்ரம் அரசவையில் முழங்கி ஒலித்த போது பேரவை மழைப்பெருக்கு விழும் பேராழியென ஆர்த்து மல்கியது. நீர்மேல் உருகும் நீரென சங்கொலியும் வாழ்த்தொலியும் குழைந்து ஒன்றாகின.
எண்ணங்கள் நீலனின் உவகை கொண்ட நினைவுகளில் எழுந்தெழுந்து மிதப்பதை எண்ணி தமிழ்ச்செல்வன் வியந்து கொண்டான். இயல்பில் அவ்வாறு எண்ணிக் கொள்பனில்லை அவன். ஆயினும் அவன் அகம் கூர்ந்து கூர்ந்து நுணுகி நுணுகி ஒவ்வொரு அதிகணத்தையும் காட்டைத் தொட்டெழுப்பும் புலரிப் பறவைகளின் பாடல்களென விழித்துப் பறந்தன.
உவகையான எண்ணங்களால் அகம் மலர்ந்திருந்தவன் சுவரில் தீற்றல் தீற்றலாக குருதித் துளிகளால் வரையப்பட்டது போன்ற ஒற்றைக் கால் உயர்த்தி நிற்கும் கரும்புரவியின் மேல் கறுப்புச் சூரியனென கருங்கதிர்க்குழல்கள் விரித்தாடி சினம் அனலுறும் விழிகளால் அவைக்கும் அப்பால் சாளரத்துக்கும் வெளியே நோக்கியிருக்கும் நீலனின் ஓவியத்தை நோக்கிப் புன்னகை கொண்டான். ஊழை விஞ்சும் ஒருவனுக்குத் துணையென நின்றிருப்பதன் நிறைவில் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வன் சத்தகனும் நீலனும் உரக்கச் சிரித்தபடி சொல்லவைக்குள் நுழைவதைக் கண்டு கடுங்காற்றுப் பட்டுப் பூக்குலைகள் ஆடுவதைப் போல அகமகிழ்ந்து எழுந்தான். அமர்க எனக் கைகாட்டியபடி அவன் காலடியில் வந்தமர்ந்த நீலன் அவனது நோக்காலைபிடித்துக் கொண்டு “உனது புண்ணிற்கும் யவனர்களிடம் மருந்து கேட்டிருக்கிறேன். அவர்களின் மருத்துவக்குழு உன்னை இன்று நோக்குவார்கள்” என்றான் மகிழ்ச்சி பொங்க. தமிழ்ச்செல்வன் துள்ளும் இரு வெள்ளிநாணயங்கள் ஒளிவீசுவது போன்ற நீலனது விழிகளை நோக்கினான். தன் காலடியில் அமர்ந்திருப்பது தோழனை அடைந்த தெய்வத்தின் உவகையென எண்ணிய பிறிதொரு வெளியில் எவருக்கும் கேட்காது தமிழ்ச்செல்வன் சிரித்துக் கொண்டிருந்தான். நிகருலகில் ஓரங்குலம் மெல்லிய கோடு நீண்ட புன்னகை. அதை மெல்ல வருடுவது போல நோக்கியிருந்தான் நீலன்.