129: செண்டுவெளியாட்டம்

129: செண்டுவெளியாட்டம்

விண்யாழி நிழல் விழும் நீண்ட பனைமரங்களின் காட்டு வழி நால்வருடனும் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கொற்றனும் ஓசையிலானும் சொல்லாடிக் கொண்டிருந்தனர். இரண்டு நாய்க்குட்டிகள் வால்குழைத்துக் கடித்து சிற்றுறுமல் உறுமி பாய்ந்து கவ்விக் கொள்வது போல இருவரும் சீறிக்கொண்டு வந்தனர். நிரதையும் திருதையும் அவர்களின் சொற்களின் பொருளின்மைகளைச் சுட்டி பெருங்குரலில் சிரித்து அவர்கள் முதுகுகளை யானைத் தோல்களென அறைந்தார்கள். கொற்றனின் இளந்தோல் கன்றி மெல்ல வீங்குமளவு நிரதை அவனை அறைந்து கொண்டிருந்தாள். விண்யாழி களிக்கென அமைக்கப்பட்ட செண்டுவெளியை நோக்கிய வெண்மணல் பாதையில் உடன் நடந்தாள். இளமழை பனையோலைகளில் பொழிந்து துளிகளாகிச் சிந்திக் கொண்டிருந்தன. ஐவரது மேனியிலும் குளிரும் பனங்கூடல் காற்று மணலின் குழைவென ஒட்டிக்கொண்டது. அருகிருந்த சிறு குடிலொன்றினுள் சென்று தீயிலைத் துதியை அனலேற்றிப் புகைத்தபடி வெளியே வந்த ஓசையிலான் ஒவ்வொருவருக்குமாய் அதைப் பகிர்ந்தளித்தான். விண்யாழியின் குலைக்கப்பட்ட கூந்தல் அவளை பிறிதொருத்தியெனத் தோற்றியது. காவல் உடையில் அவளது உடல் ஒரு கற்பாறைச் சிற்பமென இறுகியிருந்தது போலத் தோன்றியது. இப்பொழுது அதன் தேவி எழுந்து மானுடருடன் நடக்கிறாள் என எண்ண வைத்தாள்.

விண்யாழிக்கு கனன்று திரண்ட தீயுடல். பற்றிக் கொள்ளும் விசைகளை எரித்துத் தன்னை உருக்குப் பாவையென ஆக்கிக் கொள்ள எப்பொழுதும் முயல்பவள். அவளது தேகம் இறுகும் போது ஒருங்கி தன் வளர்ப்பு விலங்கென ஆகுவதை அவள் நோக்கியிருக்கிறாள். பிறிதின் ஆணைக்கு தன்னுடல் ஒருங்குவதில் துமியும் விருப்பமற்றவள். காற்று பனையோலைகளில் விசிறிகளெனச் சுழன்று சிறு செடிகளில் சொட்டிய நீர்த்துளிகள் ஆடையை உதறுவது போலப் பறந்தன. விண்யாழி ஓசையிலானின் எருமைத் தோல் வண்ணம் உலோகக் குடத்தில் ஒளியென மெருகிக் கொண்டிருந்ததை நோக்கினாள். அவன் தேகக் கருமை வழமையானவர்களை விடச் சிற்றளவு கடுமை கொண்டிருந்தது. குறுஞ்சிரிப்புக் கொண்ட துடிவிழிகளும் அலைகுழலும் அவனை எழிலூட்டின. விண்யாழியின் ஓரவிழி எவரும் அறியாத கணங்களில் அவனை அளந்து கொண்டிருந்தது.

செண்டுவெளியின் அருகில் நுழைந்த போது புரவிகளின் கனைப்பொலிகளும் உலோக முனைகள் ஒருங்கும் ஓசைகளும் படைவீரர்களின் கூக்குரலும் சீழ்க்கையொலிகளும் கலவையாக ஒலித்தன. போருக்கு அணிபூணும் படையென. சுற்றிலும் சீராக வேலியிடப்பட்டு மாபெரும் செண்டுவெளி களிக்கென உண்டாக்கப்பட்டிருந்தது. சீரான பாதைகள். வளைவுகள். ஒவ்வொன்றும் நேர்த்தியாக ஒருக்கப்பட்டிருந்தன. அந்தியில் நிகழவிருக்கும் செண்டுக் களிக்கென தீவின் பெருவீரர்களும் இளையவர்களும் கூடிக் கொண்டிருந்தனர். தோல்பாவிய சிறு குடில்கள் நிரையாக இடப்பட்டிருந்தன. முதிய வீரர்கள் தங்கள் இளமைக் கதைகளைக் கூடியிருந்த குடிகளுக்கு எச்சில் மிதந்து பறக்க விரித்துக் கொண்டிருந்தனர். சிரிப்பொலிகளும் இளங்குருதி தேகத்தில் பாயும் ஒலிகளும் கேட்குமளவுக்கு சாகசக் கதைகள் அவ்வெளியெங்கும் நிறைந்திருந்தன.

விண்யாழி முதுவீரர்களின் நாடகங்களை முகம் களிகூர நோக்கி வந்தாள். அவளது குலை கூந்தலை தீப்பந்த திரிமுடிச்சென சுழற்றிச் சொருகினாள். கழுத்தில் இரண்டு சின்னஞ் சிறு சிறகுத் தூவிகளென இருபுறமும் கூந்தலிழைகள் சில பிரிந்து அலைந்தன. அவள் உதட்டின் மேலே மென்மயிர்கள் மீசையென அரும்பி மழைத்தூவல்கள் தூங்கி மினுங்கின. கவசங்களையும் உடைவாளையும் காவல் நிலையில் வைத்துச் செல்ல தோழர்களிடம் விடைபெற்றுச் சென்றாள். அவர்கள் அவளுக்கென நீண்ட வெண்தாடியுடன் கதை சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்த கிழவனொருவனின் குடிலருகில் ஒருங்கிக் கொண்டனர். கிழவர் கடல் மிருகங்களைத் தான் வேட்டையாடிய காதையை முழங்கும் குரலில் மெய்சிலிர்த்தெழச் சொல்லிக் கொண்டிருந்தார். விண்யாழி அவரை நோக்கிப் புன்னகைத்த பின்னர் காவல் நிலைக்குச் சென்றாள்.

நீர்வழியும் அப்பாதையில் அவளது நடை சீர்தாளத்தில் ஒலியெழுப்பியது. காவல் நிலை வாயிலில் உரத்த சிரிப்புடன் அருகிருந்த வீரர்கள் கெக்கட்டமிட்டு வயிறு நோகும் வண்ணம் சிரிக்க வைத்தபடி நின்ற உலகளந்தோனை விண்யாழி கண்டாள். அவனது தேகத்தின் வடுக்களை ஒவ்வொன்றாய் எண்ணிச் சொல்ல ஒரு இளம் வீரனைப் பணித்திருந்தார்கள். இருளில் நிலத்தில் தெறித்து விழுந்த பேனைத் தேடும் மூதன்னையொருத்தியென அவன் கண்களைக் கூர்ந்து பிடித்தபடி உலகளந்தோனின் முதுகை நோக்கியிருந்தான். விண்யாழி புன்னகை மாறாது பெண்புலிகளின் வாயிலைத் திறந்து உள்ளே சென்றாள். தளபதி மாலதி மர இருக்கைகள் இரண்டை அருகருகே போட்டுக் கொண்டு அயர்ந்து துயின்று கொண்டிருந்தாள். அவ்வறையில் இருள் படிந்திருந்தது. ஒரு சிற்றகல் மட்டும் தோல்வரைபடத்தினருகில் எரிந்து கொண்டிருந்தது. செண்டுவெளியின் வரைபடமெனெ நோக்கிய கணம் உணர்ந்து கொண்ட விண்யாழி சிறிது விரிந்த சுடர்மணிக் கண்களால் வரைபடத்தை அளைந்தாள்.

நீள்விழியென அமைந்த செண்டுவெளி தீவின் சிறந்த கள அமைப்பாளர்களைக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிறுகுறிப்பும் நுண்குறிகளாக உலர் மாட்டுத்தோலில் நஞ்சுநீல வண்ணத்தில் வரையப்பட்டிருந்தன. மலர்களாலன குறிகள் படைக்கலங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளைக் குறித்திருந்தன. தான் நின்றிருப்பது அதன் விழிமுனையின் இடப்பக்கம் எனக் குறித்துக் கொண்டாள். எட்டுத் திசைக்கும் காவல் தெய்வங்கள் தீற்றப்படிருந்தன. மானும் மழுவும் சூலமும் வேலும் கதையும் வாளும் அம்பும் வில்லும் எட்டுத் திசையிலும் குறியிட்டமைந்தன. காவல் தெய்வங்கள் எனினும் அவை கொலைத்தெய்வங்கள் எனவே வணங்கப்படுபவை. அவற்றுக்கு பூசனையிட்டுக் கட்டி எட்டுத்திசைக்கும் காவலென அமர்த்தி தீயவை விலகிட மலரும் நீருமிட்டு வாழ்த்தினர் பூசகர். அவை அங்கனமே திசைக்கொன்றாய் அமைந்தன. ஒவ்வொன்றும் பெண் தெய்வங்களென நோக்கி அகத்தாழத்தில் மெல்லிய நலுக்கல் கொண்டாள் விண்யாழி. உடுக்குகள் இரண்டு பிணைத்துக் கொண்டவை போல அமைந்திருந்த குறி புரவிகளின் வையாளியைக் குறிக்கும் பகுதியென நோக்கினாள். சிறிய காற்றொன்று வாயிலால் நுழைந்து அகலை ஊஞ்சாலாட்டி அகன்ற போது மாலதியின் முகத்தில் தழல் நெளிவு வளைந்து ஏறியது. இருளில் பொற்சிலையென அவள் துயில்கிறாள் என எண்ணிய விண்யாழி ஓசையெழுப்பாது உட்கூடத்திற்குள் நகர்ந்து தன் படைக்கலங்களையும் கவசங்களையும் மரப்பெட்டியொன்றினுள் இட்டு மூடினாள். மேமே காந்தாள் மலரின் உருக்கொண்ட மெழுகுச் சின்னத்தைப் பொறித்தாள்.

திரும்பவும் வாயிலுக்குச் செல்லும் வழியில் அரையிமைகள் ஒளிக்கூச்சத்திலெனக் கூச விழிதிறந்திருந்த மாலதி விண்யாழியின் உருவம் இருளிலிருந்து மெல்லொளிக்குள் தோன்றிய பொழுது அனிச்சையாய் எழுந்த உதட்டுப் புன்னகையை நோக்கி மேலும் புன்னகைத்தாள். விண்யாழி மூக்கைச் சுருக்கி நளினம் காட்டிய பின்னர் “இரவுக் களியா தளபதி” என வினவினாள். மாலதி சிரித்துக் கொண்டே விரல்களால் இமைகளை நீவி வெளிச்சத்திற்குப் பழக்கிக் கொண்டு “உனக்கு விடுப்பு அளித்தது என் பிழை. கழிவுகளை அகற்றும் பிரிவுக்கு உன்னைத் தலைவியாக அமர்த்தியிருக்க வேண்டும்” என்றாள். மாலதியின் குரலில் முரசின் கார்வை கொண்ட நாணிசையை விண்யாழி மிக விரும்புவாள். ஒருவரின் குரலென்பது அவரின் முழுதகத்தின் ஒலியுடல் என எண்ணிக் கொண்டாள். குரலின் வழி நாம் நமது உயிர் நாணில் ஒலித்தெழுகிறோம். ஒருவரின் குரலை எண்ணியே அதன் ஓசையைக் கொண்டு அவரின் இயல்பை அறியும் கலைகள் உள்ளன என அவள் நாடோடிக் கதைகளில் கேட்டிருந்தாள். மாலதியின் குரலில் எழுவது அன்னையும் தோழியுமென்றாகுபவளில் எழும் கொல்கருணையும் களிக்கூச்சலும். அவள் போர்க்களங்களுக்கு முன்னர் ஆற்றும் உரைகளை விழியால் குற்றி நோக்கி அமர்பவள் விண்யாழி. சொற்களை அவள் பெருங்குரலில் உரைக்கும் பொழுதும் உமிழ்நீர் தெறிப்பதில்லை என எண்ணி அதன் அழகை நோக்கியிருப்பாள். உதடுகள் சொற்களைப் படைக்கலங்களென ஏந்தி போர் முன்னெதிர்க்கும் இடியோசையின் முழக்கங்களென மாலதியின் சொல்லெழுகையை நோக்கியிருப்பது யுத்த களத்தில் ஆயிரம் அம்புகளின் முதற்கண விண்ணெழுகை காண்பதைப் போன்றது.

“தோழர்கள் காத்திருக்கிறார்கள். விடை பெறுகிறேன் தளபதி” என்றாள் விண்யாழி. “களி கூர்க” என வாழ்த்துபவள் போலக் கைகளைத் தூக்கிக் காட்டினாள் மாலதி. சிரித்துக் கொண்டே விண்யாழி தனது வெண்ணாடையைச் சரிசெய்து கொண்டு வாயிலை நோக்கிச் சென்றாள். உலகளந்தோனின் பின்னின்ற இளம் புலிவீரன் அவள் திரும்பிய பொழுது உலகளந்தோனின் இடக்காலின் தழும்புகளை எண்ணிக் குறித்துக் கொண்டிருந்தான். உலகளந்தோன் தன் கரகரத்த குரலில் “அறிக இளையோரே. அறிவு எப்பொழுதும் ஞானத்திடம் மோதிக் கொண்டேயிருக்கிறது. ஞானத்தை அறிவால் விளக்கி விட முடியாது. சுட்டும் விரலளவே அறிவின் பணி நிகழ முடியும். ஞானமோ எளிய விவேகிகளிடமும் திரளக் கூடியது.

யுத்த களமே என் தவச்சாலை. கொலைத்தெய்வங்களே நான் அவிகொடுக்கும் என் மூதாதையர். குருதியே மலரும் நீரும். நான் கொன்றெழுந்தவர்களே நானளிக்கும் பலி. அதில் நானடையும் மெய்மைகளையே நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் அறிவால் அளக்கப்படக் கூடியவனல்ல” எனத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது காலை நோக்கிக் கொண்டிருந்த இளம் வீரன் ஒருகணம் நிமிர்ந்து விண்யாழியை நோக்கிய பின்னர் நாணித் திரும்பினான். விண்யாழி உதடு விரிக்காமல் புன்னகைத்தபடி வெளியேறினாள்.

செண்டுவெளிக்குச் சென்று கொண்டிருந்த வழியில் புரவிகளில் நடைசென்ற அயற் பட்டினங்களின் வீரர்களை நோக்கிக் களிச்சொல் பேசி மலர்களால் அறைந்து கொண்டிருந்த பெண்களை நோக்கினாள். எளியவர்கள். ஆணின் புறவழகு அளிக்கும் பாவைக் களிக்குத் தம்மை ஒப்புக் கொடுப்பவர்கள். வீரர்கள் என்பது படைக்கலம் ஏந்தும் திறனால் ஆவதல்ல. அதை எதற்காக ஏந்துகிறான் என்பதிலேயே பொருள் கொள்கிறது என எண்ணினாள். களிக்கென வில்வித்தையும் கதைவீரமும் புரவிச் சாகசமும் புரிபவர்கள் மெய்க்களங்களில் திகழ்வதில்லை.

களமெழுகையில் புரவிகளின் உடலில் தோன்றும் மெய் வெம்மையை அறிந்தவர் அறியும் களிப்புரவி முற்றிலும் வேறானதே. அம்புகள் சென்று தைக்கும் பாவைத் தலைகளில் பொருதும் விசைக்கும் யுத்தத்தில் தலைபிளந்து அப்பாலெறிக்கும் கொல்கணத்திற்குமிடையிலான பேதத்தை அறிபவருக்கு வீரருக்கும் களிவீரருக்கும் இடையில் பேதம் புரியும். பெண்ணொருத்தி இமைகள் கூச்சலிட வீரனொருவனின் உறுதியான கருமுகத்தை நோக்கி ஏங்கியதைக் கண்டு விழிகளை விலக்கிய விண்யாழி “மூடர்கள். முழு மூடர்கள்” என உதட்டில் புறுபுறுத்தாள். அச்சொற்கள் அவளை உந்தி விரட்டின. தோழர்கள் நின்று கதை கேட்டுக் கொண்டிருந்த குடிலிற்குள் நுழைந்தவள் முதலில் ஓசையிலானையோ நோக்கினாள். அவளைக் கண்ட திருதை மெல்லப் பாய்ந்து வந்து “அணி பூணவில்லையா இளவரசி” என்றாள். அவளது குரல் அகவும் குயிலென விண்யாழிக்குள் ஒலிப்பது. “சேடிகளிடம் சொல்லாடி விட்டுப் போகலாம் என வந்தேன்” எனச் சிரித்தபடி சொன்னாள் விண்யாழி. ஓசையிலானின் நோக்கு ஒருகணம் அவளைத் தொட்டு நடுக்குடன் விலகியதை விண்யாழி உணர்ந்தாள். “செல்லலாம்” எனச் சொன்னாள் விண்யாழி.

இளமழை தூவல்களாப் பொழிவதை நோக்கிய ஓசையிலான் விண்யாழியின் செவியை நோக்கி எய்பவன் போல “நோக்கின் மென்மை கொண்ட துளிமழைச் சிலிர்ப்புகள்” என்றான். அச்சொல்லின் சரக்கொத்தினை நோக்கிய விண்யாழி மழையை அண்ணார்ந்து பார்த்த பின்னர் “ஓசையிலாது பெய்யும் தொடுகையைப் போல” என்றாள். ஓசையிலானின் கருந்தோலில் மழைச்சாம்பலொளி மேலும் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அவன் தோள்களில் சரிந்த குழல் மழைக்காற்றில் இலைத்தழைப்புகளென ஆடிக் கொண்டிருந்தன. தேகம் இளகி உறைந்து விசை கொள்வது போல உணர்ந்தாள் விண்யாழி.

கொற்றன் நிரதையின் கூந்தலின் பின்னின்று மழையை நோக்கிக் கொண்டே அவளின் கூந்தலில் எழுந்த வாசனையில் ஊறியிருந்தான். தீயிலைப் புகையின் நறும்புகை ஒவ்வொரு குடிலின் வாயிலிருந்தும் இணைந்து பரவிக் கொண்டிருந்தது. புகையைக் கலைத்துவிடாமல் இளமழைத் துளிகள் மண்ணில் விழுந்து கொண்டிருந்தன. தன் அகம் விழைபவனின் நோக்கைத் தவிர்க்க ஒண்ணாமல் கூந்தல் கிளைந்து கொண்டே அனுமதிப்பவள் போல.

TAGS
Share This