நோவிலும் வாழ்வு : அறிமுகம்

நோவிலும் வாழ்வு : அறிமுகம்

கவிஞர் வசிகரனின் முதற் கவிதைத் தொகுப்பின் அறிமுகம் இவ்வாரம் நிகழவிருக்கிறது. ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தொகுப்பு வெளிவந்திருக்கிறது. நிகழ்வை கவிஞர் கருணாகரன் தலைமை கொள்கிறார். நிகழ்வில் எழுத்தாளர் சு. குணேஸ்வரன், கவிஞர் வட்டக்கச்சி வினோத் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

*

கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் உடல்களும் நிலவுருக்களும் ஏற்கெனவே ஈழத்தில் புழக்கத்தில் இருக்கும் கவியுலகுகளில் இருந்து பிறிதான ஒரு கரையை நோக்கியிருக்கிறது. அன்றாட வாழ்வின் இருளுலகுகளுக்குள் குத்தி ஏறி இறங்கும் சிறு படகென அவரால் நுழைய முடிகிறது. திசைமானியில்லாத அப்படகை யாருக்கும் தெரியாமல் கரையிலிருந்து எடுத்து வந்த சிறுவனைப் போல் தான் விரும்பிய திசைகளிலெல்லாம் செலுத்திப் பார்க்க இயல்கிறது. ஒருகையைக் குவித்து மறுகையால் தீ மூட்டி பீடியைப் பற்ற வைக்கும் அச்சிறுவனுக்கு முடிவற்ற பெருங்கருணை எறிக்கும் முழுநிலா நாளில் அலைவிளிம்பின் நுரைச்சிரிப்பெனக் கூர் கொண்ட வரிகளை அளிக்கின்றன கடலும் நகரமும்.

(வசிகரன்)

*

நினைக்காத கள்ளு

உன்னிடம் விடைபெற்று
அவளைக் காணச் செல்கின்றேன்
தெருவெல்லாம் பாடல் ஒலிக்க
நீண்டு செல்லும் தெரு
ஞாபகங்களின் நீளமாய்

விறகடுப்பு எரிகிறது
வீட்டில் அவள் மட்டுமில்லை
தவிப்பு புகையாய் எழும்பும்.

உ உயிர்ச்சூடு இதயத்தை உந்துவது போல்
ஏதோவொன்று
உனை நோக்கி இழுக்கும்.

நினைவில் நீ…

தனிமையில் சீக்காகிக் கிடக்கிறாய்
நமக்கிடையில் நெடுந்தூரம் நடந்துவிட்டோம்.
புன்னகைக்கவும்
கையசைக்கவுமே முடிகிறது

மல்லாந்தும் ஒருக்களித்தும் படுத்திருக்கிறோம்
பிடரி முடிகளுக்கிடையில்
தூரத்து ஒளி வீச

உன் நரைமுடி மினுங்கும்.
நம் காதலின் திரளாக
என் வீங்கிய வயிறு
நினைவுகள் மேலெழும்
ஏவறையாக

கள்ளைப்போல் புளித்து
நம் காதல் மணம் வீசும்.

TAGS
Share This