தன்னறம் இலக்கிய விருது : 2024
மெய்யிலேயே ஈழத்தின் முதன்மையான இலக்கிய சாதனை ஷோபா சக்தியில் நிகழ்ந்தது. தன் கதைகளைச் சற்றே நீளமான அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எனச் சொல்லும் தற்பகடிக் கலைஞன் ஷோபா. தமிழீழம் எனும் பெருவேட்கை நெருப்பெரிந்த காலத்தில் அதன் உளச்சான்றை நோக்கியெழுந்த முதன்மையான கலைக்குரல். அறங்களை மாபெரும் கூட்டு உணர்ச்சிகள் பலவேறாக வகைப்படுத்துகின்றன. ஒன்றில் பொருந்துவது பிறிதில் பிழைப்பது. அறங்களை ஆக்குதலும் விரித்தலும் விவாதித்தலும் மறு விசாரணை புரிவதை இலக்கியம் தான் விழைந்தோ விழைவின்றியோ நிகழ்த்தியே ஆவது.
தன்னை முழுமையாகத் தன் எழுத்திற்கு அளித்தல். தன் கலைக்கு அளித்தல். தான் நம்பும் அறங்களுக்கு அளித்தல் என்பது முழுமையான அம்சங்களைக் அக் கலைக்கும் கலைஞனுக்கும் அளிப்பவை. ஷோபா சக்தி எழுத்திற்கு அப்பாலும் கலைஞன் என்ற தருக்கில் நின்றமைவதும் ஈர்ப்பதும் அந்த அம்சங்களின் விசையாலேயே. அவர் சொல்லும் அரசியல் என்பது அன்றாடங்களின் தத்துவார்த்த அரசியல் என்பதல்ல என்பது எனது புரிதல். அறங்களும் மானுட வாழ்வும் தீராது மோதிக்கொள்ளும் களங்களின் நுண்மையில் ஒளிந்திருக்கும் பகடியை அவர் காண்கிறார். அல்லது அவரது கலை அதை நிகழ்த்துகிறது. வாழ்க்கையை அதற்கு வெளியிலிருந்து நோக்குபவரின் புன்னகை அவரது எழுத்துகளில் மின்மினிப்பூச்சிகளின் பச்சையொளியெனப் பூசியிருப்பது அதையே.
நம் காலத்தில் தமிழில் எழுதுபவர்களில் முதன்மையான சிறுகதை எழுத்தாளர் ஷோபா சக்தியென்பதே எனது மதிப்பீடு. நாவல் எனும் வடிவத்தில் அவர் எழுதியவை முக்கியமானவை எனினும் ஒருவரது ஆளுமையும் அவரது மேதமையும் ஒன்றிலேயே கூர்முனை முற்றி எழும். தேர்ந்த கொல்லனின் இழைத்து இழைத்துப் பழகிய விரல்களால் தொட்டு நுணுக்கப்படும் பொன்னென மொழியை அளைபவர். அவரில் நவீன தமிழின் உரைநடை புதிய உச்சங்களை அடைந்தது. அவ்வகையில் அவரது பல முக்கியமான சிறுகதைகள் மானுட வாழ்வை விளையாட்டென்றாக்கி தீவிரம் கொண்டதாக்கி அங்கிருந்து தெறித்து மிதந்து எழும் கணங்களை அளிப்பவை.
ஈழத்தின் முதன்மையான எழுத்தாளரும் நாடகக் கலைஞரும் திரைக்கலைஞரும் ஆகிய எங்கள் மூத்தவருக்கு “தன்னறம் இலக்கிய விருது 2024” அவரது பங்களிப்பை ஏற்று கெளரவிப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. விருதுகளுக்கோ மரியாதைகளுக்கோ அப்பால் நின்று மெல்லிய புன்னகையுடன் சிறுவனைப் போல உடல் ஒசிந்து இந்த விளையாட்டை நோக்கும் எங்கள் மண்ணின் பெருங்கலைஞனுக்கு வாழ்த்துகள்.