ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

கிரி,

ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் இருந்து இன்னொரு கோணத்தில் பார்க்கமுடியுமெனச் சொன்ன சொல்லாட்சிகளும் கட்டுரையில் அபாரமான மொழிவெளிப்பாடு. கூடவே ஈழத்தின் கவிதையின் கடந்த கால போதாமைகளைச் சுட்டியிருந்தீர்கள். ஈழ் கவிதை வரிசை உருவாக்குவது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவை முக்கியமெனக் கருதுகிறேன். ஏன் என்றால் அப்படியான விரிவான வரலாற்று நோக்கில் நம் கவிதைகள் இன்னும் வாசிக்கப்படவில்லை. உதிரியாக தனியாகத்தான் படிக்கப்பட்டிருக்கின்றன. அது இந்த மாதிரியான ஒரு வரிசைகளோ, வரலாற்று நோக்கோ அவை உரையாடப்பாடாததன் விளைவு என்றே கருதுகிறேன். நான் வசியின் நோவிலும் வாழ்வு தொகுப்பிற்கு ஒரு கட்டுரை எழுதுவதற்காக ஈழத்தின் பழைய கவிதைகளை படிக்கும் போதுதான் அதை உணருகிறேன். மிக விரிவானதொரு வரைபடத்தை, முன்னோடிகள் வரிசையை உருவாகிக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். ஈழக் கவிதைகளும் அப்படியே சமாந்தரமாக பாரதிக்கு பின்னரான தமிழகக் கவிதைகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். பாரதிக்குப் பின்னரான நவீன கவிதை தமிழகத்தில் இரண்டு பெரும் போக்காக கிளைத்தது. ஒன்று தமிழின் புதுக்கவிதை கவிதை வரிசை. இரண்டு வானம்பாடிக் கவிதைகள் வரிசை. ந.பிச்சமூர்த்தி மூலவராகக் கொண்டு சி.சு.செல்லப்பா, க.நா.சு, பிரமிள், பசுவைய்யா, சி.மணி போன்றவர்களின் கவிதைகளை அசல் நவீனத்துவக் கவிதைகள் எனலாம். அது சொற் சிக்கனம், குறிப்புணர்த்தும் தன்மை, படிமங்கள், கவியுருவகங்கள் வழி உரையாடுதல், குறிப்பாக அது வாசக அகத்துடன் அந்தரங்கமாக உரையாடியது. அவற்றை மேடையில் படிக்க முடியாது. அப்படிப் படித்தாலும் கிரகித்து ரசிக்க முடியாது. வாசகருள் தனியான கவிதை அனுபவமாக விரியக் கூடிய மொழி, சொல்லாட்சிகளுடன் அவை இருந்தன. அதனால் அதன் பிரதான இயல்புகளாக குறிப்புணர்த்தும் தன்மையும், ஊகிக்க வைக்கும் தன்மையும் வெளிப்பட்டன. அவற்றில் கவிதைக்கான சொற்களின் ஒத்திசைவை ஓர்மையுடனே ரத்து செய்திருந்தார்கள். ந.பிச்சாமூர்த்தியிடம் ஒரு ஊசலாட்டம் தெரிகிறது. அவர் இரண்டு வகைக் கவிதைகளையும் மாறி மாறி எழுதிக் கொண்டிருந்தார். மரபுக்கவிதை, புதுக்கவிதை ஒருகட்டத்திலே மிக பிற்காலத்திலேயே மரபுக்கவிதை என்ற இரும்புக்குண்டைக் கழற்றி வீசிவிட்டு முழுவதுமாக புதுக்கவிதை எழுதினார். அவரின் பிற்காலக் கவிதைகளில் இருந்து முளைத்தவர்களே மேற் சொன்னவர்கள்.

//மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது
மலர்கள் வாசம் கமழ்கிறது
மரத்தில் இருந்து ஆண்குயில் கத்துகிறது
என்ன மதுரம் ! என்ன துயரம் !//

ந.பிச்சமூர்த்தி

//சொல் ஒரு சூது
இருபுறமும் ஒடும்
காக்கைக் கண்
இருமுகம் தெரியும்
பேதக் கண்ணாடி
காம்பில் படாமல்
மரத்தில் தாக்கி
மூர்க்கமாய்த் திரும்பிவரும்
எறிகல்
உண்மை என்று
ஒருதலை கடிப்பதை
மாயை என்று மறுக்கும்
இருதலைப் பாம்பு//

ந.பிச்சமூர்த்தி

//சுயநலத்தைப் பொதுத்தொண்டு ஆக்கும்
ஜாலக் கண்ணாடி வித்தை
காட்டநான் பாடவில்லை
பழவேதப் படையை ஓட்டி
லோகாயத வேதப் படையின்
தமுக்காய் ஒலிக்க நான்
தரணியில் அதிரவில்லை
மனுக்கால வெள்ளம்போச்சு
மார்க்ஸ்கால வெள்ளம்போகும்
பூமித்தாய் கருணை வெள்ளம்
எக்காலும் வழியாது ஓடும்
இயற்கையின் ஓயாத் தானம்
உயிர்களின் ஒழியா உழைப்பு
செயற்கையின் சிலுப்பல் இடையே
மலையாக உயர்ந்து நிற்கும்//

ந.பிச்சமூர்த்தி

//சவால்
நோவெடுத்து சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக்கட்ட
கயிருண்டு உன்கையில்

வாளுண்டு என்கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலிமையுண்டு

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நடையேற்றும் காலங்கள்

எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.//

பசுவய்யா

//இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும்
ஓர் ரத்தப் பெருக்கு.//

பிரமிள்

தமிழகத்தின் இரண்டாவது பெரும் வரிசை வானம்பாடிக் கவிஞர்களால் ஆனது. இவை இரண்டும் பெரும் போக்குகள். இதை விட நகுலன் போல தனித்த உதிரிப்போக்குகளும் இருக்கின்றன. ஆனால் ஈழக்கவிதைகளில் இந்த பெரும் வரிசைகளோ கிளைகளோ உருவாகவில்லை. முருகையனின் கவிதைகளில் பிச்சாமூர்த்தியின் சில இயல்புகள் வெளிப்படுகின்றன. உள்ளடக்கம் சார்ந்து அல்ல, வெளிப்பாட்டு முறை சார்ந்து. கிட்டத்தட்ட கார்பன் தாளின் கடைசித்தாளில் படியும் கோடு போல மிக மெல்லிதாக. ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலக் கவிதைகளை அறிவுரைகள் என்று அல்லது பழைய கவிராயர்களின் எச்சம் என்றோ அல்லது மரபுக்கவிதைகளின் தொனி உள்ளடக்கத்துடன் இருக்கும் வசனகவிதைகள் என்றே வகைப்படுத்த முடியும். அதனால் ஈழக் கவிதைகளில் தமிழக புதுக்கவிதைகளின் இறுக்கமான குறிப்புணர்த்தும் தன்மை, படிமங்கள், கவியுருவங்கள் வழி உரையாட விழையும் போக்கு, அந்தரங்கமாக உரையாடுதல், சொல்லாட்சிகள் போன்றவை அரிது. மிகச் சொற்பமாகவே அப்படியான கவிதைகள் இருக்கின்றன. கூடவே வானம்பாடிக் கவிதைகளின் உரத்த தொனி, உவமைகள், கிட்டத்தட்ட கோசங்கள் போல எஞ்சும் சொல் விளையாட்டுகள், அநீதிக்கு எதிரான குரல்.போன்றனவற்றில் உரத்ததொனி, அநீதிகெதிரான நேரடிக் குரல்கள் மட்டுமே இருக்கின்றன. அதாவது தமிழகத்தின் இரண்டு போக்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு போக்காகவே ஈழக்கவிதைகளை என்னால் வாசிக்க முகிறது. உரத்த தொனியை வானம்பாடிக் கவிதைகளில் இருந்தும், சொற்களை புதுகவிதைகளிலும் இருந்து எடுத்துச் செய்தது போன்றதான வெளிப்பாடே ஈழக்கவிதைகளில் இருக்கின்றன. இவற்றில் படிமங்களும், உரத்துச் சொல்லும் தன்மையும் அதிகமாக இருப்பதைக் காணலாம். எதுகை, மோனை விளையாட்டுக்களை கைக்கொள்ளாததால் வானம்பாடிக் கவிதையாக அவை வெளிப்படவில்லை. ஆனால் அந்தரங்கமாக உரையாடாத தன்மை, குறிப்புணர்த்தும் தன்மை இன்மையால் புதுக்கவிதை வழிவந்தவையாகவும் வாசிக்க முடியவில்லை. ஆனால் வானம்பாடிக் கவிதைகளின் மலினமான பிரதிபலிப்பு போல காசி ஆனந்தன் கவிதைகளைச் சொல்லமுடியும். குறிப்பாக அவரது நறுக்குகள். அவற்றின் இயல்புகளில் பெரும்பாலானவை வானம்பாடிக் கவிதைகளுடன் ஒப்பிடக் கூடியன.

மரணத்துள் வாழ்வோம் தொகுப்பை இன்று வாசிக்கும் போது அவற்றில் இருக்கும் கவிதைச் சித்தரிப்புகள் மிகவும் பலகீனமானவையாகவே எஞ்சி நிற்கின்றன. பல மிகைச் சொற்கள், திரும்பக் கூறுதல், வலிந்த கவியுருவகங்கள், படிமங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கூடவே அவற்றின் சித்தரிப்புகளும் கூட படைப்பூக்கமில்லாத எளிமையான மொழி வெளிப்பாடுகள். ஆனால் ஒரு சில மட்டும் நன்றாக இருக்கின்றன.. //எங்களுடைய எண்ணெய் வயல்கள் தீப்பற்றிக் கொண்டன // என்ற வண்ணச்சிறகின் வரிகள் போல அல்லது நீண்ட கவிதையின் முடிவில் //பேர்லின் வந்திறங்கும் அகதிகள் கூட்டத்தில் என்னைத் தேடாதே // என்று முடிகின்ற செழியனின் கவிதை போல. உண்மையில் செழியனின் இந்த நீண்ட கவிதையில் முன்வருபவை எல்லாம் ஒரு அகாலத்தை சித்தரிக்கும் எளிமையான காட்சிச் சித்தரிப்புகள் மாடுமே. இது அந்தக் காலத்து அநேக கவிதைகளின் இயல்பு கூட. ஆனால் அந்தச் சித்தரிப்பிற்காக அவர்கள் அதிகம் மினைக்கடவில்லை என்றே இன்று படுகிறது. கவிதைப் படைப்பூக்கம், கவிதைத் தனமான சொல்லாட்சிகள் இல்லாத ஆரம்பநிலை வெளிப்பாடுகளாகவே அவை இருக்கின்றன.

//நீறு பூத்த குறங் கொள்ளிக் கட்டைகள்
காற்று ஊத கண் முழித்துப் பார்க்குது//

த.இராமலிங்கம்

//பாரதி,
விடுதலை அவாவிய நின்
சிட்டுக் குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும்
மேய்தல் கண்டேன்//

சு.வில்வரத்தினம்

//அவர்கள் சொல்லினர்
இந்த வீடு
எனக்குச் சொந்தமில்லை யென
வெறுப்பு வழியும் பார்வையால்
வீசியெறிந்த சொல்
நெருப்பினால்
பல முறை சொல்லினர்
இந்த வீடு
எனக்குச் சொந்தமில்லையென//

அ.யேசுராசா

**இதன் தொடர்ச்சியாக வீடெனப்படுவது பேறு என்று முடியும் உங்கள் கவிதையையும் வாசிக்கலாம்.

//அவன் செய்ததெல்லாம்
அதிகம் ஒன்றுமில்லை
இரண்டு குண்டுகள்
ஒன்று ஆகாயத்திற்கு
அடுத்தது பூமிக்கு//

சேரன்

//அதோ தூரத்தே வீழும் எரி நட்சத்திரமல்ல
உன் அயலவன் வீட்டு முகட்டில் அரக்கர் வீசி எறியும் தீப்பந்தம்//

சு.வில்வரத்தினம்

//வல்லமை கொண்ட என்குரல் தன்னை
ஏந்திடும் காற்றே
நீள்கடலோடி
நெடுமலைதாவி
பாருலகெல்லாம்
பறையாய் முழங்குக//

சு.வில்வரத்தினம்

(சு. வில்வரத்தினம்)

இப்படிச் சொற்பமானவையே ஒரு இப்போது படிக்கையில் கவிதைகளாக வாசிக்க முடிகிறது. கூடவே இவையும் முழுக் கவிதைகளாக அல்ல அவற்றின் துண்டுகளாகவே வெட்டி எடுத்திருக்கிறேன். மிகுதி குடல் வளரிகள். இவற்றிலும் கூட ஒன்றைக்கவனிக்கலாம். எல்லாக் கவிதைகளும் உரத்த தொனி, சீற்ற வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றன. சற்றே அடங்கிய தொனி, குறிப்புணர்த்தும் இயல்புகளுடன் இருக்கும் (முழுமையான அர்த்தத்தில் அல்ல அதி..) புத்தரின் படுகொலை கவிதை. ஆனாலும் இந்த ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதையைப் போல  இல்லை. அந்தக் கவிதைகள் இப்போது படித்தாலும் கொடுக்கும் கவிதை அனுபவமென்பது நித்தியமானது. அல்லது இந்த ஞனக்கூத்தன் கவிதைகள் போலவும் அவை இல்லை. இவையும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டவைதான். பேசும் விடயங்களும் ஒன்று என்றாலும் நாம் புதுக் கவிதையில் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம் என்றே தோன்றுகிறது. குறிப்பாக இங்கு 2000 களின் முன்னரான போக்கை மட்டும் இப்போது ஒப்பிட்டுக் கொள்கிறேன். 2000 களின் பின்னரான போக்கை கூட ஒப்பிட்டு நோக்கலாம். ஆனால் யாராவது இவற்றை விரிவாக எழுதவேண்டுமென நினைக்கிறேன். அப்போதே ஈழக் கவிதைகளுக்கான முழுமையான வரைபடத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ளமுடியுமெனக் கருதுகிறேன்.

//நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது
எனக்கு கேட்கிறது
சொல்லாமலிருப்பது
என்னில் எதிரொலிக்கிறது
நமக்கு ஒரே ஒலி ஒரே பொருள்
ஒரே மெளனம்

ஊர் முற்றங்களில்
பொங்கல் விழாக்களில்
கோலமிட
நமது விரல்கள்
ஒன்றாக மடங்கி விரிகின்றன

ஒரே கடலின்
இருபக்கமும்
நாம் பலியிட்டோம்
மொட்டை போட்டோம்
நாம் காண்பது ஒரே ஆழம்

இக்கரையில் ஓர் ஊர்
ஒரு முப்பாட்டி
ஒரு குலதெய்வம்
உங்களை காத்திருக்கிறது

உங்கள் பேர்கள்
எனக்கு நன்கு அறிமுகம்
இடங்கள் அறிமுகம்
ரீகல் சினிமா
வீரசிங்கம் நூலகம்
பேருந்து நிலையம்
எல்லாம் என்னுடைய
காணாத காட்சிகள்

தபால் நிலையச் சாலை வழியாக
நடந்து போகும் போது
பாதையில் ஒரு கைப்பிடியளவு
ரத்தம்
உள்ளங்கை போல பரவி
என்னிடம் முறையிடுகிறது
என்னை அதட்டுகிறது
என்னை துரத்துகிறது
கடலிறங்கி
கரையேறி
என் பின்னால் வருகிறது

நான் அதனிடம் சொல்கிறேன்
மன்றாடுகிறேன்
கெஞ்சுகிறேன்
நான் விசையோ குண்டோ அல்ல
வானரனோ வால்மீகியோ அல்ல
முழு வழுக்கையான
முன் பற்கள் உதிர்ந்த
அரை வேட்டி மட்டும் அணிந்த
குண்டு துளையிட்ட
ஒரு வெறும் கேள்விக்குறி //

ஆற்றூர் ரவிவர்மா

(ஆற்றூர் ரவிவர்மா)

//கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க //

ஞானக்கூத்தன்

தர்மு பிரசாத்

*

வணக்கம் தர்மு பிரசாத்,

ஈழத்துக் கவிதைகளின் நெடுவரைபடத்தை உருவாக்குவதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று இப்படியான கவிதைகளுக்கான வரிசையை அல்லது முன்னோடிகளுக்கான வரிசையை உருவாக்குவதில் இன்றளவும் இருக்கும் பெருங்குறைபாடு இவற்றைச் செய்பவர்கள் ஆய்வு மாணவர்களாகவும் அக்கடமிக் ஆட்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தமது ஆய்வுப் பிராந்தியத்தின் காலவட்டத்தில் எழுதப்பட்டுச் சற்றுப் பிரபல்யம் அடைந்த அனைத்தையும் ஈழத்துக் கவிதை என்ற ஷோ கேசில் அடுக்கி வைத்து விட்டார்கள். அவை வாசக மற்றும் இலக்கிய மதிப்பீட்டு முறைகளைக் கொள்ளாதவை. அவற்றுக்கு அத்தகைய பண்பாட்டுப் பெரும்பணி இருப்பதையே அறியாதவர்கள். அவர்கள் இலக்கு எளியது. ஒரு ஆய்வு. ஒரு பட்டம். அதற்கு அப்பால் கவிதையோ இலக்கியமோ மதிப்பீடோ பொருட்டற்றவை.

இரண்டாவது சிக்கல் கவிதை அறிந்த மூத்தோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமானது. அவர்கள் அதன் பரந்த பரப்பைத் தொகுத்து விவாதித்து சுருக்கி அளிப்பதில் செலவழிக்கும் அளவுக்கு பொழுதோ கனவோ இல்லையென நாம் எண்ணிக் கொள்ளலாம். போரை அதற்கென ஒரு சாட்டாக என்றைக்கும் சொல்லிக் கொள்ளலாம். அவர்கள் செய்த பெரும்பாலான தொகுப்புப் பணிகள் கவிதையின் இலக்கிய மதிப்புச் சார்ந்தது அல்ல. ஓரளவு மதிப்பீட்டுடன் இயங்கியவர்கள் கூட அரசியல் சார்பு நிலைகளை அனைத்துக்கும் முன்னர் ஒரு நிபந்தனையாக வைத்துக் கொண்டார்கள். அரசியல் சார்புக்கும் எதிருக்கும் அப்பால் நாம் சிந்திக்கப் பழகுவது பெரும் சிக்கலாகவே இன்றளவும் தொடரும் நிலமும் புலமும் கொண்டிருகிறோம்.

இந்த இடைவெளிக்குள் தமிழகம் பிறிதொரு பெரும் பண்பாட்டுப் பணியைச் செய்து முடித்திருக்கிறது. அது நிகழாமல் நம் இளையவர்கள் (நானும் நீங்களும் உட்பட) நம் வரலாற்றை வகுத்தும் தொகுத்தும் கூரிய மதிப்பீடுகளை உருவாக்குவதில் போதாமைகளைக் கொண்டிருப்போம். அதை நிவர்த்தி செய்ய முக்கியமானவை என நான் கருதுபவை இவை.

1. கலைமதிப்பு

அரசியல் சார்புகளுக்கு அப்பால் கலையின் மதிப்பு இன்றளவுக்கும் இனிக்கு அப்பாலும் அவை நிலை கொண்டு நிற்கும் எந்த அம்சங்களைக் கொண்டிருக்கின்றன என்று வரையறுத்தாக வேண்டும். முதலில் ஒருவர் தான் கவிதை என நம்புவது எதை. அதன் வழியில் ஈழத்துக் கவிதைகளின் கண்ணிகளை இழைத்து ஒரு கைவலையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அது ஒருவரில் அடங்கும் செயலும் அல்ல. பல்வேறு தரப்பினரும் தம் வாசிப்பையும் கலை மதிப்பீடுகளையும் முன்வைத்து நம் முன்னோடிகளை நிறுவ வேண்டும்.

புனைவுகளில் கா. நா. சு செய்ததைப் போன்று பட்டியலாக்கமோ அல்லது ஜெயமோகன் செய்தது போன்று முழுமையாக முன்னோடிகளினதும் அசல் சிந்தனையாளர்களினதும் பணியைத் தொகுத்து விரிவான மதிப்பீட்டை முன்வைத்து வரிசையை உருவாக்க வேண்டும்.

என்னளவில் இந்தப் பணி எனக்கான பொறுப்பும் என எண்ணுபவன். அதன் பட்டியலாக்கச் செயலின் ஒரு பகுதியை இன்றைய ஆண்டு செய்தேன். ஆனால் அவை அறிமுக நோக்கில் எழுதப்பட்டவை. அதே நேரம் அவை முழுத்தமிழ் பரப்பையும் உள்ளடக்கியது. ஆனால் அதில் குறிப்பிட்டிருக்கும் ஈழத்துக் கவிஞர்கள் என் வாசக அனுபவப் பட்டியல். இனி அதை விரிவான தளத்தில் மதிப்பிட்டு முன்வைக்க வேண்டும்.

மு. தளையசிங்கம் எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியே நம்முன்னோடிகள் ஆக்கியவற்றில் முதன்மையானது. அதன் சாரமான புரிதலை இன்றளவும் இச்சிக்கலில் நாம் முதன்மையாகக் கொள்ளலாம். கொள்கைகள், கட்சிப் பற்றுகளுக்கு அப்பால் மெய்யாகவே கலையைச் சிருஷ்டிப்பதைப் பற்றியே கவனம் கொள்ள வேண்டும் என முடித்திருப்பார். நாம் நம் முன்னோடியென அவரிடமிருந்து அந்த அறைகூவலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

(மு. தளையசிங்கம்)

2. பண்பாடெனும் கனவை ஆக்குதல்

தனது முன்னோடிகளைத் தொகுத்துக் கொள்ளாத பண்பாடு தன் ஆன்மாவைப் புரிந்து கொண்டு வளர முடியாது என்பது எளிய வரலாற்று அறிதல். அதை ஒவ்வொரு முறை நாம் முன்வைத்தாலும் அரசியல் சரிநிலைகளும் பண்பாட்டுக் கவனமின்மையும் அதைக் குலைத்துக் கொண்டேயிருக்கின்றது. இங்கு ஒருவர் பண்பாட்டின் பெருங்கனவை ஆக்கி அளிப்பதென்பது நம் முன்னிருக்கும் நிகழ்காலத்துடன் என்றைக்கும் தருக்கி நிற்கும் செயல். அதை நாம் புரிந்தே ஆக வேண்டும். மேலும் இளையவர்கள் இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடும் கனவை அடைய அவர்கள் முன்னுள்ள சமூக வலைத்தள சிலந்தி வலையிலிருந்து வண்டென அறுத்துக் கொண்டு வெளிவரும் திராணியை நோக்கி அறைகூவல் விடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

பண்பாட்டுச் செயற்பாடுகளை ஆற்றும் இளையவர்கள் மூத்தோராலும் செயலூக்கமற்ற இணைய மந்தர்களாலும் தொடர்ந்து சிறுமை செய்யவும் வசைக்கு ஆளாவதையும் அவர்களது பங்களிப்பு எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாது கடந்து செல்லப்படுவதையுமே பார்க்கிறோம். அரிதாகவே சிலர் இந்த புகை மூட்டங்களைக் கடந்து தம் அகத்தீயை ஏற்றிக் கொள்கிறார்கள். அவர்களுடன் மட்டுமே நான் உரையாட விரும்புகிறேன்.

கசப்புகளும் கீழ்மைகளும் நம் சூழலின் இயல்பெனத் திரண்டிருக்கிறது. அது ஒரு வகையில் ஏற்கெனவே சமூக இயல்பென இருந்ததை சமூக வலைத்தளங்கள் குவித்து அளிக்கின்றது. இதற்கிடையில் பெரும்பணிகளைக் கவனப்படுத்துவதும் பெருஞ்செயல் புரியும் கனவுகளுக்கு உடன் நிற்பதுவும் ஒவ்வொரு அறிவியக்கத்தரப்பினரதும் பொறுப்பு என எண்ணுகிறேன்.

இங்கு ஈழத்துக் கவிதைகள் தொடர்பில் நாம் தனித்து ஒரு வரைபடம் மட்டுமல்ல. சிறுகதைகள். நாவல்கள். ஓவியம். நாடகம். நடனம். சிற்பம் என்று பல்வேறு தளங்களிலும் நிகழும் சிந்தனைகளைத் தொகுக்கும் மாபெரும் பணி முன்னிற்கிறது. எழுத்தாளர்களே தம் சொற்களின் வழி இச்சிந்தனைகளைத் திரட்டி ஒரு பண்பாட்டின் முன் நிலை நிறுத்த வேண்டியவர்கள்.

*

ஈழத்துக் கவிதைகளின் உரத்த தொனியும் சீறல் இயல்பும் வானம்பாடிக் கவிதைகளுடன் அதிகம் நெருங்குபவை ஆனால் நீராழத்தில் ஆறுகளென முன்னோடிகளின் வரிசையொன்று நம்மிடையே உண்டு. உரத்த தொனியென்பது ஒரு தன்மை மட்டுமே. பாப்லோ நெருதாவோ பாரதியோ உரத்த தொனி ஒரு பகுதியெனவே அவர்களில் வெளிப்பட்டிருக்கிறது.

நம் கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளிலிருந்தே இன ஒடுக்குமுறை, அதிகாரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுதல் போன்ற அரசியல் மையச் சிக்கல்களை பிரதியாக்கம் செய்தன. பல ஆரம்பக் கவிதைகளில் நீர் மேல் நிழலென அவை விழுந்து கொண்டேயிருக்கும். சு. வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம், சேரன் போன்றோர் பின்னர் துலக்காமன தனிக்குரலுடன் உருவானவர்கள். தொடக்ககாலச் சாயல்கள் நிகழ்ந்தே ஆவது. ஆனால் அங்கிருந்து குறித்த கவிஞர் தன் மொழியையும் கனவையும் எத்தனை தொலைவுக்கு விரித்துச் செல்கிறார் என்பதிலிருந்தே அவரின் கலை மதிப்பு கூடிவரும்.

செல்வி, சிவரமணி, ஆழியாள், ஒளவை, அனார், நட்சத்திரன் செவ்விந்தியன், பா. அகிலன், அஸ்வகோஷ், நிலாந்தன், கருணாகரன் போன்ற தொண்ணூறுகளின் குரல்கள் முன்னையவர்களிலிருந்து தன் குரலை மறுவார்ப்புச் செய்து மேலெழுந்தவை. அதன் பின்னரான காலத்தில் எஸ். போஸ். சித்தாந்தன், தானா விஷ்ணு போன்ற கவிஞர் நிரை உருவாகி இன்றளவு எழுதும் இளங் கவிஞர்கள் வரை ஒரு பருமட்டான வரைவை இப்போது குறிக்கலாம். இவை கடலில் உள்ளோடும் நீரோட்டங்கள் போன்றவை.

ஒரு மொழிச்சூழல் தானே திரண்டு தவறு விட்டுக் கலையை அறிந்து பயின்று விவாதித்து மெல்ல மெல்ல அடைந்த நுண்மையே இன்றுள்ளவர்களில் திகழ்வது. ஆனால் அவை இன்னமும் கூர்மையாகவும் தனது பாத்திரத்தை எழுத்தாளர் எனும் தன்னிலையுடனும் வகுத்துப் பணியாற்றியிருந்தால் இளையவர்கள் மேலும் கலை மற்றும் விவாதத்திறன் மிக்கவர்களாக மேலெழுந்திருப்பார்கள் என்பது உண்மை.

இனியுள்ள காலங்களில் இது நம் பொறுப்பு. அதை வரையறுத்து எழுத்தாளரின் சமூகப் பாத்திரத்தை இந்தப் பல்லாயிரம் மழை ஈசல்களின் வெளிக்குள் உண்டாக்கியாக வேண்டும். நுண்மை கொண்ட இளையோர் அத்தகைய கரிசனங்களை நோக்கி நகர்வார்கள் தம்முன் இருப்பது எத்தகைய பெரும்பணி என்பதை உணர்வார்கள் எனவும் நம்புகிறேன். மின்னும் விண்மீன்களை கனவால் இணைத்து உருவொன்றை ஆக்குவது போல இப்பாண்பாட்டை இணைத்தாக வேண்டும்.

TAGS
Share This