மீண்டும் ஒரு மாணவர் புரட்சி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (2012 ) ஒரு ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் நயினாதீவுக்கு சுற்றுலாவுக்குச் சென்று விட்டு வரும் போது ஜெட்டியடியில் வைத்து வாகனத்தை திருப்பிய பொழுது கால் இடறி விழுந்து டயரில் தலை நசுங்குண்டு இறந்து போனான். இதைக் கேள்விப்பட்டவுடன் மிகவும் பரபரத்துப் போனேன். கைகால்களெல்லாம் துடிக்க சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன் ஏற்கனவே இருநூறு பேருக்கு மேல் எங்கள் பிரிவு நண்பர்களும் பழையமாணவர்களும் திரண்டிருந்தார்கள். அதிபர் தனது மனைவி குடும்பத்துடன் பள்ளிக்கூடத்திற்குள் நின்று அழுதுகொண்டிருந்தார். மாணவர்கள் சுற்றியும் நின்று ஏசிக்கொண்டிருந்தார்கள். எங்கும் கடும் கோபம் மூண்டிருந்தது. யாரிடம் காட்டுவது, அந்த ட்ரைவரா? கூட்டிக்கொண்டு போன ஆசிரியர்களா? கவனிப்புகளை ஒழுங்காக செய்யாத அதிபரிடமா ? இல்லை யாரிடம். அந்த மாணவன் வன்னியிலிருந்து வந்து படித்துக்கொண்டிருந்தான் எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார், அவன் தனது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தவன், உடுப்பு ஊத்தையாகத் தான் போடுவான், சப்பாத்தும் கிளிஞ்சது தான், பிறகு அவர் பாடசாலையிடம் சொல்லி அந்த மாணவனுக்கு உதவி செய்திருந்தார். அந்த மாணவன் வன்னி யுத்தத்திலிருந்து மீண்டு வந்து விபத்தில் இறந்து போனமை எங்களது கோபத்தை திக்கற்று பரவ விட்டது. சிலர் பாடசாலை கண்ணாடிகள், பூச்சாடிகள், கதவுகள், சுவரொட்டிகளை அடித்து நொறுக்கினார்கள். சிலர் அந்த மாணவர்களை சுற்றுலாவுக்கு கூட்டிச் சென்ற ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று கற்களால் எறிந்தனர். உடனடியாக அவர்களை அப்படி செய்யவேண்டாம் என்று தடுத்தோம். அந்த மாணவனது தந்தை கொல்லாமல் விட மாட்டேன் என்று யாரையென்று தெரியாமல் கத்திக்கொண்டு நின்றார். மண்ணையள்ளி வாரியிறைத்து சபித்துக்கொண்டிருந்தார்.
அடுத்த நாள் பள்ளிக்கூடம் ஸ்ட்ரைக் என்பது சர்வ நிச்சயமான ஒன்று. நான் அதற்கான துண்டுப்பிரசுரத்தை எழுதினேன். இரண்டாவது நாள்ஆயிரக்கணக்கான பிரதிகளை அடித்து வெளியிட்டோம். பாடசாலையை விடுமுறையை அறிவித்தது. பின்னர் அந்த மாணவனின் இறுதி நிகழ்வுக்கு சென்ற பள்ளிக்கூட ஆசிரியர் மாணவர்களை அந்த மாணவனின் உடலைக் கூட நெருங்க விடவில்லை அவனின் உறவினர்கள். நாங்கள் ஒரு கொஞ்சப் பேர் அவனைப் புதைத்தோம். கோபம் அடங்கவில்லை. யார் மீது கோபத்தைக் காட்டுவதென்று தெரியவில்லை. அடுத்த நாள் வீதிகளில் டயர்களைக் கொளுத்தி பஸ்களை மறித்து போராட்டத்தை நடத்தினோம். பொலிஸ் வரவழைக்கப்பட்டது. எங்கும் மாணவர்களை பொலிஸ் விரட்டியது. நாங்களும் பிறகு அடங்கினோம். அடுத்த நாள் அதிபர் தாங்கள் என்ன செய்யமுடியும் என்பது பற்றியும் இழப்பிற்கு என்ன செய்யஇருக்கிறோம் என்பது பற்றியும் விளங்கப்படுத்தினார். கொஞ்சம் அமைதியானோம். இப்பொழுது நாம் செய்தவற்றில் பலதும் தவறான விடயங்கள் என்று உணருகிறேன். ஆனால் எங்களது கோபத்திற்கும் அதற்கான காரணத்திற்கும் ஒரு நியாயமிருந்தது. அந்த இழப்பு எங்களை நிலை குலையச் செய்தது, நாம் அப்பொழுது பாடசாலை மாணவர்கள். அந்தளவு பக்குவம் தான் எங்களிடமிருந்து. ஆகவே எங்கள் கோபத்திற்கொரு அறமிருந்தது என்று நினைக்கிறேன்.
வன்முறை எனும் வழிமுறை.
அந்த நேரத்தில் நாம் கையாண்ட வழிமுறைகள் டயரைக் கொழுத்துதல், கண்ணாடியை உடைத்தல், பூச்சாடியை நொறுக்குதலென்பது யார் மீதென்று தெரியாத எங்கள் கோபத்தை வடிகாலாக்கியது.
இன்றய தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் மீண்டுமொரு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக ராகிங் தொடர்பில் மூன்று வருடமாக எழுதி வருகிறேன். முடிந்தவரை மாணவர்களோடு கதைத்து வருகிறேன். ராகிங் தொடர்பான முழுமையான ஆவணப்படுத்தலையும் அதன் கொடூரமான பக்கங்களைப் பற்றியும் ஒரு ஆவணத்தை தயார் செய்து வருகிறோம். இந்த நிலையில் மீண்டுமொரு சம்பவம் மனதை அலைக்கழிக்கிறது. இதில் பங்குபற்றியவர்களில் சிலர் இரண்டு வருடங்களிற்கு முன் ராகிங் ஆல் பாதிக்கப்பட்டு என்னிடம் வந்து இதற்கொரு மாற்றீடு வேண்டுமென்று கேட்டவர்கள் அவர்களுக்கு இதனை பகுதியளவில் மாற்றி எந்தப் பிரயோசனமும் இல்லை, இதனை முற்றாக நீக்க வேண்டுமென்று விளங்கப் படுத்தியிருந்தேன். இன்றோ அவர்களில் சிலரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது நடக்குமென்று முதலே தெரியும், ஆனால் நம்பிக்கையை எப்பொழுதும் கைவிடமுடியவில்லை. இப்பொழுதும் தான்.
இன்று நடந்த சம்பவத்தின் சுருக்கம் இது தான். அதாவது சில இரண்டாம் வருட மாணவர்கள் முதல் வருட மாணவர்களை ராகிங் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த வாரம் வேட்டி, சாறி அணிய வேண்டும் என்பது கட்டளையாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் விரிவுரையாளர்கள் வன்முறையாக கருதுகிறார்களா இல்லை கலாசாரமென்று நம்புகிறார்களா தெரியவில்லை. இதனை ஏன் அணிகிறார்கள் இது ராகிங்கா இல்லையா என்பது பற்றி நிர்வாகமும் அலட்டிக்கொள்ளவில்லை. நிர்வாகத்திற்கு இவை போன்றவை தேவையாகவே இருக்கின்றன. வேட்டி, சாறி அணிந்து வந்த மாணவ மாணவியருக்கு சந்தனத்தை பூசுங்கள், குங்குமத்தை பூசுங்கள் என்று இரண்டாம் வருட மாணவர்கள் முதலாம் வருடத்தை நடத்தியிருக்கிறார்கள். இதன் போது இதனை சில மூன்றாம் வருட மாணவர்கள் இடையீடு செய்திருக்கிறார்கள், மூன்றாம் வருட மாணவர்கள் கொஞ்சப் பேர் என்பதால் இருந்த இரண்டாம் வருட மாணவர்கள் முரண்பட்டிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து சென்ற மூன்றாம் வருட மாணவர்கள் இரண்டாம் வருடத்திற்கு வகுப்பு நடந்துகொண்டிருந்த நேரம் விரிவுரையாளர் இருந்திருக்கிறார், வெளியிலிருந்து சிலருக்கு அடித்திருக்கிறார்கள். அதன் போது உள்ளே இருந்த இரண்டாம் வருட மாணவர்கள் மூன்றாம் வருடத்தை தாக்க ஓடி வந்திருக்கிறார்கள். அந்த வேளையில் இடையில் நின்று சண்டை பிடிக்க வேண்டாம் என்று நிறுத்திய விரிவுரையாளரை நெஞ்சில் பிடித்து தள்ளி விட்டு சுமார் முப்பது பேரளவில் உள்ளே புகுந்து ஈவிரக்கமின்றி அங்கிருந்த மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள், இரண்டாம் வருடமும் பதிலுக்குத் தாக்கியிருக்கிறது. குறித்த தாக்குதலை அந்த விரிவுரையாளர் ஒளிப்பதிவு செய்ததாகவும் அறிய முடிகிறது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்கள். ஐந்து மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். பின்னர் மூன்றாம் வருட மாணவர்களை தாக்குவதற்கு இரண்டாம் வருட மாணவர்கள் நாற்பது பேரளவில் ரெயில் கடவையருகில் நின்றிருக்கிறார்கள்.
பின்னர் என்ன நடந்ததென்று தெரியவில்லை. அல்லது தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
இவற்றின் வேர் எங்கிருக்கிறதென்பது தான் நமது பிரச்சினை. காலம் காலமாக வன்முறையில் ஊறியிருந்த சமூகம் தான் எங்களது. அதன் எல்லா வன்முறைகளையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் இந்த மாணவர்களும் அவர்களிடம் வெளிப்படும் வன்முறைக்கு நமது சமூகத்திற்கு பெரும்பங்கிருக்கிறது. நீண்டகாலமாக வன்முறையை ஒரு தீர்வாக முன்வைக்கும் சமூகமாக இருந்திருக்கிறோம். மற்றைய சமூகங்களும் அப்படித்தானிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன் கூட இன்னுமொரு சம்பவம் நடந்தது. இரவு நேரத்தில் அடுத்த நாள் நடைபெற இருக்கின்ற புதுமுக மாணவர்களின் வரவேற்பிற்காக தயார்ப்படுத்தலில் இருந்த மாணவர்கள் கண்ணாடிகளை உடைத்ததாகவும் விரிவுரையாளர்களுடன் தவறாக நடந்து கொண்டதாகவும், பின்னர் அவர்களுக்கு வகுப்புத் தடை வழங்கிய போது, குறித்த தாடையில் சில அப்பாவி மாணவர்களும் இருப்பதாக காரணம் காட்டி மொத்தப் பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு உண்ணாவிரதம் மேற் கொள்ளப்பட்டது, அதற்கிடையில் நிர்வாகத்தை எதிர்த்து ஒரு போராட்டத்தையும் செய்திருந்தனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தார்மீகத்தை இவர்கள் இழந்து விட்டார்களோ என்று தோன்றியது. ஆனாலும் மாணவர்களை அவர்களுக்கான சுதந்திரத்தையும் உரிமையையும் அதன் எல்லைகளையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டியவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பதும் இங்குள்ள ஒரு உண்மை.
இரண்டு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள், பிறகு வந்து ஜுனியர் மாணவர்களை ராகிங் செய்கிறார்கள். வன்முறையை எதிர்ப்பதற்கான தார்மீக நிலை எங்களிடம் இப்போதிருக்கிறதா என்பதை பற்றி மாணவர்கள் சிந்திக்க வேண்டும். நீதியான காரணத்திற்காக போராடும் தரப்பொன்று இன்னொரு அநீதியை நியாயப்படுத்த முடியாது. அது அறமும் அல்ல. எனக்குத் தெரிந்து இந்த முறையும் மாணவர்கள் நிர்வாகத்தை கூட்டாக எதிர்த்து கொஞ்சம் கூட அடிப்படையில் இந்தப் பிரச்சினையின் காரணத்தை நோக்கி நகராமல் மாணவர்களுக்கு நிர்வாகம் செய்யும் அடக்குமுறை இது. அப்படித் தான் நாங்கள் வகுப்பு புகுந்து தெருப்பொறுக்கிகள் போல் சகோதர மாணவர்களை அடித்து நொறுக்குவோம், ஆனால் நிர்வாகம் எங்களை ஒன்றும் செய்யக் கூடாதென்ற நியாயமான கோரிக்கையை முன்வைப்பார்கள், மற்றைய மாணவர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள், மிகச் சிறுதரப்பு மட்டும் இதனால் அருவருப்புபட்டு விலத்தி நிற்கும்.
நண்பனொருவன் சொன்ன உதாரணம், ஒரு பயிற்சிப் பட்டறையில் இருந்த ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய செயன்முறையொன்று. இருவர் இரண்டு கைகளையும் பொத்திப்பிடிக்க வேண்டும் மற்றவர்கள் அதனைத் திறக்க வேண்டும். இது தான் போட்டி. ரெடி என்று சொன்னதும் அனைவரும் இரண்டு கைகளையும் பலம் கொண்ட மட்டும் திறக்க முயற்சி செய்தனர், சிறிது நேரம் கழித்து நிறுத்தத் செய்யப்பட்டது. நீங்கள் இப்பொழுது எவ்வாறு உணருகிறீர்கள் என்று அந்த இரண்டு கைகளையும் பொத்தியவர்களிடம் கேட்கப்பட்டது. கைகள் வலிக்கின்றன என்று சொன்னார்கள். மற்றையவர்களிடம் கேட்கப்பட்டது, ஏன் உங்களில் ஒருவர் கூட அவர்களிடம் சென்று தயவு செய்து உங்களின் கைகளைக் கொஞ்சம் திறக்க முடியுமா என்று கேட்கவில்லை என்று.
ஆம், நாம் முதலாவது தேர்வாக எப்பொழுதும் வன்முறையையே தேர்வு செய்கிறோம், இரண்டாவதொரு வழியிருப்பதையே மறந்து விடுகிறோம். இப்பொழுதும் நாம் எமது அறத்தை மறக்கப் போகிறோம், மறுபடியும் அவர்கள் மாணவர் புரட்சி வெடிக்கட்டும் என்று உள்ளக உரையாடல்களை ஆரம்பிக்கப் போகிறார்கள். இந்த முறையும் எந்தவித அக்கறையுமின்றி வாயை மூடிக்கொண்டிருப்போம்.
(2017)