பித்தும் கவிதையும் : 02
பத்தொன்பது வயதில், கவிஞரும் ஓவியரும் அரசியல் பத்தி எழுத்தாளருமான நிலாந்தன் அவர்களிடம் பேச்சு மூல ஆங்கிலம் கற்கச் சென்றேன். அவருடன் அரசியல் பற்றியும் இலக்கியம் பற்றியும் நிறைய உரையாடியிருக்கிறேன். கவிதைகளை வாசித்து அபிப்பிராயங்கள் சொல்லுவார். ஓர் ஆளுமையாகவும் ஆசிரியராகவும் என்னை அவர் ஈர்த்தார். றமணன் அண்ணாவும் நிலாந்தன் அண்ணாவும் மேடைப் பேச்சில் மிகவும் வசீகரமானவர்கள்.
உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளிவந்த பின் இங்கே பல்கலைக்கழகம் கிடைக்க வாய்ப்பில்லை என்றானது. இரண்டாம் தடவை மீண்டும் படித்து எழுதும் மனதும் இல்லை. பிரான்சுக்கு வா என்று சித்தி அழைத்தார். செல்லலாம் என்று முடிவாகி கொழும்பில் சில காலம் அண்ணா ஒருவரோடு தங்கி விட்டு வெளியேறும் வழியைப் பார்க்க நினைத்தேன். கொழும்பு செல்ல ஓரிரு நாட்களுக்கு முன்னர் நண்பர்களைச் சந்தித்துப் பயணமாவதைச் சொன்னேன். நிலாந்தனிடம் சென்று என் திட்டத்தைச் சொன்னேன். மெல்லமாக ஆரம்பித்து நீ போவது நல்ல முடிவல்ல என்பதை அழுத்தமாகச் சொன்னார். என்னுடைய இயல்பிற்கு மாநகரப் பண்பாட்டின் எல்லாத் தீமைகளுக்கும் பலியாகக் கூடியவன் என்றெல்லாம் சொல்லி விட்டு முக்கியமான ஒன்றைச் சொன்னார். “நீ தண்ணியில மிதக்கிற ஐஸ்கட்டி மாதிரி, உன்ன வெளிய எடுத்துப் போடலாம் எண்டு நினைச்சன். நீ கவிதை எழுதிறத அறியாமல் நிலத்தை விட்டுப் போனாயெண்டால் நீ கவிதை எழுத மாட்டாய்”.
இதைப் போன்ற ஒரு காரணத்தின் முன் வாழ்வே ஒரு பொருட்டல்ல என்று ஆகிவிடும். கவிதை எழுதாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தைக் கடக்கவே முடியாது என்று எனக்குத் தெரியும். வீட்டில் வந்து வெளிநாடு போகவில்லை கவிஞனாகப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளிநாடு போகும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
பிறகு தீவிரமாக இலக்கிய நிகழ்வுகளை யாழ் இலக்கியக் குவிய நண்பர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தோம். ‘நாம்’ என்ற பெயரில் முகநூலில் எழுதிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்து இரண்டு இதழ்களாக வெளியிட்டோம்.
ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு வேலைகள் என்று மாறிமாறிச் சென்றேன். பிறகு ஒரு கற்கை நெறியைத் தொடர்ந்து, படித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில ஆசிரியரானேன்.
*
பிரிந்தாவுடனான காதல் என் வாழ்வின் இன்றிருக்கும் திசையைத் திறந்தது. ஆரம்பத்தில் காதலில் எனக்கு நம்பிக்கையோ உடன்பாடோ இருந்திருக்கவில்லை. அது ஓர் ஆக்கி அளிக்கப்பட்ட உணர்வு. அது ஆதார உணர்வில்லை என்று நினைத்திருந்தேன். ஒரு பின்மாலையில் காதலை உணர்ந்து, கால்கள் தடக்க நடந்து உடல் சோர்ந்து நிற்க முடியாமல் பஸ் ஸ்டாண்டிற்குப் போன பொழுது ஓர் ஊழியஞ் செய்பவர் பூபாலசிங்கம் புத்தகக் கடைக்குப் பக்கத்தில் நின்று கையில் வைத்திருந்த ஒருகைமேளத்தைத் தட்டியபடி பாடிக்கொண்டிருந்தார். “அன்பில் சேர்ந்த உயிர்கள் என்றும் திரும்பிச் செல்வதில்லை. அவை திரும்பி நடப்பதில்லை” என்ற வரிகள் மட்டும் காதெல்லாம் ஒலித்து நிறைந்தது. உடல் தாளாமல் பஸ் ஸ்டாண்டின் இருக்கையொன்றில் படுத்திருந்த போது உடலைச் சாவைப் போல வீழ்த்த வல்லது காதல் என்பதை அறிந்தேன்.
நான் காதலிப்பதை அறிந்த அந்த நடு இருளில், தனியறையில், அவள் எங்கோ இருந்துகொண்டு அனுப்பிய குறுஞ் செய்திகளின் கடைசி வரி இப்படியிருந்தது, “நான் உன்னுடைய நாஸ்தென்கா இல்லைத் தானே?”
“இருக்கக் கூடாதென்று தான் விரும்புகிறேன்” என்று பதிலளித்தேன்.
அவள் “உன்னுடைய பிரார்த்தனை வீணாகிவிட்டது. படு” என்றாள்.
அவ்விரவில் தஸ்தவேஸ்கி என்னறையின் இருளில் மெழுகுவர்த்திகளுடன் இருந்தார். பிரார்த்தனையின் கண்ணீர்த் துளிகளைப் போல.
*
சில காலம் கழித்து ஒரு மாலையில், அப்போது அவள் என்னைக் காதலிக்கவில்லை. நண்பர்களாக இருந்த காலம். என் வீட்டின் பின் பக்கத்தில் ஒரு புற்தரை இருக்கிறது. அதில் பிரிந்தாவின் மடியில் நான் படுத்தேன். அவள் திடுக்கிட்டு எழுந்தாள், என் அம்மா அதைப் பார்த்து விட்டார். அப்போது தான் பிரிந்தா என் அம்மாவை முதல் முறையாகச் சந்திக்கிறாள். அம்மா நெருங்கி வந்து, கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்திருந்தார். இடையில் ‘நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ, எல்லாம் பார்த்துக் கொள்ளுவம், எல்லாம் சரி வரும்’ என்று சொன்னார். மனதிற்குள், ‘நாங்கள் காதலிக்கவில்லை’ என்று நினைத்துக் கொண்டு ஆனால் அம்மாவிடம் திரும்பப் பேச முடியாமல் நின்றாள்.
யுத்தம் தொடங்கி விட்டது, கடுமையான போர். எங்கும் மரணங்களும் அழிவுகளும். நான் அங்கிருக்கும் தெரிந்தவர்களையெல்லாம் தேடிக் கண்டு பிடித்தேன். இறுதியில் பிரிந்தா என்னைத் தேட நான் அங்கு எங்குமே இல்லை. காணாமற் போய் விட்டேன். நான் இல்லை என்பதை நினைத்து அழத் தொடங்கி விட்டாள். இக் கனவிலிருந்து விழித்த போது பதைபதைத்ததாகச் சொன்னாள். (அம்மா இறந்ததற்குப் பிறகு இது வரை என் கனவில் வந்ததேயில்லை. பிரிந்தா தன் வாழ்வில் என் அம்மாவைப் பார்த்ததும் இல்லை).
*
வாசிப்பில் மட்டுமே மூழ்கியிருந்த காலங்கள் அவை. பொது நூலகத்திலும் றமணன் அண்ணாவிடமும் வேறு நண்பர்களிடமும் இரவல் பெற்று மாதக்கணக்கில் வேலைகளெதுவுமின்றி வாசிப்பேன். வேலைகளில் ஈடுபட்ட போதும் அங்கே புத்தகங்களைக் கொண்டு போய் வைத்து வாசித்துக் கொண்டேயிருப்பேன். 2014 ஆம் ஆண்டு, மயான காண்டம் – பிந்திய பதிப்பு என்ற பெயரில் நான்கு புதிய தலைமுறைக் கவிஞர்களின் கூட்டுத் தொகுப்பை ஆகாயம் பதிப்பகம் வெளியிட்டது. இதில் எனது சில கவிதைகளும் இடம்பெற்றன.
பின்னரான காலத்தில் இலக்கியக் குவியத்திலிருந்து விலகி சமூகப் பிரச்சினைகளுக்காகப் பேசும், போராடும் சிந்தனைக் குழாமை உருவாக்க வேண்டும் என்று ஆதி பார்த்திபன், யதார்த்தன் ஆகிய நண்பர்களுடன் இணைந்து உரையாடல்களைச் செய்ய ஆரம்பித்தோம். அக்காலத்தில் சிந்தனைக் குழாம்கள் உருவாக வேண்டும் என்ற கருத்தை நிலாந்தன் தொடர்ந்து வலியிறுத்திக் கட்டுரைகளும் உரையாடல்களும் நிகழ்த்தியிருந்தார். அதன் விளைவாகவே நாங்கள் அந்த எண்ணத்தைப் பெற்றுக் கொண்டோம். அது சமூக அரசியற் தளங்களில் எனது பயணத்தைத் தொடங்கியது. விதை குழுமம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நண்பர்களாக சேர்ந்து உருவாக்கிச் செயற்பட்டோம். சதீஷ்குமார், பிறைநிலா, அருண்மொழிவர்மன், பிரிந்தா, தனுயன், மகிதரன் என்று பல நண்பர்கள் அவ்வமைப்பில் ஒன்றிணைந்தார்கள். நாவலாசிரியர் சயந்தன், கூட்டமொன்றின் பின்னரான உரையாடலில் ஓர் இலக்கிய இதழைத் தொடங்குவது பற்றி ஆர்வப்படுத்தினார். நண்பர்களுடன் அவ்வெண்ணத்தை உரையாடிய பின் விதை குழுமத்தினூடாக ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழை ஆரம்பித்தோம். சதீஷ் குமார், அருண்மொழிவர்மன், யோ. கெளதமி, ஆதி பார்த்திபன், அனோஜன் பாலகிருஷ்ணன், யதார்த்தன், யாழினி யோதிலிங்கம், தனுயன், பாலசுப்பிரமணியம் காண்டீபராஜ் என்று பல நண்பர்களின் கூட்டுழைப்பின் விளைவே புதிய சொல். அமைப்பில் தோழர்களாக இருந்த பலரதும் பங்களிப்பை விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுத வேண்டும். சமூகத்தை அறியவும் எனது சூழல் எதன் அரசியலால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியவும் நூற்றுக்கணக்கான நண்பர்களையும் அனுபவங்களையும் அதன் பின்னரான காலம் கொண்டுவந்தது.
*
பத்தொன்பது வயதில் ஒரு நாள் றமணன் அண்ணா, சுகுமாரனின் கோடை காலக் குறிப்புகளைத் தந்துவிட்டு இது முக்கியமான கவிதைத் தொகுப்பு என்று சொன்னார். அந்தத் தொகுப்பின் கவிதைகள் எனக்கே எனக்கான அந்தராத்மாவிற்காக எழுதப்பட்டிருந்தன. பல வரிகள் நினைவில் தங்கி உள்ளூறிப் பெருகின. இலக்கியத்தில் எனது முன்னவரை அறிந்தேன். சுகுமாரனே என்னைக் கவிதை எழுதத் தூண்டினார். மதிப்பீடுகளெங்கும் அந்தத் தொகுப்பு ஒரு மகத்தான முன்னகர்வை மொழியில் நிகழ்த்தியிருக்கிறது என்பதை வாசிக்க வாசிக்க, நான் யாரைக் கடந்து எழுத வேண்டும் என்ற கனவு எழுந்தது. கோடைகாலக் குறிப்புகளைக் கடந்த மகத்தான கவிதைகளை எழுத வேண்டும் என்பதே எனக்கு நானளித்துக் கொண்ட சவால். கவிதை இன்னும் தீ கொண்டது. தொடர்ந்து எழுதினேன், வாசித்தேன். தமிழின் ஆகச் சிறந்த கவிதைகளையெல்லாம் குடித்தேன்.
நீண்ட காலத்திற்குப் பிறகு நான் கவிதை எழுதிவிட்டேன் என்று உணரத் தொடங்கிய பிறகு, அந்தச் சொற்கள் கோரும் வாதையைக் கண்டடைந்தேன். மகிழ்ச்சியை நான் வாழ்ந்து விடுவேன். துயரை என்ன செய்ய.
இதே காலகட்டத்தில் ஜெயமோகனின் எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருந்தேன். கவிதைகள் பற்றியும் கவிஞர்கள் பற்றியதுமான மதிப்பீடுகளையும் பார்வைகளையும் அவர் எழுத எழுத என் வாசிப்பு விரிவடைந்தது. எதன் தொடர்ச்சி நான் என்பதன் அகங்காரமும் என் முன்னுள்ள மகத்தான கவிதைகளின் முன் என் கவிதைகள் எவ்வளவு சிறிய கோரிக்கைகளுடன் நிற்கின்றன என்பதையும் உணர்த்தின. ஒரு கணம் நான் எழுதியிருப்பவை எவ்வளவு அற்புதமான வரிகள் என்ற அகங்காரமும் இன்னொரு வேளையில் எவ்வளவு தேடியும் அந்த வரிகளுக்குள் கவிதையே இல்லை என்ற சிறுமையும் தோன்றும்.
இந்த மனநிலைகளைக் கடந்து எனக்கான வாசிப்பையும் பார்வைகளையும் தீர்க்கமாக உருவாக்கிய இலக்கிய ஆசிரியர் ஜெயமோகனே. நான் கேட்க வேண்டிய எல்லாக் கேள்விகளுக்கும் அவரது தளத்திலும் நூல்களிலும் அவர் ஏற்கெனவே பதிலளித்திருப்பார். அவரை எழுத்தாளர்களின் எழுத்தாளராகவும் கனிவும் இலட்சிய வேகமும் கொண்ட ஒரு புனைவுப் பாத்திரமாமுமாகவே இன்று வரை கற்பனை செய்து கொள்கிறேன். தலை மோதி உடைக்க வேண்டிய சந்நிதிகளையும் தலை உயர்த்தி நின்று சொல்ல வேண்டிய இலக்கிய மதிப்பீடுகளையும் அவர் எனக்கு அளித்தார். இலக்கியத்தை இழந்து விடாமல் அதன் மூர்க்கத்தையும் கொந்தளிப்பையும் விட்டு எளிய வாழ்க்கைக்குள் சென்று சிக்கிக் கொள்ளாமல் என்னைக் காத்தளித்தவர் ஜெயமோகன்.
*
என்னுடைய இளமையை தங்களுடைய எழுத்துக்களாலும் வாழ்க்கையாலும் ஓர் அக்குபங்சர் சிகிச்சை போல் மென் நுனிகளால் வாழ்வின் உடலெங்கும் தைத்தவர்கள் பலர். நான் இலக்கியத்தால் சுகப்படுத்தப்பட்டவன். ஒவ்வொரு வரிகளாகவும் கதைகளாகவும் எத்தனை நூறு பேர் என்னைப் பாதித்தனர் என்பதை போதத்துடன் முழுமையாக நினைவு மீட்க முடியவில்லை.
இருந்தும் நினைவுகளிலும் குறிப்புகளிலும் என் மனதை கூர்மைப்படுத்தியவர்களில் சிலரைக் குறிப்பிட விரும்புகிறேன்.
கவிஞர்களில் சுகுமாரன், பிரமிள், ரமேஷ் பிரேம், ஆத்மாநாம், யூமா வாசுகி, மனுஷ்ய புத்திரன், தேவதேவன், பிரான்சிஸ் கிருபா, சுந்தர ராமசாமி, என். டி. ராஜ்குமார், சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி, க. மோகனரங்கன், ஆண்டாள், மாணிக்கவாசகர், பட்டினத்தார், திருவள்ளுவர், நட்சத்திரன் செவ்விந்தியன், அனார், அஸ்வகோஷ், சேரன், ஆழியாள், ஊர்வசி, ஒளவை, சிவரமணி, கற்சுறா, எம். ஏ. நுஃமான், வ. ஐ. ச. ஜெயபாலன், சு. வில்வரத்தினம், பா. அகிலன், நிலாந்தன், எஸ். போஸ், சித்தாந்தன், தானா. விஷ்ணு, கருணாகரன், என். ஆத்மா, அன்னா அக்மதோவா, டி. எஸ். எலியட், சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன், நெரூதா, ரூமி.
நாவல்களிலும் சிறுகதைகளிலும் கு. அழகிரிசாமி, ஷோபா சக்தி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், கரிச்சான் குஞ்சு, புதுமைப்பித்தன், கோபி கிருஷ்ணன், சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன், ப. சிங்காரம், ஜெயமோகன், நகுலன், அ. முத்துலிங்கம், எஸ். பொன்னுத்துரை,
கப்டன் மலரவன், யோ. கர்ணன், தஸ்தவேஸ்கி, டோல்ஸ்டோய், தாமஸ் மன், யசுநாரி கவாபட்டா, மக்சிம் கோர்கி, சிங்கிஸ் ஐத்மத்தாவ், இடாலோ கல்வினோ, நட் ஹம்சன், வைக்கம் முகமது பஷீர், காப்கா, ஹெமிங்வே, ஷேக்ஸ்பியர், போர்லாகர் குவிஸ்ட், அன்ரன் செக்கோவ், ஆல்பர் காம்யூ, சார்லஸ் டிக்கன்ஸ், கூகி வான் தியாகோ, சினுவா ஆச்சிபே, எம். டி, வாசுதேவன் நாயர், பால் சக்கரியா, அதீன் பந்த்யோபாத்யாய, காப்பிரியல் கார்சியா மார்க்குவேஸ், ஜோர்ஜ் ஓர்வெல்,அலெக்ஸ் ஹேலி.
றமணன் அண்ணா, ஜெயமோகன், க. நா. சு, வெங்கட் சாமிநாதன், மு. தளையசிங்கம், அ. யேசுராசா, எஸ். வி. ராஜதுரை, சுந்தர ராமசாமி, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் அளித்த இலக்கிய வாசிப்புத் தேர்வுகளும் அறிமுகங்களும் பார்வைகளும் என்னை வளப்படுத்தின.
கலை பற்றிய தீவிரத்தை உணர வைத்த இரு ஓவியர்களும் என் நினைவுகளில் உறைந்திருக்கின்றனர். ஒன்று வின்சென்ட் வான்காவின் வாழ்வு, மற்றையது பிரீடா காலோவின் வாழ்வு. இருவரது ஆக்கங்களும் வாழ்வின் உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டும் நிகழ்வுகளும் என்னைப் பித்துக் கொள்ளச் செய்தன. காதை அறுத்துப் பாலியல் தொழிலாளிக்குக் கொடுத்த வான்காவில் பைத்தியக்காரத்தனத்துடன் ஏதோ ஓர் நொடியில் என்னில் எழுந்து வரும் ஆவேசத்தை உணர்வேன்.
*
டி. எஸ். எலியட் 1919 இல், The Egoist என்ற இலக்கிய இதழில் ‘மரபும் தனித்திறனும்’ என்ற கட்டுரையினை எழுதியிருக்கிறார். அதில் “ஏதாவொரு கவிஞரோ, கலைஞரோ அல்லது கலையோ அவருடைய தனித்த அர்த்தங்களினால் மட்டும் பொருள் கொள்ளப்படுவதில்லை. அவருடைய முக்கியத்துவம், அவருடைய மதிப்பு என்பது இறந்த கவிஞர்களுடனும் கலைஞர்களுடனும் அவர் எத்தகைய உறவினைக் கொண்டிருக்கிறார் என்பதில் உள்ளது. அவரைத் தனித்து மதிப்பிட முடியாது. அவருடைய இடத்தை வகுக்க வேண்டும். இறந்தவர்களுக்கிடையில் முரண்படவும், ஒப்பிடப்படவும்.
… ஒரு கலையாக்கத்தில் புதிதாக ஒன்று உருவாக்கப்படும்போது என்ன நடக்கிறது என்பது அதற்கு முந்தைய அனைத்து கலையாக்கத்திலும் ஒரே நேரத்தில் நடக்கும் ஒன்று.”
அது ஏற்கெனவே உள்ள கலையர்த்தங்களை நிகழ்காலத்தில் மேலும் ஒரு முனை அதிகரிக்கிறது, நுட்பமாக்குகிறது. அப்படிப் படிப்படியாகத் தான் ஒரு மொழியின் கலை பற்றிய பார்வைகள் எழுகின்றன. விரிவடைகின்றன. சமகாலத்துடனும் குறித்த கலைஞருக்கு முந்தைய எல்லாக் கலை ஆக்கங்களுடனும் அவர் அப்படி இணைக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
மேலும் அவர் அக் கட்டுரையில், “கவிஞருக்கென்று வெளிப்படுத்தும் ஆளுமை இல்லை. ஊடகம் மட்டுமே இருக்கிறது. அந்த ஊடகத்தில் அவருடைய மனப்பதிவுகளும் அனுபவங்களும் அசாதாரணமானதும் எதிர்பாராதவழிகளிலும் இணைகிறது” என்கிறார்.
*
ஒவ்வொரு கலை வடிவமும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அக் காலத்தின் பிற அறிவுத் துறைகளுடன் உரையாடி வளர்கிறது. பிற கலைகளைப் போல இலக்கியமும் தனித்த அறிதல் முறை. அதை வாசிப்பதற்கும் விதப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் குறித்த வடிவத்துடன் பயிற்சி / பழக்கம் அவசியமானது.
கவிதை, மொழியில் நிகழும் கலை. எனக்குக் கவிதை மந்திரம் போன்றது. உணர்ந்து சொல்லும் சொல்லே மந்திரமாகிறது. அதன் கற்பனை சொல்லுடல்/ சொல்லிணைவுகள், இசைத்தன்மை இவை மூன்றும் முக்கியமானவை.
பித்து என்று நான் கருதுவது, என் வாழ்வின் அனுபவங்களில் அவற்றை நான் அறிய நேரும் தருணங்கள், அதற்கு நான் மூர்க்கமாக ஆற்றிய எதிர்வினைகள், இவற்றினால் ஆன கொந்தளிப்பான மனநிலைகளை. மேலும், அறியும் ஆர்வத்திலுள்ள குழந்தைக் கண்களில் தீவிரத்துடன் திளைக்கும் பித்தும் கூட.
என்னுடைய ஆரம்பக் கவிதைகளில் இருப்பது ஓர் ஆண் ஆதிக்கத் தன்நிலை. (கவிஞர் நிவேதா யாழினி ‘ஆண் தன்னிலை’ என்ற சொல்லை எனது கவிதைகளைப் பற்றி எழுதும் போது குறிப்பிட்டிருந்தார்).
அதன் ஆதிக்க நடைமுறைகளுக்கும் கற்றுக்கொண்ட அறங்களுக்கும் இடையில் நான் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறேன் என்ற நானறியாத என் நுட்பமான பகுதிகளின் மீதும் வாழ்வு சத்திரசிகிச்சை செய்தபடியே இருக்கிறது.
நான் அந்த ஆண் ஆதிக்கத் தன்னிலையிலிருந்து ஒவ்வோர் அடியாக முன்னேறி ஆண் தன்னிலையின் உன்னதமாக்கலை (sublimation) நோக்கியே என் ஆரம்ப காலக் கவிதைகளிலிருந்து நகர்ந்து வந்துகொண்டிருக்கிறேன் என்பது இப்போது தொகுப்பாக வாசிக்கும் போது தோன்றுகிறது. என் மொழியில் அதன் தடங்கள் மிதக்கின்றன.
உன்னதமாக்கலை நோக்கிய கலைப் பண்பாடுள்ள சமூகத்தில் நமது பெரும்பாலான உணர்வுகள் உன்னதமாக்கலின் மூலமாகவே அதன் அன்றாடத் தன்மையிலிருந்து எழுந்து அதன் விரிவான அர்த்தங்களை பண்பாட்டின் ஒவ்வொரு உயிரும் அறிந்து முன் செல்கிறது. மரண வீட்டின் பாடல்கள் துக்கத்தின் எல்லைகளை பிரமாண்டமான ராட்சத உருவாக்கி அதன் நுட்பமான பகுதிகளினையும் தொட்டு அதன் நிச்சயமான மீளமுடியாமையை உணர்த்துகின்றன. அது மரணத்தின் உன்னதமாக்கல். அதன் வழியாக அத்துக்கம் உணரப்படுகையில் அது மனித மனத்தை இன்னும் பண்படுத்துக்கிறது. நமது ஒவ்வொரு உணர்வுகளும் மேன்மையானதாகவும் ஆழமுள்ளதாகவும் ஆக்கப்படுவற்காகவே கலைகள் நிகழ்கின்றன.
கவிதை எதிர் நிகழும் காலத்தில் திகழ்வது. கடந்த காலத்தில் அது நிகழ்வதில்லை. கடந்த காலத்தின் தொன்மங்களும் கதைகளும் முன்னுள்ள அந்த எதிர்ப்படலின் உணர்வை விளக்கும் பொருட்டு உடன் வருபவை. அதன் வெளிச்சத்தில் விரியும் வாழ்வறியும் கண்களுக்கு இந்த வரிகள் ஏதேனும் வகையில் பயன்கொள்ளுமென்றால் மகிழ்ச்சி.
கவிதை, உண்மையை விட ஆழமான உண்மை.
*
கவிதையை நான் எப்படி அறிந்தேன், கவிதை எழுதுவதை எப்படி அறிந்தேன், வாழ்வின் சில அனுபவங்களும் மனிதர்களும் என்னை எப்படி உருவாக்கினார்கள் என்பதைப் பற்றிச் சொல்வதற்காக இந்தக் குறிப்பை எழுதினேன். முன்னர் இப்படி எழுதுவது கவிதைகளை வாசிப்பதற்குத் தடையாக இருக்கும் என்று பலகாலம் எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது நான் எழுதிய கவிதைகள் ஏதாவதொரு வகையில் பொருட்படுத்ததக்கவை என்றால் என்னை உருவாக்கிய மனிதர்களையும் அனுபவங்களையும் எழுதுவது, எத்தகைய சூழல்கள் மற்றும் மனிதர்கள் பண்பாட்டின் கண்ணிகளாக நம்மை இணைக்கிறார்கள் என்பதைத் தொகுத்துப் பார்ப்பதற்கு உதவும்.
நான் எழுதுகிறேன் என்பது எத்தனை பேரின் பங்களிப்பினால் நிகழ்ந்திருக்கிறது என்ற பணிவை அவர்கள் எனக்கு அளிக்கிறார்கள். என்னுடைய பள்ளிக்கூட நண்பர்கள், ஆசிரியர்கள், இலக்கிய நண்பர்கள், விடிய விடியக் கவிதைகள் பற்றி உரையாடியவர்கள், கவிதைக்காக் கண்ணீர் விட்டவர்கள் எல்லோருமே முக்கியமானவர்கள்.
எழுதும் பொழுது மட்டும் நான் கவிஞன். அதற்கு வெளியில் அந்த அகங்காரத்தைத் தூக்கிச் சுமக்க ஒன்றுமில்லை. பண்பாட்டின் ஒவ்வொரு ஆளுமையும் இப்படிப் பல மனிதப் பங்களிப்பின் கூட்டு நிகழ்வாகவே நிகழ்கிறார்கள். அதனை முன் வைப்பதே அந்தப் பண்பாட்டின் முன்னவர்களுக்கு நாம் செய்யக்கூடியது. எந்தப் பதிலுபகாரத்தையும் எதிர்பார்க்காமல் இலக்கியத்தைத் தீராமல் உரையாடிய அத்தனை வாய்களுக்கும் கூட்டங்களை ஒருங்கிணைத்த அத்தனை கால்களுக்கும் எழுதிய அத்தனை கைகளுக்கும் அன்பும் நன்றியும்.
*
இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பையும் அச்சாக்கத்தினையும் செய்து தரக் கேட்ட பொழுது, உறுதியாகச் செய்வோம் என்ற சிவராஜ் அண்ணனுக்கும் தன்னறத் தோழமைகளுக்கும் அன்பும் நன்றியும்.
(வாழ்க்கைக்குத் திரும்புதல் கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையின் இறுதிப் பகுதி)