மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்!

இரத்தமூறிடும் கால இடுக்கில்
புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்
மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்
உயிர்களை இழந்தும்
ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்
மண் தான் அறியும்
இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்
எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு
மலரினைச் சாத்துமென்!

*

காலத்துயர்

போகிற போக்கில்
விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டு
சம்பந்தமில்லாதது போல்
போகப் போகிற மனிதரை எண்ணி சஞ்சலப்படுகிறேன்

முகமூடிகளின் நகரத் தெருக்களில் அவளைப் பற்றி
பளிச்சிடும் வரியை
இனியும் எழுதாமலிருக்க முடியாது
சும்மா கொட்டிவிட்டுப் போகிற வார்த்தையைப் போலவா… ஆன்மாவைத் துளைத்தெடுக்கிற சேதிகளை விதைத்துப் போனவள் நம்ப முடியா சாகஸங்களை
நிகழ்த்திக் காட்டியவள்

செவ்வான விளிம்பெங்கும்
பொங்கும் கடலில்
கடலடியில் திரிந்தவள்
கடலில் படைக்கப்பட்டதும்
கரையில் மீட்கப்பட்டதும்
காதோடு காதாய் காற்று வழி போனது

மீளவும் ஆசீர்வதிக்கப்பட்ட மரணத்தைத் தேடிப் போனாள் பேராறாய் கடலில் காவியமானாள்

வரலாற்று முள்ளில்
செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும்
உன் ஆன்மா துடிக்கப் போகின்றது

பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த
பிதாவே கூறும்
சகோதரரே நீர் கூறும்
அவள் தான் எடுத்த மண்ணை
கடலில் ஏன் கரைத்தாள்?

*

இருள்

சிதழூறும் காயங்களிடையே நானிருந்தேன்
சிதைந்து போன மைந்தரின் வேதனை ஒலங்கள் என்னை உறுத்தின
நான் வேதனையுற்றேன்

தொலைதுாரங்களில்
மறைந்து போகும் மைந்தரின் முகங்களை
நான் அறியேன்
அந்த முகங்களில்
அறிவு இருந்ததா அழகு இருந்ததா என்று நான் கேட்கப் போவதில்லை

தியாகங்கள் மட்டுமே தெரிந்த மைந்தரின் நினைவுகளை
பழிக்க என்னால் இயலவில்லை கிளர்ந்த வேகத்தில்
கிடைத்த பஸ்ஸிலேறிய இளந்தளிர்கள்
காற்றின் திசையில் அள்ளப்பட்டவர் மேலொரு கேள்வியை எறிய என்னால் இயலவில்லை

நேற்றுங் கூட இருவர்
மாண்டு போயினர்
நான் விபரமாகக் கேட்கவில்லை

கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன மரணங்கள் நிகழ்கின்றன

இன்று பிறந்த பூதம்
நாளைய கனவைத்தின்று தீர்த்தது காவிய இருள் கவிந்திருந்தது

காலந் தான் உருண்டது
கனிகளைப் பறிக்க தொலைதுாரம் போனவரைக் காணவில்லை தொலைதுாரம் போவதற்கு கனவழிகள் சொன்னவரைக் காணவில்லை
ஒளியைத் தேடும்
என் உணர்வுகளுக்கும் பதிலில்லை

என்னை ஒறுத்து ஒறுத்து
அழித்துக் கொள்கையில்
என் மகன் போயிருந்தான்
தன்னை அர்த்தப்படுத்தவென்று

என் கனவுகள் வீழவும்
மண்ணின் குரலிற்கு
செவியீந்து போயிருந்தான்

இயலாது
உன் பிரிவைத்தாங்க என்னால் இயலாது
இல்லை
அவன் என்னிடம் இல்லை
மண்ணின் குரலிற்கு
பதிலுடன் போயிருந்தான்

என்னை உறுத்தும்
நினைவுகளைச் சொல்வேன்
நொந்து போன என் நாட்களின் வேதனைச் சுமையினைச் சொல்வேன்
சிதழூறும் காயங்கள் பேசும் மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்

இறுதியாக
என்னிடம் வந்திருந்தான்
அவனது தேகம் குளிர்ந்திருந்தது இரத்த முறிஞ்ச நுளம்புகள்
வரவில்லை
ஈக்களை அண்ட
நான் விடவில்லை.

அஸ்வகோஷ்

*

செம்மணி 04

உப்பு வயல்களின் கீழே
துரதிர்ஷ்டவசமான அந்த மனிதர்களை
அவர்களின் தேகத்தை உலரவிடாது
பெருகும் நேசர்களின் கண்ணீரை
கரிய நீர் புற்களின் மேலே விடாது காயும்
பயங்கர நாட்களின் சாம்பரை
தீண்டுவார் யாருமில்லை

விளம்பரப் பதாகைகளின் கீழே
மறத்தலின் விளிம்பிலிருந்தன அவர்தம் நினைவுகள்…

கல்லாலல்ல;
நீராலுமல்ல;
வளியாற் கட்டுகிறேன்
விடாது பின்தொடருமொரு ஒலியால்
அவர்களிற்கொரு நினைவிடம்.

பா. அகிலன்

*

நெய் உறிஞ்சிய தீபத்தின் ஒளி
பெருவெளிக்குத் திரும்புகின்றது

புதைக்கப்பட்டவர் யார்?
காற்றில் கரைந்துபோனவர் யார்?
புதிரின் ஆழ் இடுக்குகளில்
சொருகப்பட்டிருக்கின்றன சாவுகள்

இனி வரப்போவது யாருமில்லை
ஆயினும்
நினைவுகளின் புதைவிடத்தில்
நான் இரண்டு பூக்களை வைக்கின்றேன்

நினைவு கூரக்கூடிய
நினைவு கூர முடியாத
எல்லோருக்குமாகவும்.

சித்தாந்தன்

TAGS
Share This