கலங்கரை விளக்கின் ஒளிச்சுழல்

கலங்கரை விளக்கின் ஒளிச்சுழல்

ஈழத்துக் கவிதைகளின் வருங்கால அடைவுகளிற்கான திசைவழியை உண்டாக்கும் புதிய குரல்களின் வருகை கடந்த இரு வருடங்களில் நிகழ்ந்து வருவதை அவதானிப்பது ஒரு கவிதை வாசகனாக என்னை நிறைவளிக்கச் செய்வது. இவ்வருடம் ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக கவிஞர் வசிகரனின் “நோவிலும் வாழ்வு” எனும் தலைப்பிலான முதற் தொகுதி அண்மையில் வெளியாகியிருக்கிறது.

ஈழத்துக் கவிதைகளின் பிரதான செல்நெறிகளைக் கிளைத்து முறித்து அதன் வழிநடைகளை விரிவுபடுத்தும் காலமெனக் கடந்த பத்தாண்டுகளைச் சுட்டிப்பாகச் சொல்லலாம். போர் ஓய்ந்த நிலம் எளிதில் காமத்திற்கும் ஆதார உணர்ச்சிகளின் சுழலுக்குள்ளும் நுழைவதையே பொது இயல்பாக இலக்கிய வரலாற்றை நோக்குபவர்கள் அறிவர். அதுவோர் அவதி. பெருங்குருதி வெளியாகிய நிலத்தில் உறங்க முடியாமல் புரளும் பல்லாயிரம் அட்டைகளென மானுடக் குமைவு எக்கனவைக் கண்டு இதிலிருந்து விழித்துக் கொள்வதென எண்ணும் வரலாற்றுப் புள்ளி. எழுத்தில் நுரைத்துப் பெருகத் தொடங்குவது அந்த ஆழ்கனவுகளுக்கான மந்திரங்களாகவே அமைகிறது. அதை எவருமறியாமல் கூட்டு நனவிலி தொட்டு எடுத்து காற்றில் ஏந்தப்படும் நீர்த்துளிகளென அலைக்கழிக்கும். இதுவோர் சாரம்ச நோக்கெனவே இங்கு கருதுகிறேன். நுண்மையில் நுண்மையாக பிறிதை அளைந்து அவை கண்டெடுத்து விரிவாக உரையாடலும் விவாதங்களும் நிகழும் வெளிக்குள் பிரவேசிக்கும் தொடக்கங்கள்.

கவிதை பல்வேறு பயில்நிலைகள் கொண்டது. ஈழம் தன் முதன்மை விசையாக போரைக் குவிந்து தன் மொழிப்புயலைச் சுருட்டிக் கொண்டது. அதன் கீற்றுகளென அலைந்த பல்லாயிரம் சொற்களை இன்று காற்றள்ளிப் போய்விட்டது. அதன் புயற்கண்ணென வாழ்வின் தரப்பில் நின்று எண்ணிச் சொன்ன சொற்களும் அக்காலத்தின் முன்னெதிரே தருக்கிச் சொல்லெடுத்து நின்றவர்களுமே இன்று கவிஞர்கள் என மதிப்பிடப்படுகிறார்கள். போரை எங்கிருந்து நோக்குகிறோம் எனும் நோக்குநிலை கலைப் பயில்வுடன் ஆழ்ந்து நோக்க வேண்டியது. அதன் அகம் பிணவறைச் சாலையிலென அமைந்த காலங்கள் அகன்று விவாத வெளிக்குள் நுழையும் பொழுது அதன் கலை மதிப்பு மட்டுமே முன்னிற்பது. மேலான கலை தன் அகத்தறிந்த மெய்மையினால் கலையையும் சுடர்க்கும் பொற்பட்டறை எனத் தன்னை ஆக்கிக் கொள்வது. ஒரு சிலர் அங்கு உருகி மடிந்தார்கள். சிலர் சொல்லழிந்தார்கள். சிலர் அவிந்தார்கள். சிலர் மீட்டுக் கொண்டு திறந்திருந்த காலத்தை நோக்கி எழுந்து வந்தார்கள்.

போரின் தலைமுறையினருக்கு அடுத்து வந்த முதற் தலைமுறை எனது. எங்களுக்கு முன்னர் இக்காலத்தை வகுத்து ஆராய்ந்து தெளிந்து அரசியல் மெய்மையை அறியவேண்டிய காலநிரை நின்றிருந்தது. சார்பும் எதிர்ப்புமென இருபெரும் வலைச்சிக்கல்கள் கொண்டது ஈழத்து இலக்கியம். இரண்டுக்கும் அப்பால். அக்குருதிவெளிக்கும் விடுதலை வேட்கை எனும் பெரும் இலட்சியவாதக் கனவுக்கும் அடுத்து நீறு கலைந்த தணற்கட்டிகளெனச் சொற்கள் அடைகாத்து வெளிவந்தன.

இன்றைய காலம் நுண்மைகளும் பிறிதும் தன் மையவெளிக்கு நுழையும் பருவம். அவை விவாதித்து தமிழ்க் கவிதையின் பேரளவு உரையாடலில் கலை மதிப்பும் வாழ்க்கை நோக்கும் சார்ந்து உண்டாக்கும் வரிகளை கவனிக்க வேண்டியிருக்கிறது. எஞ்சிக் கருகியிருக்கும் பெருமின்னல் எரித்த முதுமரத்தின் புதிய தளிர்முனைகளைத் தொட்டு மகிழ்வதைப் போன்றது அது.

வசிகரனின் முதற் தொகுப்பு நம்பிக்கையளிக்கும் குரலொன்றின் நுழைவு. நோவிலும் வாழ்வு தொகுதியில் ஒரு துறைமுக நகரிலிருந்து ஒலிக்கும் குரல்களின் ஓசைகளும் அதன் தெருக்களும் விளக்குகளும் கடலின் கரையும் பாசிகளின் நீர்மையும் கலைந்து உருக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கவிஞரின் அகம் தன் நிலத்தில் எங்கனமோ ஒருவிரலைத் தொட்டுக் கொண்டே வான் நோக்கி எழுகிறது. இளையவர்களுக்கு அது முதன்மையான அம்சமும் கூட. வசிகரனின் கவிதைகள் எளிமையும் அன்றாடமும் பின்னிக் கொண்டு சொல்லின் சங்கீதத்தையும் கைவிடப்பட்டு உள்ளொடுங்கி ஒலிக்கும் ஆணின் குரலையும் மெல்லிய கேவலென கூவிச் செல்லும் பறவைக் குரல் போல இக்கவிதைகளில் ஒலிக்கிறது. ஒருவகையில் நிர்வாணத்தை நோக்கும் அன்றாடனின் விழிகள் கொண்டவை. சலிக்கும் கரைமணலில் எஞ்சும் வண்ணக் கற்களும் கடலுயிரிகளின் எலும்புகளும் சொல்லால் உயிர்பெற்று எழப்போகுபவையென மயக்குக் கொண்டவை இக்கவியுலகு.

வசிகரனின் சொற்தேர்வுகளும் அகம் சென்று கொந்தளிக்கும் கணங்களும் முழுதிலும் நிகழ்வாழ்வுக்குரியவை. அவை பெருங்கனவுகளை நோக்கி அறைகூவவில்லை. எளியவை குறித்து இரங்கவில்லை. தான் எனத் தருக்கி நிற்கும் ஓர் உயிர் அடையும் வாழ்கணங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிகழ்ந்து மறைகிறது. நினைவில் தங்கும் சாம்பிராணிக் குச்சியொன்றின் வாசனை போல.

ஈழத்துக் கவிதைக்குள் நுழையும் புதியவர்கள் தம்மைத் தாம் எழுதுவதன் ஊடாக ஆயுதங்களின் போர்களுக்கு அடியில் ஓயாது என்றும் நிகழும் மானுட வாழ்கணங்களின் விழைவுகளை நோக்கி திரும்புவது ஒருவகையில் என்றும் நிகழும் பிறிதொரும் போரினை எழுதுவதே. ஆணெனவும் பெண்ணெனவும் நின்றெழும் ஆடலின் முரண்களின் தொகுப்பென இவ்வுடல்கள் எதனால் ஆக்கப்படுகின்றன. எதை விழைகின்றன என. மீன்குஞ்சுகள் தன் வாயை விடப் பருத்த உணவுப் பருக்கையொன்றை சுற்றிச் சுழற்றி மெல்லக் கடித்துத் தனக்கானதாக்கி உண்ணத் தொடங்குவது போல.

நோவிலும் வாழ்வின் கவிதைகளிலிருந்து வசிகரன் தொடர்ந்து செல்லப் போகும் திசைகளின் ஒளித்தொலைவுகளை எண்ணிக் கொள்கிறேன். அவரது கவிதைகளில் கலங்கரையில் ஒளிச் சுழலின் தீற்றல்கள் கடலிலும் கரையில் உறங்கும் நகரிலும் தெறித்து விழுகையில் உண்டாகும் வாழ்க்கை எழுதப்படத் தொடங்கியிருக்கிறது. அவை எழுந்து மிதக்கும் மானுடத் திரளை நோக்கி ஒளித்தண்டுகளால் தொட வேண்டும். கவிதை அடைய எளியது. அமரக் கடினமானது. நீடிக்க வாழ்வளிக்க வேண்டியது. இத்தொகுப்பு அவரின் நீடித்த பயணத்தின் முதல் ஒளிச்சுழல்வுகள்.

(அகழில் வெளியான நூலறிமுகக் குறிப்பு)

TAGS
Share This