சிருஷ்டி கீதம்

சிருஷ்டி கீதம்

சிருஷ்டி கீதம்

அப்போது இன்மை இருக்கவில்லை
இருப்பும் இருக்கவில்லை
உலகமோ
அதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லை
மறைந்து நின்றது என்ன?
எங்கே?
எவருடைய பாதுகாப்பில்?
அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ?

அப்போது மரணம் இருக்கவில்லை
நித்தியத்துவம் இருக்கவில்லை
ராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லை
ஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றி
சொந்த வலிமையினால்.
அதைத்தவிர ஏதுமிருக்கவில்லை.

ஆதியில் இருட்டு இருட்டால் மறைக்கப்பட்டிருந்தது
வேறுபடுத்தயியலாமையால்
யாவும் நீராக இருந்தது
அதன் உயிர்த்துவம் வெறுமையினால் போர்த்தப்பட்டிருந்தது
அதிலிருந்து முடிவிலாத தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது.

ஆதியில் அதிலிருந்து இச்சை எழுந்தது
மனதின் ஆரம்ப விதை அதுதான்
இதயங்களில் தேடுகின்ற கவிஞர்கள்
தங்கள் ஞானத்தினால்
இன்மையில் இருப்பைக் கண்டனர்.

அதன் ஒளிக்கதிர்கள் இருளில் ஊடுருவிச் சென்றன
மேலிருந்தது என்ன?
கீழிருந்தது என்ன?
பிறப்பிப்பவை இருந்தன
மகத்தான சக்திகள் இருந்தன
ஆற்றல் கீழிருந்தது
அளிப்பது மேலிருந்தது.

உண்மையில் யார் அறிவார்?
அதை யாரால் சொல்ல முடியும்?
எங்கிருந்து தோன்றியது அது?
எங்கிருந்து உருவானது சிருஷ்டி?
தேவர்களோ படைப்பிற்குப் பின் தோன்றியவர்கள்
அப்படியானால் அது எப்படி உருவாயிற்று?
யார் அறிவார்?

யார் அதை உருவாக்கினார்கள் அல்லது யார் உருவாக்கவில்லை?
அப்பாலான ஆகாசத்திலிருந்து
இதைக் காணும்
அவனே அறிவான் அல்லது அவனும் அறியான்.

வே நி சூர்யா

(வே நி சூர்யா)

சிருஷ்டி கீதம் என்பது ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ள நூற்றி இருபத்தொன்பதாவது பாடல். பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய விளக்கமாக இது கொள்ளப்படுகிறது என்றாலும் கவிதையாகவே இதன் முதன்மையான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது.

எழுத்தாளர் தர்மு பிரசாத்துடனான உரையாடல் ஒன்றில் கவிஞர் வே நி சூர்யாவின் கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது சிருஷ்டி கீத மொழிபெயர்ப்பைப் பற்றி தர்மு குறிப்பிட்டார். அதன் கவித்துவச் செறிவு தனக்கு உவப்பாய் இருப்பதாகவும் சொல்லி இணைப்பினை உரையாடலிலேயே விரித்தெடுத்து அப்பாடலின் இரு மொழிபெயர்ப்பினையும் அவரது குரலில் வாசிக்க நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒற்றை உண்மையைச் சுட்டும் பாடலின் இரண்டு மொழி வெளிப்பாடுகள். நுண்மையான சொல் மாறுதல்கள் தங்களளவில் அர்த்தங்களை மாற்றாது சொல்லுடலை மாற்றி நின்று பார்க்கும் இரு மொழிபெயர்ப்புகள். ஒன்று, ஜெயமோகன் மொழிபெயர்த்தது.

இரண்டுக்கும் இடையில் ஒருவகை இசை வேறுபாட்டை நான் உணர்கிறேன். தர்முவின் குரலில் கேட்டதும் என் அக வாசிப்பில் நான் கேட்டதும் இரண்டு வேறு இசைத்தன்மை. சொற்களுக்கு உச்சரிக்கும் உளத்தின் தன்மையினால் வேறுபாடுகள் நிகழ்வதுண்டு. உளம் பாடலையோ கவிதையையோ அதன் இசையுடன் வாசிக்கும் முறைமை பலவகையான புறச்சூழல்களாலும் உண்டாகக் கூடியது. இந்தப் பாடலும் இருவேறு குரல்களென இரு வேறு மொழிபெயர்ப்புகளில் அந்த வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன.
இப்பாடலுக்கு மேலும் பல மொழிபெயர்ப்புகள் இருப்பதாக அறிந்தேன். அவற்றை இன்னமும் வாசிக்கவில்லை.

இருவரின் மொழிபெயர்ப்பிலும் இருவேறு நுண்மைகள் இருப்பதையே நான் கவனித்தேன். வே நி சூர்யாவின் சொற்தேர்வை விட ஜெயமோகன் என் அகத்திற்கு நெருக்கமாகவிருக்கிறார். வே நி சூர்யாவின் மொழியில் ஒரு நவீன கவிதையின் சொல்லுடல் உள்ளது. கவிதை ஒரு பச்சோந்தியைப் போல மொழியில் நிறம் மாறி ஒட்டிக் கொண்டதைப் போல.

எந்த வகை அறிதலும் அளிக்கக் கூடிய திகைப்பை கவிதை எனக் கொள்ளலாம். கண்டடைதலின் வியப்பு அது. வெண்முரசில் வரும் குருஷேத்திரக் களக் காட்சியொன்றில் இப்படி ஒரு காட்சி உண்டு. அரசனொருவன் உடலெங்கும் தீபட்டு மேனி பொசுங்கி உருகிக் கொண்டிருக்கும் நிலையில் எழுந்து தன் உடலை நோக்குகிறான். அவன் எழுந்து செல்ல எண்ணிய போது உடல் தோற்கூடாரம் எனச் சரிந்து கொண்டிருந்தது. அவன் எழுந்து அந்த உடலுக்குள் எப்படி நடந்து செல்வது எனக் கற்றுக்கொண்ட போது மெல்லிய உவகை அவனுள் எழும். அவன் எண்ணிக் கொள்வான். எந்த நிலையிலும் அறிதல் அளிக்கும் உவகையின் அருங்கணத்தை.

இந்தப் பாடல் அத்தகையதொரு அருங்கணம்.

(ஜெயமோகன்)

*

சிருஷ்டி கீதம்

அப்போது அசத் இருக்கவில்லை
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை

ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?
அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை

இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!
தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது

அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!

ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன

ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அதன் மகிமைகள் என்ன?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக யாரறிவார்?

அதன் மூலகாரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?

அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!

ஜெயமோகன்

TAGS
Share This