மகத்தான ரத்தத்துளி

மகத்தான ரத்தத்துளி

கலை இலக்கியங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ரொமாண்டிசிசக் காலகட்டம் அதற்கு முந்தையதான அறிவொளிக் காலகட்டம், கைத்தொழிற்புரட்சி காலகட்டத்து சிந்தனைகளுக்கு எதிர்வினையாக இயற்கையின் ஒரு பகுதியாக மனிதரையும் வாழ்வையும் முன் வைத்தது. கற்பனை, தனிமனித பார்வை மற்றும் இயற்கையை வியத்தல் ஆகியன பகுத்தறிவின் தர்க்கத்திற்கு அப்பாலான வாழ்வை நோக்கும் வழியென முன்வைத்தன.

கைத்தொழிற் புரட்சியின் பின்னரான காலகட்டத்தில் பிரமாண்டமான தொழிற்சாலைகளும் கட்டடங்களும் நகரங்களின் உருமாற்றமும் வேகமாக நிலக்காட்சியை மாற்றியமைக்கத் தொடங்கின. இயற்கையை விழுங்கும் பெரிய ஆலை இயந்திரங்களை கலைஞர்கள் எதிர் கொண்டனர். ரொமெண்டிசிச ஓவியர்களோ கவிஞர்களோ இயற்கையின் மீதான அதீத காதலை பிணைப்பை கொண்டிருந்த கலையாக்கங்களை உண்டாக்கினர். பகுத்தறிவினால் மட்டும் உலகை புரிந்து கொள்ள இயலாது. அதற்கு மாற்றான உள்ளுணர்வும் உணர்வுகளும் கூட முக்கியமானவை என வலியுறுத்திய காலகட்டமது.

நமது காலகட்டத்தை பின் நவீனத்துவத்திற்குப் பிந்தைய காலகட்டம் (post post modernism) என்றோ சமூகவியல் நோக்கில் உண்மைக்குப் பிந்தைய காலகட்டம் (post truth) என்றோ அல்லது தமிழ்நாட்டில் தற்போது ஒரு தரப்பினர் உரையாடத் தொடங்கியிருக்கும் மாறுநிலை நவீனத்துவ காலகட்டம் (trans modernism) என்றோ முன்வைக்கும் தரப்புகள் இலக்கியச் சூழலில் உண்டு. இவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்தக் காலகட்டத்தின் தமிழ் இலக்கிய உலகம் முன்வைக்கும் இலக்கிய வகைமைகளை மற்றும் சிந்தனைப் பள்ளிகளின் பிரதிநிதித்துவத்தின் மூலம் கலைகளை அறிவது ரசனையின் ஒரு வழி. ஒரு கலைஞர் பலவற்றின் கலவையாக இருக்கலாம். ரொமாண்டிசிசமும் பரோக்கும் இணையும் இடங்கள் நிகழாலாம். இடது சாரியும் பக்தி இலக்கியங்களும் இணையலாம். அந்த இணைவுகள் ஒவ்வொரு காலகட்டமும் நொதிக்கும் பெருயானத்திலும் நிகழ்பவையே.

வே நி சூர்யாவின் கவிதைகளை வாசிக்கும் பொழுதும் அதற்கான அவரது ஓவியத் தேர்வுகளிலும் ரொமாண்டிசிசக் காலகட்ட இதயமொன்று துள்ளுமொலி கேட்பதை உணர முடிகிறது. எனக்கு ரொமாண்டிசிசக் காலகட்டத்தின் இயற்கைச் சித்தரிப்புகளும் துல்லியங்களும் நுட்பங்களும் அதன் வழியான உன்னதமாக்கலும் (sublimation) விருப்பமானவை. அவை ஒருவகை நன்நோக்குக் கொண்டவை. கருணையையும் இரக்கத்தையும் தங்கள் பார்வையில் அடிச்சரடுகளாக உள்ளெடுத்தவை.

அவரின் இருகவிதைகளின் மூலம் அச்சித்தரிப்புகள் அளிக்கும் விபரிப்பை நோக்கலாம்.

நவம்பர் 8, 2024

எல்லாப் பாழடைந்த இடங்களும்
என் சொந்த இடமா? அங்கு மரித்தோரும்
வாழ்ந்தோரும்தான் என் குடும்பத்தினரா?
“நிற்காதே, நட…நட” பாதைகள் முணுமுணுப்பதைச் செவியுறுகிறேன்
இத்தனைக்கும் இங்கிருக்கையில்
வேறு எங்கோ வசித்த ஓர் அந்தர மனிதன்
எங்கோ எனும் மலையடிவாரம்,
எப்போதோ எனும் அருவி.
தொட்டிலுக்கு அருகில் விழித்திருக்கும் அன்னையைப் போல
சாளரத்தண்டையில் சாயங்காலம்.
ஒவ்வொருநாளும் ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு
அவ்வீட்டின் கதவைத் திறந்து
இவ்வீட்டின் அறையினூடே வெளிவந்தேன்
இந்நீலத்தின் அடிவாரத்தில் நடப்பதற்காக.
இதெல்லாம் முன்பு.
இப்போது என் அந்தர வீடு இடிக்கப்பட்டுவிட்டது
மின்னலின் கடப்பாறைகளாலும்
மரணத்தின் புல்டோசர்களாலும்.
நான் வந்தடைந்துவிட்டேன்
புண்களின் விரல்கள்
காலத்தைச் சீட்டுக்கட்டுப்போல கலைத்துபோடும் ஓர் இடத்திற்கு.
என் தாத்தாவும் தந்தையும்
நட்டுவைத்த மரங்களையும் தாவரங்களையும் பார்க்கிறேன்
ஒவ்வொரு பசிய இலையும்
ஒரு கறுப்புக் கொடி என ஏன் அசைகிறது
படித்துறையில் அமர்ந்து கைகளை
அளைந்துகொண்டிருக்கையிலோ கூரிய ஏக்கம்
தண்ணீரின் விரல்களால் சிக்கெனப்
பற்றிக்கொள்ளப்படமாட்டேனா?
அப்புறம் நகரத்தின் சந்தடி நடுவே வருகிறேன்
சிறைக்கம்பிகளாக அடுத்தடுத்து நிற்கும் கட்டடங்கள்.
அது ஒரு பழைய கேரள பாணி வீடு.
பாசிபடிந்த மதில்களினின்று நகரை மோனத்துடன்
உற்றுநோக்கும் வண்ண வண்ண மலர்கள்
மதிற்சுவரை நெருங்குகிறேன்
நியான் வெளிச்சங்களின் ஊளைகள் மறைகின்றன
நகரம் மறைகிறது
காற்று, நாலாப்புறங்களினின்றும் ஒரே புதுக்காற்று.
கால்களால் மாத்திரமல்ல
ரத்தத்தின் ஏக்கத்தால், பார்வையால்
ஏன் சொற்களாலும் கூட
நெடுந்தொலைவு நடந்து அடையவேண்டிய இடமேதானா
இப்போது நம் காதல்?
அறியேன், அறியேன்.
அந்த இடத்தை ஒரு பூங்கொத்தாக
ஏந்திக்கொண்டிருப்பவனைப் போல
மெளனமாக
சிறிது நேரம் அங்கு நின்றேன்.
திரைச்சீலைகளென அசைந்துகொண்டிருந்தன ராத்திரி முகில்கள்
எங்கும் நட்சத்திர அமைதி.
இனி உன்னைத் தேடவேண்டியதில்லை போல.

இதை ஒருவர் காதல் கவிதையென எண்ணிக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் காதலி அல்லது காதலன் என்ற ஒற்றை நபரை விட நிலக்காட்சியும் நினைவுகளின் சங்கிலிகளும் இணையும் புறச்சித்தரிப்பில் ததும்பும் இயற்கையின் மீதான காதல் மானுடக் காதலை விட ஒரு அடர்த்தி கூடுதலாகவே உள்ளது. அந்த தன்மை தான் வே நி சூர்யாவின் கவிதைகளை ரொமாண்டிக் கவிஞர்களின் வரிசையில் வைத்து நோக்கும் மனநிலைக்கு என்னைக் கொணர்ந்தது. வில்லியம் வேர்ஸ் வேர்த், ஜோன் கீட்ஸ், லோர்ட் பைரன், வில்லியம் பிளேக் போன்ற பிரிட்டன் இலக்கியவாதிகளின் மொழிபெயர்ப்புகள் நம் சூழலில் அதிகம். மேலும் கல்விப் புலம் சார்ந்த இலக்கிய நூல்களிலும் இவர்களின் கவிதைகள் அதிகம். ஒருவகையில் மாணவர்களுக்கான நன்நோக்கு, இயற்கையின் மீதான சித்தரிப்பு போன்ற எளிமையானவற்றை மட்டும் இலக்கியம் என அறிமுகம் செய்யும் போக்கே கல்விப் புலத்தில் உண்டு.

(ரொமாண்டிசிசக் கால ஓவியமொன்று)

வே நி சூர்யாவின் இன்னொரு கவிதையில் ரொமாண்டிசிசம் முன்வைக்கும் உன்னதமாக்கல் எனும் நிலையில் இயற்கையைக் கோரும் கவிஞனின் அகம் வெளிப்படுவதைக் காணலாம்.

மாபெரும் அஸ்தமனம்

அந்திவானில் மகத்தான ரத்தத்துளி
அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது
அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்
ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது
தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை
வேறெதுவோ நான்..
ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி
எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே
ஒருவேளை வீட்டை இழுத்து சார்த்திவிட்டு
வெளியே சென்றுவிட்டதா என்னுடைய நான்
இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை
வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா
என்னுடைய நானே திரும்பி வராதே..
நீ இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு
அதுவே உன் சுவர்க்கம்..

இக்கவிதையில் இயற்கை தன் மகத்தான ஆகிருதியுடன் திகழ்கிறது. வே நி சூர்யாவின் கவிதைகளில் அஸ்தமனமாகவும் சாயங்காலம் ஆகவும் அந்தியாகவும் வரும் பின்னேரங்கள் அழகு கொண்டிருக்கின்றன. அவருலகில் அந்த நேரம் படிமமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உன்னதமாக்கலென்பது ஆக்கப்படும் புதிய படிமம் ஒன்றின் மூலமே நிகழும். ஒரு தெய்வத்தைக் கதையில் உண்டாக்குவதைப் போல.

அத்தகைய சாயங்காலக் கவிதைகளில் இக்கவிதை பிரமிளின் உக்கிரம் கொண்டிருக்கிறது எனத் தோன்றியது. ‘நிலவிலிருந்து இடைவிடாது பெருகும் ஒரு ரத்தப்பெருக்கு’ என பிரமிளின் உக்கிரம் ஒரு சுட்டுதல். உக்கிரமான கவிதைகள் எரிவிண்மீன்கள் போன்று சொற்களில் பற்றியெரிந்து வீழ்ந்து கொண்டேயிருப்பவை போலும். அவற்றுக்கு ரத்தமும் இயற்கை.

இணைப்பு : வே நி சூர்யாவின் வலைப்பூ

TAGS
Share This