தன்னறம் விருது : ஷோபா சக்தி
“இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார் சொல்லும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பையே பரிந்துரைக்கிறேன். உங்களது நெற்றிக்கு நேரே துப்பாக்கி பிடிக்கப்பட்டிருக்கும் போது, கடவுளை நினைக்காதீர்கள்! மனைவி பிள்ளைகளை நினைக்காதீர்கள்! பாரதியுடையதோ அன்னா அக்மதோவாவுடையதோ கவிதை வரிகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கவுரவமாகவும் அமைதியாகவும் செத்துப்போங்கள்”
~ ஷோபாசக்தி
தமிழ் இலக்கியத்தின் அதிதீவிரமான அரசியல் பிரதிகளெனக் கருதுமளவுக்கு ஷோபாசக்தியின் படைப்புகள் அனலைச் சுமைப்பவை. பகடிகளின் வழியாக அந்த அனலை அவர் இலக்கியப் படைப்பாக்கும்போது, அது வரலாற்றுக் கற்பிதங்களின் அடிப்படைகளையும் புனிதங்களையும் கலைத்துச் சிதைக்கிறது. கூரிய சீற்றங்களும் கொந்தளிப்புகளும் பகடித்தொனியில் வெளிப்படும் இவரது எழுத்தாக்கங்கள் அரசியல் மீதான நம் புரிதலின் மீது வினாயெழுப்பி தாக்கம் செலுத்துபவை. அவ்வகையில் இலக்கியம் எனும் வகைமைக்குள் ஷோபாசக்தியின் படைப்புகள் நிகழ்த்தும் இரசவாதம் என்பது நிச்சயம் குறிப்பிடத்தக்க அரசியல் செயல்பாடே.
பத்து வயதில் ஊர்ச்சுவற்றில் அரசியல் வாசகங்கள் எழுதியதிலிருந்து துவங்குறது ஷோபாசக்தியின் எழுத்துப்பயணம். ஈழப்போர்ச்சூழலால் அகதியாகி கோப்பை கழுவுவது, உணவகப் பராமரிப்பு, பலசரக்கு அங்காடி வேலை, வர்ணம் அடிப்பது, தச்சுத் தொழில் என எத்தனையோ ஊர்களில் எண்ணிலா தொழில்செய்து வாழ்வுநகர்த்தியவர். குஅழகிரிசாமி, மாக்சிம் கார்க்கி, பாரதி என அடுத்தடுத்து இலக்கியத்தின் தடத்தைத் தேடிக் கண்டடைந்தார். பைபிள் தந்த மொழியும் அவருக்குள் வேர்கொண்டது. சிறுவயதுதொட்டு தன் வாழ்வில் அடையநேர்ந்த அனுபவங்களை அதன் குருதிவெப்பம் குறையாமல் இலக்கியத்தில் பதிவுசெய்து, வரலாற்றின் எழுத்துச்சாட்சியமாக ஷோபாசக்தி அடையாளப்படுகிறார்.
தமிழ்ப்படைப்புலகில் தீவிரமான இலக்கியப் படைப்புகளைத் தந்து, அப்படைப்பகளால் இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளை மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அவ்வெழுத்தாளர்களை இன்னும் அணுக்கப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), எழுத்தாளர் பாலைநிலவன் (2023) ஆகிய ஆளுமைகளுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
அதன்நீட்சியாக, 2024ம் ஆண்டுக்கான ‘தன்னறம் இலக்கிய விருது’ எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. கொரில்லா, ம், Box, இச்சா, ஸ்லாம் அலைக் உள்ளிட்ட நாவல்கள், தேசத்துரோகி, எம்.ஜி.ஆர் கொலைவழக்கு, கண்டிவீரன், கருங்குயில் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், மேலும் பல்வேறு கட்டுரைத் தொகுப்புகள், நேர்காணல்கள், அரசியலாக்கங்கள், நாடகங்கள், திரைக்கதைகள், நடிப்பு, பதிப்பு என படைப்பூக்கம் கொண்ட மனிதராக தனது சுயத்தைத் தொடர்பவர் ஷோபாசக்தி.
தனது கூரிய படைப்புகளால் தமிழ் இலக்கியத்தின் செறிவுப்பாதையை நீட்சிப்படுத்திய படைப்பாளுமை ஷோபாசக்தி அவர்களுக்கு தன்னறம் விருது சென்றடைவதில் மகிழ்வும் நிறைவும் கொள்கிறோம். விருதளிப்பு நிகழ்வானது வருகிற 28.12.2024 சனிக்கிழமை அன்று, காலை 10 மணிக்கு குக்கூ காட்டுப்பள்ளி நிலத்தில் (புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை அஞ்சல், ஜவ்வாதுமலை அடிவாரம்) நிகழவுள்ளது.
பழங்குடி மக்களின் உரிமைக்காப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து போராடி, அவர்களுக்கு நீதியையும் வாழ்வையும் மீட்டுத்தரும் தோழர் வி.பி.குணசேகரன்; கவிதை, சிறுகதைகள், நாவல்கள் என இலக்கியத்தை மீள்வாழ்வாகக் கொண்டு படைத்துவரும் எழுத்தாளர் சாம்ராஜ்; பழங்குடி மக்களின் வாழ்வுநிலை உயர்வுக்காகப் பல்வேறு களங்களில் உழைப்பைச் செலுத்தும் தோழர் அன்புராஜ் உள்ளிட்ட முன்னோடி விசைமனிதர்களின் சூழமைவில் இவ்விருவிழா நிகழ்கிறது.
இந்நிகழ்வில் விருதுத்தொகையாக ஷோபாசக்தி அவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வழங்கப்படவுள்ளது. ஷோபாசக்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் – நேர்காணல்கள் அடங்கிய புத்தகமானது இளைய வாசிப்பு மனங்களுக்கு விலையில்லா பிரதிகளாக ஆயிரம் பிரதிகள் விரைவில் அனுப்பப்படவுள்ளது. மேலும், அவருடைய வாழ்வனுபங்களைப் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல் ஆவணக் காணொளியும் விருதளிப்பையொட்டி வெளியாகிறது. தோழமைகள் வாய்ப்பமைத்து இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கிறோம்.
“நான் இலக்கியத்தை உச்சமான அழகியலோடு எழுகிறனோ இல்லையோ நான் உண்மையை எழுதுகிறேன். அதை மட்டுமே எழுதுகிறேன். என்னுடைய அரசியல் கருத்துகளைப் பரப்புரை செய்யும் ஆனால் அளவில் சற்றுப் பெரிதான துண்டுப் பிரசுரங்களாகவே நான் எனது கதைகளைக் கருதுகிறேன். அந்த அரசியற் கருத்துகள் பெருமளவில் நிராகரிப்பை பெறக்கூடியவை என்று தெரிந்தே நான் எழுதுகிறேன். அதனால் அங்கீகாரம் ஒரு பிரச்சினையே கிடையாது. சாத்தியமாகும் தீமையைவிட சாத்தியமாகாத நன்மை எப்போதுமே சிறந்தது” என்றெழுதும் எழுத்தாளர் ஷோபாசக்தி அகம் அநீதிகளுக்கு எதிரான எழுத்தாயுதம்.
அத்தகைய மனிதரின் ஈழக்கரங்களை இறுகப்பற்றும் வாய்ப்பெனவும் இந்நிகழ்வு தன்னை நிகழ்த்திக்கொள்ளும்.
~
நன்றியுடன்,
தன்னறம் | குக்கூ