சினிமாவுக்கோர் இயக்கம்

சினிமாவுக்கோர் இயக்கம்

ஒரு மக்கள் இயக்கமென்பது மக்களிடமிருந்து எழுச்சி பெற்று வருவது. ‘Chikpo Movement ‘ என்ற ஆவணப்படத்தை நிகழ் படத்தை எப்படி ஒரு இயக்கமாக மாற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடலின் முதலாவது உரையாடல் பகுதியாகப் பார்த்திருந்தோம். அந்த ஆவணப்படம், ஒரு மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தமது காடுகளுக்கு எதிராக வந்த சக்திகளிடமிருந்து எப்படி தமது காடுகளைக் காத்தனர். அதனைக் காப்பதற்கு அவர்கள் எப்படி ஒரு குழுவாகத் திரண்டனர். பின்னர் எப்படி ஒரு இயக்கமாக மாறி அழிந்த காடுகளை மீள உருவாக்கினார் என்பது பற்றியது.

முதலில் தனிமனிதர்களின் சிந்தனைகளிலிருந்து உருப்பெற்று வரும் கருத்துக்கள் ஒத்த அலைவரிசையைக் கொண்ட குழுவாகத் திரளும், பின் அது அதற்கான வரலாற்றுப் புறக்காரணிகள் உருவாகும் போது இயக்கமாக உருவெடுக்கும். இதனை ஒரு எளிமைப்படுத்திய விளக்கமாகக் கொண்டால், எதற்காக ஒரு சினிமா இயக்கம் தேவைப்படுகிறது, அதற்கான புறக்காரணிகள் என்ன என்பது தொடர்பில் நாம் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு கால கட்டத்தையும் ஒவ்வொரு வகையான சிந்தனைப் போக்குகள் ஆதிக்கம் செலுத்தும். அந்த சிந்தனைப் போக்குகளை பரவலாக்கும் கருத்தியல் ஊடகங்களும் அதனை பிரச்சாரம் செய்யும். கிராம்ஷியின் ‘மேலாண்மைக்’ கருத்தியல், அதாவது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களை உருவாக்கும் அமைப்புகள் பற்றியும் அது எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றியும் அறியும் ஓர் அறிவு சார் விளக்கம் இந்த இடத்தில் முக்கியமானது.

நமது கால கட்டத்தின் பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு, கலாசார, வாழ்வியலை தீர்மானிக்கும் தீர்மானகரமான சக்தியாக ‘சினிமா’ என்ற கலைவடிவம் உருவாகி நீண்ட காலமாகிறது. நமது அன்றாட வாழ்வில் சினிமா இல்லாத நாளே கிடையாது. சினிமாவிலிருந்து வசனங்களை புழக்கத்திற்குள் கொண்டுவருகிறோம், ஆடை முதல் நகைச்சுவை வரை நாம் சினிமாவின் தலைமுறை. சினிமா நமது கலாசார வாழ்வை தீர்மானிக்குமொரு சக்தி. மிக நேரடியான ஊடகம். ஆதிக்க கருத்துக்களை அல்லது சமூக ஆதிக்கத்தை உருவாக்கும் ஒரு மேலாண்மை ஊடகமாக சினிமா கடந்த நூறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

பெரும்பான்மை மனநிலையில் தாக்கத்தைச் செலுத்தும் சினிமாவை அதன் பண்பாட்டு கலாசார ஆதிக்க கருத்தியல்களை எதிர்க்கும் விதமாக விமர்சனங்கள் அறிவு சார் தளத்தில் உரையாடப்படுகின்ற அதேவேளை ரசனை சார் மாற்றங்கள் பெரும்பான்மை மனநிலையில் ஏற்படாதவிடத்து இந்த விமர்சனங்களால் விளையும் பயன்மதிப்பும் குறையும். ஆகவே விமர்சன மரபின் தொடர்ச்சியின் அவசியத்தை உணரும் அதே வேளை ரசனை மாற்றங்கள் மற்றும் வித்தியாசமான சினிமா அனுபவங்களை பரவலாக்கும் தேவையும் முக்கியமானது. உலகம் முழுவதும் மாற்றுச் சினிமாக்களையும், மைய நீரோட்டத்திலும் கூட சில நல்ல படங்களையும் எடுக்கும் வழக்கம் உருவாகியிருக்கிறது. ஆனால் அவை வெகுஜனத்திற்கு அதிகம் மார்க்கெட்டிங் செய்யப்படாதவையாகவும் விற்பனையாகாத பண்டமாகவும் உள்ளது. ஆகவே வித்தியாசமான சிந்தனைப் போக்குகளை அனுபவங்களை முன்வைக்கும் சினிமாக்களை கிராமம் கிராமமாக நகரம் நகரமாக நாம் கொண்டு திரிந்து அறிமுகப்படுத்த வேண்டியது நமது கால கட்டத்திற்கு மிக மிக அவசியமானது. வேறு எந்த கலை வடிவங்களையும் விட மக்களுக்கு மிக நெருக்கமானதொன்றாக ஆகிவிட்டிருக்கும் சினிமாவிற்குள்ளிருந்து உருவாகும் மாற்றுக் குரல்களை, ஆதிக்க கருத்தியல்களுக்கு எதிரான சிந்தனைப்பள்ளிகளை நாம் அடையாளம் காண்பதும் அதனை நம் சமூகத்துடன் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதும் உரையாடுவதும் தான் ‘நல்ல சினிமாவை’ வெகுஜனமயப்படுத்தும் அதே வேளை நமது கால கட்டத்தில் நாம் சமூகத்துடன் நெருங்குவதற்கிருக்கும் மிகச் சிறந்த வழியும்.

இந்தப் பின்னணியில், நிகழ் படத்தின் இரண்டு கள அனுபவங்களை இங்கே விபரிக்கிறேன்.

திரையிடல் – 01

பளை மைதானத்தில் இறங்கி எல்லோரும் அந்த மைதானத்திற்குச் சென்றோம். ஐம்பது பேருக்கு மேல் கலந்து கொண்ட அந்த முதலாவது திரையிடல் வழங்கிய அனுபவங்கள் கீழே.

முழுவதும் விளையாட்டு சார்ந்த இளைஞர்கள். “GOAl ” என்ற காற்பந்து தொடர்பான திரைப்படமே தெரிவு செய்திருந்தோம். தமிழ் மொழியாக்கத்தில் தேர்வு செய்ய வேண்டிய ஒரு தேவையும் இருந்தது. முதலாவதாக பொதுவெளிக்கு நகரும் போது மொழி அவர்களை திரைப்படத்தை விட்டு அந்நியமாக்கி விடக் கூடாதென்று கருதியிருந்தோம். திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது சுவாரசியமான உரையாடல்களை இளைஞர்கள் நிகழ்த்தியபடியிருந்தனர். திரைப்படமொன்றின் கதாபாத்திரங்களை மனிதர்கள் எப்படி தங்களுக்குத் தெரிந்தவராகவோ தாங்களாகவோ உணர்ந்து அதனை ஒரு அனுபவமாக மாற்றுகின்றனர் என்பதை பார்த்தோம். “என்ன அண்ணை படத்தில பாட்டு ஒண்டையும் காணேல்ல ” என்றொரு குரலும் முத்தக் காட்சிகள் வரும்போது பள்ளிக்கூட டூர் பஸ் மாதிரி கூக்காட்டி கத்தவும் செய்தார்கள். எல்லாமே அவர்கள் காட்சியின் மீது நிகழ்த்திய பார்வைகளாகவே புரிந்து கொள்கிறோம்.

படம் திரையிடலின் பின் ஆரம்ப உரையை சன்சிகன் நிகழ்த்தினார். அதில் நிகழ் படம் என்றால் என்ன என்பது பற்றியும் அதன் இயக்கத்தில் உள்ள நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். அதன் பின் நான் உரையாடலுக்கான நேரத்தை கையாளும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். நானும் சன்சிக்கும் மாறி மாறி கேள்விகளுக்கு பதிலளித்தோம். சில அடிப்படையான கேள்விகளைக் கேட்டோம்.

” இந்த மாதிரி திரையிடல்களை நீங்கள் விரும்புகிறீர்களா”

இரண்டு மூன்று பேர் சத்தமாக ஓம் என்றார்கள்.

” வேறு என்ன வகையான படங்களை பார்க்க விரும்புகிறீர்கள்?”

“இலங்கையில் வெளியிடப்படும் தமிழ் குறும்படங்களை பார்க்க விரும்புகிறோம்”

“இனி எப்பொழுது படம் போட்டால் பார்க்க வருவீர்கள்?”

“ஒவ்வொரு நாள் போட்டாலும் வருவோம்” என்று சிரிப்பும் கூச்சலும்.

“அடுத்த மாதம் ஒரு நாள் படம் போடுவம், ஆனா அதுக்கும் அம்பது பேர் தான் வருவியளோ, அல்லது வீட்டிலையும் வேற பெடியளிட்டையும் சொல்லுவியளோ?” என்றோம்.

” கட்டாயம் எல்லோருக்கும் சொல்லுவோம்” என்றார்கள்.

பின்னர் குறும்படங்கள் சில போடும் படி கேட்டார்கள். மதிசுதாவின் ” மிச்சக் காசு”, ” துலைக்கோ போறியள்” ஆகிய படங்களைப் போட்டோம். மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். அதனோடு ஓட்டுவதற்கு அவர்களால் முடியுமாயிருந்தது. கலகலப்பும் நட்புமாய் முதலாவது திரையிடல் முடிந்தது.

திரையிடல் – 02

பருத்தித்துறை, தும்பளை மேற்கு சன சமூக நிலையத்தில் ஏற்கனவே நான்கு படங்களை திரையிட்டு உரையாடல்களை அங்குள்ள நண்பர்கள் நிகழ்த்திருக்கின்றனர். நாம் ஐந்து சுந்தரிகள் என்ற மலையாள திரைப்படத்தை திரையிட்டிருந்தோம். இங்கு பெண்களும் சிறுவர்களும் இளைஞர்களும் வயோதிபர்களுமென்று கலவையான பார்வையாளர்கள் இருபத்தைந்து பேர் வந்திருந்தனர்.

ஐந்து கதைகளாகப் பிரிந்த படத்தின் மூன்றாவது பகுதி சென்று கொண்டிருக்கும் போதே சில இளைஞர்கள் இறங்கி சென்று விட்டனர். இரவு ஏழு மணிக்கு படம் ஆரம்பித்திருந்தது ஒன்பது மணிக்குப் பின் குடும்பங்களாக வந்திருந்தவர்கள் செல்ல ஆரம்பித்தார்கள். அதன் பின் இறுதியில் ஏழு பேரே எஞ்சியது.

அதன் பின்னர், ஏன் இந்த நிலைமை என்பதை பற்றி கலந்துரையாடினோம். அந்த இளைஞர்களிடம் “ஏன் படம் பிடிக்கவில்லையா ?” என்று கேட்டோம். “மலையாளத் தமிழ் விளங்கேல்ல அண்ணை” என்றார்கள். ‘தமிழ்ப்படம் போடுங்கோ பார்க்க வாறம்”என்றார்கள்.

முதலாவது பிரச்சினையாக மொழியிருக்கிறது. ஆரம்பத்தில் பொது வெளிக்கு நகரும்போது பலவகையான பார்வையாளர்களும் உள்ள அரங்குகளில் இந்தப் பிரச்சினை தீவிரமாக இருக்கும். அதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டுமென்று கதைத்துக் கொண்டோம். மொழியில் உள்ள பிரச்சினையால் அவர்கள் மாற்றுச் சினிமாவை விட்டு விலத்தி ஓடிவிடக் கூடாது. முதலில் தமிழில் வந்த நல்ல சினிமாக்களையும், தமிழ் மொழிமாற்றம் செய்து வந்த சினிமாக்களையும் இந்த வகையான பார்வையாளர்களுக்கு பரீட்சயபடுத்த வேண்டும் என்று கதைத்தோம். ஆவணப்படங்களைதிரையிடுவதும் முக்கியமென்று கருதினோம். காரணம் இதே அரங்கில் ‘ சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட “மின்பொறிக்குள் சம்பூர் ” என்ற ஆவணப்படம் நல்லதொரு உரையாடலுக்கு வழிவகுத்ததென்று நண்பர்கள் சொன்னார்கள்.

மேலும் வேற்று மொழிப் படமொன்றை திரையிடும் போது, திரையிடலுக்கு முன் கதையைப் பற்றியும் அதன் இயல்பை பற்றியும் கொஞ்சம் கதைத்திருந்தால் அவர்களால் இன்னும் நெருக்கமாக விளங்கி கொண்டிருக்க முடியும். அல்லது ஒவ்வொரு பகுதியும் முடியும் பொழுது நிறுத்தி நிறுத்தி உரையாடியிருந்தால் அவர்களால் அந்த திரையிடலில் குழப்பத்தை உணர்ந்திருக்க மாட்டார்கள் என்றும் சில நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தொடர்ச்சியாக இரண்டு திரையிடல்களிலும் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் விடயங்களிருந்தன. முதலாவது திரையிடல் ஒரேவகையான விருப்புள்ள ஒரேவயதுமட்ட ஒரே பால்நிலையைச் சேர்ந்தவர்களின் திரையிடல் எப்படி இருந்தது என்பதும். பல்வேறு வயத்தைச் சேர்ந்தவர்களதும் வித்தியாசமான விருப்பங்களைக் கொண்டவர்களையும் ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய திரையிடல் எப்படியான வித்தியாசங்களை அனுபவங்களாக வழங்கியது என்பதை இரண்டாவது திரையிடலிலும் உணர்ந்தோம்.

சினிமா இயக்கங்களுடன் இணைந்து ஒரு கால கட்டத்தின் ரசனை மாற்றமும் நிகழும், பண்பு மாற்றம் பெறும் சினிமாவை உருவாக்குவதற்கான களங்களும் விரியும். சமூகத்திற்குள்ளிருந்து சினிமாவை உரையாட ஆரம்பித்து பின் அதன் கருத்தியல்களை விவாதிக்கும் தரப்பு எழுச்சி பெறும். இது சார்ந்த செயல்வாதங்கள் நமது காலத்தைப் பொறுத்த வரை பெரும் மாற்றங்களை உருவாக்கக் கூடியது. பல்வேறு சினிமா வட்டங்களும் தொடர்ச்சியான திரையிடல்களும் மட்டும் தான் இதனை சாத்தியமாக்க முடியும்.

உதாரணத்திற்கு, இன்று நாம் மலையாள சினிமாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆகவே மலையாள சினிமாவின் இன்றைய உருவாக்கத்திற்குப் பின் உள்ள சமூக காரணிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது வரலாற்றுக்கு காரணிகள். அங்குள்ள கம்யூனிச பாரம்பரியம் அதனூடாக உருவாகி வந்த செயல்வாதம், பின்னர் செழுமை வாய்ந்த இலக்கியம். அதன் பின்னர் பலரும் இணைந்து மேற்கொண்ட சினிமா இயக்கங்கள். இன்றுள்ள மாற்றுச் சினிமாவுக்கான கதவுகளை எல்லாமும் சேர்ந்து தான் உருவாக்கின. அதனால் தான் இன்று அந்தப் படங்களை பார்ப்பதற்கு மக்கள் வருகின்றனர், ரசனை மாற்றம் ஒரு சமூகத்தின் சிந்தனைப் போக்கில் நிகழும் மாற்றம். அதன் ஆன்மாவில் நிகழும் மலர்தல்.

(2017)

TAGS
Share This