அனார் : சில குறிப்புகள்

அனார் : சில குறிப்புகள்

உணர்வுக்குள்ளே மலையும் வனமும் பிரபஞ்சவெளியும் உண்டு!

அனார், அச்சிறு கண்களின் வழி என்னுலகத்தை நிரப்பி அள்ளிக்கொடுக்கும் தாய்மையின் கருணை. தன்னைக் கண்டடைதலின் பிரகாரம் வாழ்வில் ருசிகொண்டவோர் மந்திரப்பேழை. கவிதையின் மொழிகளுக்குள் தழைத்து வாழ்வென்றாகியிருக்கும் இவ் உயிரைத் தூக்கிச்சுமக்கும் துணிவையும், தைரியத்தையும் தன் எழுத்துக்களின் வழி சேர்ப்பித்த என் மூத்தவருக்கு வாழ்த்துக்களும், நன்றியும், அன்பு முத்தங்களும். எத்தனையாயிரம் பாடுகளைக் கொண்டலையும் வாழ்விது. அனாரின் கண்கள் வழி நானடையும் கனவென்பது மொழியில் திளைத்து அலையும் வேட்கை. பிறந்த அக்கணத்தில் துடிக்கும் உயிர்களின் மென்னசைவுகள், தொடுகையின் ஸ்பரிசத்தை தருக்கி நிற்பவை, பூமி பதியாத ஒவ்வொரு பாதங்களிலும் இருந்து திறக்கவேண்டிய வழித்தட விரிவு.

சமூகத்தின், பாழான பல நம்பிக்கைகளில் ஊறிப்போய்விடாது தன் நிலையறிந்து, தான் யாரென்றறிந்து பெருங்கனவுடன் விரித்த முதற்கனவின் ஒரு சோடி இளஞ்சோடிச் செட்டைகளுடன் இப்பிரபஞ்சத்தின் மேன்மையைக் காணும் விழிகள் அனாருடையது. பாழ் வெளியின் இன்மையைப் பாடும்போதிலும், கேடு காலங்களில் வாஞ்சையோடு அள்ளியெடுத்து தலைகோதி மெய் நீவி இன்னாரென்று அறியாத அத்தனை நல்லுயிர்களுக்குமான வாழ்விற்கென தன்னை அர்ப்பணித்து நிற்கின்றது அவருடைய அகமொழி. அவருள் விரியும் நிலமும், வானும் தனித்துவமானவை. உள்ளங்கைகளுக்குள் அடங்கும் சிறு உயிர்களையும் அணைத்துக்கொள்ளும் அனார் பட்சிகளுக்கே உரித்தான தனித்துவமான ‘மீயடுக்கு மூளை’ கொண்டலைபவர்.

தாய்மை இப்பிரபஞ்சம் ஆக்கியளித்த ஆதி உணர்வு. எங்கெல்லாமோ அலைந்து திரிந்த வாழ்வின் அதி அற்புதமான தருணங்களையோ, விநோதங்களையோ சொல்லில் கனமேற்றி ஒப்புவிக்கக் கிடைத்த ஓருயிர் தாய். கவிதைகளின் அறிமுகக் காலங்களில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று. ஏழு, எட்டு வயதிருக்கும். எங்கள் வீட்டிலிருந்த கள்ளிப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த ‘அம்மா’ பற்றிய கவிதையொன்றின் வரிகள் இன்றுவரைக்கும் என்னை அலைச்சலுற வைக்கின்றன. 1989 –1990 காலப்பகுதியில் அப்பா இந்தியாவில் இருந்து வரும்போது பத்திரிகையொன்றில் இருந்து வெட்டி ‘லெமினேட்’ செய்துவைக்கப்பட்டிருந்த அக்கவிதை என் கனவின் தொடக்கமென உணரமுடிகின்றது. வாழ்வைத் தனியாகக் கடக்க வேண்டிய நிர்ப்பந்தங்களின் போதெல்லாம் வெப்பியாரமொன்று வரும். அப்பிணிக்குள் உழலும் துயரை ஏற்றுக்கொள்வதற்கும், நத்தை வேகத்திலேனும் கொஞ்சம் நகர்வதற்கும் அதுவே என் நனவிலி மனதுக்குள் நுழைந்த தோத்திரமாக இருக்கின்றது.

முதல் வாசமுணர்ந்த அன்பின் பெருங்கருணைகூட உணர்வாகவும், நினவாகவுமே தங்கும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். நாம் யாரென்று உணர எம்முடன் தனியாகவே பயணிக்கவேண்டுமென்பதுவே அவ் அபத்தமும், வாழ்வும், நெறியும். மீண்டும் செல்லத்துடிக்கின்ற, ஆனால் என்றைக்கும் நிகழப்போவதில்லை என்றான பல கோடிக் கனவுகளின் ஏக்கம் அது. அனார் ஈழத்து இலக்கியச்சூழலில் எனக்கு மூத்தவர். இருப்பின் சுழலைப் பற்றுக்கொண்டதாக்கும் அன்பும், காமமும், காதலும், இயற்கையும், பிரபஞ்சவெளியும், அதில் அலையும் ஒவ்வொரு படிமங்களும் அனாருடைய தனித்துவமான மொழி. தன்னந்தனியே வனாந்தரங்களில் ஆறி இளைப்பாறும் நெடுந்தூர ஆத்மார்த்த உணர்வு. காமத்தின் மொழியில் பொசுக்கும் தீச்சுடரும், காதலுக்கென்றேயான தருணங்களில் அதற்கென்றே தனித்துவமான மெல்லதிர்வையும் திரட்டிநிற்பது.

எனது தலைமுறைக்கு அனார் என்பவர் கொடை அளிக்கும் தெய்வம். சுழலில் சிக்கிப் பிரமை பிடித்த நாட்களிலெல்லாம் அதைக் கடினமாகக்கூட முன்வைக்காது அவருக்கேயான தாயின் வாஞ்சையோடு ‘’உணர்வுக்குள்ளே மலையும் வனமும் பிரபஞ்ச வெளியும் உண்டு!’’ என்கிறார்..
அனாரை அறிந்துகொண்ட காலங்களென்பது சொற்பமே. ஆயினும் என்னுள் விரியும் அகவுலகுசார் தேடலில் சந்தேகங்கள் ஏதுமின்றி பறந்தலைய வழிகாட்டும் வாழ்வின் அரை நூற்றாண்டைக் கடக்கும் கனிவின் ஊற்று. மொழிக்கெனவும், வாழ்விற்கெனவும் தம்மைக் கூறுபோட்டு ஆத்மாவின் அழைத்தலிற்கென்று படையலாக்கிய அன்னா அக்மதோவா, ப்ரீடா காலோ போன்று அனார் ஈழத்து இலக்கியச் சூழலில் மத, மொழி அடக்குமுறைகள் மூச்சடைக்கவைக்கும் ஊழிக்காலத்திலிருந்து உதித்த ஒரு வரம்.

காதலையும் காமத்தையும் உரையாடுவதென்பது இழுக்கானது என இன்றுவரை கற்பிக்கப்பட்டிருக்கும் சமூகமென்ற கரும்பாறையில் அனாரின் கவிதைகள் உண்டாக்கியிருக்கும் சிறு கரைவென்பது கொண்டாடப்பட வேண்டியது. அதிலும் முக்கியமாக பெண்மனதின் வேட்கையை, கனவை முற்றளிக்கும் காமமும் காதலும் எவ்வாறு நிகழ்கின்றன? அவ்வுயிர்களின் கனவுகளுக்குள் விரியும் வாழ்வென்பது எவ்வாறிருக்கும்? சமூக இருப்பில் அந்த ஆழ்மனத்தின் கலகங்கள் எதைக் கோரிநிற்கின்றன என்பதை கலைஞர்கள் போல தன்னைத் தின்னக்கொடுத்து அழித்தவர்களின் நினைவிருப்புக்கள் என்றைக்கும் உரையாடப்பட வேண்டியவை.
ஆதியிலிருந்து பேசப்பட்டுக்கொண்டிருக்கும் மானுட வாழ்வின் பெருங்கனவென்பது மனதுக்கும், மூளைக்குமான போரில் அமைதியடையாத ஆதார உணர்ச்சிகள் வேவ்வேறு உருக்கொண்டு அலைச்சலுறுவதும், இருப்பை அழித்துப்போவதிலுமே நிகழ்ந்துகொண்டிருப்பவை.

வாழ்வு நாம்‌ தீர்மானிக்காமல்‌, எமது எந்த முடிவுகளினதும்‌ துமியளவு தீண்டல்களும்‌ இல்லாமல்‌ இப்பேரண்டத்தின்‌ மீச்சிறு ஆத்மாவாக வந்து விழுந்த போலிருந்து உருப்‌ பெருகத்தொடங்கியது. இவ்‌ உடலின்‌ அழிவுக்குக்கான காலம்‌ வரையில்‌ அதனுள்‌ அருட்டும்‌ ஆத்மாவின்‌வழி தூண்டப்பட்டுப்‌ பெருகும்‌ வாழ்விது. ஒவ்வொரு பராயங்களிலும்‌, சூழல்களிலும்‌ எதனை என்னவாக அவதானிக்கின்றோமோ, அணுகுகின்றோமோ அதன்வழி எம்‌ ஆத்மாவின்‌ பெருந்தாகத்தின்‌ வழியே ஒவ்வொருவரும்‌ நடத்தப்பட்டுக்‌கொண்டிருக்கின்றோம்‌. இடையில்‌ கற்றலினாலும்‌, அனுபவ அறிவின்‌ வழியாகவும்‌ ஒவ்வொன்றையும்‌ கூர்ந்து அவதானிக்கும்‌ அவ்வவ்‌ வயதுகளின்‌ பக்குவ நிலைகளை அடைகின்ற தருணங்களில்‌ எம்‌ இவ்வாழ்வும்‌, நம்பிக்கைகளும்‌ வெவ்வேறு கதாப்பாத்திரங்களாகத் திரிபடைந்துகொண்டிருக்கின்றன. எவருமே ஒரே எண்ணங்களைக்‌ கொண்டவர்களல்லர்‌. ஒரே விருப்பு வெறுப்புக்களைக்‌ கொண்டவர்களல்லர்‌. ஒரே பாதைவழி தம்மைக்‌ கண்டடைபவர்‌ அல்லர்‌. அனைவருமே தனித்துவமான உயிரிகள்‌. ஒத்திசையும்‌, ஈர்த்துக்கொள்ளும்‌ சில இயல்புகளால்‌ நமக்கான நபர்களைத்‌ தக்கவைத்துக்‌கொள்ள அன்பு, காதல்‌, இரக்கம்‌, தாய்மையுணர்வு, தோழமையுணர்வு என வெவ்வேறு படிநிலைகளோடு வாழ்வனுபவத்தை பெற்றுக்‌கொள்கின்றோம். அதற்கான அறங்களை, சுதந்திரத்தை, கட்டுப்பாடுகளை, பொறுப்புகளைக் கொண்டும்‌ இயங்குகின்றோம்‌. நிரந்தரமற்ற இப்பிரபஞ்சத்தின்‌ மானுட இருப்பின்‌ உண்மையும்‌ இரகசியமும்‌ இதுவே.

எம்‌ உள்ளெரியும்‌ அந்தர ஆத்மாவிற்கான இரையைக்‌ கவ்விக்‌கொள்வதற்கான அலைச்சலில்‌ சமூக, கலாசார நடைமுறைகள்‌, பிற்போக்குத்தனங்கள்‌, அடக்குமுறைகள்‌, புறக்கணிப்புகள்‌, முற்போக்குக்‌ கருத்தியல்கள்‌ என்பனவும்‌ வாழ்வின்‌ இன்னபிற உன்னத விடயங்களும்‌ தாக்கம்‌ செலுத்தும்‌ காரணிகளாகவிருக்கும்‌. நீடித்து வளர்ந்து செல்லும்‌ நினைவுகளின்‌ பாதைகளில்‌ வாழ்வின்‌ இரகசியத்திற்கான அரூபப்‌ பாதை செழித்து வளரத் ‌தலைப்படும்‌. அறிவின்‌ தேடலும்‌, நிகழ்கணங்களின்‌ மீது தீராத பித்தும்‌ கொண்ட ஒவ்வொரு உயிருக்கும்‌ ‘வாழ்வென்பது கணத்திற்கு கணம்‌ இன்னொன்றாகத்‌ தெரிவது. கனவுகளின்‌ உரிசையைத்‌ திரட்டித்‌ தின்ன எத்தனிக்கும்‌ ஒவ்வொரு உயிருக்கும்‌ இவ்‌ வாழ்வென்பது கொடை.
மொத்த சனத்திரளின் பொதுப்புத்தியிலிருந்து ஒவ்வொரு விடயங்களையும் ஒப்புநோக்கி தமக்கான தனித்துவத்தைக் கண்டடைந்து அதை வலிந்த கயிறாக்கி பயணத்தில்‌ பற்றித்திளைப்பதும்‌, சிதறிய கூட்டத்திற்குப்‌ பின்னேயே எந்த நோக்குநிலையுமில்லாமல்‌ செல்வது போன்று திசையறியாது போவதும் அவரவர் நோக்கு நிலைகளையும் கனவுகளையும் பொறுத்தது. இன்னொருவர் போலல்லாத கனவுகளும் வாழ்வுமுறையும் ஆசையின் பல்பிரவாகங்களும் கொண்ட சிந்திக்கும் உயிர்களுக்கு தாமே கைப்பட நெய்து உடுத்திக்கொள்ளக் கிடைத்த பெருவாழ்வு.

என்னளவில் இவ் வாழ்வென்பது நிரந்தரமின்மைகளின் தொடர்ச்சி. இங்கே சக உயிர்களைப் பற்றிக்கொள்வதற்கும் பற்றற்று அலைவதற்கும் இடையில் நூலளவு இடைவெளியே காணப்படுகிறது. பாழ்வெளி மனதுக்குள்ளே கட்டுண்டு, தொலைத்து, தொலைந்து அகத்தின் தேடல்களுக்காய் எம்பிக் குதித்துக்கொண்டிருக்கின்றோம். இதுவொரு மாயாஜால கதைகளுக்குள்‌ உலாவும்‌ திக்‌ திக்கென்ற தருணங்களைக்‌கொண்ட அடுத்த நொடியின்‌ மெய்மையை அறியவிழையும் கார்‌காலப்‌ பெருங்கடலின்‌ ஆர்ப்பரிப்பு.

கவிதை, முதல்‌ அவிழ்ந்த ஒற்றைச்‌ சொல்லைப் பற்றிப்‌பிடித்தேறும்‌ பெருவனத்தின்‌ வெம்மையும்‌ குளிர்வும்‌. பிறப்பும்‌ வாழ்வும்‌ போல. பல நூற்றாண்டுகளின்‌ எம்மை மிஞ்சிய வாழ்வனுபவங்களான காதலுக்கும்‌, தனிமைக்கும்‌, கண்ணீரின்‌ வற்றிய நிலைக்கும்‌ ஒற்றைச்‌ சொல்லில்‌ நிகழும்‌ பாடுகளான கவிதைகள்‌ இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகள்‌ நெடிய வாழ்வு கொண்டவை. அவற்றின்‌ மௌனத்திற்கும்‌, இருப்பிற்கும்‌ இடையில்‌ தத்தளித்துக்‌கொண்டிருக்கும்‌ மீதமிருக்கும்‌ வாழ்வு தன்னை பலியாடென வளர்த்தியிருக்கின்றது. நான்‌ என்றைக்கும்‌ பித்துற்ற வரிகள்‌ இருக்கின்றன. அவை காயத்தின்‌ பல்லடுக்குகளில்‌ இருந்து எண்ணிக்கையற்ற முறையில்‌ மருந்திட்டு மீண்டும்‌ மீண்டும்‌ அத்துயருள்‌ மூழ்கி மல்லுக்கட்டி மேலெழ வைத்‌திருக்‌கின்றன. அவையே எனது ஆத்ம மீட்பின்‌ ‘’‌பாழில் பரவுகின்ற மெல்லிய வெளிச்சம்’’ கவிதையென்பது வாழ்வின் தருணங்களில் தன்னை முற்றறிந்து நிகழ்வது, முந்திச் சென்று தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒற்றைச் சுக்கிலம் போன்றது.

ஈழத்தின் கவிதைச் சூழலில் பெண்ணியக் கருத்துநிலைகளோடும், அரசியல் நோக்குகளோடும் எழுதப்பட்ட கவிதைகளில் செல்வி, சிவரமணி, ஊர்வசி, அவ்வை, தர்மினி, கற்பகம் யசோதர, தில்லை போன்றோர் பேசும் அரசியலும் தனித்துவமானது. அவ்வாறே அனாரினது வாழ்வும், நிலமும், அவர் கனவளிக்கும் குழந்தமையின் எம் அன்றாடத்தின் பெருங்கனவும்.

ரஜிதா

TAGS
Share This