நோக்கின்மை
உலகத்தை நோக்குவதை நிறுத்திக் கொள்வது அல்லது வரைமுறைப்படுத்திக் கொள்வது இன்றுள்ள ஒருவர் செய்து கொள்ள வேண்டியது. எண்ணுக்கணகற்று இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வசவுகளிற்கும் எதிர்மறையான சொற்களுக்கும் வெறுப்பிற்கும் துயரங்களுக்கும் அரசியல் சிக்கல்களுக்கும் இடையில் ஒருவர் தன்னைத் தான் நோக்கி வாழ்வை நிகரறிந்து வாழ்வதே பெருஞ் சவாலாய் ஆகியிருக்கிறது.
உலகின் பொதுப்பார்வை வட்டம் இன்று சமூக வலைத்தளங்களால் வடிவமைக்கப்படுகிறது. எது நீதி எது அநீதியென ஆளுக்கொரு கோர்ட் தரப்புக்கு நான்கு லோயர்களென கொதிகலன்கள் போல் ததும்புவன. பெரும்பகுதி சினிமா, கிரிக்கெட், அரட்டை. இன்றொருவர் இவ்வளவு நஞ்சை தனக்குள் கொட்டிக் கொள்ளத் தேவையில்லை. பார்வையை ஒடுக்கிக் கொள்ளுதல் அல்லது நோக்கின்மையை உருவாக்கிக் கொள்ளுதல் ஒரு மனப் பயிற்சி. இந்தக் கவிதை போடப்பட்டிருப்பதே போகன் சங்கரின் பேஸ்புக்கில் என்றாலும் அதுவொரு சந்தைக் கடை அல்லது பல்லுருக்காட்டி எனும் எண்ணத்தில் மாற்றமில்லை. நோக்கற்க.
கலைகளிலும் இலக்கியங்களிலும் ஆழ்ந்து செல்வது இத்தகைய வெற்றுக் கேளிக்கைகளுக்கு மாற்றான வழிகளில் முதன்மையானது. போகன் சங்கரின் கவிதையை இமையைத் தாழ்த்திக் கொண்டு நடப்பது என எண்ணிக் கொள்கிறேன்.
*
அவன் எதையும் கவனிப்பதில்லை.
அவன் தனது சிறிய கவனத்தை அளித்தால் கூட
வெட்டப்படும் மரங்கள்
அவனை நோக்கிக்
கைநீட்டி கதறுகின்றன.
தொலைக்காட்சிகளில் கொல்லப்படும்
ஆயிரக்கணக்கான குழந்தைகளின்
கண்ணீர் விம்மும் விழிகள்
அவனை நோக்கி மிதந்து வருகின்றன.
கழுத்தறுக்கப்படும் மிருகங்கள்
அவன் பெயர் சொல்லி அழைக்கின்றன.
மருத்துவமனையில்
தங்கள் காலத்துக்கு முன்பே
கடும் நோயினால்
சாலைகளில் விபத்தினால்
இறந்து கொண்டிருப்பவர்கள் தங்களது மார்பைத் தொட்டுக் காண்பித்து அவனிடம்
எதையோ சொல்கிறார்கள்.
கோவில்கள் எங்கும்
குவிந்திருக்கும் பிச்சைக்காரர்கள்
அவன் காணச் செல்லும்
தெய்வத்துக்குக் குறுக்கே நிற்கிறார்கள்.
அவன் எதையுமே கவனிப்பதில்லை சாலையில் எப்போதும்
அவன் குனிந்தே நடக்கிறான்.
அவன் கவனித்தான்
அவன் கவனிக்காத போது
உலகம் மகிழ்வாக இருக்கிறது.
அவன் கவனிக்காத உலகில் விபத்துக்கள் குறைவாகத்தான் நடக்கின்றன.
பூக்கள் அதிகமாக பூக்கின்றன.
காதலர்கள் கூடுதலாக
முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.
எல்லாம் அவனது துயர்படிந்த பார்வையின் பிரச்சினை.
போகன் சங்கர்