அஞ்சலி

அஞ்சலி

ஈழத்தின் நாடக வரலாற்றின் முதுதந்தை குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் காலமாகி விட்டார். அவர் எனதூரைச் சேர்ந்தவர். எனது வீட்டிலிருந்து ஐந்தே நிமிடங்களில் சென்று விடக் கூடிய தூரம்.

இளவயதில் அவர் ஒவ்வொரு காலையிலும் சைக்கிளில் தின்னவேலி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒழுங்கு குலையாத ஒன்று நம் பார்வையில் படுகையில் அது நம்முள் ஒரு படிமாகி விடுகிறது. அவருடன் ஒரு நீண்ட சந்திப்பும் ஒரு சிறு சந்திப்புமென இரண்டு அருகணைந்த கணங்கள் வாய்த்திருக்கிறது.

முதலாவது சந்திப்பு புதிய சொல்லுக்கென ஒரு நேர்காணல். அவரது வாழ்வின் முழுச்சித்திரத்தையும் அவரது வீட்டின் முன் ஹோலில் வைத்து எனக்கும் யதார்த்தனுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குக் குளிர்ந்த சொற்கள் கொண்ட வாய்.  நூலோடித் தையல் போலக் குறும்பும் இழையோடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மெய்யாசிரியரும் கொண்டிருக்கும் வரலாற்றுக்கு அப்பாலான நோக்குக் கொண்டவர். அந்த நேர்காணலை மிகச் செம்மையாகச் செய்து முடித்தேன். அதை வாசிக்கும்படி அவரிடம் கொடுத்தேன். அதிலுள்ள சில பகுதிகள் வெளிவந்தால் விமர்சனங்கள் எழக் கூடுமென்று தயங்கினார். ஒரு சொல்லும் மறுப்பின்றி அவரை ஏற்றுக் கொண்டேன். அந்த நேர்காணலை அப்படியே அழித்தேன்.

எங்களுக்கு நேர்காணல் தர ஒப்புக்கொண்டமையின் முதல் காரணத்தை அவர் சொல்லிய பொழுது என்னுள் வெட்கத்துடன் ஒரு சிரிப்பு எழுந்ததை இப்பொழுதென எண்ணிக் கொள்கிறேன். “ஊருக்குள்ளை கொஞ்சம் நல்ல வேலையள் செய்யிறியளாம். கேள்விப்பட்டன். அதான் தரச் சம்மதிச்சன்” என்றார். பிறகு நேர்காணல் வெளியாக வேண்டாம் எனச் சொன்ன போது “இந்த நேர்காணல் வெளி வாறத விட உங்களுக்கு என்ர வாழ்க்கையில இருந்து சிலதுகளைச் சொல்லலாம் எண்டு நினைச்சன். அந்தளவு காணும்” என்றார். அந்தக் காரணமே அவரை ஆசிரியர் எனும் தகுதிக்கு இட்டுச் சென்றிருப்பது.

நாடகம் பயிலும் இளையவர்கள் அவர் பெயரை உச்சரிக்காத உரையாடல்களே அரிது. செம்முகம் ஆற்றுகைக் குழு சீலன் அண்ணா “குழந்தை சேர். குழந்தை சேர்” என்று திருச்சிற்றம்பலம் சொல்வது போலச் சொல்லிக் கொண்டிருப்பார். நாடக இளையவர்களின் உரையாடல்களின் வழி அவரைப் பிறிதொரு ஆளுமையாகக் கண்டேன்.

இரண்டாவதும் இறுதியானதுமான உரையாடல் செல்வமனோகரன் அண்ணாவின் மாமாவின் மரண வீட்டு முற்றத்தில் அருகிருந்து கதைத்தது. “இப்ப என்ன செய்யிறியள்” எனக் கேட்டார். “கொஞ்சம் சலிச்சுப் போய்ட்டன்” என்றேன். “நீங்கள் எழுத வேண்டிய ஆள். என்ர நேர்காணலை நீங்கள் எழுதின முறைய வைச்சுச் சொல்லுறன். உங்களிட்ட நல்ல சொல்லிருக்கு. அரசியல் எவ்வளவு முக்கியமெண்டாலும் வாழ்க்கை அதை விடப் பெரிசு. வாழ்க்கைக்குத் தான் அரசியல் தேவை” என்றவர் தொடர்ந்து “நான் அந்தக் காலத்தில எல்லாக் கட்சிக் கூட்டத்துக்கும் போவன். எனக்கு அரசியல் பிடிக்கும். ஆனால் ஒரு கட்சியிலையும் சேரேல்ல. அது என்ர இடமில்ல. என்னை ஈர்த்த அரசியல் எண்டு ஒண்டும் இருக்கேல்ல. இளம் பெடியன் எண்டதால சொல்லுறன். அரசியல் ஒரு கட்டம் வரைக்கும் தீவிரமா இருக்கும். அதுக்கு மேல அது இன்னொண்டாய் மாறாட்டி வேலையில்ல. உங்கட அலுவலப் பாருங்கோ” என்றார்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் எனக்கே எனக்கான சொந்த ஆளுமையுடன் அவர் உரையாடினார். இது அவரின் முதன்மையான சுபாவம். தான் எனும் கலைஞராக அவர் தன்னை பாவித்துக் கொள்ள வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவருக்கென ஒரு விழாவை எடுக்க அவர் ஒருபோதும் ஒப்புதல் அளித்ததில்லை. பலரும் பல முறை அதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். புகழின் வெளிச்சத்தில் கண் கூசும் முதிய தந்தை போலத் தோன்றினார்.

என்னளவில் அவரே அவரளவில் முழுமையாக ஒரு படைப்பு. அவரில் ஒழுங்கும் நேர்த்தியும் உண்டு. கூர்மையும் விலக்கமும் உண்டு. நக்கலும் முசுப்பாத்தியும் நிறையவே உண்டு. சிரித்துக் கொண்டே வழியனுப்பக் கூடிய எம் மண்ணின் மகத்தான ஆசிரியருக்கு அஞ்சலிகள்.

TAGS
Share This