ரத்த சிம்பனி

ரத்த சிம்பனி

சில கவிதைகளின் வரிகள் நன்கு பழகியதும் அறிந்ததுமான தங்கத்தாலான சிம்மாசனத்தை நோக்கிய படிக்கட்டுகள் போலிருக்கும். அதன் ஒவ்வொரு அடியையும் நாம் அறிந்தது தான். ஆனால் திடீரென்று ஒரு பொறிக்கணத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த பொற்சிம்மாசனத்திற்குப் பதிலாக புதிதாக ஒன்றை வைக்கும் பொழுது உருவாகி வரும் அழகு கொண்ட கவிதைகள் சிலவற்றை அண்மையில் வாசித்தேன். கவிஞர் வெய்யில் எழுதியிருக்கும் இக்கவிதைகள் பார்ப்பதற்குப் பழகியவை போலிருந்தாலும் புதிய சிம்மாசனங்களின் கூசும் ஒளி கொண்டவை.

கொஞ்சம் ஏலியன்கள் போல மேலிரு கொம்புகளும் மேலும் சில வால்களும் கொண்ட ஹைக்கூக்களெனவும் தோன்றுகின்றன.

*

எல்லாப் பழிவாங்கல்களும் முடிந்த பின்னர்,
மிச்சமிருந்த வெடிமருந்தில்
ஒரு வாணவெடி செய்தார் அப்பா,
நான் அவ்வெளிச்சத்தில் கவிதை பழகினேன்!

*

காதல்
நெடுநேரம் நீள்கிற அறுவைச்சிகிச்சை
இடையிலேயே மயக்கம் தீர்ந்து எழுகிறவர்கள்
காண்கிறார்கள்
ரத்த சிம்பனி!

*

துரோகம்,
இதயத்தை உயிரோடு
அறுத்து உண்ணும்
தொன்மச் சடங்கு.
கண்ணீர்,
குரூரமும் அழகியலும்
குழைத்த ஒப்பனை திரவம்.
கவிதை,
மன்றாடச் சிறந்த
கயமை மிகுந்த மொழி.

*

கல்லறைகளை அகழ்ந்து
இதயங்களை மட்டும் திருடிச் செல்லும்
ஒருவனைப் பற்றிய செய்தியை
வாசித்தேன்.
ஒரு கவிதை எழுத
அவன் ஏன்
இவ்வளவு கடின வழியைத் தேர்ந்தெடுத்தான்?!

வெய்யில்

TAGS
Share This