Influencers
ஈழத்துச் சூழலில் இலக்கியம் மற்றும் செயற்களங்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று எனது சிந்தனைகளின் வழி என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பாதிப்பை நிகழ்த்துகிறேன் என்பது. அச்சுற்றியுள்ளவர்கள் என்னைப் போலப் பேசுகிறார்கள் என்பது. உண்மையில் பாதிப்பைச் செலுத்துமளவு சில அடிப்படை விடயங்கள் சார்ந்த அறிவுழைப்பும் செயற்கள உழைப்பும் கொண்டவனாகையால் எனக்கு அவ்விதமான இயல்புகள் உண்டு என்பதை அறிவேன். உரையாடல்களின் வழி உண்டாகும் சிந்தனைத் தாவலை நண்பர்கள் கேட்டுக் கொண்டிருப்பது அதனாலேயே. இதனை ஒரு குற்றச்சாட்டு என இரு வகையானவர்கள் சொல்லி வருவதுண்டு.
ஒன்று, இதைச் சொல்பவர் அறவே சிந்தனைப் பற்றிய பயிற்சியோ அறிமுகமோ இல்லாதவர். அல்லது முகஸ்துதி செய்தோ ஓசிக் குடிகளிலோ இலக்கியமும் அறிவு உரையாடலும் செய்து விடலாம் என வாழ்பவர்கள். அத்தகையவர்களின் கருத்தை புல்லளவுக்கும் மதிக்க வேண்டியதில்லை.
இரண்டாவது வகையினர், ஆரம்ப நிலையில் இலக்கியமோ அறிவுத் தள அறிமுகத்தையோ பெற்றுக் கொண்டு அங்கிருந்து தன் அரைகுறை புரிதல்களுடன் மோதுவது. அது ஒரு தந்தையின் உடலில் சிறு குழவிகள் எட்டி உதைத்து உமிழ்வது போல மகிழ்வளிக்கக் கூடியது. சிந்தனைகளை மோதி மேவிச் சிந்தித்தே அடுத்த தலைமுறைச் சிந்தனையாளர்கள் உருவாகி வர இயலும். ஆகவே அவர்களின் குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ள முயல்வேன். ஆனால் அவர்கள் குழந்தைகளாகவே நெடுங்காலம் நீடிப்பது ஒரு தந்தையாகத் துயரளிப்பதே.
ஜெயமோகனின் இந்தக் காணொலியில் பாதிப்புச் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மிகச் சுவாரசியமாக விபரித்திருக்கிறார். மானுடம் எனும் நெட்டாற்றில் அலைக் கோடுகளென ஒன்றிலிருந்து ஒன்றுக்கு உந்தி இன்னொரு அலைச்சுழிப்பென உருவாகிக் கொண்டே செல்பவர்களே சிந்திப்பவர்கள்.
என்னை ஆசிரியர் எனும் இடத்தில் வைக்குமளவு தகுதி உருவாகி வரவில்லை என்ற புரிதல் எனக்கிருக்கிறது. ஆனால் நான் பாதிப்பைச் செலுத்தக் கூடியவன் என்பதை அறிவேன். ஆகவே கூடுதல் பொறுப்பும் நிதானமும் கொண்டு விட்டேன். என்னுடைய சிந்தனைகளையும் எப்பொழுதும் அறிவுத் தளத்தில் திறந்தே வைத்திருக்கிறேன். என்னைப் பாதிக்கச் சொல்லி ஒவ்வொரு முன்னோடியையும் தொட்டு அறிகிறேன். சுவை கொண்ட பதார்த்தங்கள் கொண்ட விருந்தொன்றில் தானே தேர்ந்து கொள்ளும் சுதந்திரம் அளிக்கப்பட்ட சிறுவனைப் போல.