சிறிய புன்னகைகள்

சிறிய புன்னகைகள் வாழ்க்கைக்கு அடிப்படையானவை. ஒவ்வொரு நாளிலும் சில கணங்கள் அத்தகைய புன்னகைகளுக்கெனத் திறந்திருப்பவை. அவற்றை நோக்கும் கண்களில் புன்னகையை தீத்தி விடுபவை. தீத்திய பின் எஞ்சிய உணவுப்பருக்கையை துடைத்து விடும் விரல்களைப் போல அந்தப் புன்னகையின் அசட்டுத்தனத்தை வரவேற்கும் இசையின் இரு கவிதைகள்.
*
“நீ மட்டுமே….”
மறுமுனையில்
காதலன்
விடாது கெஞ்சிக் கொண்டேயிருக்கிறான்
இவளோ
தலையை ஆட்டி
மண்ணைக் கீறி
நாணி
நாணி
கோணிக் கோணி
மறுத்துக் கொண்டிருக்கிறாள்
கடைசியில் ஒத்துக் கொண்டாள்
” ஒரே ஒரு வரி …”
அவளுக்கு கொஞ்சம் தள்ளி
அமர்ந்திருக்கிறான்
இந்தத் தடியன்
ஆகவே
அவள்
குரலில் ரகசியத்தைக் குழைக்கிறாள்
ரகசியம்
பேச்சையே பாட்டாக்குவது
பாட்டை
அது என்னென்ன செய்யும்
அடுத்த முறை
இன்னும்
அவளை நெருங்கி அமர்வேன்.
இன்னும்
அவளை ரகசியமாக்குவேன்.
*
கொஞ்சம் குண்டுப் பெண்
கொஞ்சம் குண்டுப்பெண்
ஆனாலும்
எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தாள்
ஒரு முறை மலரைத் தொட முடிந்தது
அப்போதும்
பறித்து வரக் கூடவில்லை.
அவள் விடாது எம்பிக் கொண்டிருந்ததில்
அந்த நிகழ்ச்சிக்கு ஆங்காங்கே
பார்வையாளர்கள் தோன்றி விட்டார்கள்.
அவளா?
மலரா?
என்பதில்
அவர்கள் ஆவல் கூர்ந்து விட்டனர்
ஒரு தருணம் வந்தது
முழங்காலில் கையூன்றி
அவள் மூச்சிரைக்கும் தருணம்
நிமிர்ந்து நின்றவள்
மலரை அண்ணாந்து
ஒரு சிரிசிரித்தாள்.
பிறகு
தன் வழியே நடக்கத் துவங்கிவிட்டாள்.
தோல்வி என்று சொல்லி விட முடியாத சிரிப்பே!
இப்படித்தான்
இத்தனை பேரையும் ஏமாற்றுவாயா?
இசை