கொடிறோஸ் – குறிப்பு 3

கொடிறோஸ் – குறிப்பு 3

பதின் பருவ வாழ்வு தரும் அனுபவம் தான் அந்த மனிதர்களின் வாழ்க்கையை முன் நகர்த்த பேருதவியாக இருக்கிறது, அதில் இருக்கும் ஏற்றம் இறக்கத்தை எல்லாம் அவர்கள் எப்படி தங்களுக்குள் சேகாரம் ஆக்கிக் கொண்டும் அந்த வாழ்வு தரும் அனுபவத்தை எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறார்கள் என்று நாமும் உணர்ந்து தான் இருக்கிறோம். ஆனால் இப்போதிருக்கும் பிள்ளைகள், தம்முடைய வாழ்வில் வரும் சிறிய சரிவைக் கூடத் தாங்க முடியாமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்வதும், பிற சேர்க்கையில் ஈடுபடுவதுமான சூழிலில் தான் பெற்றோர்களும் அவர்களை மிகவும் பலகீனமான மனத்துள்ளவர்களாக வளர்கிறார்கள், தம்முடைய பிள்ளைகள் வாழ்வில் இன்பத்தை மட்டும் தான் சுவைக்க வேண்டும் என்ற தவறால் தான் இதுவெல்லாமும் என்றும் பார்க்கத் தோன்றுகிறது.

சமகாலத்தில் ஈழத்திலிருந்து வரும் எழுத்துகளில் போர் போரில் பங்கு பெறாமல் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசும் எழுத்துகள் வந்து கொண்டு இருக்கிறது, நான் இந்த வருடத்தின் துவத்தில் வாசித்த ‘தாயைத்தின்னி’ நாவலும் அப்படியான நாவல் தான் – மிக முக்கியமான நாவலாகவும் இருந்தது. அப்படியாகத்தான் இந்த “கொடிறோஸ்” குறுநாவலும். கவிஞர் கிரிசாந்தின் மொழியில் மிகவும் அருமையான வாசிப்பனுவத்தை தந்தது, இவரின் மொழிக்காகவே இந்த நூலை வாசிக்கலாம் என்று தான் முதலில் தோன்றியது, சொல் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருந்தது, அது ஒவ்வொரு வாக்கியத்திலும் வாசிக்கும் போது உணரமுடியும். ஒரு குறுநாவலுக்குத் தேவையான அளவு தான் கதையும் அதனின் ஆழமும் இருந்தது. இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது அம்முடிவிலிருந்து ஒரு வாழ்வு துவங்குவது தான் அதனின் வடிவத்தின் முழுமையை அடைகிறது போலும். இந்த புத்தகத்தை அனுப்பிய அண்ணன் சிராஜ்(Mohammed Sirajudeen) அவர்களுக்கு நன்றிகள்.

யாழ்பாணத்தில் இருக்கும் தின்னவேலியை நிலமாக கொண்ட இந்த நாவல், இலக்கியதோடு போட்டிப்போட்டுக் கொண்டு இருக்கும் பதினொரு வயதுடைய சுகந்தனின் பார்வையிலிருந்து தான் துவங்குகிறது, 2005 லிருந்து 2009 வரையான அவனின் வாழ்வு பற்றிதான் பேசுகிறான். நான்கு அத்தியாயங்களாக வருடங்களின் தலைப்பைக் கொண்டு பிரிக்கப்பட்டிருந்தது. துவங்கும் ஒவ்வொரு அத்தியாயமும் சுகந்தன் வாசிக்கும் புத்தகத்தின் ஒரு பகுதியை தரப்பட்டிருக்கும், அந்த பத்தியில் இருக்கும் கருத்தாக்கம் அவனுக்கு பெருவாரியாக குழப்பத்தை தருகிறது வருடங்கள் நகர அவனுக்குள் கேள்விகளை எழுப்புகிறது, இதனால் அவனுக்குள் உருவாகும் மாற்றங்களையும் வாசிக்கும் போது உணரமுடிகிறது.

பல வண்ண கொடிறோஸ்களின் தண்டுகளை இணைத்து புதியதோர் வண்ணத்தில் உருவாகும் கொடிறோஸ்களும், அந்த வண்ணங்களை தமது பிள்ளைகளுக்கு(சுகந்தன், சயந்தன், கீர்த்தனா) பொருந்திப் பார்ப்பதில் சுகந்தனின் தகப்பனுக்கு ஓர் இன்பம் இருக்கிறது. சிறுவர்களுக்கு தான் எப்போது பெரியவன் ஆவேன் என்ற அவா எப்போதும் அவர்களுக்குள் இருக்கும், அது தான் புதிதாக நடப்பட்ட செடியைப் சுகந்தன் பார்க்கும்போது அவற்றின் வளர்ச்சியை நோக்கிய எண்ணம் அவனுக்குள் உதிக்கிறது.

சுகந்தன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தத்திதடுமாறி ஓட்டுகிறான், கீழே வீழும்போது அவனை சுற்றி கொக்களித்து சிரித்து இருந்தவர்கள் மத்தியிலிருந்து கண்ணாடியப்பா இப்படியான ஒரு வாக்கியத்தை “வரலாறு எப்பொழுதும் முதலாவதாக ஓடுபவரை விழுத்தி எழுப்பி குருதி காட்டாமல் விடுவதில்லை.” அவனுக்கு கூறும்போது அது அவனுக்கு உத்வேகத்தை அளித்து தைரியதோடு சைக்கிளை ஓட்டப் பழக்குகிறான். இப்படியான சில வாக்கியங்கள் இந்த குறுநாவல் முழுக்க நிறைந்திருக்கிறது.

அவன் வாழும் நிலத்தில் இருக்கும் பல இடத்தை பற்றியும் அந்த இடம் தரும் அனுபவத்தையும் மிகவும் உவமைகளோடு வெளிபடுத்தி அவனின் உள் மன வெளிப்பாட்டை காண்பிக்கிறது, வைரவர் கோவிலின் வர்ணனையும் அந்த கோவிலில் சூழ்ந்திருக்கும் இருளும் அவனை என்னவெல்லாம் செய்கிறது என்றும், அப்பாவின் கடைக்குச் செல்லும் போது அவர் கடையில் எப்படி எல்லாம் நடந்து கொள்வார், அவர் அந்த தொழிலின் மேல் வைத்திருக்கும் மதிப்பும் பக்தியும் வெளிபடுத்துவது இவனுக்குள் தோன்றும் எண்ணமாக “யாவாரம் ஒரு யோகம். அதில் முழுதாக இருப்பவர் அறியும் அன்றாட இன்பத்தைப் பிறர் அறிய முடியாது. ஒவ்வொரு தொழிலும் கலைகளும் அப்படித் தான். ஒன்றை முழுதாக வாழக்கை முழுவதும் சலிப்பில்லாமல் நிறைவுணர்வுடன் ஆற்றுபவர்களே யோகிகள். அது எதுவாயிருந்தாலும் அதிலிருந்து அவர்களுக்கு உலகியன் ஞானத்தின் ஒரு துளி பகிரப்படும்” இவன் நினைக்கிறான்.

மிகமிக நுண்ணிய விடயத்தைக் கூட கிரிசாந் கண்டிருப்பது தான் இந்த நாவலின் கூடுதல் சிறப்பு என்றும் தோன்றுகிறது. வெய்யில் ஏறத்த தொடங்கியப் பிறகு மனிதருக்கு வியர்வை வருவது போல உலகத்துக்கும் வியர்க்கும் எனச் சுகந்தன் கண்டிருக்கிறான், அது குப்பை கொட்டும் இடத்தில் இருக்கும் நாற்றம் வெய்யிலினால் அதிகரித்து அதனின் இடத்திலிருந்து வழிந்து வரும் நீரை அப்படி பார்க்கிறான்.

வைரவர் திருவிழாவின் போது கிடைக்கும் விதவிதமான பண்டங்களும், மச்சான் மச்சாளோடு விளையாடும் ஆட்டம் கொண்டாட்டமும், அந்த ஊரின் குதூகாலத்தையும் வரவிருக்கும் திருவிழாவை நினைத்து பழைய நினைவுகளை அசைபோடுகிறான். அப்பாவுக்குப் பிடிக்கும் நடிகர்களான சில்க் சுமிதாவும் வடவேலும். சறோ அக்காவுக்கு பிடிக்கும் இந்திய அணி, சாமியன்னைக்கு பிடிக்கும் இலங்கை அணி, அந்த கிரிக்கெட் விளையாட்டில் இவ்விருவருக்கும் வரும் சிறு சண்டைகள், சச்சரவுகள், அதை அம்மா பார்க்கும் பார்வை. பால்பண்ணை இருக்கும் நிலமாக பள்ளர் நளவர் பரையார் வாழும் வீதி குண்டும் குழியுமாக இருப்பதும். அப்படியே அவர்களின் வீடுகளோடு கடைசியில் சுடுகாடு இருப்பதும் அங்கிருக்கும் சாதிய சூழலையும் தொட்டு காண்பிக்கிறது.

(மொஹமட் இப்ராஹிம்)

“பெற்ற அம்மாக்களை நேசிப்பவர்களிடம் பெண்கள் எளிதில் நெருங்கிவிடுகிறார்கள்.” “அன்னையை இழக்கும் பொழுது அவர்களுக்கு மீண்டுமொரு அன்னையாக இருந்து விட எண்ணிக் கோகிறார்கள்.” இப்படியாகத்தான் சுகந்தனின் அம்மா-அப்பாவின் காதல் மலர்ந்து பூக்கத் துவங்கி அவர்களின் வாழ்வாக மாறுகிறது.

மச்சான் மச்சாளோடு விளையாடும் சுகந்தனும் ஆவனின் சகோதர சகோதிரிகள் பூசப்படாத தமது வீடு மாடியிலிருந்து கீழே மணலில் குதித்து விளையாடுவதும் அந்த வீடு சார்ந்த வர்ணனையும் விவரிப்பும் இதற்க்கு முன்பு வாசித்த என்னுடைய வாசிப்பு அனுபவத்திலிருந்து முற்றிலும் புதிய பார்வையோடு புதுமையோடும், இவ்வளவு விவரிப்பும் நுட்பமும் அவர்களின் வாழ்வியலோடு அந்த வீடு எந்த அளவுக்கு ஒன்றி இருக்கிறது என்றும் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அது வெல்லாம் அவனின் வீடு இல்லை என்பது தான் இதில் இருக்கும் ஒரு பெரிய முரணாக பார்க்கிறேன். “சுகந்தனின் வீடு கட்டி முடிக்கபடாமல் அரைகுறையாக இருந்த மேல் மாடி வீடு. வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வெளிநாட்டில் இருந்தார்கள். வீட்டைப் பராமரிப்பதற்கென்று சொந்தக்காரர்களுக்கு வீடுகளைக் கொடுப்பது யாழ்ப்பாண வழமைகளில் ஒன்று”

சயந்தன் சாதியின் நூதன ஒடுக்கு முறைகளை பல நாள்களாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அந்த திருவிழா தான் அதின் ஆழத்தை உணர்த்துகிறது, அதற்கு அவனுக்கு இலக்கியம் தான் வழி வகுத்து காண்பிக்கிறது. சாதியை துடைத்து எறிய அவன் முதலில் கேள்வியை எழுப்புகிறான், அதை உதாசீனாமாக மற்றவர்கள் கடந்து போக, பாரதியின் வரிகள் அவனுக்குள் ஒரு புரட்சியை உண்டுபண்ணவில்லை என்றாலும் ஒரு தீப்பொறியை துவங்கி வைக்கிறது, செயலில் ஈடுபடுகிறான், அதற்கும் கேள்விகள் எழ, இருளை நோக்கி நகர்கிறான். இத்துணை நாட்கள் இருள் அவனுக்கு தந்த பயம் எல்லாம் எங்கோ ஓர் மூலையில் முடங்கி போகிறது, இப்போது எதிரே வைரவர் வந்தால் தன்னிடத்தில் இருக்கும் கேள்விகளை எல்லாம் கேட்டு தீர்த்துவிடவேண்டும் என்ற தழல் ஒரு புறம், அதுவெல்லாம் நடக்கவா போகிறது என்கிறது எதார்த்தம். புலரியில் அவனை விட்டு தெய்வங்கள் அகன்று விட்டிருக்கின்றன.

பெற்றோர்கள் தான்னுடைய பிள்ளைகளின் மேல் தான் அதிகாரத்தை எளிதாக செலுத்தி விடுவார்கள். தங்களுக்கு தவறு தெரிந்து விட்டால், இதை தன்னுடைய பிள்ளை தான் செய்து இருப்பான் என்று அவனை போட்டு அடித்து நொறுக்குவார்கள். அந்தப் பிள்ளைகள் அந்த தவறை செய்து இருக்கிறதா என்ற உண்மையை எல்லாம் அறிந்து கொண்டு இது நடப்பது கிடையாது, எல்லாம் ஒரு முன் அனுமானம் தான். தன்னுடைய அனுமானம் தப்பாக இருக்கப்போவதில்லை என்ற பிடிப்பும், அகங்காரமும் தான் பிள்ளைகளின் மேல் அதிகாரத்தை செலுத்தி அவர்கள் செய்யாத குற்றத்திற்கு கூட தண்டனையை அனுபவித்து அவர்களை ஏற்கச் சொல்லுகிறார்கள். அதுநாள் வரை உண்மையை மட்டும் பேசவேண்டும் என்று கூறி இருந்த அந்த பிஞ்சு உள்ளத்தில் பொய்யை கூறி தப்பித்து விடலாம் என்றும், அப்போது அது தான் தன்னை காப்பாற்றும் என்ற முடிவுக்கும் வருகிறார்கள். இப்படியாகத்தான் ஒரு குழந்தையின் செயல்களும் மாறுதல் அடைகிறது. இங்கு சுகந்தனும் அந்த நிலைமைக்குத் தல்லப்படுகிறான், ஆனால் அவனின் தாய் அவனுக்கு மீண்டும் புத்துயிர்ப்பு தந்து அவனை மீட்கிறாள்.

யாழ்பாணத்தில் நடக்கும் பொங்கு தமிழ் நிகழ்வில் முதல் முதலாக கலந்து கொண்டு அந்த நிகழ்வில் இருக்கும் தமிழர்களின் மனநிலையை இப்படியாக எண்ணுகிறான் – “சிறு இடைவெளி கிடைத்தாலும் தமிழ் மக்கள் அரட்டைக்குத் திரும்பி விடுகிறார்கள். கொஞ்சும் கூட லட்சிய வெறியற்றவர்கள்”. அங்கு நடக்கும் ஒரு சடங்கு போல எல்லோரும் தமது செருப்புகளை எடுத்து ஆமிக்காரனின்(பொம்மை சிலை) மீது விசுகிறார்கள் அந்த செயலை மேடையில் அமர்ந்திருக்கும் பிக்குவால் எதிர் கொள்ள முடியவில்லை, அந்த பிக்கு எந்த தவரையும் செய்ததில்லை என்றாலும் அந்த நிகழ்வு அவனை சஞ்சலப்படுத்தி ஒரு குற்றுணர்வுக்கு தள்ளுவதாக சுகந்தனுக்குத் தோன்றுகிறது. இதே நிலையை தான் அப்பாவின் முதலாளி தான் கொடுத்தக் கடனை திருப்பித் தராததால் மங்கலலட்சுமியைப் பார்த்து கூறிய சொற்களால் அவள் இருந்த நிலையை காண்பிக்கிறது போலும். அப்போது அந்த தாயின் இடத்தை இப்படிக் கூறுகிறான், “திருவிழாவில் உதிர்க்கப்பட்ட மலர்கள் மிதிபடுவதைப் போல அம்மாவின் உடல் நசுங்கிக் கொண்டிருந்தது”. இத்துணை நாள்கள் எல்லோரும் முன் மரியாதையாக வாழ்ந்து இருந்தவர்கள் ஒரு கணத்தில் எல்லாம் சுக்குநூறாக உடைப்படும் போது இருக்கும் நிலை. இந்த மாதிரியாக பல உவமைகளை இந்த நாவலில் காணலாம், அது மேலும் ஒரு பலத்தைச் சேர்க்கிறது.

ஒரு தகப்பனின் வீழ்ச்சி என்பது அந்த குடும்பத்தின் வீழ்ச்சியாகவும் இருக்கிறது, எல்லாம் சுமூகமாக நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் ஒரு பேரிடி வந்து விழுந்ததும் அதிலிருந்து எழ சற்று கால தாமதமாகலாம், ஆனால் மனிதன் எழுந்து நிற்கிறான் தான். அது தான் மனிதனின் இயல்பில் ஒன்றாகவும் இருக்கிறது. அப்படித்தான் சுகந்தனின் குடும்பம் மீண்டு எழுகிறது, வீடே கடையாக மாறுகிறது. தேங்காய் வியாபாரத்தின் வீழ்ச்சி, அதை ஈடுகட்ட தேங்காய்யை எண்ணெய்யாக மாற்றி விற்கிறார்கள், உணவு திண்பண்டங்களை தயாரித்து விற்கத் துவாங்குகிறார்கள், குடும்பத்தில் எல்லோரும் உழைக்கும் போது அந்த வீட்டின் மூத்தவனான சுகந்தனின் உழைப்பு கூடுதலாக இருக்கிறது. அதுநாள் வரை பார்த்து வந்த தகப்பன் இப்போது வேறு மாதிரி தெரிகிறான், தாயும் வீட்டிற்காக உருகுகிறாள். இப்படி அவன் காணும் மாற்றங்கள் அவனுக்குள் உருவாகும் மாற்றங்கள் என அவனின் நிலைக்கு இலக்கியம் சில நேரங்களில் புரிதல்களை தருவதோடு அவனுக்குள் கேள்விகளையும் எழுப்பி செல்கிறது.

மீண்டு எழுந்து நிற்க முயற்சிக்கும் போது தான் மேலும் ஒரு அடி விழுகிறது சுகந்தனின் குடும்பத்திற்கு, அவனின் தாய் நோய்வாய்ப் படுகிறாள். இதுநாள் வரை அவள் தான் எல்லோருக்கும் தாய், கணவன் உட்பட. இப்போது அவளுக்கு அந்தக் குடும்பமே தாய்மையை வெளிபடுத்துகிறது. மிகவும் மனதை உருக்கும் நிகழ்வுகளை கிரிசாந்தின் கவித்துவ வரிகளில் வாசிக்கும் போது மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும் உணர்ச்சியை தழும்பவும் வைக்கிறது.

அப்பா விழும் போது அவர் எப்படியாக தனக்கு காட்சியளித்தார் என்றும், இப்போது அம்மாவை அவர் பார்த்துக்கொள்ளும்போது அவர் எப்படியாக இருக்கிறார் என்று சுகந்தனுக்கு அதுநாள்வரை தனக்குள் உருவாகி இருந்த தகப்பனின் வடிவம் முற்றியும் கலைத்துப் போட்டு வேறொரு ரூபமாக உயர்த்தெழுகிறார். அப்பா அம்மாவை எந்த அளவுக்கு நேசித்திருக்கிறார், மனைவி என்ற ஸ்தானத்தைக் கடந்து தாயாகவும் தெய்வமாகவும் தன்னுடைய தாயை மனதில் வைத்திருக்கிறார் என்றும் சுகந்தன் உணர்கிறான். அப்படியே இந்த குறுநாவல் முடிகிறது.

இந்த ஐந்தாண்டு கால மாற்றம் ஒரு சிறுவனை என்னவாக மாற்றி அமைக்கிறது என்பதை மிகவும் அருமையாக வெளிபடுத்தி இருக்கிறார் கிரிசாந். இன்னும் எழுத வாழ்த்துகள். மிக முக்கியமான நாவல் கைவிடாதீர்கள்.

மொஹமட் இப்ராஹிம்

*

கொடிறோஸ் – கிரிசாந்
பதிப்பகம் – ஆக்காட்டி வெளியீடு
பக்கங்கள் – 104
புத்தகம் வாங்க தொடர்புக்கு – சிராஜூதீன் : 9443066449 (இந்தியா)

TAGS
Share This