அஞ்சலி : நன்மிளிர்

கவிஞரும் எழுத்தாளருமான நண்பர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது மகன் 26 நாட்கள் பிறந்திருந்த வேளை தொற்று ஒன்றினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் (21.10.2025) அன்று மரணமடைந்திருக்கிறார். அவருக்கு நன்மிளிர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இனிய பிஞ்சு மகன் உலகை பார்க்க முன்னரே பிரிந்து விட்டான். அஞ்சலிகள் மகனே. புத்திர சோகம் எந்த வயதிலும் கொடியது.
உடலின் அனைத்து துயரங்களும் இன்பங்களும் வற்றிவிட்ட பிறகு
உடலின் அனைத்து கண்ணீரும் புன்னகையும் வற்றி விட்ட பிறகு
உனக்கான அந்த சிறிய சவப்பெட்டியை
ஓடர் செய்தேன்
இந்த பூமியின் பாவங்களின் கடலுக்காய் சாயமாக்கப்பட்டவன் நீ
பூமியின் அனைத்து வலிகளின் நீர்மைக்காய் விதையாக்கப்பட்டவன் நீ
அன்பு மகனே
இனி எந்த நட்சத்திரங்களில் உன்னை தேடுவேன், எந்த ஸ்தோத்திரங்களை உனக்காக பாடுவேன்
உனக்காக எனது எல்லா பிரார்த்தனைகளையும் கண்டு கொள்ளாத
எந்த கடவுளுக்கு எனது அடுத்த தீபத்தையும்
ஏற்றுவேன்
அன்பு மகனே,
எனது கண்ணீரையும் பிரார்த்தனையையும் ஏற்க மறுத்த எனது இறுதித் தெய்வமே.
(நன்மிளிருக்கு ஆதி எழுதியது)