வரலாற்றில் கசப்பை எழுதுதல்

வரலாற்றில் கசப்பை எழுதுதல்

ஆஸ்க்விச் வதைமுகாமும் தன் வரலாற்றின் எழுத்தும்

ஆஸ்க்விச் வதைமுகாமில் எலி வீசல் தன் தந்தையுடன் சென்று பின்னர் அங்கிருந்து வெளியேறும் ஒரு வருட அனுபவங்களின் தொகுப்பு ‘ இரவு ‘ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இடப்பெயர்வு, அலைச்சல், இனவெறி, ஆதிக்க வெறி, கொடுந்தண்டனைகள் பற்றிய ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து விரியும் ஒரு வராலாற்றின் சிறு தீற்றுத் தான் அந்தத் தன்வரலாறு.

வரலாற்றின் விசைகளைக் கணிப்பதென்பதும், நிலைப்பாடுகளை எடுப்பதென்பதும், அதிலிருந்து தனது காலகட்டத்தை விளஙகிக் கொள்வதென்பதும் மிக முக்கியமானது. மனிதர்களின் அகமும் புறமும் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தை கலைஞர்களோ அல்லது நுண்ணுர்வு கொண்ட மனங்கள் தனது அறிவின் மூலமும் தரிசனங்களின் மூலமும் தொகுத்தளிக்கின்றன.

எலி வீசல் தனது எல்லைகளை அறிந்த கலைஞன். தனது அனுபவத்தின் விளைவுகளினாலே நாசிகளின் மீது மட்டுமல்ல. ஹிட்லரின் மீது மட்டுமல்ல, சர்வாதிகாரத்தின் மீதும் வன்முறையின் மீதும் அதிக கவனத்தைக் கோருகிறார். அது தான் தன்வரலாற்றில் நுண்ணுர்வு கொண்டவர்கள் சென்று சேரும் வெளிச்சம். அவர்கள் தனிமனிதர்களிலோ சிறு குழுக்களிலோ மட்டும் தேங்கி விடுபவர்களல்ல. மனித வரலாற்றின் மொத்த அடுக்கிலும் நீக்கமற நிறைந்திருக்கும் வன்முறையின் மீதும், அதற்கான மனித இருப்பின் தொடர்புகளின் மீதும் தமது அனுபவத்தை விரித்தெடுப்பவர்கள்.

முழுவதும் கொடுமைகளால் நிறைந்த தன் காலகட்டத்தின் கசப்பின் ஒரு துளியை வீசல் ‘நட்சத்திரங்கள் எங்களை விழுங்கிய நெருப்பின் பொறிகளாய் இருந்தன .ஒரு நாள் அந்த நெருப்பு அணைந்தால் ஆகாயத்தில் எதுவும் எஞ்சியிருக்காது .இறந்த நட்சத்திரங்களையும் இறந்த விழிகளையும் தவிர .” என்கிறார். இலக்கியம் அறிந்தவர்கள் நகரும் திசை அதன் விளைவுகளையும் அதன் மதிப்பீடுகளையும் திரண்ட வடிவமாகக் கொண்டிருக்கும். அதுவோர் மையப்படிமமாக நிகழத் தொடங்கும். அதனைக் கண்டடைதலே தன்வரலாற்றின் வழி ஒருவர் சென்று சேரக்கூடியதென்று நம்புகிறேன்.உதாரணத்திற்கு, சத்திய சோதனை என்பது வெறும் அழகிய வார்த்தைக் கோர்ப்பு அல்ல. அதுவொரு பயணத்தின் வழி அடைந்த வெளிச்சம்.

இடப்பெயர்வும் எக்சைலும்

நோயல் நடேசன், இலங்கையை விட்டு இடம்பெயர்ந்தது இந்தியாவில் கழித்த காலத்தையும் அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்வதற்கான விமான நிலையத்திற்குச் செல்வதுமான இடைப்பட்ட காலத்தில் பூர்வீக நிலத்திற்கும் அந்நிய நிலத்திற்குமான நினைவுகளின் தன்வரலாறாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

தன்னுடைய சிறுவயது அனுபவங்கள், கல்வி, வேலை, தமிழ்நாட்டில் அவரது காலம், சந்தித்த மனிதர்கள், நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள், விடுதலை இயக்கங்களின் மீதான அவரது பார்வைகள், மருத்துவ அமைப்பை நிறுவியதில் கிடைத்த அனுபவங்கள் என்று தன்னுடைய அனுபவங்களிலிருந்து கண்டவற்றை நினைவு மீட்டியிருக்கிறார். இந்த வகையான அனுபவங்களைத் திரட்டி அவற்றை தொகுத்தளிப்பதென்பது நமது காலகட்டத்தில் முக்கியமானவொரு பணி. இந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் அனுபவங்களினதும் பார்வைகளினதும் தொகுப்பாகத் தான் வரலாறு நகரும்.

இந்த இடத்தில் இரண்டு கேள்விகளை முன்வைத்து எனது பார்வைகளை அளிக்கிறேன்.

தன்வரலாற்றின் இயல்புகள் என்ன? அதனை வாசித்தல் என்பது என்ன?

தன்வரலாற்றின் இயல்பு முற்றிலும் அகவயமானது. புறவரலாற்றின் சம்பவங்களைத் தேர்வு செய்வதென்பது அதன் வழி குறித்த வரலாற்றினை எழுதுபவர் சென்றடைந்த அறிதலுக்கான அகநிலையை வெளிப்படுத்துவதே. ஆகவே அதனை வாசிக்கும் போது அதுவொரு சுயகண்டடைதலை நோக்கிய விபரிப்பாகவே இருக்கும். தன்வரலாற்றில் ஒருவர் எதை எழுதுகிறார், அதனை அவர் எப்படி விபரிக்கிறார் என்பவை அவரின் தனித்த மனநிலையை அரசியல் நிலைப்பாடுகளை வாழ்வின் மீதான பார்வைகளைத் துலக்கும்.

நோயல் நடேசன்

நோயல் நடேசனின் பார்வை நான் விளங்கிய மட்டில், யாழ்ப்பாணத்து மேல் நடுத்தரவர்க்கத்துப் பார்வை. அதுவொரு இணக்க அரசியல் சார்ந்த, பிரச்சினைகளை விட்டு வெளியே நின்று தன்னுடைய அறிவின் துணைகொண்டு எதையும் அதன் எல்லைக்குள்ளே புரிந்து கொள்ளும் பார்வை. அது கசப்பின் தரப்பு. ஒரு தரப்பின் பிழையாக மட்டுமே வரலாறை அடக்கும் பார்வை. விடுதலை இயக்கங்கள் பற்றியோ அதன் இயல்புகள் பற்றியோ ஒருவர் கொண்டிருக்கும் பார்வையை வர்க்கம் உருவாக்கும் போது அந்த எழுத்து இயங்கும், சென்று சேரும் இடத்தைத் தான் இந்தத் தன்வரலாறு எனக்களித்தது.

கசப்பை எழுதுவதென்பது என்ன?

வரலாறு நெடுகிலும் உள்ள இயக்கமென்பது முரண்பாடுகளின் கூட்டிணைவு தான். நாம் வரலாறு நம் கைக்குள்ளாலேயே நகர வேண்டும் என்று சிந்திப்பது மனித இயல்பு தான். ஆனால் நம்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரியக்கதின் இணைவுகளை தொடர்ந்தும் ஒரு தரப்பின் தவறாக மட்டுமே நாம் சொல்லிக்கொண்டும், அதிலேயே தொடர்ந்தும் உழல்வதும் வரலாற்றில் கசப்பை சரியாக எழுதியதாகாது.

நமது பார்வைகளை நாம் விசாலப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வரலாற்றை அறியும் நுண்ணுர்வற்ற இது போன்ற எழுத்துக்களினால் எந்தப் பயனும் நிகழப்போவதில்லை. நமது சூழல் கசப்பினாலேயே நிறைந்து வழிவது. நமது காலம் புதிய பார்வைகளை அனுமதிக்கிறது. ஆனால் நாமோ கசப்பின் அலைச்சலை புற நிகழ்வுகளின் மீது சார்த்திவிட்டு, புற வரலாற்றின் குற்றங்கள் மீது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

(2019)

TAGS
Share This