தன்னறம் இலக்கிய விருது : 2025

“மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு. பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு. இதனால்தான், ‘என்னுடைய மொழியில்…’ என்று நாம் சொல்கிறோம். தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு வார்த்தை எப்படியான அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும் என்று துருவியகழும் செயலாகவே இருக்கிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு வார்த்தையின், ஒரு வாக்கியத்தின், ‘தொனி’யைப் பிடிப்பதற்கு நாம் வார்த்தையை, வாக்கியத்தைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அதாவது, மூலப்பிரதி அதன் மொழியின் தனித்த பண்புகளால் ஆனது. நாம் அதற்கு நிகரான சொற்களையோ மொழியையோ உருவாக்க முடியாது. இதனாலேயே மொழியாக்கம் படைப்பூக்கமிக்க விளையாட்டாகிறது. மூலப்பிரதியின் அச்சுஅசலாக மொழியாக்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கருத்தாக்கரீதியாக ஒரு புனைவு.
~ சீனிவாச ராமாநுஜம் (மொழியியல் தத்துவத்தின் அடிப்படையில் மொழியாக்கம் எனும் கட்டுரையிலிருந்து…)
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சீனிவாச இராமாநுஜம் அவர்கள் சாதத் ஹசன் மண்ட்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ‘மண்ட்டோ படைப்புகள்‘ என்ற தலைப்பில் தொகுத்துத் தமிழாக்கம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆர்துரோ வான் வாகனோவின் ‘மௌன வதம்‘, டி.ஆர்.நாகராஜின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய ‘தீப்பற்றிய பாதங்கள்‘, சுந்தர் சருக்கை எழுதிய நாடகங்களின் தொகுப்பான ‘இரண்டு தந்தையர்‘, கோபால் குரு, சுந்தர் சருக்கை இணைந்து எழுதிய ‘விரிசல் கண்ணாடி, சுந்தர் சருக்கை எழுதிய ‘சிறுவர்களுக்கான தத்துவம்‘ (த.ராஜனுடன் இணைந்து), ‘அறிவியல் என்றால் என்ன?’, பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து ஆகிய முக்கியமான நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
அஷிஸ் நந்தி, சையித் ஹுஸைன் நஸ்ர் உள்ளிட்டோரின் படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘காந்தியின் உடலரசியல்‘, ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்‘, ‘சந்நியாசமும் தீண்டாமையும்‘, ‘Renunciation and Untouchability: The Notional and the Empirical in the Caste Order’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை‘ ஆகிய இன்றியமையாத நூல்களை எழுதியிருக்கிறார். இவர் பரீக்ஷா, ஐக்கியா, சென்னைக் கலைக்குழு, பல்கலை அரங்கம் ஆகிய நாடகக் குழுக்களில் பங்காற்றினார். அதன்பின் ‘ஆடுகளம்‘ எனும் நாடகக் குழுவைத் தொடங்கி, மிக முக்கியமான பல நாடகங்களை இயக்கியுள்ளார்.
“கருத்தாக்கத்தை முன்னகர்த்திச் செல்வதற்காக நடைமுறையை வளைக்கும் எந்த எத்தனமும் சீனிவாச ராமாநுஜத்திடம் வெளிப்படுவதில்லை. வாழ்வனுபவங்களிலிருந்து அந்நியப்பட்டுப்போவதை அவர் படைப்புகள் அனுமதிக்கவும் இல்லை. அதனால்தான், கருத்தாக்கத் தளத்துக்கு நகரும் வாழ்வனுபவங்கள் கூட உணர்வுபூர்வ அம்சத்தை இழந்துவிடாமல் ஈரத்தை அப்படியே தேக்கிவைத்திருக்கின்றன. மேலும் குடும்பம், சமூகம், பண்பாடு, அறிவியல், இலக்கியம், சினிமா. மொழி என எதுவாக இருந்தாலும், அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ள முற்படும் ராமாநுஜத்தின் கருத்தாக்கத் தளமானது நடைமுறைத் தளத்திலிருந்து விலகிய பண்பைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அன்றாடத் தன்மையை வலியுறுத்தும் அக்கறையைக் கொண்டிருக்கிறது” என்றுரைக்கும் எழுத்தாளர் த.ராஜனின் வார்த்தைகள் சீனிவாச ராமாநுஜம் அவர்களின் படைப்பியல்பை நமக்கு துல்லியப்படுத்திக் காட்டுகிறது.
தமிழ்ப்படைப்புலகில் தவிர்க்க முடியாத இலக்கியப் படைப்புகளைத் தந்து, அதன்மூலம் இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளை மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அத்தகைய இலக்கியவாதிகளை இன்னும் அணுக்கப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), எழுத்தாளர் பாலைநிலவன் (2023), எழுத்தாளர் ஷோபாசக்தி (2024) ஆகிய ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்நீட்சியாக, 2025ம் ஆண்டுக்கான ‘தன்னறம் இலக்கிய விருது’ மொழியெர்ப்பாளரும் கோபாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சமூக இயங்கியலின் அடியாழத்தை தத்துவமும் வரலாறும் இணைந்த அரசியலாய்வுப் பிரதிகளாக முன்வைக்கும் சீனிவாச இராமாநுஜம் அவர்களின் தீவிரமிகு இலக்கியப் பணியை வணங்கி இவ்விருதைப் பணிந்தளிக்கிறோம்.
தன்னறம் இலக்கிய விருதளிப்பு நிகழ்வு வருகிற ஜனவரி மாதம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியரகத்தில் நிகழவுள்ளது. காந்தியக் களப்போராளி மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் இவ்விருதை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் விருதுத்தொகையாக சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும், சீனிவாச ராமாநுஜம் அவர்கள் மொழிபெயர்த்த, எழுதிய படைப்புகள் அடங்கிய புத்தகமொன்றும் இளம் வாசிப்பு மனங்களுக்கு விலையில்லா பிரதியாக (ஆயிரம் பிரதிகள்) அனுப்பப்படும். அவருடைய வாழ்வனுபங்களையும் இலக்கியப் பார்வையையும் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல் ஆவணக் காணொளியும் விருதளிப்பையொட்டி வெளியாகும்.
எழுத்தாளனைப் பற்றிக் குறிப்பிடுகையில், “மானுடச் செயல்கள் ஒவ்வொன்றும் அதற்கான எதிர்வினையைக் கொண்டிருக்கின்றன. அது இருக்கும் ஏதோ ஒன்றில் குறுக்கீடு செய்கிறது. இந்தச் செயல் ஊடாக நாம் நம்மை படைத்துக்கொள்கிறோம். மொழியிலான உலகத்தைப் படைப்பதும் ஒருவிதமான மானுடச் செயல்தான். இந்தச் செயலும் அதற்கான எதிர்வினையை அதற்குள்ளாகக் கொண்டிருக்கிறது. இது ஒரு மனிதனை எழுத்தாளனாகப் படைக்கிறது” என்றெழுதும் சீனிவாச ராமாநுஜத்தின் ஒவ்வொரு படைப்பும் சமூக இயங்கியலின் ஆதாரவேர்களைத் தேடித் தொட்டடைந்து அதன் மானுட ஈரத்தையே ஆதாரமாக வெளிக்கொணர்பவை.
இலக்கியம் என்பது உடலெனக் கொண்டால் மொழிபெயர்ப்பு என்பது அதன் இரத்தசுழற்சி செயல்பாடாகிறது. ‘மொழிபெயர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் நாம் மெளனத்தின் எல்லைகளால் கட்டமைந்த பகுதிக்குள் அடைபட்டு வாழ்ந்திருப்போம்‘ என ஜார்ஜ் ஸ்டைனர் சொல்வது அதைத்தான். தன்னுடைய படைப்புகளின் வழியாக சமூகப்புரிதல்களின் கோட்பாடுகளை துலக்கப்படுத்தி, ஒவ்வொன்றின் பின்னார்ந்த அரசியலையும் மொழியில் தெளிவுபடுத்தும் சீனிவாச ராமாநுஜம் அவர்களின் எழுத்துப்பங்களிப்பு சமகாலத்தில் குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டின் (2025) தன்னறம் இலக்கிய விருதை எழுத்தாளுமை சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்குவதில் நிறைவும் மகிழ்வும் கொள்கிறோம்.
~
தன்னறம் நூல்வெளி I குக்கூ காட்டுப்பள்ளி
—

