தும்பி : 87

தும்பி சிறார் இதழின் 87வது பிரதி அச்சில் மலர்ந்து இன்று கைவந்து சேர்ந்திருக்கிறது. சிறந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருக்கு உள்ளுமிருக்கும் குழந்தைமையை பாதுகாக்க உதவும் ஒப்பற்ற படைப்புகள். அவ்வகையில் இவ்விதழ் காலம் காலமாக தங்களுக்கு இடையே மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு கிராமங்களை மையமாக கொண்ட கதையை ஏந்தி வந்துள்ளது. கதையில் வரும் சிறுமி, தன்னை தாக்கிய மற்றொரு கிராமத்து சிறுவனை மீண்டும் தாக்கும் சூழல் அமையும்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒன்றை செய்கிறாள். அவள் என்ன செய்தாள் என்பதை படிக்கும் எல்லோர் மனமும் மலரும் என்று நம்புகிறோம். மனதில் உள்ள வெறுப்புகளையும் பழிவாங்கும் எண்ணங்களையும் ஒதுக்கி அன்பையும் மன்னித்தலையும் பதியமிடும் ஒரு அழகான ஓவியக் கதை.
மேலும், மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை, ஹேமலதா என்ற புனைப்பெயரில் எழுதிய ஒரு யானைக் கதையை மையமாக வைத்து ஓவியக் கலைஞர் புலக் பிஸ்வாஸ் வரைந்த படக்கதையும், குழந்தைகளின் கற்பனைகள் படைப்பாக மாற திறந்தவெளிப் பக்கங்களும், விருப்பம் போல் வண்ணம் தீட்டி மகிழ தோழமை வித்யா பெனோவின் அன்புத் தோட்டமும் உள்ளடங்கியுள்ளது.
கதைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இன்னும் ஒரு வாரத்திற்குள் இதழ் கைவந்து சேரும். பனை விதையில் இருந்து துளிர்க்கும் நாற்று போல, இளம் குழந்தைகள் தன்னியல்பில் வளர உளமார பிரார்த்திக்கிறோம்.
அட்டைப்படம் – ஶ்ரீதர் பாலசுப்ரமணியம்
உள்பக்க ஒளிப்படங்கள் – மோகன் தனிஷ்க்
இதழ் வடிவமைப்பு: கல்ஆல், இரா. தியாகராஜன்
படைப்புகளை அனுப்ப / பேச/ இதழ் பெற:
9843870059, thumbigal@gmail.com
“வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை”
– பாரதியார்

