கலையும் வாலும்

கலையும் வாலும்

புனைவெழுத்தில் செம்மையாக்கம் (Editing) பற்றிய உரையாடல்கள் ‘படுபட்சி’ எனும் தற்புனைவு சார்ந்து பேஸ்புக்கில் நிகழ்ந்து வருவதாக நண்பர்கள் சிலர் அக்குறிப்புகளை அனுப்பியிருந்தனர். எழுத்தாளர்களான டிசே இளங்கோ, அ. யேசுராசா, பெருமாள் முருகன், ஷோபா சக்தி ஆகியோர் எழுதியவற்றை வாசித்தேன்.

டிலுக்சன் மோகன் என்பவரது கதையே படுபட்சி, அதில் செம்மையாக்க உதவியை ஷோபா சக்தி செய்திருக்கிறார். நான் படுபட்சி இன்னமும் வாசிக்கவில்லை. இந்த இடத்தில் இவர்களது வாத எல்லைகளுக்கு வெளியே செம்மையாக்கம் பற்றிய தேவையையும் அது கலையைப் பயில்தலில் உண்டாக்கும் தாவலையும் பற்றியே இக்கட்டுரையில் விவாதிக்க விரும்புகிறேன்.

கலையில் செம்மையாக்கத்தின் தேவையை ஓர் உறுப்புடன் ஒப்பிட வேண்டுமென்றால் வாலுடன் என்பது பொருத்தமாயிருக்கும். ஒரு பூனையின் வால் அதற்கு என்ன பயனை அளிக்கிறதோ ஒரு செம்மையாக்கலுக்கு உதவும் சக எழுத்தாளரோ வாசகரோ கலைக்கும் அத்தகைய பங்களிப்பையே அளிக்கிறார். ஒரு புனைவுக்கு சமநிலையை உண்டாக்கும் பணி தான் அது.

‘கொடிறோஸ்’ எனும் குறுநாவலின் முதல் வரைவு ‘தின்னவேலி மார்க்கெட்’ எனும் தலைப்புடன் எழுதியிருந்தேன். அந்த முதல் வரைவை தர்மு பிரசாத், யதார்த்தன், பிரிந்தா ஆகியோர் வாசித்து தம் அபிப்பிராயங்களைச் சொல்லினர். முதலாவதாக மொழி சார்ந்த கட்டமைப்புச் சிக்கல் பற்றி கதைத்தோம். எழுதத் தொடங்கிய முதல் நாளிலேயே தர்மு பிரசாத்துடனும் யதார்த்தனுடனும் கதைத்திருந்தேன். வட்டார வழக்கிலேயே கதை தொடங்கி முழுவதுமாக அப்படியே எழுதுவதென்று. முதலில் அப்படி முயன்று பார்க்கலாம் எனச் சொல்லினர். எழுதிப் பார்த்தேன். முதல் வரைவின் முதல் வரி இப்படித் தானிருக்கும் “குழந்தைப் பிள்ளையின் மூக்குச் சளி போல பனி பெய்து கொண்டிருந்தது”.

முதல் சில பக்கங்களிலேயே அதன் நெருக்கடிகள் மட்டுப்பாடுகள் தோன்றத் தொடங்கின. “பொது மொழியை” இதற்கென உருவாக்கலாம் என தர்மு சொன்னார். கட்டமைப்பை மாற்றி மொழியில் மனம் ஏறி அமர்ந்ததும் குறுநாவலை ஒரே மூச்சில் சில நாட்களிலேயே எழுதி முடித்தேன். ஒரு புனைவுக்கான மொழியை முதற் புனைவுகள் எழுதும் பொழுது கவனிக்க வேண்டும். மொழியில் எதுவும் புலப்படவில்லை என்றால் இலக்கியம் தன் அடிப்படைத் தகுதியை இழந்து விடும். சமகால எழுத்தாளர்களில் தனக்கான மொழியின் தனித்த நடைகளை வந்தடைந்தவர்கள் சிலரே. உதாரணத்திற்கு தர்மு பிரசாத், யதார்த்தன், அஜிதன் போன்றோரை அந்த வகைக்குள் பட்டியலிடலாம். இவர்களில் தர்முவும் யதார்த்தனும் என்னுடன் புனைவு சார்ந்து உரையாடலில் இருப்பவர்கள். எங்களுடைய தனித்த குரல்களும் பார்வைகளும் களங்களும் மொழியமைப்பும் சிந்தனையோட்டம் கதை சொல்லல் பாங்கு, உத்தி எல்லாமே முற்றிலும் வேறானவை.
ஆனால் நாங்கள் தொடர்ந்து ஒத்த அலைவரிசையில் புனைவு நுட்பங்கள் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள்.

இந்த மொழிசார்ந்த முதலாவது அடிப்படையான சிக்கலைத் தான் எங்களின் மூத்த மற்றும் சக எழுத்தாளர்கள் மீதும் கொண்டிருக்கிறேன். மூத்த தலைமுறையில் தனக்கான நடையிலும் ஏனைய அம்சங்களிலும் ஷோபா சக்தி மட்டும் தான் அத்தகைய இலக்கிய அழகியல் தகுதிகள் கொண்டவர். அவரது பத்து சிறுகதைகளைக் கடந்த வருடம் நானும் தர்மு பிரசாத்தும் இணைந்து குக்கு அளித்த தன்னறம் விருது நூலுக்கென தொகுத்திருந்தோம். தர்மு கதைகளின் முதல் பட்டியலைத் தந்தார். பெரும்பாலும் ஒத்த அளவுகோல்களை உடையவர்கள் என்பதால் பட்டியல் உடனடியாக இறுதி செய்யப்பட்டது. அவற்றின் மென்பிரதிகளை ஷோபாவிடம் வாங்கி குக்கூவிற்கு அனுப்பினோம். அவர்களே வடிவமைத்து ஓவியங்களை வரைவித்து உயர்ந்த தரமான அச்சில் கொண்டு வந்தார்கள். அதில் தொகுப்பு என எனது பெயரும் தர்முவின் பெயரும் இருந்தது. இலக்கியம் எனும் இயக்கத்தைப் பொறுத்த வரை நாங்கள் செய்தது எளிய பணி. ஆனால் எங்கள் மதிப்பீடுகளிற்காகவே நாங்கள் அணுகப்பட்டோம். தேர்வின் அழகியல் எங்களுடைய பார்வைகள். அதனை மதிக்கும் பண்பு தமிழகத்தில் உண்டு. அவர்களுக்கு எழுத்தாளர்கள் என்பவர்கள் தன்னுடன் இருந்து பஜார் அடிக்கும் சராசரி அல்ல. எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூகத்தின் நுண்ணுணர்வு மிக்க ஒரு உறுப்பு. சமூகம் என்பது பென்னம் பெரிய ஒரு உயிரி என்றால் அதன் உணர்கொம்புகள் அவர்களே.

எனது முதல் வரைவு தொடர்பில் சித்தரிப்பு சார்ந்த குறைபாடுகள் இரண்டாம் சுற்று வாசிப்பில் சுட்டப்பட்டன. கதையை சம்பவக் கோர்வைகளாக எழுதியிருந்தேன். மொழிக்கு அடுத்தபடியான அடிப்படைத் தேவை என்பது நிகர் வாழ்வு அனுபவமாக கதை சொல்லப்பட்டிருக்கின்றதா என்பது. அந்தக் குறையைக் கண்டதுமே அதன் சிக்கலை விளங்கிக் கொண்டேன். ஆனால் அதை தர்மு சுட்ட வேண்டியிருந்தது. அவரது வாசிப்பும் தேடலும் பயில்வுமே அவற்றை அவருக்கு அளித்திருக்கிறது. ஒருத்தன் ஸ்ரேஜ் ஏறி புட் வேர்க் பண்ணுற ஸ்ரைலிலேயே ஆட்டக்காரனை அறிவது போல. செம்மையாக்கத்துக்கு உதவுபவர் செய்யக் கூடியவை சில உண்டு.

மொழி, சித்தரிப்பு, வடிவம், இடைவெளிகள் என சிலவற்றை உதாரணமாக எடுக்கலாம். வடிவம் சார்ந்து அதில் ஒருமை கூடுவதை கவனிக்கலாம். இடைவெளிகள் சுட்டப்படும் பொழுது அவை விரித்தெடுக்கப்பட்டால் கதையில் வேறு கோணங்கள் துலங்கி வருவதைக் காணலாம். கொடிறோஸின் முதல் வரைவில் அதில் வருகின்ற அப்பாவும் அம்மாவும் தூய ஆவிகளாகவே எழுந்து வந்திருந்தார்கள். ஆனால் ஒரு புனைவு என்பது பாத்திரங்களின் வேறு வேறு அம்சங்களினால் தனது ஆழத்தை நீட்டிக் கொள்ள வேண்டியது. இரண்டாவது திருத்தம் கொடிறோஸ் எனும் தலைப்பிலேயே தொடங்கியது. தின்னவேலி மார்க்கெட் ஒரு மையப்படிமமாகவோ பின்னணியாகவோ கதைக்குள் உருவாகி வரவில்லை. அது ஒரு குடும்பக் கதை. இலக்கியத்தில் ஒரு சொல்லுண்டு, ஒரு எளிய குடும்பக் கதையாய் இருந்தால் கூட ஒரு எழுத்தாளர் அதை வரலாற்றில் வைத்தே பார்க்க வேண்டும் என்று. அக்காலத்தில் திரும்பத் திரும்ப ஜெயமோகனின் நாவல் கோட்பாட்டை வாசிப்பேன். ஒவ்வொரு அடிப்படைத் தேவையும் பூர்த்தியாகும் பொழுது மனதிற்குள் ஒரு சரி போட்டுக் கொள்வேன்.

இரண்டாம் வரைவில் அவர்கள் சுட்டிய மொழி, சித்தரிப்பு சார்ந்த சிக்கல்களையும், பாத்திரங்களின் ஆளுமையின் வரைவு பற்றியும் உணர்ந்து கொண்டேன். அப்பாவினதும் அம்மாவினதும் காதல் கதையை முதல் வரைவில் ஒரு பந்தியில் கடந்து போயிருப்பேன். தர்மு அந்தக் காட்சியை இன்னும் காட்சிபூர்வமாக எழுதிப் பாருங்க பாஸ் என்று சொன்னார். காட்சியாக விபரிக்கத் தொடங்கியதும் கதை மேலும் அடர்த்தி கொண்டது, ஒரு மைய இழை அது. அதனை ஒரு கூர்மையான சக எழுத்தாளர் கண்டுகொண்டு சொல்ல முடியும், சொல்ல வேண்டும்.

செம்மையாக்கம் தொடர்பில் ஜெயமோகனின் கூற்று ஒன்றுண்டு, ஒரு எடிட்டர் தன் கருத்துகளை சொன்னால் நான் எழுதியதெல்லாம் பொன் என்ற பாவனையிலிருந்து விலத்தி ஈகோ இன்றி அவற்றை செய்ய வேண்டும் என்று சொல்லியிருப்பார். ஒரு செம்மையாக்கம் செய்பவர் நிகழ்த்துவது கலை அல்ல. அதற்குள் நிகழும் கலை நிகழ்வை தொடர்புறுத்தி புரிந்து கொள்வதும் குறைகளைச் சுட்டுவதுமே. அதை நான் தான் இறுதியாக தீர்மானிக்க போகிறேன். எனக்கு சரியென்று பட்டதையே செய்வேன். அதில் யாரும் எந்தக் குறையும் அடையப் போவதில்லை. அது தான் எல்லை. வாலில் நடக்க முடியாது.

இரண்டாவது வரைவை இறுதி செய்த போது நிறைவாய் இருந்தது. என்னுடன் சேர்ந்து அந்த செம்மையாக்கலுக்கென வாசித்து உரையாடியது அவர்களின் புனைவு சார்ந்த புரிதலுக்கும் உதவியது. நாம் அனைவரிடமும் சென்று இதை எடிட் செய்ய உதவுங்கள் என்று கேட்பதில்லை. நாம் வாசகர்கள் என்றோ எழுத்தாளர்கள் என்றோ மதிப்பவரிடமே அதைக் கேட்கிறோம். ஆகவே இதில் எந்த சுயமும் பாதிக்கப்படுவதில்லை.

படுபட்சி பற்றி கற்சுறா எழுதிய குறிப்பில் சுயம், சுயமென்று நிறைய எழுதியிருந்தார். எழுத்தாளரோ கலைஞரோ அந்தந்த பண்பாட்டு நனவிலியின் குரல் என்பதே சுயம் என்பதை மறுக்கும் வாதம். சற்காரிய வாதத்தின் படி இலது உளதாகாது. அதாவது இன்மையிலிருந்து ஒன்றும் தோன்றுவதில்லை. எழுத்தாளர் ஒருவராக வேண்டியவர் தன் அடிப்படையான பயில்வுகளை அடைந்த பின்னர் எடிட்டர்களின் உதவியின்றி எழுதித் தள்ளலாம். ஆரம்ப நிலைக்கு மிக அடிப்படையும் அவசியமும் என்றே கருதுகிறேன். ஆகவே ஒருவரிடம் எடிட்டிங் செய்யக் கேட்பதென்பது தவறல்ல. அது ஒரு நல்ல முறைமை என்பது என் நிலைப்பாடு.

படுபட்சி தொடர்பில் சொல்லும் பொழுது ஷோபாவின் எடிட்டிங் எல்லை மீறியிருக்கிறது என்பதே இவர்களின் சாராம்சமான குற்றச்சாட்டு. இதில் மறுவளமாக இவர்கள் டிலுக்சனிடம் மன்றாட்டமான தொனியில் கேட்பது “நீ பெத்த பிள்ளைக்கு ஏன்ராப்பா தம்பி அவரை இனிசியெல் போட விடுறாய்” என்பதாகவே இருக்கிறது. புனைவுச் செயல்பாடுகள் பற்றிய அடிப்படைப் புரிதலே இல்லாதவர்கள் என்பது அவர்களது குறிப்புகளை வாசிக்கும் பொழுது விளங்கியது. இதில் யாருக்குமே ஒரு நல்ல குறுநாவலையோ நாவலையோ எழுதிய அனுபவமே இல்லை. அவர்களது எழுத்துகள் மந்தமாயிருக்கும் இடங்களை ஒரு நல்ல எடிட்டர் சுட்டிக் காட்டியிருந்தால், அதை அவர்கள் கேட்டிருந்தால், அவர்களால் புனைவில் எதையாவது அடைந்திருக்க இயலும். எழுத வந்து கால் நூற்றாண்டாகியும் யாருக்கும் கலை கைகூடவில்லை என்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று எடிட்டிங் பற்றியதும் தங்கள் எழுத்துகள் குறித்த கற்பு மதிப்பீடுகளும் தான்.

கொடிறோஸ் மையப்படிமமாக மாறியதும் கதை முழுவதுமாக திரும்பிப் படுத்தது. வேறு வேறு களங்கள் திறந்தன. இதுவரையான வாசகர்களின் குறிப்புகளில் நாம் எடிட்டிங்கில் செய்த ஒவ்வொரு மாற்றத்திலும் விளைவுகளை அவதானிக்க முடிந்தது. அதன் மொழியமைப்பை அனைவரும் குறித்துக் காட்சியிருந்தனர். மொழியின் புதிய தன்மையினாலேயே முதலாவதாக அது கவனிக்கப்பட்டது. பின்னரே அதன் புனைவு சார்ந்த அம்சங்கள். எல்லாம் கண்ணுக்கு முன்னால நடக்கிற மாதிரி இருந்தது என்று பலர் சொன்னார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக அக்கதையில் வரும் பாத்திரங்களில் சிலர் அதை வாசித்து விட்டு அது தான் நடந்த உண்மை என்று சொல்லினர். ஆனால் அது ஒரு புனைவு உண்மை மட்டும் தான். மெய்யாகவே ஒரு புனைவையேனும் எழுதிய ஒருவருக்கும் இலக்கியம் வாசிக்கத் தெரிந்தவருக்குமே அந்த அடிப்படை விளங்கும். நீங்கள் வாழும் வாழ்க்கையை மேலும் செறிவாக்கி வேறொரு களத்தில் வைத்தே ஒரு புனைவு நிகழ்கிறது. ஆகவே அது உண்மை அல்ல. நிகர்வாழ்வனுபவமாகவும் வாழ்க்கையை விட செறிவும் அர்த்தமும் கொண்டது ஆகையால் அது உண்மையை விட நம்பிக்கையானதாக மாறுகிறது. அதுவே கொடிறோஸ் மூலம் நான் கண்டடைந்தது. நான் ஒரு புனைவெழுத்தாளனுக்கான அடிப்படைகளைக் கற்றுத் தேறியிருக்கிறேன். அடுத்தடுத்த நாவல்களில் மேலும் புதிய சிக்கல்கள் வந்தன. கொடிறோஸில் என்ன குறைபாடுகள் இருக்கிறதென நான் இப்போது அறிவேன். ஆனால் அதை திருத்த முடியாது, தேவையுமில்லை. அடுத்த புனைவை எழுதும் பொழுது நமக்கே அந்தக் குறைகளைக் களையும் அறிதல் நிகழ்ந்திருக்கும்.

சயந்தனின் ஆதிரை நாவல் பற்றிய என் சிற்றுரையிலும் அதையே சுட்டியிருந்தேன். இது ஒரு நல்ல முன்வரைவு. இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று. மொழி சார்ந்தும் சித்தரிப்பு சார்ந்தும் வாழ்க்கை சார்ந்த அடிப்படைக் கேள்விகள் இன்றியும் ஆதிரை தன் கதைக் கொத்து எனும் அம்சம் சார்ந்து இன்றும் நின்றிருக்கிறது. பெரியதொரு காலகட்டம் ஆதிரையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தாலும் காலமாற்றம் பற்றிய பரிமாணம் நாவலில் துலக்கமாக நிகழ்ந்திருக்காது. கதையோட்டங்கள் நிகழுமே ஒழிய கதைப்பின்னல்கள் நிகழவில்லை. மொழியில் தனித்த அடைவுகள் நிகழவில்லை. இன்று இதை ஒரு விமர்சனமாகவே முழுமையாக விரித்துப் பார்க்கலாம். ஆனால் அத்தகைய விமர்சனங்கள் அழகியல் சார்ந்தும் நுட்பங்கள் சார்ந்தும் நம் சூழலில் நிகழ்வது அரிது. கிட்டத்தட்ட வெறும் பாலை.

தீவிரமான அழகியல் விமர்சனமின்மை நம் சூழலின் மாபெருங்கேடு. இங்கிருப்பதில் பெரும்பாலானவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத எழுத்தாளர்கள். பிறகெப்படி விமர்சனமும் அழகியலும் வளரும். ஒரு குறை சொல்ல முடியாது, உடனே மூக்கின் மேல் முளைத்துவிடும்.

கொடிறோசின் கடைசி வரைவின் முதல் வரிகள் “மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ளவற்றின் குருதியால் பின்னப்படுகிறார்கள். ஒன்றுடன் ஒன்று அறிய முடியாமையின் இழைகளால் வாழ்வின் ஒவ்வொன்றும் முடையப்படுகிறது. ஒன்றென ஆகும் ஒவ்வொன்றும் இங்கிருந்ததும் இருக்கின்றதுமான ஒவ்வொன்றினதும் குருதி. ஒவ்வொரு மலரும் ஒருநூறின் துளிக்குருதி” பதினொரு வயதான சுகந்தன் கதைப் புத்தகத்தின் வரிகளை விளங்கியும் விளங்காமலும் வாசித்த பின்னர் இடையில் நிறுத்திக் கொண்டு எழுந்தான்” என்பதாக மாறியிருந்தது. தின்னவேலி மார்க்கெட்டிலிருந்து கொடிறோஸ் ஆனதிற்கு இடையில் உள்ள மாற்றம் இன்று துலக்கமாக தெரிகிறது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரி போலத் தான் தின்னவேலி மார்க்கெட்டும் வந்திருக்கும். அந்த மாபெரும் தவறை எடிட்டிங்கின் மூலம் நிவர்த்திக்க முடியும் என்பதே எனது வாதம்.

TAGS
Share This