ஒரு தமிழீழ பைலாவும் காவடிச் சிந்தும்

ஒரு தமிழீழ பைலாவும் காவடிச் சிந்தும்

மாவீரர் நாளின் முன்னும் பின்னும் சில நாட்கள் விடுதலைப் புலிகளின் பாடல்களைக் கேட்பது என் பல வருடச் சடங்குகளில் ஒன்று. புலிகளின் பாடல்களுக்கு ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளைக் கையாளும் நுட்பமிருக்கிறது. அந்தப் பாடல்களின் வரிகளும் குரலும் அளிக்கும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை ஈழத்தமிழர்களால் தங்கள் உரோமங்களின் நுனிகளால் கூட உணர முடியும். பிரபலமான பாடல்களுக்கு வெளியே இன்று சுற்றில் இருப்பவை வெகு சில பாடல்களே. கல்லறை மேனியர் கண் திறப்பார் முதல் ராஜ கோபுரம் எங்கள் தலைவன் வரை அப்படிச் சில கோர்வைகள் உண்டு. ஆனால் புலிகளின் கலைத் திறனும் அழகியலும் முயங்கும் பல பாடல்கள் தற்போதும் இணையத்தில் உள்ளன.

பிரிந்தாவின் இசை ரசனை மீது எனக்குப் பெரும் மதிப்பிருக்கிறது. முறையாகச் சில வருடங்கள் சங்கீதம் பயின்றிருக்கிறார். பிறகு அதைக் கைவிட்டு விட்டார். ஆனால் பாடல்களில் அவரது தேர்வில் வரிகளை விட இசைக்கு முதன்மையளிக்கும் தன்மை இருக்கிறது. இசையாக ஒன்று நின்றிருக்குமென்றாலே வரிகளுக்கு பொருளிருக்கும். சில வேளைகளில் நல்ல பாடல் வரிகளுக்கு மோசமான இசை அமைத்திருப்பார்கள். அவற்றைக் கேட்கவே முடியாது. எனது பார்வை முதன்மையாக வரிகள் மீதிருக்கும், கொஞ்சம் இசையும்.

சிறு வயதில் குட்டிக்கண்ணனின் பாடல்களை எனது வீட்டில் பெட்டி தட்டிப் பாடும் வழமையிருந்தது. எனது மச்சான் ஒரு இயக்கப்பாட்டுக் கொப்பி வைத்திருந்தான். கோழி முட்டை போன்ற எழுத்துகளுடன் ஏராளமான பாடல்கள். அவன் வன்னியிலிருந்து வந்திருந்தான். இராணுவச் சோதனைகள் கடுமையாக இருந்த நாளில் அவன் அழ அழ அந்தக் கொப்பியை வீட்டில் கொழுத்தினார்கள்.

புலிகளின் பாடலில் வெகுசனத்தன்மை மிகுந்திருப்பது இயல்பென்றாலும் நுட்பமாக கவனித்தால் அவர்கள் வெகுசனத்திற்கும் கவித்துவத்திற்குமிடையில் ஒரு மெல்லிய இணைப்பை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் என்று தோன்றுகிறது. அது வெகுசனக் கலையை படி உயர்த்தும் செயல்பாடு. எங்களது தேவாரங்களும் தேவலாயப் பாடல்களும் கூட உயர் கவித்துவம் அல்லது செவ்வியல் தன்மை கொண்டது. ஆகவே பண்பாட்டு ரீதியாக கவித்துவமான வரிகளைப் பயன்படுத்துவதில் சிக்கலில்லை. அதிலும் புலிகள் ஒரு மொழியை ஆக்கி அளித்து விட்டால் குற்றம் குறை சொல்லியிருக்க முடியுமா என்ன?

அவர்கள் இரண்டுக்கும் இடையில் ஒரு மொழியை உண்டாக்குவதற்கு முயன்றதற்கு அரசியல் தேவை ஒரு முதன்மையான காரணம். அதே நேரம் அதில் மக்கள் மனங்களை பண்பாட்டுடன் இணைத்து விடுதலை எனும் நவீன கருத்தாக்கத்தை ஆயுத வழியில் அணி சேர்ப்பதற்கு பயன்படுத்தும் முனைப்பும் மிகவே உண்டு.

இந்த வருடம் இரண்டு பாடல்களை முதன்முறையாகக் கேட்டேன். பிரிந்தா அறிமுகப்படுத்தினார். இவை அவரது சிறு வயதில் இயக்க அக்காக்கள் போட்டுக் காட்டிய பாடல் என்று சொன்னார். மாவீரர் தினமோ அல்லது புலிகளின் நிகழ்வுகளிலோ திரியும் சிறுவர்களை உற்சாகப்படுத்தும் மெட்டுக் கொண்ட பாடல்கள்.

“சிறகு விரிக்கும் பறவைக்கிங்கே” பாடல்

முதலாவது பாடல் “சிறகு விரிக்கும் பறவைக்கிங்கே” என்பது. குட்டிக்கண்ணன் பாடியிருந்தார். அவரது குரலில் ஒரு அசலான அக் காலகட்டத்தின் தொனியிருக்கும். இந்தப் பாடல் பைலா போன்ற மெட்டில் இசையமைக்கப்பட்டிருக்கிறது. யார் எழுதினார் என்று தெரியவில்லை. அன்னை மண்ணில் ஏறி வாறான் ஆமித் தடியன், இன்னுமென்ன சொல்லுவனோ நானோர் சின்னப் பெடியன் மாதிரியுமான துள்ளலும் பகிடியுமான வரிகள் இருக்கும்
அதே நேரம் உயர் மானமிருக்கு வீரமிருக்கு தலைவர் சேனை இருக்கு என பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் வரிகளும் இணைந்தவை. இசையாக இந்தப் பாடலின் பல வடிவங்களை தமிழ் சினிமா பாடல்களிலும் கேட்கலாம். ஆனால் இதில் உள்ள நாடகீயமான நக்கல்களும் அசாதாரணமான உணர்ச்சிக் கோர்வைகளும் இதை தமிழ் சினிமா பாடல்களிலிருந்து விலக்கி வைக்கிறது. உண்மையான போருக்கான அழைப்பை எவ்வளவு பகடியாக மணியண்ணைக்கும் மணியக்காவுக்கும் கொடுத்துள்ளார்கள்!

“புலியாட்டம் ஆடு” பாடல்

இரண்டாவது பாடல் “புலியாட்டம் ஆடு”. இந்தப் பாடலைப் பாடிய குரலை இப்பொழுது தான் கேட்கிறேன். உச்சரிப்பு மிக வசீகரமாக இருந்தது. பிரபாகரன் என்ற பெயரில் ரகரத்தை உச்சரிப்பதாகட்டும் காவடிச் சிந்து நடையில் பஜனையைப் போல பாடலின் பாவத்தை உண்டாக்கியமை ஆகட்டும் வெகுவாக ஈர்த்தன. சரணங்கள் தொடங்குமிடங்களில் குரலில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் அசாத்தியமான அழகை அளித்தன.

இன்னும் ஏராளமான பாடல்களில் நமது மக்களினை நோக்கிய வெகுசனக் கலையை புலிகள் உண்டாக்கியிருக்கிறார்கள். கேட்காதவர்கள் கேட்டு ஒரு துள்ளல் நடனமிடலாம். பொற்காவடி எடுக்கலாம், பைலாவும் ஆடலாம்.

TAGS
Share This