ஆழப் புதைந்திருப்பது

ஆழப் புதைந்திருப்பது

“வரலாற்று முள்ளில்
செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும்
உன் ஆன்மா துடிக்கப் போகின்றது

பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த
பிதாவே கூறும்
சகோதரரே நீர் கூறும்
அவள் தான் எடுத்த மண்ணை
கடலில் ஏன் கரைத்தாள்?”

அஸ்வகோஸ்

*

இந்த நாவலின் கருவை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பல கோணங்களில் பல்வேறு வகையானவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். சொல்லிச் சொல்லி சுருக்கமாகவே அதன் இழைகளை சொல்லி முடிக்குமளவு ஆனது. ஆனால் சமநேரத்திலேயே பிறிதொன்றும் நிகழ்ந்து கொண்டிருந்தது. உட்குழிந்த உலோகக் கோப்பையொன்றுக்குள் விசிறப்பட்ட பாதரசத் துளிகள் சரசரவென்று ஒன்றாகி ஒரு துளியாகுவது போல இக் கதையின் பல்வேறு அடுக்குகளும் குவியத் தொடங்கிய போது எழுதத் தொடங்கினேன். கல்விரல் அதன் திரண்ட ஒரு துளி. மண்ணில் ஆழப்புதைக்கப்பட்ட எதுவோ ஒன்று மேலெழுந்து அமர்ந்திருக்கிறது. இம்முறை தகரம் வேய்ந்த சிறிய வீட்டுக்கு அருகில்.

நாவலை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது நானறிந்த கதைகள் ஒன்றையொன்று கவ்வி வேறொரு வடிவம் எடுத்துக் கொண்டன. ஒரு அலைக்கழிப்பின் விசையை தாங்க முடியாமல் இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். எனது அத்தனை ஆண்டுகால அறிவும் நிகருலகின் முன் திகைத்து செயலற்று நின்ற ஒரு தருணத்தில் புனைவின் மூலம் அதனைத் தொகுத்துப் பார்த்தேன். நாவலென்பது தொகுத்தலின் கலை. ஒரு கதையின் பல்வேறு மைய இழைகளும் எழுதத் தொடங்கிய பின்னர் பின்வாங்கும், சிலது மேலெழுந்து வரும், சிலது புதியதாய் அப்போது உருவாகும். அந்த அனுபவத்தின் மெய்நிகர்த்தன்மைக்காகவே எழுதுகிறேன். அது உள்ளுணர்வினாலும் கற்பனையாலும் ஒரு சிக்கலை அணுகுகிறது.

நான் சொல்லிச் சொல்லிச் சேர்த்த கதையில் சில எலும்புகளும் துண்டுச் சதையும் தான் நாவலில் ஒட்டியிருப்பதைப் பார்த்தேன். போரில் எஞ்சிய ஒரு எலும்போ மயிர்ப்பிசிறலோ தற்செயலாக மணல் மேட்டில் காலில் தட்டுப்படுவதைப் போல நாவலில் அது எதிர்ப்படுகிறது. நான் எண்ணிய திசையில் இந்த ஓடம் நகரவில்லை. அலைத் திசைக்கு கழி வைத்தபடி அமர்ந்திருப்பது மட்டுமே செய்யக் கூடியது என்பதை இந்த நாவல் உணர்த்தியது.

அஸ்வகோஸின் காலத்துயர் என்ற கவிதை என்னைத் தொந்தரவுபடுத்துவது. வரலாற்று முள்ளில் சொருகப்பட்ட சிறு மொட்டே என்ற குரல் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருப்பது. அந்தக் கவிதைக்குள் ஒரு கவிஞனின் சத்தியாவேசம் வெளிப்பட்டிருந்தது. ஒரு புனைவுத் தருணமுள்ள கேள்வியுடன் அது முடிந்திருக்கும். இந்தக் கதையின் மையக் கதாபாத்திரத்தின் பெயரை மொட்டு என வைத்தே கதையை எழுதத் தொடங்கினேன். பிறகு அவருக்குப் பெயர் உண்டாகியது. மொட்டு வேறொன்றாகியது. ஆனால் போகிற போக்கில் விளம்பர வரிகளுக்கிடையில் தொலையும் ஒரு பெயரல்ல நீயென்று அவர் சொல்லியது எனக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. கவிதைகளில் மானுட உச்ச தருணங்கள் நிகழ்வதுண்டு. அவற்றுக்கான புனைவுப் பின்னணியை விரிவாக அளிப்பது புனைவெழுத்தாளரின் பணிகளில் ஒன்றென நினைக்கிறேன். இந்த நாவல் அந்தக் கவிதையின் உணர்ச்சித் தளத்தினை விளங்கிக் கொள்ள முனையும் ஒரு முயற்சி. ஒரு மலைச்சிகரத்தின் நுனியை இன்னொரு மலையில் நின்று பார்ப்பதைப் போல.

இந்த நாவலை தோழர்கள் க. தணிகாசலத்திற்கும் சி. க. செந்திவேலிற்கும் சமர்ப்பிக்கிறேன். நவீன யாழ்ப்பாணத்தை உருவாக்கிய ஓர் இடதுசாரி அமைப்பின் நெடுங்காலச் செயற்பாட்டாளர்கள். அவர்களது குரல்கள் வரலாற்றின் மனசாட்சியை உலுக்கியவை. அவர்களது பாதங்களும் கரங்களும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வீதிகளையும் கைகளையும் தொட்டவை. அவர்களது ஆளுமையை அருகமர்ந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் இன்றும் செயலூக்கத்துடன் இருப்பவர்கள். நம் காலத்தில் எஞ்சியிருக்கும் அபூர்வமான லட்சியவாதிகள். பெரிய அரசியல் லாபங்களோ அங்கீகாரமோ இன்றி தொடர்ந்தும் இந்த நிலத்தில் களப்பணியாற்றி வரும் அவர்களின் இயக்கத்தினை வணங்கி இந்த நாவலை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

கிரிசாந்

வெளியீடு : கருப்பு பிரதிகள்

TAGS
Share This