சிறகை : வெண்மத்தகக் குவியல்

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த யன்னலுக்கு வெளியே முடிவே இல்லாமல் விரிந்திருக்கும் நீல வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கால்களின் கீழே வெண் மத்தகக் குவியல்கள் போல மேகக் கூட்டங்கள் அசையாது நின்றிருந்தன. அத்தனை நீண்ட நேரப் பயணத்திலும் எதனையும் படிக்கவோ, பார்க்கவோ, கேட்கவோ முடியாதபடி மனம் அலையாடிக் கொண்டிருந்தது.
இரைச்சலுடன் விமானம் கொழும்பு கட்டுநாயக்கவில் தரையிறங்கத் தொடங்கியதும் என் கால்களின் கீழ் நொதிக்கும் கனவு நிலம் சரிந்து அதிர்ந்து செல்லத் தொடங்கியது. கண்களில் படபடப்பு எழ நினைவிலிருக்கும் அந்தச் சிவந்த சபிக்கப்பட்ட நிலத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க விரும்பினேன். சட்டென்று திரும்பிய ஒரு நொடி ஒரு காட்சித் துண்டு என் கண்ணில் வெட்டிச் சென்றது. தடித்த நெகிழிப்பையால் பாதி மூடப்பட்டிருந்த இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று இறங்கு தளத்தின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, நினைவுகளின் எச்சம் போல. கடந்த காலத்தின் ஒரு துண்டு நீட்சி போல. பாதி மூடிய அதன் நெகிழிப் போர்வை காற்றில் ஆக்ரோசமாகப் படபடத்து உலங்கு வானூர்தியின் இரும்பு உடலில் அறைந்து கொண்டிருந்தது.
பின் அந்தப் பயணம் கொடுத்த அனுபவங்கள் ஏராளம்.
ஒரு நாள் முல்லைத்தீவில் ஒட்டிசுட்டான் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தேன். உருக்கும் மத்தியான வெய்யில். நடுங்கும் காற்றில் லேசான உப்பு மணம். சுற்றிலும் சன நடமாட்டமே இல்லாத மதிய மந்த நிலை. எதிரே காவலரணில் துப்பாக்கியுடன் நின்ற இராணுவச் சிப்பாயை மனம் உள்ளூ ரக் கவனித்த படியிருந்தது. மனதில் பயமும் படபடப்பும் இருந்தது. பேருந்து வர முன்னர் ஒரு தண்ணீர்ப் போத்தல் வாங்க விரும்பினேன். ஆனாலும் தயக்கத்துடன் அந்த இராணுவச் சிப்பாயைக் கடந்து செல்லாமல் பையைத்தட்டி அடையாள அட்டை இருக்கிறதா எனச் சரிபார்த்தபடி நின்றிருந்தேன். எது வந்தாலும் பார்க்கலாம் என மனதைத் திடப்படுத்திக் கொண்டு இரு முறை வீதியை கடக்க முயன்று பார்த்தேன். என் கால்கள் நகரவில்லை. அவை என் சொற்களைக் கேட்பதாக இல்லை என்பது போல, இல்லை… வேறு யாருடைய இரவல் கால்களோ என்பது போல என் எடையைத் தாங்கி அசையாது நின்றிருந்தன. ஒரு சிறு பெண் அணிந்திருத்த சீத்தைச் சட்டை அடிப்பக்கம் சுருண்டிருக்க கையில் மஞ்சள் தும்பு முட்டாஸ் பைகளுடன் சாவகாசமாக வீதியைக் கடந்து கொண்டிருந்தாள். சட்டென்று அவளுடன் ஒட்டிக் கொண்டு நானும் வீதியைக் கடந்தேன். இராணுவச் சிப்பாய் எங்கோ தொலைவில் வெறித்தபடி எங்கள் மேல் நின்றிருந்தான். அந்தச் சிறு பெண் ஒரு தும்புமுட்டாஸ் பொட்டலத்தை இராணுவச் சிப்பாயிடம் நீட்ட அவன் அதைப் புன்னகையுடன் மறுத்தான். சட்டென்று ஒரு நொடியில் ஒட்டு மொத்தமான என்னுடைய புனைவுலகின் அனுபவத்தளங்களும் கால்களின் கீழே வழுக்கி ஓடிச் சென்று பாறை இடுக்குகள் ஊடாக முழுவதுமாக வழிந்து விட்டிருந்தது. அன்று பஸ்ஸில் அந்த மனநிலை மாற்றங்களையே யோசித்தபடி வந்தேன்.
அதன் பின் நான் எழுதிய சிறுகதைகள் செவ்வாத்தை, நீராழம், இப்போது குறுநாவல் ‘சிறகை’. இவற்றில் கைகூடியிருக்கும் மொழிச் செறிவையும், சித்திரிப்பு நுட்பங்களையும் மேலாகக் கதைகளில் திரண்டுவரக் கூடிய உணர்வுகளையும் பலரும் திரும்பத்திரும்பச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த, பெயரறியாத தும்பு முட்டாஸ் சிறுமியை ஆதுரமாக நினைத்துக் கொள்கிறேன்.

ஆனைக்கோடரி தொகுப்பாக வந்து என் கதையுலகை, மொழியை தொகுத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தது. அந்தக் கதைகள் எந்த மனநிலையில், எதை நோக்கி எழுதப்பட்டிருக்கின்றன என்பது மாதிரியான குறிப்புகள் ஏதும் இல்லாமலிருந்ததாலும். என் இலக்கிய நோக்கு, இலக்கிய இடம் குறித்த எந்த முன் வைப்புகளுமற்றிருந்ததாலும் அவை வாசகரிடம் சரியாகச் சென்று சேரவில்லையோ என்ற எண்ணம் இப்போதும் இருக்கிறது. அப்போதிருந்த இருவகையான முன்முடிவுகளால் நான் எந்த முன்னுரைக் குறிப்புகளும் எழுதவில்லை. வேண்டுமானால் கதைகளின் வலிமையால் காலூன்றி நின்று கொள்ளட்டும் என்ற மமதையிலும் சிறுகதைகளை அப்படியே பிரசுரித்திருந்தேன். இரண்டும் மிகத் தவறான அணுகுமுறைகள்.
முதல் முன் முடிவு கதைகளுக்கு முன்னுரை அவசியமில்லாத வீண் இடைஞ்சல். மற்றது முன்னுரைகள் வாசகரை குறுக்கலான வாசிப்பிற்கு மட்டும் அழைத்துச் சென்றுவிடும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் முன்னுரைகளை இவற்றிற்காகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பது அனுபவங்களின் வழி வந்த தற்போதைய எண்ணம். ஆனால் அதற்கும் சில முன் நிபந்தனைகள் உள. நேரடியாகக் கதைச்சுருக்கங்களை முன்னுரைகளில் சொல்ல வேண்டியதில்லை. நீண்ட விளக்கங்கள், முன்வைப்புகளும் வேண்டியதில்லை. புனைவுகள் துலங்கி வந்த பின்னணி, புனைவுகளின் ஒரு சில பொதுக் கூறுகளை, அவை கொடுத்த அலைக்கழிப்புகளை மெல்லியதாகக் கோடிட்டுக் காட்டிச் சென்று விட்டாலே போதும். இவை முக்கியமானவை எனக் கருதுகிறேன். இந்த அடிப்படைகளும் இல்லை என்றால் ஒருவரின் புனைவுலகை, அதன் அழகியற் கூறுகளை, அதன் தனித்துவத்தை வாசிப்பில் தவறவிடக் கூடும். அதனால் புனைவு சரியாகச் சென்று சேரமுடியாமலும் ஆகிவிடும். திடீரென்று ஒரு புதிய புனைவுலகினுள் வரும் வாசகர் சற்றுத் திகைப்பார்கள். பழகிய வாசிப்பின் தடங்களோ இல்லை பிடிமானங்களோ கிடைக்காமல் திணறக் கூடும்.

யதார்த்தவாதக் கதைசொல்லலில் இருந்து விலகி மொழியின் கட்டற்ற பாய்ச்சலால் படைப்பூக்கத்துடன் எழுந்து நின்றிருப்பவையாகவே என்னுடைய பெரும்பாலான கதைகள் இருக்கின்றன. ஆகவே குறைவான சித்திரிப்பும் வேகமான நடையுமாக இருக்கிறது. அந்த இயல்புகளின் வெளிப்பாடாகவே சிறகையும் வந்திருக்கிறது. ஆனால் சிறகை கொடுத்த எழுத்து அனுபவம் வேறு வகையிலானது. பிலம் என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுத முயற்சித்து கிட்டத்தட்ட முடித்து, அது நான் உத்தேசித்த செறிவோ, மொழி அழகோ ஒருங்கிணைந்து வரவில்லை என்ற வெப்பாரத்துள் உழன்று பின் கிரிசாந், யதார்த்தனுடன் கொடிரோஸ் குறுநாவல் உரையாடலில் இருந்த போது கிடைத்த ஒரு பொறியில் இருந்து எழுதத் தொடங்கிய குறுநாவல் சிறகை. பிலத்தின் களமும் கதையும் தான் ஆனால் சிறகையில் இன்னும் நுண்சித்திரிப்பும் எடுத்துரைப்புமான அகப் பயணமாக விரிந்திருக்கிறது. அந்த வகையில் ஈழ நாவல்களில் வீழ்ச்சிகள், தோல்விகள், அலைக்கழிப்புகள் எல்லாம் புறவயமான பெளதீக நிகழ்வுகளால் அழிவு, கழிவிரக்கம், சாட்சியம் என்ற தொனியிலே எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் அவை எல்லாவற்றிலும் இருக்கும் ஒத்த தன்மையும் வேறுபாடுகளே அற்ற தேய்வழக்குகளும் கசப்பூட்டக் கூடியவையாகவே எப்போதும் எனக்கு இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ‘மாதிரி’ கதை மாந்தர்கள், புனைவுவெளி, சம்பவங்கள். கதை நிலம் கூட ஈழத்தின் எந்தவித தனித்துவங்களும் துலங்கிவராத, பண்பாட்டுக் கூறுகளும் குறிப்புணர்த்தபடாத ’மாதிரி’ நிலமாகவே இதுவரையான புனைவுகளில் வெளிப்பட்டிருக்கிறது. காட்சிபூர்வமாக விபரிக்கப்படாத கதைச் சுருக்கத் தன்மை. அகப் பயணங்கள் அல்லது தேடல் இல்லாத மாதிரிக் கதாபாத்திரங்கள் என அவற்றின் இன்னோரன்ன குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தொடக்கத்தில் இருந்தே இவற்றுக்கு மாற்றானதொரு செறிவான தனித்த புனைவு வெளியை, பண்பாட்டு ஊடாட்டம் மிக்க நிலத்தை, மனநிலையை உருவாக்கவே முயன்றுகொண்டிருக்கிறேன். தேய்வழக்குகளிலான ஈழப் புனைவுலகிற்கு முற்றிலும் தனித்த செறிவான புனைவு அனுபவமாக ‘சிறகை’ இருக்கும்.
சிறகை குறுநாவலை என்னுடைய சின்ன மாமா லிங்கத்திற்கு (அம்மாவின் தம்பி) சமர்ப்பணம் செய்கிறேன். இறுக்கமான சாதிய, மத மேட்டிமைகளைத் தன் பகுத்தறிவால் எள்ளலான கேள்விகள் கேட்டதனூடாக என்னுள் தொடக்ககாலச் சிந்தனை, தேடல் விதைகளை விதைத்திட்ட அவருடைய அருஞ்செயலை இத்தருணத்தில் அன்புடன் நினைவுகூர்கிறேன்.
தர்மு பிரசாத்
31.12.2025
சிசிலி தீவு, இத்தாலி.
வெளியீடு : கருப்பு பிரதிகள்

